கிராமத்தை நோக்கிச் செல்லுங்கள்

0
116

விட்டது பொது தேர்வு ரிசல்ட். வாழ்க்கையே வெற்றி பெற்ற மெதப்பில் சிலரும், வாழ்க்கையை தொலைத்து விட்ட கவலையில் பலரும் இருப்பார்கள் அல்லது அவர்களை வழிநடத்தும் பெற்றோராக/உறவினராக நீங்கள் இருப்பீர்கள். இனி அந்த சிறுவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? கலை அறிவியல் கல்லூரி/மருத்துவ/பொறியியல்/தொழில்நுட்ப கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றை மார்க்கும் பணமும் முடிவு செய்திருக்கும்! இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

கால்நடை மருத்துவருக்கான உதவியாளர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. எட்டாம் வகுப்பு தான் தகுதி. ஆனால், முதுகலை படித்த பலரும் வந்திருந்ததாக பத்திரிக்கைகள் தெரிவித்தன. மேலும், சில ஆன்லைன் ஊடகங்கள் பட்டதாரிகள் ஆடு/மாட்டு மேய்ப்பது, சைக்கிள் ஓட்டுவது பரிதாபமாக இருந்ததாக தெரிவித்து இருந்தது. அந்த பட்டதாரிகளின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் இந்த ஊடகத்தின் கருத்தியலை கொண்ட பெற்றோர்கள்,உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள்.

ரிசல்ட்டுக்கு முந்தய நாளில் இருந்தே மீம்ஸ்கள் வர துவங்கி விட்டன. தனுஷின் சமீபத்திய ரவுடி கெட்டப்பில் வந்த படத்தின் காட்சியை வைத்து உக்கிரமாக மீம்ஸ் ஒன்று இருந்தது. எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி மீம்ஸ்கள் உருவாக்கி இருப்பார்கள். இவர்களுக்கு இப்படி தளமாவது  இருக்கிறது. சிலர், பரிட்சை முடிந்த மதிய வேளையில் பள்ளி அருகில் இருக்கும் தண்டவாளத்தில் போய் படுத்தவர்களும் இருக்கிறார்கள். கேட்டால், வீட்டிற்கு போக பயம். என் அப்பா என்னை எப்படியும் கொன்னே போடுவார் சார் என கதறிய பெண்ணும் உண்டு. சிலர் இருக்கிறார்கள், நான் கவிஞனாக போகிறேன். நான் சைக்காலஜிஸ்ட் ஆக போகிறேன் என்றவர்களை எல்லாம் சமூகம் ஏளனமாக பார்த்தது. என் உறவினர் பையனுக்கு செய்தியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. அவனை அழைத்த பக்கத்து வீட்டுக்காரர் இயற்பியல், வேதியியல் படி. அப்புறம் பேங்க் கோச்சிங் போ! என்றார். இவரை போன்று மனநிலை உடையவர்கள் பலரை நீங்கள் கண்டிருக்கலாம் அல்லது அது நீங்கலாக கூட இருக்கலாம். இவர்கள் தான் சமுகத்தின் அபத்தங்கள்.

ஏன்  அபத்தங்கள் என்றால், வங்கி, தொழிற்சாலை, ஐடி பார்க்குகள், வணிக வளாகங்களில் வேலை செய்வது தான் பெருமை எனும் நம்பிக்கை நகைப்புக்குரிய ஒன்று. சொந்த மண்ணை விட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றவரின் நிலையை ‘அங்காடி தெரு’போன்ற எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தவே மாட்டார்கள். பின் என்ன செய்ய சொல்கிறாய்? விவசாயம் செய்ய சொல்கிறாயா? விவசாயிகளே மகன்களை வேறு படிக்க சொல்கின்றனர் என்பார்கள்.

மருத்துவரில் துவங்கி, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள், செய்தியாளர்கள் என இன்று சமுகத்தின் உயர் பதவிகளாக கருதப்படுபவர்களாக கூட எத்தனை பேர் அவர்கள் பிள்ளைகளை தனது தொழிலே சேர சொல்லி வற்புறுத்துகின்றனர் என நினைக்கிறீர்கள்? அவர்களுக்கும் அதே நிலை தான் எனும் பொழுது விவசாயிகள் தன் பிள்ளைகளை விவசாயம் செய்ய வேண்டாம் என கூறுவது மட்டும் திட்டமிட்டே மிகைப்படுத்தப்படுகிறது.

தனியார் கல்லூரிகளில் கொண்டு போய் கொட்ட போகும் பணத்திற்கு பத்து மாடு வாங்கி கொடுங்கள். ஒரு மாடு பத்து லிட்டர் கொடுத்தாலும் ஒரு லிட்டர் நாற்பது வீதம் நாலாயிரம் தினம் சம்பாதிக்கலாம். மாடு வளர்க்க செலவினங்கள் ஒன்றும் பெரிதாக இப்பொழுது இல்லை. குறைந்த தண்ணீரில் அதிகம் மாட்டு தீவனங்களை வளர்க்க முடிகிறது. இவர்கள் முதுகலையே படித்து முடித்து இருந்தாலும் மாதம் பத்தாயிரம் வாங்குவதே சாதனை. தனியார் பள்ளி/ கல்லூரி ஆசிரியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் மனசாட்சியே இல்லாமல் ஐயாயிரம் வாங்குகிறார்கள். ஆனால், வேலை மட்டும் அதிகம் இருக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் பொழுது மாத விலக்கு நாட்களில் இரண்டு மூன்று முறை கழிவறை சென்றாலும் தலைமை அதிகாரிகளால் கேட்கப்படும் கேள்விகள் அபத்தமானவை. மன அழுத்தம் அதிகரித்து, வாழ்க்கை அழகியலை இழந்து, மதுவுக்கு அடிமையாகி அனைத்தையும் இழக்கிறார்கள்.

