சின்னாயா – பாகம்-6

0
64

இயற்கை எப்போதாவது ஏமாற்றினாலும் சின்னாயா ஊர்ல அதுக்கேத்தமாறி நல்லாத்தான் வாழ்க்கை இருந்துச்சு. ஆனா அதையெல்லாம் மாத்தின சம்பவங்கள்

தொடர்ச்சியா ரெண்டு வருசம் மழை பெய்யல. சோளத்தட்டு மட்டும் போட்டு வெச்சாங்க.

பெரிய வெள்ளாடு இழுத்துட்டு ஓடினதுல சின்னாயா கீழ விழுந்ததுல கை முறிஞ்சுது. அந்த பெரிய கிடாய மட்டும் வித்துட்டு மத்ததை மேச்சுட்டு வந்தாங்க.

பெரியாயா பையன் அவங்க காட்டுல கோழிப்பண்ணை போட்டாரு. மொதல்ல நல்லாத்தான் தெரிஞ்சுது. பண்ணைல வேலை கிடைச்சுது. ஆனா பெரியாயாவும் அய்யனும் வீட்டுக்குள்ளயே மொடங்குனாங்க. பண்ணை அவங்கள மீறி பெரியப்பா வெச்சது.

ஓரளவு லாபம் பார்த்ததும் பண்ணைய பெருசு பண்ண பக்கத்துக்காட்டை எல்லாம் கொறஞ்ச விலைக்கு வாங்க ஆரம்பிச்சாரு. காட்டுக்கு சாணி கொண்டு வர வண்டித்தடம் அவங்களுக்கு இல்லை பெரியாயா காடு வழியாத்தான் வரணும். அதனால வேற வழியில்லாம ஒவ்வொருத்தரா அவருக்கு காட்டை எழுதிக் கொடுத்தாங்க.

சின்னாயா மட்டும் விக்கமாட்டேன்னுட்டாங்க. அதனால பெரியாயா பையன் எங்க வீட்டுக்கும் பெரியப்பா வீட்டுக்கும் வந்து பேசிப்பார்த்தாரு. அப்பாவும் பெரியப்பாவும் அது ஆயா சொத்து அத விற்க நாங்க சொல்லமாட்டோம். அவங்க விருப்பம்னு சொல்லிட்டாங்க.

ஒடஞ்ச கைய வெச்சுகிட்டு சின்னாயாவும் அய்யனும் எப்படியோ ஆடுகளோட ஆடா காலத்தை ஓட்டுனாங்க. ஒருதடவ வெள்ளாட்டுக்குட்டிக்கு முருங்க தழை ஒடிச்சு போடப்போயி கவக்குச்சிக்கு தழை எட்டலைனு முருங்கமரத்துல ஏறி தழை ஓடச்சிப்போட்டுட்டு இறங்கும் போது கீழ் வாது ஓடைஞ்சி மரத்துல இருந்து சின்னாயா கீழ விழுந்தாங்க. இடுப்புல அடி நடக்க முடியல. படுத்த படுக்கையா இருந்தாங்க. அப்ப அவங்க வயசு எழுபது. சின்னாயாவ ஊருக்குக் கொண்டு வந்து வீட்டுல வெச்சு பார்த்துக்கிட்டோம். அய்யன் மட்டும் தனியா ஊருல இருந்தாரு. ஒத்தைல சாப்பிட புடிக்காம அவரும் அப்பப்ப சாப்பிடாம கிடக்க எல்லாருமா சத்தம் போட்டு ஆட்டையெல்லாம் வித்துட்டு அய்யன் அவங்க பங்காளிகள பசங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க.

சின்னாயா காட்டையும் வீட்டையும் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் எழுதி வெச்சுட்டாங்க. ஒரு ரெண்டு வருசத்துக்கும் பக்கமா படுத்த படுக்கைல கிடந்த சின்னாயா பொங்கல் அன்னைக்கு சாயந்திரமா எங்கள விட்டு மொத்தமா போயிட்டாங்க. அப்ப அழக்கூகூடத் தோணல எழுபது வயசு வர கம்பீரமா வளைய வந்த சின்னாயாவ படுக்கைல பாரர்க்கத்தான் கஷ்டமா இருந்துச்சு. ஒரு இடத்துல நிக்காம சுத்தினவங்கள ஒரே இடத்துல படுக்கப்போட்டுச்சு காலம்.

சின்னாயா இருந்தவரை சும்மா இருந்த பெரியாயா பையன் மறுபடியும் வீட்டுல வந்து பேச ஆரம்பிச்சாரு. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் விருப்பம் இல்லைனாலும் பெரியம்மா நச்சரிப்புத்தாங்காம பெரியாயா பையனுக்கு எழுதிக் கொடுத்தாங்க. மத்தவங்களுக்கு கொடுத்ததவிட கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்தாரு

அந்த காசு கரைய கரைய காலமும் சின்னாயா ஊர் பத்தின ஞாபகமும் கரைய ஆரம்பிச்சுது. அதுக்கு அப்பறமா எங்களுக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தமே இல்லாம போயிடுச்சு.

இங்க மத்தவங்ககிட்ட எழுதி வாங்கினதாலயோ என்னவோ பெரியாயா பையன் அவரோட சொத்துல கொஞ்சத்தை ஒரு அரசியல்வாதி பேர்ல எழுதிக் கொணுக்கற மாதிரி அமைஞ்சுது. அப்பறம் அவரும் நெஞ்சுவலில ஒரு நாள் போய் சேர்ந்துட்டார். இப்ப அந்த ஊர் எப்படி இருக்கு யாரெல்லாம் இருக்காங்கனு தெரியாது.

அப்ப அந்த ஊர்ல டிவி இருந்தது ஒரே ஒருத்தர் வீட்டுல தான். மாலைக்காடுனு பேரு அவங்க காட்டுக்கு. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்,  ஞாயித்துக்கிழமை சாயங்காலம் படம் பார்க்க மட்டும் சின்னாயா கூட்டிட்டுப் போவாங்க. இன்னும் அந்த பள்ளக்காடு மாலைக்காடு இருக்கானு தெரியாது. இதோ பதினாறு வருசம் ஆச்சு அந்த ஊரு பக்கம் போயி.

சின்னாயா ஆத்மா எங்கள திட்டிட்டு இருக்கோ இல்ல என்ன நினைக்குதோ தெரியல. ஆனா நாங்க எல்லாரும் ஓரளவு நெலமைல இருக்கோம்னா அதுல பெரிய பங்கு சின்னாயாவுதுதான்❤

-சிரித்தே தொலைத்தவன்

1475total visits,4visits today