சின்னாயா பாகம்-3

0
59

பருத்திக்காட்டுல பிஞ்சுக்காய கொறிச்சுகிட்டே அப்படியே தென்ன மரத்துக்கு நடுவுல காட்டுக்கு தண்ணி கட்ட வெட்டுன வாய்க்கால் வழியா கால் நலைச்சிட்டே ஓட ஆரம்பிச்சா வாய்க்கால் சின்னாயா வீட்டுக்கு இந்தப் பக்கமா பெரியாயா கெணத்துமேட்டு தொட்டிகிட்ட முடியும்.

தொட்டில தண்ணி விழறத பார்த்த பின்னாடி கால் சும்மா இருக்குமா நாலு பேரும் தொட்டிக்குள்ள குதிச்சிடுவோம். சின்னாயா வீட்டுல இருந்து சத்தம் போட்டுக்கூப்பிட்டாலும் பெரியாயா வீடு வரைக்கும்தான் கேட்கும்.

பெரியாயா வீட்டுல இருக்கிற எருமை கத்திட்டே இருந்தா அவ்வளவு தூரமும் கேட்காது. சின்னாயாக்கும் பெரியாயாக்கும் நடுவுல வேலி சண்டை இருந்தாலும் நாங்க தொட்டில இறங்கி ஆடுனா எதுவும் சொல்லமாட்டாங்க. ரெண்டு பேரும் நல்லா பேசிக்குவாங்க அதே மாதிரி நல்லாவே முட்டிக்குவாங்க. இவங்ககிட்ட திட்டுவாங்கறது ஆடும் எருமையும் தான். கூறுகெட்ட குறாலு அத்தன கல்லக்கொடி புடுங்கி திங்க போட்டு இருக்கேன் அதத்திங்காம கயித்த அவுத்துட்டு அவ காட்டுல போய் மேய்து காலை ஒடிச்சு போட்டாத்தான்னு திட்டிகிட்டே ஆட்டை பிடித்து முளக்குச்சில மறுபடியும் கட்டுவாங்க.

சாப்பாடு சாப்பிட காணோமே இன்னும் என்னறாங்க போயி கூட்டியானு அய்யனை விரட்டி விடுவாங்க. அவரும் வீட்டுக்கு பின்னாடி கொட்டக்காடு வழியா பள்ளக்காடு வந்து அங்க பள்ளக்காட்டாயாகிட்ட கேட்டுட்டு பருத்திக்காடு வழியா தொட்டிக்கு வந்து சேர்வாரு. ஆயா சாப்பிட கூப்பிடறா சீக்கிரமா வாங்க இங்க விளையாடறத பார்த்தா சத்தம் போடுவானு சொல்லிக்கூட்டிட்டுப் போவாரு.

மனசேயில்லாம தண்ணில இருந்து வந்து வீட்டுக்கு போறப்ப பெரியாயா பார்த்தா எப்ப வந்தீங்க எங்க யாரும் இந்தப்பக்கமா வரவேயில்லை. சரி சாயந்திரம் வாங்க தண்டபாணி வந்ததும் நொங்கு வெட்டித் தர சொல்லறேன்னு சொல்லி அனுப்புவாங்க. வீட்டுக்கு வந்து ஈரத்துணியப் பிர்த்து தொட்டில இறங்கினதுக்கு திட்டுவாங்கிட்டு ஆசாரத்தை ஈரம் பண்ணிடாதீங்கனு துண்டு கொடுத்துட்டு சின்னாயா  போவாங்க. துணி மாத்திட்டு வந்தா மதிய சாப்பாட்டுக்கு அரிசியம்பருப்பு சாதமோ இல்ல சாதமும் சாம்பர் ரசமுமோ இருக்கும்.

இங்க பக்கத்துல பெட்டிக்கடை கூட கிடையாது முறுக்கு இல்ல கொடல் பாக்கெட் வாங்கறதுனாலும் வாய்க்கா மேட்டு பஸ் ஸ்டாப் வர வரணும். அதனால வரும் போதே ஊர்ல இருந்து முறுக்கு சிப்ஸ் பாக்கெட் எல்லாம் வாங்கி வந்திடுவோம்.

சாப்பிட்டு முடிச்சுட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு தென்ன மட்டைல பேட் செஞ்சு கொட்டக்காட்டுக்குள்ளயே கிரிக்கெட் ஆடுவோம். சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருட்டிடும். சாப்பிட்டுட்டு படுத்திடணும்னு சொல்லுவாங்க. அங்க பத்து மணிக்கு தூங்கி பழகி ஆறு ஏழு மணிக்கெல்லாம் தூக்கம் வராது. கதை கேட்டு நச்சுப்பண்ணுனா திருவாத்தான் கதை சொல்லுவாங்க அப்படி இப்படினு ஒருவழியா தூங்கி வைப்போம். அதே வெள்ளிக்கிழமையா இருந்தா சாயந்திரமா வாக்கு கேக்க பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் வந்து சின்னாயாவ கூப்பிடுவாங்க. கொட்டக்காட்டுக்கு மேக்க கடைசிலதான் கருவேல மரத்துக்குக்கீழ கருப்பராயன் கோவில். மரத்துக்கு பக்கத்துலயே குட்டிப்பாறை இருக்கும். அதுல கொஞ்சம் பேர் மரத்த சுத்தி கட்டின திட்டு மேல கொஞ்சம் பேர்னு உக்காந்துக்குவோம். மரம் முழுக்க தூக்கணாங்குருவி கூடா பார்க்க அவ்வளவு அழகா  இருக்கும்.

சின்னாயா திட்டுல உக்காந்து சூடம் பத்தி வெச்சு சாமி கும்பிட்டுட்டு வாக்கு கேட்கணும் சொல்லறியானு கேட்பாங்க. கவுளி பதில் கொடுத்தா உத்தரவு  வந்திடுச்சு என்ன கேட்கணுமோ கேளுங்கனு சொல்லுவாங்க. கல்யாணம் பத்தியோ இல்ல இந்த வருசம் மழை வருமா கடல போடலாமா இல்ல சோளம் போடலாமானு இப்படி ஏதாச்சும் கேக்கச் சொல்லுவாங்க.

-சிரிச்சே தொலைப்பவன்

407total visits,3visits today