சிமோனிலா கிரஸ்த்ரா

0
61

தொண்டை வறண்டு போய் கால்கள் கெஞ்ச அந்த அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து வெளி வந்து ஆற்றங்கரை மணலில் சொத்தென்று விழுந்தனர் ராமுவும் சோமுவும்.

ஆற்றில் ஓடும் தண்ணீரைக் கண்டதும் இருவர் கண்களிலும் ஒளி. மெல்ல ஊர்ந்து கொண்டே போய் தண்ணீரில் தலையை விட்டுக் கொண்டு ஆசை தீரக் குடித்தனர். கொஞ்சம் தெம்பு வந்தது.

மெல்ல எழுந்து அமர்ந்தனர். “இந்த ப்ரொபசர் எங்கடா காணாம போய்த் தொலைஞ்சாரு. இந்த காட்டுக்குள்ள வழியும் தெரில வாய்க்காலும் தெரில. இன்னும் கொஞ்ச நேரம் விட்ருந்தா போய் சேர்ந்திருப்போம்” என்றான் ராமு சோர்வாக.

சோமு எதுவும் பேசாமல் நீரில் ஏற்படும் சிறு சலனங்களை உற்றுப் பார்த்தபடி இருந்தான். மெல்ல அந்த சலன வட்டம் பெரிதானது. ராமுவும் கவனிக்கத் துவங்கினான். நீர்க் குமிழ்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மெல்ல ஒரு பேரழகி நீரில் இருந்து எழுந்து வந்தாள்.

அவளைப் பார்த்ததும் இருவரும் அதிர்ந்தனர். அவள் உடம்பில் பொட்டுத் துணியுமில்லை.”இந்த அத்துவானக் காட்டில் இப்படி ஒரு அழகியா?”என்று வாய் பிளந்த இவர்களை நோக்கி நெருங்கி வந்து நின்றாள். இருவரையும் பார்த்து மோகனமாய் புன்னகைத்தாள்.

அவளை நெருங்கிய ராமு “உன் பேரென்ன” என்றான். அவளுக்குப் புரியவில்லை. எப்படியோ செய்கையில் விளக்கினான். புரிந்தவளாக “சிமோனிலா கிரஸ்த்ரா” என்றாள் புன்னகைத்து.

ராமு குழம்பினான். என்னாடா பேரு இது?” என்றான் சோமுவைப் பார்த்து. சோமு பிரகாசமானான். “எனக்குத் தெரியும்டா. என் ப்ரண்ட் ஒருத்தன் இந்த பேர்ல புக்கு எழுதிருக்கான். அதுக்கு அர்த்தம் ஆசீர்வதிக்கப் பட்டவள்னு அர்த்தம்” என்றான் சிரித்தபடி.

பெயர் சரியாத் தானிருக்கு என்ற ராமு அவள் தோளில் கை வைக்கும் போது சரியாக பின்னால் புதரில் சலசலப்பு. ப்ரொபசர் வெளிப்பட்டார். ” முட்டா பசங்களா. எங்கடா தொலஞ்சு போனீங்க” என்று கத்தியபடி வந்தவர் அவளைப் பார்த்ததும் குழம்பி நின்றார்.

“இங்கென்னடா பண்றீங்க?” என்றார். ” சிமோனிலா கிரஸ்த்ராவோட பேசிட்ருக்கோம்” என்றான் ராமு. அதிர்ந்த ப்ரொபசர் “என்ன சொன்ன? திருப்பி சொல்லு” என்றார்.

“சிமோனிலா கிரஸ்த்ரா ப்ரொபசர். அதான் இவ பேரு. ஆசீர்வதிக்கப் பட்டவள்னு அர்த்தம்” என்றான். உச்சகட்ட பதற்றத்துடன் ப்ரொபசர் ” அட லூசுகளா!! ஓடுங்கடா” என்றார். புரியாமல் விழித்த ரெண்டு பேரிடமும் சொன்னார்.

“சிமோனிலா கிரஸ்த்ரா”ன்னா அது அர்த்தமில்லடா லூசுகளா. இந்த காட்டுவாசி இனத்தோட பாஷைல “உங்கள உயிரோட உரிச்சு தின்னப் போறோம்னு அர்த்தம், வாங்கடா ஓடலாம்” என்று ப்ரொபசர் கூறும் போதே காட்டுவாசிகள் புதர்களிலிருந்து வெளிப்பட்டு அவர்களை சுற்றி வளைக்கத் துவங்கினார்கள்.

சிமோனிலா கிரஸ்த்ரா சிரித்துக் கொண்டிருந்தாள்.

2202total visits.