கதிரவன் – பாகம்1

0
76

நூறு பில்லியன்களுக்கும் அதிகமான விண்மீன்களைக் கொண்டது நம் பால் வழி (Milky way) விண்மீன் பேரடை (Galaxy). இப்பேரடையில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக ஒரு விண்மீன் கூட்டம்  பேரடை (Galaxy) என்று அழைக்கப்பட அதில் குறைந்தபட்சமாக 100 பில்லியன் விண்மீன்களாவது இருக்க வேண்டும்.

நமது கதிரவன் சாதாரண முதன்மைத் தொடரில் அமைந்த ஒரு G2 Vவகை விண்மீன். பொதுவாக G2 வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்ப நிலை சுமார் 5500 கெல்வின் அளவில் அமையும்.

புவியின் நடுக்கோட்டு ஆரம் (Equatorial Radius) 6,378 கிமீ என்பதுடன் கதிரவனின் நடுக்கோட்டு ஆரம் – 6,95,700கிமீ யை ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 109 மடங்கும்,

கதிரவனின் நிறை – 1.989 x 1030கிகி யை புவியின் நிறையான 5.972 x 1024 கிகி உடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 333,000 மடங்கும் பெரியது.

புறப் பரப்பு வெப்ப நிலை – 5800 கெல்வின்

மையப் பகுதி வெப்ப நிலை – 1,56,00,000 கெல்வின்

கதிரவக் குடும்பத்தின் மகா கனம் பொருந்திய தலைவராக கதிரவனை கொள்வதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. காரணம் கதிரவக் குடும்பத்தின் நிறையில் 99.8 விழுக்காடு நிறையை தன் நிறையாகக் கொண்டது கதிரவன். மீதம் உள்ள 0.2 விழுக்காட்டு நிறையில் பெரும் பகுதி வியாழன் கோளுக்கு உரியது. ஆகவே நம் புவி முதலான கோள்கள் எல்லாம் சில்லரைகள் தான்.

கதிரவனைக் குறிப்பிடும் போது அடிக்கடி சாதாரண விண்மீன் என்றே குறிப்பிடுகிறோம். கதிரவனைப் போல பல கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன என்ற அர்த்தத்தில் அவ்வாறு குறிப்பிடுகிறோம். இருப்பினும் கதிரவனை விட பெரிய மற்றும் சிறிய விண்மீன்களும் நிறைய உள்ளன. நிறையை பொருத்து வகைப்படுத்த முதல் 10 விழுக்காடு விண்மீன்களில் கதிரவனும் அடங்கும். நம் பேரடையிலுள்ள விண்மீன்களின் சராசரி நிறையானது  அநேகமாக கதிரவனின் நிறையில் பாதிக்கும் குறைவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

உலகின் பல பகுதிகளில் கிடைக்கும்  புராணங்களில் கதிரவன் உருவகப்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கிரேக்கர்களால் ஹீலியோஸ் (Helios) என்றும் ரோமர்களால் சால் (Sol) என்றும் குறிக்கப்படுகிறது.

 

தற்போதைய நிலையில் கதிரவனின் நிறையில் 70 விழுக்காடு ஹைட்ரஜனும், 28 விழுக்காடு ஹீலியமும் பிற அனைத்தும் சேர்ந்து 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. ஹைட்ரஜன் மெதுவாக அணுக்கரு வினை காரணமாக ஹீலியமாக அதன் மையப்பகுதியில்  மாற்றமடைகிறது.

கதிரவனின் சுழற்சி சற்றே வித்தியாசமாக உள்ளது. கதிரவனின் புற அடுக்கு நடுக்கோட்டுப் பகுதியில் ஒரு முறை சுற்றி வர 25.4 நாட்களும் அதே சமயம் துருவப் பகுதியில் 36 நாட்களும் எடுத்துக் கொள்கிறது. காரணம் கதிரவன் புவியைப்போல் திண்ம நிலையில் உள்ள கோளாமாக இல்லாமல் எரியும் வாயுக் கோளமாக இருப்பதே.

கதிரவனின் உள்ளகம் என்பது அதன் ஆரத்தில் 25 விழுக்காடு நீளம் என்று கொள்ளலாம். இப் பகுதி மிக அதிகமான வெப்ப நிலையாக 15.6 மில்லியன் கெல்வினாகவும், அங்கு நிலவும் அழுத்தம் 250 பில்லியன் புவியின் (Atmospheric pressure) வளிமண்டல அழுத்தமாகவும் இருக்கிறது. இப் பகுதியில் கதிரவனின் அடர்த்தி  நீரின் அடர்த்தி (1g/cc) யைப் போல் சுமார் 160 மடங்கு அதிகம். அதாவது ஒரு மிலி (1 ml) பொருளின் நிறை கிட்டத்தட்ட 160 கிராம் (g) ஆக அமையும்.

கதிரவனின் ஆற்றல் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) என்ற வகையில் பெறப்படுகிறது. கதிரவன் ஒரு வினாடியில் தரும் ஆற்றல் கிட்டத்தட்ட 3.846 x 1026 வாட் .

இதற்காக ஒவ்வொரு வினாடியும் 700,000,000 டன் ஹைட்ரஜன் 695,000,000 டன் ஹீலியமாக மாற்றப் படுகிறது. இதன் வித்தியாசமான

5, 000,000 டன் நிறைதான் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்படும் ஆற்றல் காமாக் கதிராக் புறப்பரப்பு நோக்கி வெளியே உமிழப்படும் போது குறைந்த மற்றும் குறையும் வெப்ப நிலையில் தொடர்ந்து உட்கவர்தலுக்கு (Continuous absoption) ஆளாகி மீண்டும் திரும்ப உமிழப்படுகிறது (Re – emission). இது புறப்பரப்பை அடையும் சமயம் முதல் நிலையில் பார்வை ஒளியாக மாற்றமடைந்திருக்கும். புறப்பரப்பை நோக்கிச் செல்லும் கடைசி இருபது விழுக்காடுப் பாதையில் ஆற்றல் வெப்பக்கதிர் வீச்சு (Heat Radiation) முறையில் பரவாமல் வெப்பச் சலன (Heat convection) முறையில் தான் கொண்டு செல்லப்படுகிறது.

தொடரும்…….

-வெ.சுப்ரமணியன்

 

773total visits,1visits today