ஜிலேபி மீனின் கதை

0
78

தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 160 க்கும் அதிகமான பாரம்பரிய மீன் வகைகளில் ஜிலேபி மீன்களுக்கு இடமில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் ஜிலேபி மீனின் தாயகம் ஆப்ரிக்கா. இதன் உண்மையான பெயர் திலேபியா(Tilapia). அது மருவிதான் ஜிலேபி என்று ஆனது. நமது பகுதியில் சப்பாறு என்று இதற்கு பெயருண்டு. 1952 இல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, 1960 களில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியன் டெவலப்மெண்ட் ஆபிசர்களால் (பி.டி.ஓ.) கிராமங்கள்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இப்போது நமது நீர்நிலைகளின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட இந்த மீன்கள் நமது பாரம்பரிய மீன்களின் எமன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைக்கு இருக்கின்ற நமது இளம் தலைமுறையினருக்கு பாரம்பரியமான மீன்களின் பெயர்கள் கூட தெரியாது. நமது மீன் வகைகள் என்று எடுத்துக்கொண்டால் வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, வெளிச்சிக் கெண்டை,குள்ளாங் கெண்டை என பலவகை மீன்கள் உண்டு. இவை தவிர அயிரை, கெழுத்தி, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளில் பெரும் பகுதி இப்போது அழிந்து போய் விட்டன. அல்லது அழிவின் விளிம்பில் இருக்கிறன.

நமது பாரம்பரிய மீன்களின் முட்டைகளை தேடித்தேடி வேட்டையாடும் ஜிலேப்பி மீன்கள், நமது மீன்களுக்கான உணவுகளைக் கூட விட்டு வைப்பதிலலை. பொதுவாக நமது மீன்களில் பெரும்பகுதியான கெண்டை மீன்கள் பூச்சி புழுக்களை உண்டு வாழ்வன. விரால், ஆரால் போன்றவை பிற உயிரினங்களின் அழுகிய சதைகளை சாப்பிடக் கூடியவை. அயிரை போன்ற மீன்கள் பாசி போன்றவற்றையும் உண்டு வளரக் கூடியவை. இன்னவகை மீன்கள் இந்தவகை உணவைத்தான் உண்டு வளரும் எனும் இயற்கை விதி இருக்கிறது.

ஆனால் இந்த ஜிலேப்பிக்கு இதுதான் உணவென்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சாக்கடையிலும் வாழும் மலத்தையும் உண்ணும். சிறிய ரக மீன்களை அசாத்தியமாக வேட்டையாடும். அசுர வேகத்தில் இனப்பெருக்கம் நிகழ்த்தும் இந்த ஜிலேபி மீன்கள் 80 சதவீத தனது குஞ்சுகளை பாதுகாத்து வளர்த்து விடும் ஆற்றல் உள்ளவை. மற்றமீன்கள் சராசரியாக 30% அளவுக்குதான் தனது சந்ததிகளை காப்பாற்றும். இன்னும் கொஞ்ச காலங்களில் சிறிய ரக மீன்களில் ஜிலேப்பி மட்டும்தான் எஞ்சியிருக்கப் போகிறது.

மீன் தேவையை பூர்த்தி செய்திடும் நோக்கத்தோடு இறக்குமதி செய்யப்பட்ட இந்த வகை மீன்கள் இப்போது கலப்பினம் செய்யப்பட்டு இன்னும் வீரியமாகவும் ஆபத்தானகவும் நீர்நிலைகளை அலங்கரிக்கின்றன. நமது மாமிச வேட்கையின் காரணமாக ஆயிரமாயிரமாண்டு கால பாரம்பரிய மீன் இனங்களை அழித்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நீரின் உயிரியல் சமத்துவத்தை கொலை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த பூமியில் மனிதன் தனது சொந்த நலனுக்காக எந்த உயிரையும் வேரோடு அழித்திடும் கொடுஞ் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இருப்பதில் இருந்து வளர்ச்சி என்ற தத்துவத்துக்கு மாறாக இறக்குமதி என்றைக்கும் அழிவையே கொண்டு வரும் என்பதற்கு ஜிலேபி மீனும் நல்ல உதாரணம்.

-பாவெல் தர்மபுரி

645total visits,3visits today