ஏரணம் – பாகம்-2

0
85
எழுதும் சின்ன சின்ன பதிவுகள் இரசிக்ககூடியவை. இரசனையானவை. உள் மனதின் வேதனையை.. கிளர்ச்சியை… சமூகத்தின் மீதான அக்கறையை கோபத்தை தன் நியாயத்தின் தராசில் நிறுத்தி முகநூல் பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கும் பொன்னி. கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டாள் ஒரு கவிஞரால். கவிஞர் மட்டுமல்ல ஓர் இலக்கிய இதழில் பணிபுரியும் எழுத்தாளரால்..! பெயர் நரசிம்மன்.
பொன்னியின் பதிவுகளை அவளின் அனுமதியின்றியே கவிதைகள் என்று இலக்கிய சிற்றதழில் பிரசுரம் செய்வதற்கு முன்பு வெளியாகும் செய்தியை முகநூல் தனிவிடுகையில் தெரிவிக்கிறார் கவிஞர் நரசிம்மன்.
“ சார்.. ரொம்ப நன்றி.. நான் எதிர்பார்க்கல”
தம்ஸ் அப் சின்னத்தை அனுப்பி மெளனமாகிறது நரசிம்மனின் பதில்.
“ சார்.. நீங்க யாருன்னு தெரியாமலயே இருந்துட்டேன். இத்தன பேரு கவிதை புக்ல வரணுமுன்னு தவம் இருக்கும் போது என் பதிவுகள் கவிதை வந்திருக்கு. ரொம்ப நன்றி சார். “
பல் இளிக்கும் எமோஜி பொம்மை ஒன்றை அனுப்பி சொற்களற்ற மெளனம் நீடிக்கிறது கவிஞரிடம்.
“ ஏதாவது சொல்லுங்க சார். எப்படி இப்படி.. நான் அனுப்பாமலே…? “
பதில் ஏதும் இல்லை.
“ சார்.. கவிஞரே.!.. எழுத்தாளரே..! ஆர் யூ தேர்….? “ பொன்னிக்கு இன்பமும் அதிர்ச்சியும்.. எப்படியென தெரிய வேண்டிய அவசரமும்..
“உங்க போன் நம்பர் அனுப்புங்க பொன்னி “
“ ஹஸ்பெண்ட் நம்பர் தரவா ? “
“ ஏன் உங்களுக்குன்னு நம்பர் இல்லயா ?”
“ இருக்கு சார். ஆனா நான் ஃபேஸ்புக் யூஸ் பண்ணுவதே அவருக்கு பிடிக்கல. நம்பர் கொடுத்து கால்ஸ் வந்துச்சின்னா அனாவசியமா டென்ஷன் அவருக்கு”
“என்ன பொன்னி நீங்க.. கவிதைலாம் எழுதுறீங்க. பெண் உரிமைன்னு எழுதுறீங்க ஆணாதிக்கமுடைய ஆள்கிட்ட எப்படி இப்படி கட்டுப்பட்டு… ம்ம்ம் ”  கவிஞர் ஏதோ திட்டமிடுகிறார்.
“ பெண் உரிமை எழுதுறோம்ன்னா.? புரியல சார். அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? என் வீட்டுக்காரர் அப்படி ஒன்னும் கட்டுப்படுத்தல சார். எல்லா சுதந்திரமும் இருக்கு.. “
“ அப்புறம் என்ன மேடம் ?.. போன் நம்பர் தாங்க பேசுறேன்..? “
” இல்ல சார். அவருக்கு பிடிக்காது ..  என் எழுத்தை கவிதைன்னு புக்ல போடுவதற்கு நன்றி சார். கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ் “
” ஹம்ம் சரிங்கமா. உங்க போட்டாவது அனுப்புங்க. புக்ல போடனும்..”
“ போட்டோ இல்லாம போட முடியாதா சார்? “
“ ஆமா நீங்க ஆணா பொண்ணா.? முதல்ல அத தெரிஞ்சக்கனும்.. ? “
“பெண் தான் சார். ஏன் ஆணா இருந்தா கவிதை போடமாட்டிங்களோ ஹா ஹா  “
“ அப்படிலாம் இல்ல. பெண் கவிஞர்களுக்கு முன்னுரிமை. சரி.. போட்டோ அனுப்புங்க.”
“ அவருகிட்ட கேட்டு அனுப்புறேன் சார். ”
“ம்ம்”
அரட்டை முடிகிறது. கவிஞரின் சுயரூபம் அறியாத பொன்னி புகைப்படம் அனுப்புகிறாள். புகைப்படத்துடன்  இலக்கிய சிற்றிதழில் கவிதைகள் வெளிவருகிறது. வாழ்த்தில் நனைகிறது பொன்னியின் முகநூல் பக்கம்.  புகழ் கூடும் மாயை.. கூட்டுகிறது தன்னம்பிகை போதை.  கவிஞருக்கு அவளாகவே அனுப்புகிறாள் மேலும் மேலும் புகைப்படங்களும் அலைப்பேசி எண்ணும்.
அடுத்த இதழில் பொன்னி கவிதை பிரசுரமாவதற்கு அவர் சார்பில் … நரசிம்மன் பொன்னியின் வங்கி கணக்கில் சன்மானம் என்பதாக சிறு தொகையை அனுப்புகிறார். வழக்கமாக இதழ்களில் வெளியாகும் படைப்புகளுக்கு மிஞ்சிய தொகை அது.
