சின்னாயா – பாகம் – 1

0
42

நாங்க கூப்பிட்டதென்னவோ சின்னாயா. ஆனா அவங்க தான் பெரிய ஆயா எங்களுக்கு, அப்பாவோட பெரியம்மா. ஒடிசலான உடம்பு கொஞ்சம் உயரமா இருப்பாங்க. அப்பாவோட அம்மா அதான் ஆயாவோ குள்ளமா தடித்த சரீரம். உடலமைப்பை வெச்சோ என்னவோ அவங்கள சின்னாயானு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம்.

அவங்களுக்கு குழந்தைக இல்லை. அதனால தங்கச்சி பசங்களேயே குழந்தையா வளர்த்தாங்க. நாங்க இருந்தது கிராமம்னா அவங்க இருந்தது குக்கிராமம். ஊருக்குள்ள போக பஸ் எதும் கிடையாது. வாய்க்கா மேடு வரை டவுனுக்கு போற பஸ்ல போயிட்டு வாய்க்கா மேட்டு மேல அரைப் பர்லாங்கு போனா ஊருக்கு போக பள்ளம் வரும். எல்லாமே காஞ்ச மொட்டக்காடா போனதால அதுவே வண்டித்தடமாவும் ஆயிடுச்சு. அதுல கொஞ்ச தூரம் போனா கொட்டக்காட்டுக்கும் சோளக்காட்டுக்கும் நடுவுல மூணு வீடு இருக்கும்.

அப்படியே கொட்டக்காடு வரப்புல நடந்தா மொத வர்றதே சின்னாயா வீடு தான். வீட்ட சுத்தி கிலுவமரம் இருக்கும். முன்னாடி வேலிப் படலை தள்ளிட்டு உள்ள போனா வைக்கோல் போரும் ஆடு கட்டற சாலையும் இருக்கும். அடுத்து நேரா பெரிய ஆசாரத்தோட சேர்ந்த கையோடு வேஞ்ச வீடு இருக்கும்.

உள்ள ரெண்டு ரூம் ஒண்ணு துணிமணி வைக்கவும் படுக்கவும். இன்னொண்ணு சந்தைக்கு போய் வர பொட்டுக்கூடை, கொஞ்சம் சில்வர் பாத்திரம் ( நாங்க வந்தா எங்களுக்கு யூஸ் பண்ண) அப்பறம் அரிசி மூட்டை, மொளகாப்பானை, கடலை மூட்டை எல்லாம் இருக்கும். ஆசாரத்துக்கு அந்தப் பக்கமா பனையோலை வேஞ்ச சமயல்கட்டு. உள்ள மண் அடுப்பு தான், சமைக்க மண் சட்டி கொஞ்சம் அலுமினிய தேசா தான். உக்கார மரப்பலகை தான். சேர் எல்லாம் கிடையாது. படுக்கக் கயித்துக் கட்டில் தான்.

தென்ன ஓலை தட்டியும் இருக்கும் திண்ணைல படுக்க. அந்த வீட்டுல தான் சின்னாயா இருந்தாங்க. அய்யனும் இறந்த பின்னாடி அவங்க தனியா இருந்தாங்க. காட்டைப் பார்த்துக்கவும் அவங்களுக்கு தொணையா இருக்கவும் சின்னாயாவோட அத்தை பையன் கூட வந்து இருந்தாங்க. சின்னாயாவ விட சின்னவரு கல்யாணம் பண்ணாமயே இருந்துட்டாருனு சொன்னாங்க. பாவம் எங்களால சின்னாயாட்ட திட்டு வாங்கிட்டே இருப்பாரு. எங்க மேல கொள்ளைப் பிரியம் அவருக்கு. சின்னாயாவும் திட்டுனாலும் பாசமா இருப்பாங்க. லீவு விட்டா அப்பா கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவாங்க. அங்க போயிட்டா வாழ்க்கையே வேற மாதிரி தான் இருக்கும். கொஞ்சம் கஷ்டமாவும் ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும்.

-சிரிச்சே தொலைப்பவன்

1262total visits,4visits today