தமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்

0
53

தமிழீழத்தின் போராட்ட வரலாறு, 1989 காலகட்ட ஈழப் போர் நிலவரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு வரலாற்று பதிவாய் “தமிழீழம் சிவக்கிறது” என்கிற நூலை 1993-ம் ஆண்டு பழ.நெடுமாறன் அச்சிட்டு வெளியிட்டார்.

அவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்தவுடன் 2002-ம் ஆண்டு இந்நூலை மீண்டும் வெளியிடுவதற்கு பழ.நெடுமாறன் முயற்சித்தார். ஆனால் ஏப்ரல் 2002ல், நூல் வெளியிட முயற்சித்ததற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டு, அவரது நூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

2006-ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து தன்னிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்த புத்தகங்களை திரும்ப தரக் கோரி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடுத்தார். புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று நெடுமாறனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் செய்தார். வெளிநாடுகளுக்கு இப்புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், 2006-ல் வழக்கு வாபஸ் பெற்ற பின்னரும் காவல்துறையின் பிடியில் தன் புத்தகங்கள் இருப்பதால் எந்த பயனும் இல்லை எனவும் பழநெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பு முன்வைத்த எதிர் வாதத்தில், “இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், ராஜீவ் காந்திக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் புத்தகத்தில் கருத்துக்கள் உள்ளன. இதை அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும் எனவேதான் கீழமை நீதிபதி இப்புத்தகங்களை திரும்பி வழங்க மறுத்து விட்டார். பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் பழ.நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள “தமிழீழம் சிவக்கிறது” புத்தகங்களை அழித்துவிடவும் உத்தரவிட்டுள்ளார்.

பழ.நெடுமாறனின் புத்தகப் படிகளை அழித்துவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற ஆணை குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா இருவரும் நேற்று (நவ.15) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய ‘தமிழீழம் சிவக்கிறது’ என்ற நூலின் படிகளை அழித்துவிட வேண்டும் வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் அந்தத் தடையை அரசு நீட்டித்துக் கொண்டே வந்திருக்கிறது என்றும், அதற்கு ஆதரவான புத்தகம் மக்களிடையே செல்வது குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் கூறி, ஏற்கனவே அந்தப் புத்தகத்தை அவரிடம் ஒப்படைக்க இயலாது என்று புத்தகத்தை அவரிடம் ஒப்படைக்க இயலாது என்று கீழ்நிலை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அங்கீகரித்ததுடன், ஒரு படி மேலே சென்று காவல்துறையினர் தங்களிடம் உள்ள அந்தப் புத்தகத்தின் படிகளையே அழித்து விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

2002ஆம் ஆண்டில் அந்தப் புத்தகப் படிகள் அவரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. ஆயினும் 2006ஆம் ஆண்டில் அந்த வழக்கை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. ஆனால் புத்தகங்கள் திருப்பித் தரப்படவில்லை. வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காட்டி புத்தகப் படிகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் மேற்கூறிய காரணங்களைக் கூறி புத்தகங்களைத் திருப்பித்தர ஆணையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து நெடுமாறன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு புத்தகப்படிகளை அழிக்க ஆணையிட்டுளளது.

குறிப்பிட்ட புத்தகத்தின் உள்ளடக்கத்தில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளலாம். அரசாங்கத்திற்கும் அந்த புத்தகத்துடன் உடன்பாடு இல்லாமல் போகலாம். புத்தகத்தின்  செய்திக்கு எதிரான கருத்துகளை மக்களிடையே வலுவாகச் சொல்வதற்கான அனைத்து சட்டபூர்வ வசதிகளும் அரசுக்கு இருக்கிறது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையே மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த காலத்தில் இவ்வாறு பல்வேறு புத்தகங்கள் மீதான தடை நடவடிக்கைகள் வந்தபோதெல்லாம் நீதிமன்றத்தின் துணையோடுதான் அந்தப் புத்தகங்கள் மக்களைச் சென்றடைந்தன. இப்போதோ, ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகப் படிகளை அடையாளமின்றி அழித்துவிட வேண்டும் என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது அண்மைக்காலமாக அரசு எந்திரமும் சில அமைப்புகளும் தொடுத்து வருகிற தாக்குதல்களுக்கு வலுச்சேர்ப்பதாக வந்துள்ளது.

உயர் நீதிமன்றம் தனது ஆணையை மறுஆய்வு செய்ய வேண்டும் வேண்டும் என்று தமுஎகச கோருகிறது.

– காயத்ரி

914total visits,1visits today