ஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 1

0
114

“The only way to get rid of my fears is to make films about them”

இதை யார் சொல்லியிருக்கக் கூடும்? கட்டாயம் ஒரு திரைப்பட இயக்குனராகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட இயக்குனர்? தனது பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். பயமுறுத்தும் வகையில் சிறந்த படங்களை எடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? அப்படி ஒரு பட்டியல் தயாரித்தால் முதலிடத்திலேயே வருவார் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். சரியான உச்சரிப்பு என நம்புகிறேன். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்றால் இவர்தான்.

முதலில் வந்த வசனம் எனக்கு “Batman begins” படத்தை நினைவு படுத்துகிறது.

“Why bats master Wayne?”

“Bats frighten me; it’s time my enemies share my dread”

தமிழில் சரித்திர நாவல் என்று எடுத்தால் அதில் கல்கியின் சாயல் இல்லாமல் போகாது என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு உண்மை இயக்குனர்களின் பார்வையில் ஹிட்ச்காக்தனம் கலந்திருப்பது. அவர் பெயரை புகழை கேள்விப் பட்டு இருக்கிறேனே தவிர படங்களை பார்த்ததில்லை. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு எழுத்தாளர் பிடித்த மாதிரி எழுதி இருந்தால் அவரது அனைத்து படைப்புகளையும் தேடி எடுத்து படிப்பது. சினிமாவும் அப்படித்தான். கிட்டத்தட்ட அனைத்து Woodey Allen படங்களையும் பார்த்து முடித்து விட்டேன். ஹிட்ச்காக்கின் தேர்ந்தெடுத்த 29 படங்கள் கிடைத்தன. விடுவேனா? பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டேன். 2 வருடங்களாக பத்திரப்படுத்தி விட்டு இப்போது தான் பார்க்கத் துவங்கினேன். தமிழ் சினிமா வேலை நிறுத்தத்தால் முடங்கி இருக்கும் பொழுது ஹிட்ச்காக் நினைவு வந்தது நல்லதாய் போயிற்று. இல்லை எனில் இன்னும் பல வருடம் ஆகி இருக்கும்.

படங்களை வழக்கமான பாணியில் விமர்சிக்க போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் வந்து குறைந்தது 50 வருடங்கள் ஆன படங்கள். திரைத்துறையில் இருப்பவர்களையும் உலக சினிமா இரசிகர்களையும் தவிர்த்து யாருக்கும் இவற்றை பார்த்திருக்க அவசியமோ நேரமோ இருந்திருக்காது. அதனால் இலைமறை காய்மறை என்றெல்லாம் பாராமல் படங்களை பற்றி முழுவதும் எழுதி விடப் போகிறேன். எழுத்தை சினிமாவாக மாற்றுவது போல் சினிமாவை எழுத்தாக மாற்ற முயற்சிக்கிறேன். திரைக்கதையை அப்படியே எழுதப் போவதில்லை. படம் எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு பிடித்ததை, நான் கவனித்ததை மட்டும் தான் எழுத இயலும். அது தான் சரியாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். நான் இயக்குனரை பற்றி பெரிதாக எழுதப் போவதில்லை. அவரின் படங்களை என் பார்வையில் எழுத போகிறேன். எதற்கு சொல்கிறேன் எனில் நிறைய பேருக்கு ஹிட்ச்காக் ஆதர்ச குரு. அவரைப் பற்றி குறைத்து எழுதி விட்டதாக சண்டைக்கு வரக் கூடாதல்லவா? அதே போல் டெக்னிக்கலாக எதிர்ப்பார்க்க வேண்டாம். உங்களுடன் பள்ளியில் படித்து வரும் பக்கத்து பெஞ்ச் மாணவன் படம் பார்த்து வந்து கதை சொல்கையில் கிடைக்கும் சுவாரசியம் நிச்சயம் கிடைக்கும். நன்றி.

