கதிரவன் பாகம்-3

0
52

இந்தப் பகுதியில் கதிரவப்புள்ளிகள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். கதிரவப்புள்ளிகள் (Sunspots)  என்பவை மிக வலிமையான கதிரவ காந்தப்புலப் பகுதிகளாகும். கட்புலனாகும் ஒளியில் இவை சற்றே நிறம் மங்கி காணப்படும். இவற்றின் சுற்றுப்புறத்தை விட சில ஆயிரம் கெல்வின் வெப்ப நிலை குறைவாக குளிர்ந்து அமைவதே காரணமாகிறது. பொதுவாக கட்புலனாகும் கதிரவப் புறப்பரப்பு சாதாரணமாக 5800 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கும். ஆனால் பெரிய கதிரவப்புள்ளிகள் இவ்வெப்ப நிலையை விட சுமார் 4000 கெல்வின் வரை குறைவாகவே அமையும்.

கதிரவப் புள்ளிகள் கிட்டத்தட்ட 2500 கிமீ முதல் 50000 கிமீ வரையிலான உருவளவு கொண்டவை . கதிரவப்புள்ளிகள் பிரம்மாண்டமாக இருந்த போதிலும்1,392,000 கிமீ விட்டம் கொண்ட கதிரவனுடன் ஒப்பிட மிகவும் சிறியவையே. கதிரவப்புள்ளிகளில் பெரும்பாலானவை அநேகமாக வட்டவடிவிலேயே காணப்படுகின்றன. பொதுவாகவே கதிரவப்புள்ளிகள் இரண்டு பகுதிகளைக் கொண்டமையும். (1) நிழல் பகுதி( Umbra) மற்றும் (2) புறநிழல் பகுதி(Penumbra). கதிரவப்பரப்பை நோக்கி உயரும் காந்தப் பாயத்தின் (Magnetic flux) காலத்தைச் சார்ந்த மாறுபாடு ஒரு காலச்சுற்றாக அமைகிறது. இச்சுற்றை கதிரவச் சுற்று ( Solar Cycle) என்றழைக்கப்படுகிறது. இந்த கதிரவச்சுற்று சராசரியாக 11 ஆண்டு காலமாகும். இச்சுற்றை சில நேர்வுகளில் கதிரவப்புள்ளிச் சுற்று (Sunspot Cycle) என்றும் அழைப்படுகிறது.

கதிரவச் சுற்று சிறுமமாக இருக்கும் காலத்தில் கதிரவனின் மேல்பரப்பில் அரிதாகவே கதிரவப்புள்ளிகள் கட்புலனாவது மட்டுமல்லாது, அவ்வாறு காட்சிப்படும் கதிரவப்புள்ளிகள் வடிவில் சிறியதாகவும் குறைந்த வாழ் நாளையும் பெற்றுள்ளன. கதிரவச்சுற்று பெருமமாக இருக்கும் காலத்தில் கதிரவப் பரப்பில் கிட்டத்தட்ட எல்லா நேரமும் கதிரவப்புள்ளிகள் கட்புலனாகிறது. இத்தகைய நிலையில் அடிக்கடி நூற்றுக்கும் மேலான கதிரவப்புள்ளிகளை ஒரே நேரத்தில் காண இயலுகிறது. அதிலும் சில முன்னர் சொன்னது போல 50,000 கிமீ விட்டத்துடன் மிகப்பெரியதாக பல வாரங்கள் வரை கட்புலனாகின்றன.

கதிரவச் சுற்று 1843 ஆம் ஆண்டில் சாமுவேல் ஹெயின்ரிச் ஷ்வாப் (Samuel Heinrich Schwabe) ஆல் கண்டறியப்பட்டது. அவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கதிரவப்புள்ளிகளை கூர் நோக்கி ஆராய்ந்து சராசரியாக  கதிரவப்புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட கால அளவில் பெருமத்திற்கும் சிறுமத்திற்கும் இடையில் மாறுபடுவதைக் கண்டறிந்தார். இந்த அவதானிப்புகளில் பெறப்பட்ட  தகவல்களை ரூடால்ஃப் உல்ஃப்  (Rudolf Wolf) தொகுத்து ஆராய்ந்து கதிரவச் சுற்றை 1745 முதல் மறு உருவாக்கம் செய்தார். இதன் அடிப்படையில்  கதிரவப்புள்ளிகள் குறித்த கலிலியோவின் 17 ஆம் நூற்றாண்டு அவதானிப்புகளையும் சமகால அவதானிப்புகளையும் ஒருங்கிணத்தார்.

ரூடால்ஃப் உல்ஃப்பின் சுற்றெண்ணிக்கை எண் 1 (cycle1) என்பது 1755 முதல் 1766 வரை ஆன கால கட்டம் என்று கொள்ளப்படுகிறது. ரூடால்ஃப்  உல்ஃப்பால் உருவாக்கப்பட்ட கதிரவப்புள்ளிகளுக்கான தர அட்டவணையே இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. சுற்றுக்களின் கால அளவு என்பது சிறு அளவில் வேறுபாடுகள் கொண்டது.

உதாரணமாக (Solar cycle – 1) கதிரவச் சுற்று எண் (1) பற்றிய விவரங்கள்:
தொடக்க மாதம்  :  மார்ச் 1755

முடிவு  மாதம்      : ஜூன் 1766

கால அளவு        : 11.3 ஆண்டுகள்

அதிகபட்ச 12 மாத சராசரி கதிரவப்புள்ளிகள் எண்ணிக்கை : 86.5

அதிகபட்ச கதிரவப்புள்ளிகள் காணப்பட்ட மாதம்  : ஜூன் 1761

குறைந்தபட்ச 12 மாத சராசரி கதிரவப்புள்ளிகள் எண்ணிக்கை : 11.2

அடுத்த கதிரவச்சுற்று அதாவது  கதிரவச் சுற்று எண் (2)  1766 முதல் 1775 வரையிலான காலம்.

தொடக்கத்தில் ஒரு சுற்றுக்கு சராசரியாக 11.04 ஆண்டுகள் என்ற கணக்கில் 1699 முதல் 2008 வரையிலான 309 ஆண்டுகளை 28 சுற்றுகளாக பிரிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இவற்றில் மிக நீண்ட இடைவெளியான 1784 முதல் 1799 வரையிலான காலகட்டம் இரண்டு பகுதிகளாக இருந்திருக்க வேண்டும். அதில் ஒன்று எட்டு ஆண்டுகளுக்கும் குறைவானதாக அமைந்திக்க வேண்டும்  என்ற கருத்தைத் தருகிறது. தற்போது நடைபெறுவது கதிரவச்சுற்று எண் 24 ஆகும். இச்சுற்று 04. 01.2008 தொடங்கி நடந்து கொண்டுள்ளது.

வெ.சுப்ரமணியன்

 

569total visits,2visits today