கதிரவன் பாகம்-2

0
49

கதிரவப் பரப்பு ஒளிக்கோளம் (Photosphere) என்றழைக்கப்படுகிறது. இது சுமார் 5800 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும். புறப்பரப்பில் சற்றே வெப்பம் குறைந்த, குளிர்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன. இப்பகுதிகள் சுமார் 3800 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கும். இப்பகுதிகளைக் கதிரவனின் புறப்பரப்பில் அளவில் சிறிய புள்ளியாக காணப்படுகின்றன. இப்புள்ளிகள் உண்மையில் அளவில் மிகவும் பெரியவையே. இவற்றின் விட்டம் சாதாரணமாக 50,000 கிமீ அளவில் இருக்கும்.

கதிரவப்புள்ளிகள் (Sunspots) என்று அழைக்கப்படும் இக்குறைந்த வெப்பநிலைப் பகுதிகளை இன்னும் சரிவர அறிந்து கொள்ள இயலவில்லை. கதிரவனின் காந்தப்புலத்துடன் ஏற்படும் சிக்கலான செயலெதிர்வினை (Interaction) காரணமாக உருவாவதாக கருதப்படுகிறது. ஒளிக்கோளத்தைற்கு சற்று மேலாக அமைந்த சிறிய பகுதி நிறக்கோளம் (Chromosphere) என்றழைக்கப்படுகிறது. நிறக்கோளத்திற்கும் மேல் அமைந்த மிகவும் அடர்வு குறைந்த பகுதி கரோனா (Corona) ஆகும். இப்பகுதி பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியில் (Space)பரந்துள்ளது. இருப்பினும் இப்பகுதி முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே கட்புலனாகும். கரோனா பகுதியில் வெப்ப நிலை 1,000,000 கெல்வினுக்கு மேல் இருக்கும்.

 

 

சில நேரங்களில் புவிலிருந்து இருந்து  நோக்கும் போது கதிரவனும், நிலவும் ஒரே அளவினதாகத் தோற்றமளிக்கும். தவிரவும் நிலவு புவியைச் சுற்றி வரும் தளமும், புவி கதிரவனைச் சுற்றி வரும் தளமும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருப்பதும் காரணமாக நிலவானது புவிக்கும் கதிரவனுக்கும் இடையில் வரும் கிரகணம் (Solar Eclipse) நிகழ்வு ஏற்படுகிறது.

இந்த வரிசையமைப்பு சற்றுக் குறைபாடு உடையதாக இருந்தால், நிலவால் கதிரவ வட்டு முழுமையாக மறைக்கப்படுவது இல்லை. இத்தகைய நிகழ்வை பகுதி கிரகணம் (Partial Eclipse)  என்று குறிப்பிடுகிறோம். இதுவே நிலா வட்டு சரியாகப் பொருந்தி கதிரவ வட்டை முழுமையாக மறைக்க முழு கதிரவ கிரகணம் (Total solar eclipse) ஏற்படுகிறது. படத்தில் காட்டியபடி நிழல் (Umbra) பகுதியில் முழு கதிரவ கிரகணமும், புற நிழல் (Penumbra) பகுதியில் பகுதி கதிரவ கிரகணமும் ஏற்படுவதைக் காணலாம்.

 

 

பகுதி கிரகணம் சற்று பரந்த பரப்பில் தெரிந்தாலும், முழு கிரகணம் மிகக் குறைந்த பரப்பில் தான் தெரிவதை படத்தில் காணலாம். முழு கிரகணம் கட்புலனாகும் கிரகணப்பாதை மிகவும் குறுகலாகவும், சில கிலோமீட்டர் தொலைவே இருக்கும். கதிரவ கிரகணம் ஒரு ஆண்டில் ஒரிரு முறையே ஏற்படுகிறது. நாம் இருக்கும் இடத்திலிருந்து எங்கும் செல்லாமல் இருந்தாலும் ஒரு தசாப்தத்தில் பல முறை பகுதி கதிரவ கிரகணத்தைக் காண இயலும். ஆனால் முழு கிரகணத்தின் பாதை( Path of totality) மிகக் குறுகியதாக இருப்பதால் நாம் இருக்கும் இடத்திலிருந்தே முழு கிரகணத்தைக் காண்பது குறைவான சாத்தியக் கூறு கொண்டது. இதனால் தான் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட உலகின் பாதித் தொலைவு பயணம் செய்தே முழு கதிரவ கிரகணத்தைக் காண்கிறார்கள். முழு கதிரவ கிரகணத்தின் போது மட்டுமே கதிரவனின் கரோனா (Corona) பகுதியைக் காண முடியும்.

நிலவின் நிழலில் நிற்பது ஒரு அற்புதமான அனுபவம். நடுப்பகலில் சில வினாடிகள் வானம் இருட்டி விண்மீன்கள் தெரியும் அந்த விந்தையான கணத்தில் பறவைகள் கூட தாம் உறங்கும் அந்திப் பொழுது வந்து விட்டதாக எண்ணி கூடடையத் திரும்புவதும், முழு கதிரவ கிரகணத்தை காண மேற் கொள்ளும் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தையும் பெரும் மதிப்புடையதாக மாற்றி விடும் என்பது திண்ணம்.

கதிரவனின் காந்தப்புலம் புவிக்குரிய தரத்துடன் ஒப்பிட மிகவும் வலிமை வாய்ந்தது மட்டுமில்லாமல் அதிகம் சிக்கல் நிறைந்ததும் கூட. கதிரவனின் காந்த மண்டலம் (Magnetosphere) புளூட்டோ (Pluto) விற்கும் அப்பால் பரவியுள்ளது. வெப்பம் மற்றும் ஒளி ஆற்றல்கள் தவிர தொடர்ந்த குறைந்த அடர்த்தி கொண்ட மின்னூட்டம் (Low density charged particles) கொண்ட  துகள்களையும் உமிழ்கிறது. இத்துகள்கள் பெரும்பாலும் எலக்ட்ரான்களும் புரோட்டான்களுமாகவே இருக்கின்றன. இந்த நிகழ்வு கதிரவ புயல் (Solar wind) என்று அழைக்கப்படுகிறது. கதிரவ புயல் கிட்டத்தட்ட வினாடிக்கு 450 கிமீ/ வினாடி என்ற வேகத்தில் கதிரவ குடும்பம் முழுவதிலும் வீசுகிறது. கதிரவ காந்தப்புயல் தவிர கதிரவ கிளரொளிகள் (Solar flares) வாயிலாக மிக அதிக ஆற்றல் கொண்ட துகள்களும் உமிழப்படுகின்றன.

 

புவியில் நிறைய விரும்பத்தகாத மற்றும் விரும்பத்தக்க பல விளைவுகள் இந்த உமிழ்வுகளால் ஏற்படுகிறது. மின்கம்பிகளில் திடீர் மின்னோட்ட உயர்வு, ரேடியோ அலைகளின் குறுக்கீடுகள் போன்ற விரும்பத்தகாத விளைவுகள் மட்டுமில்லாமல் அழகிய  வட மற்றும் தென் விண்ணொளிகள் (Aurora Borealis and Aurora Australis) போன்ற கண்ணுக்கினிய காட்சிகளையும் காண காரணமாகிறது.

தொடரும்….

-வெ.சுப்ரமணியன்

592total visits,3visits today