01.The Lodger (1927)

1888 ல் இலண்டனில் தொடர் கொலைகள் நிகழ்ந்தன. அக்கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லரை “Jack the ripper” என்று அழைப்பார்கள். காரணம் கொலை செய்வதுடன் அவர்களின் உறுப்புகளையும் எடுத்து சென்று விடுவான். கிட்னிக்காக இது செய்யப்பட்டது என பேசப்பட்டாலும் அந்த காலகட்டத்தில் இப்போது போல் கிட்னி திருட்டு மருத்துவ கொள்ளைக்காக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கொலைகாரனை இறுதி வரை யாராலும் பிடிக்க இயலவில்லை. இதை மையமாக கொண்டு பல புத்தகங்கள் இங்கிலாந்தில் வெளியாகி பெறும் வெற்றிப் பெற்றது. அதில் ஒரு புத்தகம் தான் “The Lodger”.

ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தனது ஐந்தாவது படமாக இதை எடுத்தார். அவருக்கு முதல் படம் பாதியிலேயே நின்றது. இரண்டாவது படம் குறும்படம். மூன்றாவது, நான்காவது படங்கள் எடுக்கப்பட்டாலும் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. யாரும் வெளியிடவில்லை ஐந்தாவது படம் வெளியாகி வெற்றி பெறும் வரை.

இப்படம் வந்த காலகட்டம் மௌனப்படங்கள் மட்டும் தான் வெளிவந்தது. சினிமா வரத்துவங்கிய ஆரம்ப கட்டம். பெரிதாக கேமரா ட்ரிக்ஸ்லாம் செய்ய இயலாது. இசையை கோர்க்க இயலும். வசனங்களை சேர்ப்பதில்லை. காட்சிக்கு இடையே ஸ்லைடு போடப்படும். அதில் வசனங்களை படித்துக் கொள்ளலாம். எழுத படிக்க தெரியாதவர்கள் அல்லது ஆங்கில மொழி தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கும் தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் வண்ணம் காட்சிகளை எடுத்திருப்பார் ஹிட்ச்காக்.

படத்தின் துவக்கத்தில் ஒரு பெண், அழகான தங்க நிற முடியுடைய பெண் கொலை செய்யப்படுகிறாள். கத்தியால் குத்தப்படுகிறாளா அல்லது துப்பாக்கியால் சுடப்படுகிறாளா என்று எதுவும் காட்டப்படுவதில்லை. அவள் முகம் மட்டும் தான் நமக்கு காட்டப்படுகிறது. அதிலேயே அவள் காட்டும் பாவனையிலேயே அவள் கொல்லப்படுகிறாள் என்பது நமக்கு புரியும். அவளின் அலறல் சத்தம் கூட கேட்காது நமக்கு. ஆனால் நம்மால் உணர முடியும். இதே போன்ற துவக்கத்தைத்தான் பிசாசு படத்தில் மிஷ்கின் வைத்திருப்பார். ஆனால் மிஷ்கின் அப்பெண்ணை சிரித்த முகத்துடன் சாகடித்திருப்பார்.

நாம் பார்த்த பெண்ணின் சாவு ஏழாவது பெண்ணுடையது. தொடர் கொலையின் ஒரே ஒற்றுமை கொலை செய்யப்படுவது பெண்கள். தங்க நிற கூந்தல் உடையவர்கள். கொல்லப்படுவது செவ்வாய்கிழமைகளில். பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தி இது தான். இலண்டன் மாநகர் முழுவதும் மக்களின் பேச்சு இதை பற்றித் தான் இருக்கிறது. பொன்னிற கூந்தலுடைய பெண்கள் அதை மறைத்து விக் வைத்து நடமாடுகிறார்கள். மரணபயம். வேறென்ன செய்ய இயலும்? டெலிபோன் கண்டறிந்த புதிது. ஒரு குழாயை வலது கையில் வாயருகே பிடித்து , இன்னொன்றை இடது கையால் காதை ஒட்டி வைத்து கத்தி பேசிக் கொண்டிருந்த காலகட்டம்.

