சின்னாயா – பாகம் -2

0
53

சின்னாயா ஊரில் இருப்பதே புது அனுபவம்.   வீட்டுல எப்பவும் ஆறு மணிக்கு எந்திரிச்சா காபி குடிச்சிட்டு, ஒரு மணி நேரம் கிணத்துல ஆட்டம் போட்டுட்டு, ஸ்கூல்க்கு போய்ட்டு வந்தா சாயந்தரம் வீதில இருக்கிற பசங்களோட கபடி விளையாடிட்டு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தா, சாப்பிட்டுட்டு படுக்க எப்படியும் பத்து மணி ஆயிடும். ஆனா இங்க  விடியக்காலைல ஆறு மணிக்கெல்லாம் நல்லா வெளிச்சம் வந்திடும்.

அதும் மொத நாள் சாயந்திரமா கொட்டக்காட்டுல கிரிக்கெட் விளையாடியிருந்தாலோ இல்ல எலி பிடிக்கறவரு கூட கடலைக்காடு முழுக்க அலைஞ்சிருந்தாலோ ஆறு மணிக்கு எந்திரிக்க மனசு வராது. கயித்துக்கட்டல்ல படுக்கணும்னா வாசல்ல தான் படுக்கணும். பாய்ல படுக்கிறவங்க தான் ஆசாரத்துல.

அய்யன் எப்பவும் போல திண்ணைல தடுக்கு போட்டுப் படுத்திடுவாரு. மூடு வந்தா அப்பப்ப அந்த எடம் எனக்கும் வந்திடும். வாசல் வெயில் அடிக்கும் அதனால ஆறரைக்கு மேல படுக்க முடியாது. சின்னாயாவும் எழுப்பிடுவாங்க. எந்திரிச்சதும் பல்லு விளக்க பேஸ்ட் கேட்டதும் ஆரம்பிக்கும் அர்ச்சனை. கோபால் பல்பொடி இல்ல செங்கல் பொடி எடுத்துக்கலாம். இல்லைனா. வேலில வேப்பங்குச்சி ஒடைச்சிக்கணும்.

சின்னாயா திட்டும் போதெல்லாம் அய்யன் எங்களுக்கு சப்போர்ட் பண்ணி அவரும் வாங்கி கட்டிக்குவாரு.

எப்படியோ கோபால் பல்பொடி வெச்சு பல்லு விளக்கிட்டு வந்ததும் அடுத்த பஞ்சாயத்து காபி வடிவுல. வறக்காப்பிய சின்னாயா அய்யனுக்கு தேங்காத்தொட்டில ஊத்தி வெச்சிட்டு அவங்களும் குடிச்சிட்டு இருப்பாங்க. அது நல்லாத்தான் இருக்கும். ஆனா நம்ம வாய் எல்லாம் சும்மா இருக்குமா ?

நாலு பேரும் பால் காபி தான் வேணும்னு கேட்போம். உங்க ஆயாகாரிக ஒங்கள எல்லாம் கெடுத்து வெச்சிருக்காளுக. வறக்காப்பி இவனுகளுக்கு உள்ளாற எறங்காதாமானு திட்டிட்டு இருப்பாங்க. அய்யன் காபிய கூட குடிக்காம சத்தமில்லாம சாலைல போய் வெள்ளாட்டுப் பாலைப் பீய்ச்சிட்டு வந்து அவங்களுக்கு காபில கலந்து கொடுத்திடும்பாரு. கூறுகெட்டவனே நீயும் சேர்ந்து இவங்கள கெடுக்கறியா, வெள்ளாட்டப் புடிச்சுட்டுப் போய் பின்னாடி கட்டிட்டு வானு அய்யனை முடுக்கி விட்டுடுவாங்க.

அப்பறம் ஆட்டுப்பாலோட காப்பியை குடிச்சு முடிச்சதும், சின்னாயா வீடு வாசல் தொட்டுப்பட்டி எல்லாம் கூட்டிட்டு வர்றதுக்குள்ள நாங்களும் அப்படி இப்படினு அரைமணி நேரம் ஓட்டிடுவோம். அப்பறமா ஏழு மணிக்கெல்லாம் புளுதண்ணி கரைச்சு வெச்சிருப்பாங்க. வெங்காயத்தக் கடிச்சிட்டு கம்முனு குடிச்சிடணும். மீறி சாப்பாடு சாம்பார்னு கேட்டா மறுபடியும் திட்டு தான்.

எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் வீட்டை பூட்டி சாவியை ஆட்டுச்சாலைல ஓலைக்குள்ள சொருகி வெச்சிட்டு முன்னாடி படலை சும்மா எடுத்து சாத்திட்டு பள்ளக்காட்டாயா வீட்டுல தான் கல்லக்கா பொறிக்கறாங்க அங்க போங்கடானு வெரட்டுவாங்க. கல்லக்கா பொறிக்கணுமா அப்ப கிரிக்கெட்டுனு கேட்டா ஒங்க அப்பனும் ஆயாளும் எந்த நேரத்துல பெத்துப்போட்டாங்களோ எந்த வேலையும் சொன்னாலும் நோகுதும்பாங்க. அப்பறம் சாயந்திரமா விளையாடிக்கலாம்னு பள்ளக்காட்டாயா வீட்டுக்கு ஓடுவோம்.

தூரத்துலயே எங்கள பார்த்துட்டு “அடேய் எப்படா வந்தீங்க. கல்லக்கா பொறிக்க உங்காயா உங்களக் கூட்டிட்டு வந்துட்டாலாம்பாங்க”. தங்கச்சியப் பார்த்து தொம்மக்கா நீயும் கல்லக்கா பொறிக்க வந்துட்டியாம்பாங்க. தங்கச்சி கொஞ்சம் குண்டா இருந்ததால அப்படி பேர் வெச்சு கூப்பிடுவாங்க. எல்லாருமா சேர்ந்து கல்லக்கொடில இருந்து கல்லக்கா பறிச்சுட்டு வர்ற காப்பிய குடிச்சிட்டு, நேரம் இருந்நா பருத்திக்காய் பொறிக்க அவங்க கூட்டிட்டு போவாங்க. பிஞ்சு பருத்திக்காயப் பொறிச்சு சாப்பிட்டுகிட்டு நேரத்தை ஓட்டிடுவோம். அதுக்குள்ள சின்னாயா போயி மதியச் சாப்பாடு வெச்சிருப்பாங்க.

-சிரிச்சே தொலைப்பவன்

1281total visits,2visits today