காமிக்ஸ் என்னும் சித்திரக் கதை

0
189

சித்திரக் கதை(காமிக்ஸ்) எனும் பெயர் தமிழ்நாட்டில் ஒரு சாராருக்கு என்னவென்றே தெரியாத சமாச்சாரமாகவும், மற்றொரு சாராருக்கு உயிர் மூச்சாகவும் விளங்கி வருகிறது.சிலர் 80களில் வெளியான இரும்புக்கை மாயாவியை இன்னும் பழைய புத்தக கடைகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக காமிக்ஸும், கார்ட்டூன்களும் குழந்தைகளுக்கானது என்ற எண்ணவோட்டம் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அதிகம். ஆனால் இந்த பொதுப்புத்தியைத் தாண்டி காமிக்ஸ் என்னும் தொடர் சித்திர மரபு(Sequential Art) அதன் கேளிக்கை வடிவத்தைத் தாண்டி சென்று விட்டது. கிராஃபிக் நாவல் எனப்படும் காமிக்ஸ் வகையின் ஒரு பகுதியானது வரலாறு, பண்பாடு, போர்களின் விளைவுகள், மக்களின் உளவியல் சார்ந்த விஷயங்களை கதைகளின் மூலம் பதிவு செய்கின்றன.

ஆதிகாலத்து குகை ஓவியங்கள், செதுக்கு சிற்பங்கள் ஆகியவைசித்திரக் கதைகளின் தொடக்கம் என சொல்லலாம். மொழியற்ற காலத்திலே அவர்கள் வாழ்க்கை முறையை பதிவு செய்ய உருவாக்கிய அந்த தொடர் சித்திரங்கள் இன்றும் அவர்கள் வாழ்க்கையை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன மொழியே இல்லாமல். ஒவ்வொரு நாடும் தனக்கென தனி காமிக்ஸ் நாயகர்கள், கதைகள், சித்திரமுறைகளை உருவாக்கிக்கொண்டன. அப்படி உருவான பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் மொழிமாற்றம் செய்து சில நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கின. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், பார்வதி சித்திரக்கதைகள் என சுமார் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காமிக்ஸ் தொழிலில் ஈடுப்பட்டிருந்தன. ஜேம்ஸ் பாண்ட், சிஸ்கோ கிட், முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி என பல நாயகர்கள் அந்நாளைய குழந்தைகளுக்கு மிகப்பெரும் ஈர்ப்பாய் இருந்தார்கள்.இந்தியாவில் சுப்பாண்டி, சிக்கரி சாம்பு, காளி போன்ற காமிக்ஸ் நாயகர்கள் உருவாகி பிரபலமானர்கள். ஒரு கட்டத்தில் காமிக்ஸ் விற்பனை மலிவடையத் தொடங்கியது(டி.வி பிரபலமான காரணமோ?). பிறகு பல நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களது விற்பனையை நிறுத்திக்கொண்டன. தற்போது தமிழில் லயன் காமிக்ஸ் நிறுவனம் மட்டும் காமிக்ஸை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.மேலும்சிலபுதியநிறுவனங்களும்காமிக்ஸைவெளியிடத்தொடங்கியுள்ளன. இப்படியான காலகட்டத்தில்தான் அந்நாளைய சிறுவர்கள்(இப்போது பெரியவர்கள்) தங்களது பால்ய பருவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு பழைய புத்தகக் கடைகளில் பழங்காமிக்ஸை தேடித் திரிகின்றனர்.