கொலைகாரனை பார்த்த ஒரே ஒரு வயதான பெண்ணின் சாட்சியத்தில் இருந்து கொலைகாரன் நல்ல உயரம், நல்ல நிறம், முகத்தில் வாயையும் மூக்கையும் ஸ்கார்ஃபால் மூடி இருந்தான் என்ற அடையாளங்கள் மட்டுமே தெரியும். இலண்டன் பனியில் அனைவரும் அப்படித்தான் திரிவார்கள் என்பது வேறு விஷயம்.

ஒரு சத்திரம். கீழே ஒரு குடும்பம் தங்கி, மாடி போர்சனை வாடகைக்கு விடும் வகையில் உள்ளது. குடும்பம் என்றால் வயதான கணவன் மற்றும் மனைவி, பொன்னிற முடியுடைய மகள். அவள் மாடலும் கூட. அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட காவல் துறையில் பணியாற்றும் காதலன் ஒருவன். அவ்வளவு தான்.

ஒரு நாள் இரவு. வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள். சத்திர உரிமையாளரின் மனைவி சென்று திறக்கும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கதவைத் தாண்டி முகத்தில் பாதி ஸ்கார்ப் கட்டிய உயரமான மனிதன் உள்ளே நுழைகிறான். பெண்மணியின் நெஞ்சு படபடக்கிறது. பயத்தில் கத்த துவங்குவதற்கு முன்பாக மின்சாரம் வருகிறது. அவன் ஸ்கார்பை எடுத்து விட்டு, வாடகைக்கு தங்க வந்திருப்பதாக சொல்கிறான். நல்ல அழகன். ஆனால் பார்ப்பதற்கு இரத்தம் குடிக்கும் டிராகுலாவை நினைவு படுத்தும் கண்கள்.

அவனுக்கு தரப்பட்ட அறை முழுக்க ஓவியங்கள். அத்தனையும் பொன்னிற பெண்களுடையது. அனைத்தையும் திருப்பி சுவர்பக்கம் மாட்டி வைக்கும் விருந்தினன் சற்று நேரம் பொறுத்து அத்தனையும் எடுத்து சென்று விடுமாறு மிக கனிவாக சொல்கிறான். எடுத்துச் செல்ல தாய்க்கு உதவ மகளும் வருகிறாள். அவளை விருந்தினன் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம்?

ஒரு மாதத்திற்கு வாடகையை முன்பணமாக தந்து விடும் விருந்தினன் சாப்பிடுவதற்கு எளிமையாக ஆர்டர் செய்கிறான். அவனது நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கின்றன. தரைதளத்தில் இருப்பவர்களுக்கு மேலுள்ள விளக்கு அதிரும் வண்ணம் அவன் இரவு முழுவதும் அறைக்குள்ள நடந்துக் கொண்டே இருப்பது குழப்பத்தை தருகிறது. இதை மிக மிக அருமையாக காட்சி படுத்தி இருப்பார். விளக்கு ஆடும். அதிரும். இப்போது இருந்தால் அதன் ஒலியை டிடிஎஸ்சில் பயமுறுத்தி இருப்பார்கள். அப்போது பின்னனி பியனோதான். அதை வைத்தே மிரட்டி இருப்பார் ஹிட்ச்காக். அதிரும் விளக்கை ஊடுருவி அவன் நடப்பதை காட்சி படுத்தி இருப்பார். 1927ல் எடுத்த அந்த கண்ணாடி மீது நடக்க வைக்கும் ஷாட்டைத்தான் இப்போது வரை ஹீரோ என்ட்ரிக்கு நாம் பயன்படுத்துகிறோம் தோழர்களே.

