சின்னாயா – பாகம் – 4

0
48

முதல் தடவை உத்தரவு கேட்டு வரலைனா ரெண்டாவது வாட்டி மறுபடியும் உத்தரவு கேட்பாங்க. அதுல நேர கணக்கும் பார்ப்பாங்க. எப்படியும் கவுளி கத்திட்டுத் தானே இருக்கும்னு நினைக்கலாம். ஆனா கவுளி கத்தற திசையும் கணக்கு இருக்கு. ரெண்டாவது முறையும் உத்தரவு வரலைனா அன்னைக்கு அவங்களுக்கு வாக்கு கேட்க மாட்டாங்க. அவங்க இனி அடுத்த வெள்ளிக்கிழமைல தான் வாக்கு கேட்கணும். அவங்கள விட்டுட்டு அடுத்த ஆளுக்கு உத்தரவு கேட்பாங்க. இப்படி எல்லாருதையும் கேட்டு முடிச்சிட்டு சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடுவோம். ஊர்ல நிறையா பேர் வீட்டுல கரண்ட் கூட கிடையாது. சாயந்திரம் மேல எல்லார் வீட்டுலயும் அரிக்கேன் விளக்கு தான்.

போய் வாசல்ல கயித்துக்கட்டல்ல படித்து தூங்கினா அவ்வளவு நிம்மதியா இருக்கும். சனிக்கிழமை காலைல புளுததண்ணி குடிச்சிட்டு சின்னாயா எங்கள வெள்ளாட்டை பார்த்துக்க சொல்லிட்டு பொட்டுக்கூடையோட பக்கத்து ஊர் சந்தைக்கு கிளம்பிடுவாங்க. அந்த ஊர் வாய்க்கா மேட்டுல இருந்து மறுபடியும் ஒரு கிலோமீட்டராட்ட போகணும். அவ்வளவு தூரம் எங்களால நடக்கமுடியாதுனு சின்னாயா கூட்டிட்டுப் போகமாட்டாங்க.

சின்னாயா சந்தைல இருந்து வர்றதுக்குள்ள நாங்க பெரியாயா தோட்டத்தப் பார்த்துகிற மாமா பையன் தண்டபாணி கூட நொங்கு வெட்ட கிளம்பிடுவோம். எங்கள விட எப்படியும் ஆறேழு வருசம் பெரிய பையன் ஆனா பேர் சொல்லித்தான் நாங்க கூப்பிடுவோம். தண்டபாணிக்கும் விளையாட, நாங்க தான் செட்டு அதனால எங்கள ஏதும் சொல்லமாட்டாரு.

சின்னாயா காட்டுல பனைமரமே கிடையாது. ஆனா பெரியாயா காட்டுலயும் பள்ளக்காட்டு ஆயா காட்டுலயும் தான் பனைமரம் இருக்குது. போகும் போது மஞ்சப்பை எடுத்துக்குவோம் எலந்தைப்பழம் பொறுக்கவும், கோணப்புளியங்காய் பொறிக்ககோவும் வேணும்ல. அங்க போனதும் தண்டபாணி மரத்துல ஏறி ஒரு கொலய விட்டுட்டு மிச்சம் நொங்க வெட்டிப் போடுவார். அங்கயே உக்காந்து ஆளுக்கு ரெண்டு நொங்கு சாப்பிட்டுட்டு மிச்சத்தை வீட்டுக்கு எடுத்து வந்திடுவோம்.

சாப்பிட்ட நொங்கு வண்டி செஞ்சு உருட்டி விளையாடுவோம். எலந்தப்பழம் நிறையா கிடைச்சா எலந்த வடை தட்டித்தர சொல்வோம். சின்னாயா சந்தைல இருந்து சீக்கிரமா வந்தாங்கனா பொரி பாக்கெட்ல பொட்டுக்ககடலை மிக்சர் எல்லாம் கலந்து ஒரு பிடிபிடிப்போம். வீட்டுக்கு எடுத்து வந்த நொங்க சீவி சாப்பிட்டுட்டு காலி நொங்கு புரடைய சின்னச்சின்தா வெட்டி மாட்டுக்கும் எருமைக்கும் போட்டுடுவோம். என்னதான் நொங்கு டேஸ்ட்டா இருந்தாலும் பனம்பழம் பொறுக்காம வரமாட்டோம். பனம்பழம் சுட்டா அவ்வளவு வாசனையா இருக்கும். செம டேஸ்ட்டாவும் இருக்கும். வாயெல்லாம் மஞ்சக்கலரு ஒட்டி காஞ்சு பிசுபிசுனு புடிக்கும். பல்லுல பூரா பனம்பழ நார்தான்.

பனம்பழம் சாப்பிட்டுட்டு பனங்கொட்டைய கட்டுத்தரைல மண்ணுல பொதைச்சு வெச்சிடுவோம். முளைச்ச பின்னாடி பனங்கிழங்கும் பனங்கொட்டை பருப்பும் சாப்பிடணும்ல. சாப்பிட்ட பின்னாடி  யார் எங்க பொதைச்சோம்னு குறிச்சு வெச்சுக்குவோம் 😍

-சிரிச்சே தொலைபவன்.

1342total visits,2visits today