என் தோழி ஒருவர், சமீ பத்தில் மணம் ஆகி இருக்கிறார். கணவர் காலம் முழுவதும் உடன் பிறந்தவர்களுக்காக உழைத்து தனது முப்பதாவது வயதில் இவளை திருமணம் செய்திருக்கிறார். காலை வேலைக்கு சென்றால் இரவில் வருவார். இருக்கும் அசதிக்கு உடலுறவெல்லாம் கனவில் நினைக்க அவர் தயாராக இல்லை. அந்த பெண் தான் முழித்துக் கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில், பெண்கள்  கட்டைகளும் கம்புகளுமாக சாராய கடைகளை அத்தனை போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் துவம்சம் செய்தனர். அவர்கள் வாழ்க்கையில் சாராயம் எப்படி கொடூரமான அரக்கனாக இருந்திருந்தால் இப்படி ஆத்திரத்தை காட்டி இருப்பார்கள். இப்படி நமது ஆண்களை அடிமைப்படுத்த வேண்டிய சாராயத்திற்கு அவசியம் எங்கிருந்து வந்தது?

இரண்டில் ஒரு இந்தியர் மன அழுத்தம் உடையவராக இருப்பதாகவும், தற்கொலைகள் அதிகம் என்றும் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வெளி நாட்டவர்கள் ஆறு மாதம் பணியும் ஆறு மாதம் ஓய்வும் எடுப்பார்களாம். அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அப்படி! நாம் தான் பத்தாயிரத்துகே மந்தைகளாக காத்து கிடக்கிறோமே. முப்பதாயிரம் சம்பளத்திற்கெல்லாம் தலை சுற்றி விழுந்து விடுகிறோம். பின் எப்படி ஓய்வெல்லாம் எதிர்பார்ப்பது?

நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்வதை விட, கிராமத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து விடலாம். இப்பொழுது நினைத்ததும் உங்களால் இருக்கும் வேலையும் வீட்டையும் விட்டு சென்றுவிட முடியாது. இதற்கு காரணம், பள்ளிக் கல்வி முடிந்ததும் நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. இதே நிலையை இன்றைய ஒன்பது லட்சம் மாணவர்களுக்கும் ஏற்படுத்த போகிறீர்களா? இந்த உலகில் எந்த தொழில் வேண்டுமானாலும் அழியும். உணவு தொழில் மட்டும் அழிய வாய்ப்பே இல்லை. இதற்காக தானே, மனித இனம் அந்த ஓட்டம் ஓடுகிறது.

ஒருவேளை, இப்பொழுது ஆர்வம் ஏற்பட்டாலும் ஒன்றும் குசம்ப தேவை இல்லை. எல் நினோ முடிந்து விட்டது. தெற்காசியாவின் பருவ நிலைக்கு மாற்றத்தின் காரணம் அது தான். இந்த வருடம் சிறப்பான மழை இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். வேளாண்மை பற்றி இணைய பக்கங்கள், பேஸ்புக் தளங்கள், பத்திரிகைகள், அரசின் பயிற்சி நிறுவனங்கள் என பல வாய்ப்புகள் கண் முன்னே கொட்டி கிடக்கின்றன. பயன்படுத்தி பாருங்கள். நமது மண்ணை நாம் அனுபவிக்காமல் வேறு யார் அனுபவிப்பார்கள்? உங்கள் குழந்தைகள் இன்று உங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தால், வேறு யாரோ ஒருவர் முன் தன் சட்டையை கிழித்து, உள்ளாடையை அவிழ்த்து தன் தூய்மையை நிருபித்துக் கொண்டிருப்பார்களா என்ன? வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிற்கு சொல்லாமல் ஒரு நேரம் உணவு உட்கொண்டு நகர்த்தில் வாழும் பலரை எனக்கு தெரியும். அதன் அவசியம் என்ன? கிராமங்களில் எல்லாம் வறட்சி இருந்தால் என்ன? நீங்கள் அதனை விட்டு பிரிந்து விட்டீர்கள். பின் அது விதவையாக தான் செய்யும். மீண்டும் இணையுங்கள். இது உங்களுக்கான நேரம். பகுதி நேரமாவது விவசாயம் செய்ய ஒன்பது லட்சம் பேரையும் ஊக்குவியுங்கள்.

என் கஷ்டம் என்னோடு போகட்டும். நீயாவது, ஆடு/மாடு என செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். தயவு செய்து, விவசாயம் செய்யப்பா என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை. உங்களது சாலைகள் கிராமத்தை நோக்கி செல்லட்டும்.

-இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீ

1205total visits.