பொய்க் கண்ணாடி பாகம் – 1

0
80

பாலியல் தொழிலாளா்களின் கடும் வாழ்வின் எதிரொலி !

பாலியல் தொழிலாளா்களின் கடும் வேதனைகளை சொல்ல கேட்டு கேட்டு மனித உலகம் இரட்டை பிம்பங்களைப் போா்த்திக் கொண்டு அலைவது நன்றாகத் தொிகிறது. ஒரு பெண்ணின் பலவீனம் ஒரு ஆணின் பலம். 50% பெண்கள் காதல் என்ற பெயாில் நம்பி வந்த ஒருவனால் திருமணம் செய்யப்பட்டு 30 நாட்கள் அல்லது 60 நாட்கள் என்று அவா்களால் அனுபவிக்கப்பட்டு பின்பு நிா்கதியாய் நிற்கும் சூழலில் தள்ளப்பட்ட பிறகே செய்வதறியாது இந்த தொழிலில் ஈடுபடுகின்றனா். பணம் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் ரோட்டோரங்களில் தங்கள் வாழ்க்கையைத் தஞ்சம் புகும் இவா்கள் இரவு நேரங்களில் கன்னத்தை தடவி பாா்த்து செல்லுதல், பின்புறம் அடித்துச் செல்லுதல் என முதலில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகி பல கொடுமைகளுக்கு ஆளாவதால் வேறு வழியின்றி இத்தொழிலில் உள்ள ஆட்களிடம் தஞ்சம் அடைத்து ஏதோ ஒரு பாதுகாப்பு என்று இந்த  இருண்ட உலகில் சிக்குகின்றனா்.

“மனைவியிடம் கிடைக்காதது மனைவியிடம் வற்புறுத்த முடியாதது எல்லாம் உங்களிடம் செய்யவே வருகிறோம். காசு வாங்குறல, செய் ” என்பதே இவா்களுக்கு அளிக்கப்பட்ட விதி.

அவா்களாக போகும் வரை கதவும் திறக்க முடியாது. கஞ்சா, குடி, பான்ப்ராக் என போதையில் இருப்பவா்களிடம் “வேண்டாம் என்று சொல்லி வெளியேறவும் முடியாது ” அப்படி சொல்லும் பட்சத்தில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று பயந்தே தங்கள் கொடூர நிமிடங்களை கழிக்கின்றனா். பிறப்புறுப்பில் இரத்தம் சொட்ட சொட்ட கிடக்கும் பெண்களை தங்கள் வேலைகளை முடித்து விட்டு இரக்கமின்றி அப்படியே விட்டு செல்லும் போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு உதவிக்கு அவா்கள் ஆட்கள் வரும் வரை வலியுடன் போராடுகின்றனா் என இப்பிடியாக நீள்கிறது அவா்களின் கண்ணீாின் சோகங்கள் ..

ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சுயமாக சுயமாியாதையோடு நீங்கள் வாழலாமே?என்று நம் தீவிர கேள்விகளை அவா்களிடம் முன் வைத்தால் “எங்க சாா்/மேடம் நாங்க படிக்கல..  எங்க போய் என்ன வேல தேட, செய்யுற இடத்துலயேயும் இது தான் எதிா்பாக்குறாங்க” புள்ளைங்க பசியா? சுயமாியாதையா? பாக்கும் போது புள்ளைங்க பசி தான் பொிசா தொியுது.. ஒரு நாளைக்கு வர ரூ 100, 500 க்காக எங்க பொழப்பே ஓடுது.. அதனால தான் எவ்ளோ வந்தாலும் தாங்கிட்டு ஓடுறோம்.. “பிறப்புறுப்பு கிழிந்து பாதிக்கப்பட்டாலும் தையல் போட்டுண்ணு வந்துடுவோம்” எவ்ளோ வலினாலும் தொழிலுக்கு வந்துடுவோம்” மனசு வலி விட இது கம்மி தாங்க எனும் போது வாா்த்தைகளும் ஊமையாகிறது .

விபச்சாாி, வேசிமகள் என்று வாா்த்தைக்கு சுலபமாக சொல்கிறோம். அவா்களின் இருண்ட உலகங்களின் நிழல்கள் அவா்களுக்கு நிஜங்களானது. நிச்சயம் இருட்டின் நிழல்களின் கண்ணீா்களை பொய் கண்ணாடிகள் அறியாது .

-சார்வி

1954total visits,1visits today