ஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 5

0
107

05.Saboteur (1942)

ஹிட்ச்காக் படங்களுக்கென உருவாகி வந்த ஒரு டெம்ப்ளெட் படி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் தான் இது. ஒரு பெரிய சதிக்கும்பலின் சதித் திட்டத்தில் எதிர்பாராமல் நுழையும் சாமானியன் அவர்களை எதிர்த்து தனியாளாக அவர்களது திட்டங்களை முறியடிப்பது தான் அந்த டெம்ப்ளெட். அதற்காக படம் ஒரே மாதிரி இருக்கும் என நினைக்கத் தேவையில்லை. சதித் திட்டத்திலும் அதை செயல்படுத்துல் கும்பலிலும் சுவாரசியம் ஏற்படும் வகையில் மாறுதல் செய்திருப்பார் ஹிட்ச்காக். இப்படத்திற்கு கதையும் திரைக்கதையும் வேறொருவர் எழுத வெறுமனே இயக்கம் மட்டும் தான் ஹிட்ச்காக்.

ஒரு விமான தொழிற்சாலையில் இரண்டு நண்பர்கள் உணவு இடைவேளையில் வெளியேறுகையில் ஒருவன் மீது மோத அவன் கையில் வைத்திருந்தவை தவறி விழுகின்றன. பணமும் கடிதமும். அக்கடிதத்தின் மீது ஃப்ரை என்று எழுதியதை கவனிக்கிறார்கள். சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்படுகிறது. அதை அணைக்க உள்ளே செல்லும் இரு நண்பர்களில் ஒருவன் இறக்கிறான். மற்றவன் தான் நாயகன். இறந்தவனுக்கு அந்த தீயணைப்பானை தந்தது நாயகன் தான். அதனுள் அணைக்கும் பொருளுக்கு பதிலாக எரியூட்டம் கேசலின் இருந்திருக்கிறது. எனவே இந்த நாச சம்பவம் விபத்தல்ல, திட்டமிட்ட சதிச் செயல் என்று போலீஸ் நாயகனை கைது செய்ய முயலும் போது தப்பிக்கும் நாயகனுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

தான் நண்பனிடம் கொடுத்த தீயணைப்பானை தன்னிடம் கொடுத்த அந்த ஃப்ரை என்பவன் யார்? அந்த பெயரில் தன் தொழிற்சாலையில் யாருமே வேலை பார்க்கவில்லை என்று தெரியவருகையில் அவனைத் தேடி புறப்படுகிறான். மற்றொரு புறம் போலீஸ் அவனைத் தேடி கிளம்புகிறது. இது மிக சாதாரண கதைக்களம். இதே போன்ற களத்தில் ஹிட்ச்காக்கே சில படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால் நாயகனின் தொடர் பயணத்தில் கிட்டத்தட்ட 3000 மைல் பயணித்திருப்பார். அப்பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் தான். அவர்களைத் தான் சுவாரசியமாக கையாண்டிருப்பார் ஹிட்ச்காக்.

தமிழில் மேஜர் சந்திரகாந்த் என்றொரு படம் வந்தது. அதில் நடித்து தான் வெறும் சுந்தர் ராஜன் மேஜர் சுந்தர் ராஜனாக புகழ் அடைந்திருப்பார். கண் தெரியாத அந்த கதாபாத்திரம் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது தான் அப்படத்தின் மையக்கரு. அதே காட்சி இப்படத்திலும் உண்டு. ஆனால் இது சற்று நேரம் மட்டும் வரும் காட்சி, தமிழ் படத்தில் மொத்த படமும் அதையொட்டியே நகரும். இந்த படத்தில் கண் தெரியாத முதியவரின் பேத்தியாக வருபவள் தான் நாயகி. உதவ நினைக்கும் தாத்தாவிற்கு தெரியாமல் நாயகனை போலிசில் பிடித்துக் கொடுத்து விட துடிப்பவர். நாயகன் குற்றமற்றவன் என புரிந்து கொள்ளும் வரை விருப்பமில்லாமலும் அது தெரிந்த பின் பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கையில் காதலுடனும் நாயகனுடனேயே பயணிப்பார்.

இப்படத்தில் நான் மிகவும் இரசித்த கதாபாத்திரம் வில்லன்களில் ஒருவராக வரும் டோபின். வயதான ஊரில் அனைவரும் மதிக்கக் கூடிய மனிதராக இருந்துக் கொண்டு நாட்டையே ஒழிக்க திட்டமிடும் போதும், தன் பேத்தியுடன் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் போதும், மற்ற வில்லன்களை தன் சாதுர்ய புத்தியாலும் பேச்சாலும் கட்டுப்படுத்தும் காட்சியிலும் மனுசன் செம கெத்தாக இருப்பார். தமிழில் இந்த படம் எடுத்தால் நாகேஷ் இந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருந்துவார். ஒரு இடத்தில் கூட பதட்டமோ கோபமோ அடையாத வில்லன். கையில் இருந்து நாயகன் நாயகி தப்பிக்கும் போது கூட “ஏம்பா பதறறீங்க, முதல்ல போனை போட்டு கேட்டை சாத்த சொல்லுங்க” என அசால்ட்டு செய்வார். அதிலும் சிரித்துக் கொண்டே நாயகனை மிரட்டும் காட்சிகளெல்லாம் அட்டகாசம். இறுதிவரை யாரும் இவரை நெருங்க முடியாது.

The 39 Steps பார்த்து விட்டு பார்த்தால் இந்தப் படம் மெதுவாக போவது போல தான் தெரியும். ஆனால் போரடிக்காது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் எடுக்கப் பட்டதாலோ என்னவோ தேசப்பற்று வசனங்களும் இருக்கும். அதே போல் படத்தில் நாயகியை வெறுமனே வந்து போகும் படி இல்லாமல் உருப்படியாக பயன்படுத்துகிறார்.

மிகவும் சிறிய ஒன்றை மணி நேர படம் தான். வில்லனுக்காகவே தவற விடக்கூடாத படம் இது.

படத்தின் இணைப்பு https://www.youtube.com/watch?v=ubt05JHujd0

-கதிர் ராத்

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

ஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 4

866total visits,1visits today