மற்ற நேரத்தில் அனைவரிடமும் இயல்பாக நடந்துக் கொள்ளும் விருந்தினன், தனிமையில் விடுதி உரிமையாளர் மகளிடம் (நாயகி) மட்டும் விசித்திரமாக நடந்து கொள்கிறான். அவளிடமும் சிரித்து பேசி பழகினாலும் அவள் பார்க்காத வேளையில் அவளை பார்க்கும் பார்வையின் அர்த்தம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

அடுத்த செவ்வாய் கிழமை வருகிறது. நாயகியின் காதலனும் அந்த தொடர் கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பில் காவல்படையுடன் ஊரைச் சுற்றி வருகிறான். பொன்னிற கூந்தலுடைய மகளை பெற்றதாலோ என்னவோ நாயகியின் தாய்க்கு உறக்கமே இல்லை. நடுநிசியில் விருந்தினன் அறையை விட்டு வெளியேறும் சத்தம் கேட்கிறது. இந்த இடத்திலும் ஒரு அருமையான ஷாட். வளைந்த படிக்கட்டுகள். அதன் கைப்பிடி. மேலிருந்து பார்க்கையில் ஒரு கை மட்டும் அதனை பிடித்துக் கொண்டே கீழ் இறங்குகிறது. இருட்டில் கை மட்டும் தான் தெரியும்.

விருந்தினன் சத்திரத்தை விட்டு வெளியேறியதும் நாயகியின் தாய் சென்று அவன் அறையை சோதித்து பார்க்கிறாள். ஒரு லாக்கர் மட்டும் பூட்டி இருக்கிறது. வந்த அன்று அதனுள் தன் கைப்பையை வைத்து அவன் பூட்டியது நினைவுக்கு வருகிறது. பைக்குள் என்ன இருக்கும்?

அடுத்த நாள், அந்த சத்திரத்திற்கு அருகிலேயே ஒரு கொலை நிகழ்ந்தது தெரிய வந்த பொழுது நாயகியின் பெற்றோர் அதிர்ச்சி அடைகிறார்கள். நாயகியின் தாய் தன் கணவனிடம் விருந்தினன் நள்ளிரவு வெளியேறி திரும்பியதையும் அவன் தான் கொலைகாரானாக இருக்கக் கூடும் என்ற தனது சந்தேகத்தையும் சொல்கிறாள்.

இன்னொரு பக்கம் நாயகியின் காதலன், தன் காதலியிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறான். அவள் விருந்தினனுடன் இயல்பாக பேசினால் கூட சந்தேகிக்கிறான். இதனால் இருவருக்கும் பூசல் வருகிறது. நாயகி மாடலாக பங்கெற்கும் ஃபேஷன் ஷோவில் கலந்துக் கொள்ளும் விருந்தினன் அவள் அணிந்திருக்கும் உடையை வாங்கி அன்று மாலை அவளுக்கு பரிசளிக்கிறான். ஆனால் அவனை சந்தேகிக்கும் அவள் தந்தை முன்பின் தெரியாதவரிடம் என் பெண் பரிசு வாங்கமாட்டாள் என திருப்பி தந்து விடுகிறார். அது குறித்து மன்னிப்பு கேட்க செல்லும் விருந்தினன் அப்படியே நாயகியை வெளியே அழைத்துச் செல்ல விரும்புவதை சொல்கிறான். இருவரும் செல்கிறார்கள்.

இருவரும் இலண்டன் பனியில் நெருக்கமாக அமர்ந்திருப்பதை பார்க்கும் நாயகியின் காதலன் வந்து சண்டையிட, நாயகி அவனுடனான காதலை முறித்துக் கொள்கிறாள். அவர்கள் இருவரும் சென்ற பின் சோகத்தில் அங்கேயே அமரும் காவலனுக்கு அங்கு பனியில் தெரியும் விருந்தினனின் கால்தடம் தெரிகிறது. கொலைகாரனின் கால்தடத்தின் அளவுடன் ஒத்துப்போகும் கால்தடம்.