சிறுவர்களுக்கு தீராத கற்பனை வளத்தை ஊட்டுவதில் காமிக்ஸ் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. கதைகள், வண்ணக்கலவைகள், கதாப்பாத்திரங்கள் என அனைத்திலும்சிறுவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்படும் காமிக்ஸ்களை போலவே அனைத்து வயதினருக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கென தனியாக காமிக்ஸை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.மூன்று நாடுகள் காமிக்ஸ் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அமெரிக்கன் காமிக்ஸ், பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ், மாங்கா காமிக்ஸ்(ஜப்பான்). இதில் அதிகம் காமிக்ஸ் தொடர்களை வெளியிடுவது பிராங்கோ-பெல்ஜிய நிறுவனங்கள். பெரும்பாலும் தமிழில் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் தொடர்கள் பிராங்கோ-பெல்ஜிய, இத்தாலிய கதைகள் என்பதால் தமிழ் நாட்டிற்கும், பிரான்சிற்கும் இடையே ரசனை சார்ந்த ஒற்றுமை உண்டென சொல்லலாம். பிராங்கோ-பெல்ஜிய கதைகளின் நாயகர்கள் பெரும்பாலும் தமிழ் படங்களின் நாயகர்கள் போல ஆக்‌ஷன் ஹீரோக்களாகவோ, டிடெக்டிவ்களாகவோ, இருந்தனர். இதுவும் அவர்களது ரசனைகளோடு நாம் ஒன்ற காரணமாக இருக்கலாம். ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் பிராங்கோ-பெல்ஜிய கதைகளிலிருந்து வித்தியாசப்பட்டது. மதக் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் கதைகள் முதலில் இருந்தன. பின்னாளில் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் அவர்களது படைப்புகளில் வெளிப்படத் தொடங்கின. கார்ட்டூன் முதல் காமிக்ஸ் வரை அவர்களது பாணி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவை போருக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கை முறைகளை பதிவு செய்தது. அமெரிக்காவின் மனநிலை பிரான்சை விடவும், ஜப்பானை விடவும் வேறுப்பட்டதாக இருந்தது. சூப்பர் ஹீரோக்கள் எனப்படும் அதிசய சக்தி பெற்ற நாயகர்களே அவர்களது காமிக்ஸ் நிறுவனங்களுக்கு ஆதர்சமாய் இருந்தனர், இருக்கின்றனர். 75 வருட பழமையான Marvel Comics,DC Comics மீண்டும் தனது முந்நூறு முக்கோடி நாயகர்களின்(இவர்களும் 75வருட பழமை வாய்ந்தவர்கள்தான்) கதைகளை மறு உருவாக்கம் செய்யப் போவதிலிருந்து அவர்களுக்கு சூப்பர் ஹீரோக்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது தெரிகிறது.இந்த மூன்று நாட்டின் காமிக்ஸ் கதைகளும், நாயகர்களும் அவர்கள் வாழ்க்கை முறையிலிருந்தும், அவர்களின் தேவைகளிலிருந்தும் உருவாகியிருப்பதை சிறிதாவது அவதானிக்க முடிகிறது.

                காமிக்ஸ் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு திரைப்படம் பார்ப்பதை விட, ஒரு நாவலை படிப்பதை விட அலாதியானது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட பார்த்தல், படித்தல் இரண்டும் காமிக்ஸில் ஒரே சமயத்தில் நிகழ்வதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை உணர்ந்த காமிக்ஸ் கதையாசிரியர்களால் காமிக்ஸ் பொழுதுபோக்கு என்பதை தாண்டி ஒரு கலையாக, ஊடகமாக மாறியது. அவர்கள் வரலாற்றின் துயரம் படிந்த பக்கங்களை, மக்களின் இருள் படர்ந்த வாழ்வை காமிக்ஸின் மூலம் பதிவு செய்தனர். அவை கிராஃபிக் நாவல் எனப்பட்டன.அமெரிக்காவில் MAD எனும் பத்திரிக்கையை நடத்தி வந்த “கெயின்ஸ்(Gaines)” என்பவர் EC COMICS(Entertainment Comics) என்ற காமிக்ஸை தொடங்கினார். அது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த காமிக்ஸ் நிறுவனத்தை மூட சொல்லி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இறுதியாக அந்நிறுவனமும் மூடப்பட்டது. காமிக்ஸ் ஊடகத்தின் வலிமையை உணர்ந்த அமெரிக்க அரசு காமிக்ஸ் தணிக்கை குழு ஒன்றை உருவாக்கியது. இதன் மூலம் தங்களுக்கு எதிரான எந்த செய்தியும் பகிரப்படாது என கருதினர். சிலர் சிறு சிறு காமிக்ஸ் துணுக்குகளாக சிறு பத்திரிக்கைகளில் வெளியிடத் தொடங்கிய கதைகள் நாளடைவில் தொடர் கதைகளாக பெரும் பிரசுர நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.1974ல்The National Coalition Against Censorship (NCAC) என்ற அமைப்பு தணிக்கை குழுவினால் பொய்யான காரணங்களுக்காக நிராகரிக்கப்படும் காமிக்ஸ்களுக்கு ஆதரவாகஇணைந்தது. காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனங்கள், கதையாசிரியர்கள், ஓவியர்கள், விற்பனை ஏஜெண்டுகளுக்கு உதவும் விதமாய் 1986ல் The Comic Book Legal Defense Fund (CBLDF) எனும் அமைப்பு நிறுவப்பட்டது. ஒரு பொம்மை புத்தகத்திற்காய் இத்தனை போராட்டமா? என நீங்கள் வியக்கலாம். நான் முன்னர் கூறியதுதான் பார்த்தல், படித்தல் இரண்டும் காமிக்ஸில் ஒரே சமயத்தில் நிகழ்வதால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதை அவர்கள் புரிந்து கொண்டதுதான் காரணம்.