முகநூல் இன்பாக்ஸில் அனுப்பிய தொகையை தெரிவிக்கிறார் நரசிம்மன்.
பொன்னி முகநூலில் அப்போது இல்லை. காத்திருக்கிறார்.  வரவில்லை. காத்திருக்கிறார் மணி இரவு பத்து ஆகிவிட்டது. ஆன் லைனில் பொன்னி வருவதற்கான வாய்ப்பு தெரியவில்லை என எண்ணி… அலைப்பேசிக்கு அழைக்கிறார்..
மறுமுனையில் அலைப்பேசி அழைப்பு ஏற்கப்படுகிறது.
“ ஹலோ சொல்லுங்க. யார் வேணும். ?” பொன்னியின் கணவர் குரல் கேட்டு ”ச்சே இவனா என “ சலிப்படைந்த நரசிம்மன்..
“ பொன்னி இல்லயா?  “
“ நீங்க யாருன்னு சொல்லுங்க சார்..? ”
“ ம்ம் யாருன்னு சொன்ன தான் பதில் சொல்வீங்களோ. பொன்னியை கூப்பிடுங்க சார். பேசனும்”
“ ஹலோ மிஸ்டர் கண்ட கண்டவனலாம் எம் பொண்டாட்டிகிட்ட பேச முடியாது. முதல்ல நீ யாருய்யா .. அத சொல்லு.. ?” பொன்னி கணவரிடமிருந்து மரியாதை குறைவதை கேட்டு ஆத்திரப்படுகிறார்.
“ இங்க பாருங்க. நான் யாருன்னு தெரியாம பேசாதீங்க. நான் ப்ரஸ்ல ஒர்க் பண்றேன். ஒழுங்கா மரியாதையா பேசுங்க ? “
“ அட யோவ்… நீ எந்த மசிருல ஒர்க் பண்ணினா எனக்கென்னயா.? யாருன்னு கேட்டா பதில் சொல்லமாட்டிங்கிற?. . இந்த டைம்ல என் வெய்ப் கூட பேசனும்ங்கிற… உம்மட பொண்டாட்டி நம்பர் தா… நான் கூப்பிடட்டுமா. இப்போ… ?  கூப்பிட்டா நீ விடுவியா? “
சிறிய கேள்வி.. எளிய பதில்.. கண்ணியமாக முடிய வேண்டிய உரையாடல்… நீடிக்கிறது. வெடிக்கிறது. விரிசல் உண்டாகிறது பொன்னியின் இல்லற வாழ்க்கை.
மறுநாள்.. அதிகாலை மணி 5 மணிக்கு… பொன்னியிடமிருந்து அலைப்பேசி வருகிறது நரசிம்மனுக்கு…
“ உங்கள யாரு ராத்திரி பத்து மணிக்கு கால் பண்ண சொன்னது. ? பேஸ்புக்ல ஒரு பொண்ணு  நம்பர் கொடுத்தா.. இப்படித்தான் நேரம் காலமில்லாம பேசுவீங்களா..?  எல்லாத்துக்கும்  ஒரு குடும்பம் இருக்கு..ப்ரைவெசி  இருக்குன்னு யோசிக்கமாட்டிங்களா…. நீங்க என்ன பெரிய்ய இந்த கவிஞரு…? “ கணவரின் சந்தேகத்தால் பாதிக்கபட்ட பொன்னி… தனது அம்மா வீட்டிலிருந்து… கோபத்துடன் பட படவென பொரிந்து தள்ளுகிறாள் பொன்னி…
“ இங்க பாரு பொன்னி.. உன் கவித பிரசுரமாக போவது. பணம் அனுப்பி இருந்தேன். வந்துச்சான்னு கேட்கதான் போன் பண்ணினேன். “
“ சார்… உங்கள யாரு பணம் அனுப்ப சொன்னா. பப்ளிஷ் ஆகாம எதுக்கு சார் பணம் அனுப்புறீங்க. என்ன என்னை கரெக்ட் பண்ணலாமுன்னு ப்ளான்னா?  ச்சே மோசமான ஆளா இருப்பீங்க போல.. வேண்டாம் சார்.. கவிதையும் வேணாம். உங்க  பணமும் வேணாம். ”
கால் கட் ஆகிறது. உடனே முகநூலிலும் நரசிம்மனை ப்ளாக் செய்கிறாள்.
ஆனால்  நரசிம்மன் பொன்னி தன்னை ஏமாற்றி பணம் வாங்கி .. ப்ளாக் செய்துவிட்டாளென.. தனது முகநூல் பக்கத்தில் இல்லாத ஆதாரத்துடன் இருப்பது போல பதிவு செய்கிறார். பொன்னியின் நண்பர்கள்.. பொன்னியிடமிருந்து விலகுகிறார்கள்.  ஏழு வயது மகளுடன் தனிமைக்கு தள்ளப்படும் பொன்னி… யாழ்விழியின் காதலன் இளவேந்தனிடமிருந்து  வரும் நட்பு அழைப்பை ஏற்று, மனபாரத்தை குறைத்து.. மனநிம்மதியை தனக்கு ஏற்ற வழியில் பெற ஆரம்பித்த பொன்னிக்கு மீண்டுமொரு மோசமான சூழல் ஏற்பட ஆரம்பிக்கிறது.
-R.சந்தோஷ் குமார்.
முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

958total visits,8visits today