அதிகாரிகளுடன் வந்து அவனது அறையை சோதனை போடுகையில் என்ன கிடைக்கிறது தெரியுமா? அதற்கு முன்பு அதிகாரிகள் வரும் போது விருந்தினனும் நாயகியும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை இங்கு சொல்லவில்லை. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. மறைத்து வைக்கப் பட்டிருந்த விருந்தினனின் கைப்பை. அதனுள் துப்பாக்கி, கொலை நடந்த இடங்களின் வரை படங்கள். ஏற்கனவே கொலையான ஒரு பெண்ணின் புகைப்படம். விருந்தினன் தான் தொடர் கொலைகாரன் என முடிவெடுக்கும் காவல் அதிகாரிகள் அவனுக்கு கைவிலங்கிட, சரியான சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறான்.

வழக்கம் போல காவலர்கள் கண்ணில் படாத விருந்தினன் அவன் காதலியின் கண்களில் படுகிறான். அவன் கைவிலங்கை மறைத்து, உடன் அமர்ந்து பொறுமையாக அவன் கதையை கேட்க, தொடர் கொலையாளியினால் முதலில் கொல்லப்பட்டது தன் தங்கை என்றும் அவளது புகைப்படத்தைத்தான் தான் வைத்திருந்ததாகவும், அவனை பழி வாங்குவதாக தன் தாய்க்கு சத்தியம் செய்து தந்திருப்பதையும் சொல்கிறான்.

கொலை குளிர். விரைத்தே செத்து விடுவான் விருந்தினன் என்பதை புரிந்து கொண்டு அவனுக்கு பிராந்தி வாங்கித்தர ஒரு பாருக்கு அழைத்து செல்கிறாள் நாயகி. அங்கிருந்து வெளியேறும் போது அங்குள்ள குடிமக்களுக்கு அவன் தான் தேடப்படும் கொலையாளி என தெரிய வருகிறது. துரத்துகிறார்கள். ஓடுகிறான். ஒரு கம்பி கேட்டை தாண்டி குதிக்கையில் அவன் விலங்கு மாட்டிக் கொள்கிறது. அந்தரத்தில் தொங்குகிறான். மேலேயும் மக்கள் தாக்குகிறார்கள். முழங்காலுக்கு கீழேயும் மக்கள் கூட்டம் தாக்குகிறது. இந்த காட்சி புதுப்பேட்டை படத்தில் சுவற்றில் ஏற முடியாமல் தனுஸ் தொங்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.

உண்மையான கொலையாளி அகப்பட்டு விட்டான் என்பதை தெரிந்துக் கொண்டு காவலனும் காதலியும் அவனை மக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்களால் இயலவில்லை. தாக்குதல் தொடர்கிறது. பொழுது விடிகிறது.

“இன்றைய தலைப்பு செய்தி – தொடர் கொலைகாரன் பிடிபட்டுவிட்டான்” என்று கூவி கூவி அன்றைய நாளிதழை ஒரு பையன் விற்கத் துவங்கும் பொழுது மக்கள் கூட்டத்திற்கு தங்கள் பிழை புரிந்து கலைந்து ஓடுகிறார்கள். விருந்தினன் இரத்த காயத்துடன் மயங்கி கிடக்கிறான்.

அவன் பிழைத்தானா? இல்லையா? என்பதை மட்டுமாவது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் இணைப்பு

இந்த படத்தை 2010ல் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். பெரிதாக போகவில்லை. ஹிட்ச்காக் கைவண்ணம் போல் வருமா? மிக மிக எளிமையான திருப்பம் தான். அனைவரும் யூகித்திருப்போம். ஆனால் அதை எடுத்த விதம் தான் சிறப்பு. மொத்தம் 5 கதாபாத்திரங்கள் தான். அருமையாக த்ரில்லராக கொண்டு போயிருப்பார். ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து கூட ஒருமுறை பார்த்து விடுங்கள். அதிலும் எனக்கு அந்த காலகட்டத்து பெண்களின் தோற்றம் மிகவும் பிடித்ததால் சுவாரசியம் குறையாமல் பார்த்தேன்.

-கதிர் ராத்

1335total visits,2visits today