நமது நாட்டில் வெகுஜன மக்கள் சினிமாவுக்கும்,கிரிக்கெட்டிற்கும் காட்டும் ஆர்வத்தை ஓவியம், இசை போன்ற பிற கலைகளுக்கு காட்டுவதில்லை. நமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும் கூட காமிக்ஸ்களாய் வெளியிட எத்தனையோ வரலாற்று சம்பவங்களும், மக்களின் வாழ்க்கை முறைகளும், பல செவி வழிக் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன.R L Steivenson, Charles Dickins போன்ற கிளாசிக் எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து Scince Fiction கதைகள் வரை திரைப்படங்களாக எடுக்கமுடியாத அளவுக்கு காமிக்ஸ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு நாவலை மொழிப்பெயர்ப்பதை விட காட்சிகளாக்கினால் அது அனைத்து மொழியினராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.அதனால்தான் பிரபல நாவல்கள் காமிக்ஸ்களாக மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. மிகப்பெரும் விஞ்ஞானிகளும், பலதுறை மேதைகளும், திரைப்பட இயக்குனர்களும் அவர்கள் வாழ்வில் காமிக்ஸின் தாக்கம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் கூறுகின்றனர். பல நாடுகளில் காமிக்ஸ் படிப்பிற்காக தனி பல்கலைகழகங்களே இருக்கின்றன. மேலும் பல நாடுகளில் காமிக்ஸ் விருதுகளும், பயிலரங்கங்களும், விவாதங்களும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் காமிக்ஸுக்கென தனி நூலகங்கள் செயல்படுகின்றன. ஜப்பானில் வருடம் இருமுறை Comiketஎன்ற விழாவின் மூலம் இளம் காமிக்ஸ் படைப்பாளிகள் சந்தித்துக் கொள்கின்றனர். இவ்விழாவில் மூத்த படப்பாளிகளின் கருத்தரங்கங்களும் நடைபெறுகிறது. பொதுவாக காமிக்ஸை மேலோட்டமாக படிப்பது என்று மட்டும் பார்க்காமல் கதை, கரு, ஓவிய பாணி, கதை நிகழும் களம், மாந்தர்கள், ஆசிரியர் அந்த கதையை உருவாக்கியதற்கான காரணம், அதன் உள்அரசியல், வண்ண கலவை போன்றவற்றை உருவாக்க படப்பாளிகள் எடுத்துக்கொண்ட சிரமங்கள் பற்றியும் அறிந்துக் கொள்வது அவசியம் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இப்படியாக உலகம் ஒரு பக்கம் வேகமாய் காமிக்ஸின் அடுத்த படிநிலைகளை கடந்து போய்க் கொண்டிருக்க நாமோ அதன் ஆரம்ப நிலைகளை கூட தொடாமல் கண்களை மூடிக்கொண்டிருத்தல் சரியல்ல என்பது என் கருத்து.எந்த ஒரு சம்பவமும் காட்சி படிமங்களின் மூலமாக சொல்லப்படும்போது மொழி அவசியமற்று போகிறது. மேலும் காட்சி படிமங்கள் சொல்லவேண்டிய கருத்தை நம்மை அறியாமலே நம் ஆழ்மனதில் விதைக்கக் கூடியவை. காட்சி படிமங்கள் மக்களிடையே தொடர்பு மற்றும் இணைப்பை ஏற்படுத்தும். அப்படியான தொடர்பு சிந்தித்தலுக்கும், செயல்படுத்துதலுக்குமான திறனை உருவாக்கும். ஒரு கலையின் உன்னதமான பணி அதன் சமூகம் சார்ந்த விழுமியங்களை பதிவு செய்வதில்தான் இருக்கிறது. இது பற்றிய எந்தவொரு விழிப்புணர்வுமின்றி காமிக்ஸை குழந்தைகளுக்கானது என பார்க்காமல் அதன் மதிப்பை, சக்தியை புரிந்து கொண்டு ஒரு படியாவது முன்னேறுவதுதான் நம்முடைய தொன்மங்களை பதிவு செய்யவும், மற்ற மொழியினருக்கும் கொண்டு செல்லவும் உதவும்.

 

நன்றி: ஓவியர் டிராட்ஸ்கி மருது,பேசா மொழி

திரு.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ்

Graphic novels:The Comic Book Legal Defense Fund (CBLDF)

-Yugenprasanth

 

 

2125total visits,1visits today