எப்படி இருக்கிறது முள்ளிவாய்க்கால்?

0
49

இவ்வுலக வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய இன அழிப்பு எதுவென்று கேட்டால் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இலங்கையில் உள்ள முள்ளி வாய்க்கால் என்ற இடத்தில் சிங்களப் பேரினவாத அரசும், 23 உலக நாடுகளின் ராணுவத்தினரும் சேர்ந்து இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த நிகழ்வு தான்…

முள்ளி வாய்க்காலில் நடந்த அப் பெருந்துயரை தமிழ் மண்ணும் மக்களும் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எதிர்காலத் தலைமுறைக்கு இலங்கையில் அப்படி என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வசதியாக ஆவணப்படுத்தவும் கட்டப்பட்டது தான் தஞ்சையில் விளார் நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்…

தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, சிவகங்கைப் பூங்கா இந்த வரிசையில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய இடங்களில் ஒன்று இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்…

முள்ளிவாய்க்கால் முற்றம் செல்ல வேண்டுமென்பது என் நெடுநாளைய கனவாக இருந்தது. சென்ற முறை ஊருக்கு வந்திருந்த போது அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை எப்படியும் சென்றுவிட்டே வருவதென்று சிங்கையிலிருக்கும் போதே தீர்மானித்திருந்தேன். ஒருநாள் அந்த நன்நாளும் அமைந்தது…

நான் சென்ற நேரம் பின்மாலைப்பொழுது, உள்ளே உயிருள்ள மனிதர்கள் நிறைய பேர் உலவிக் கொண்டிருந்தார்கள். உணர்வுள்ள மனிதர்கள் ஒரு சிலரையே காண முடிந்தது. (இந்த வார்த்தை பிரயோகத்திற்கான காரணத்தை பின்னர் கூறுகிறேன்)…

ஒரு வழிபாட்டுத்தலத்திற்கு இணையான இடமென்பதால் முகப்பிலேயே காலணிகளை கழட்டிய பிறகே உட்செல்ல அனுமதிக்கிறார்கள். அந்த இடத்தின் புனிதத்தை அங்கிருந்தே உணர வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலானவர்கள் அதை உணரத் தவறிவிடுகிறார்கள்…

உள் நுழைந்தவுடன் வலப்பக்கம் நம் பார்வையை பறித்துக்கொள்கிறது ஓங்கி உயர்ந்து நிற்கும் ஓர் கற்பாறைச் சுவர். ஈழமும் இனமும் எரிவது கண்டும் ஏதும் செய்யமுடியாத ஈனப்பிறவிகளாய் தங்களை உணர்ந்து, உடல்களை தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தவர்களின் உருவங்கள் தீப்பிழம்புகளுக்கு நடுவே பொறிக்கப்பட்டிருந்தன.
அதில் முத்துக்குமாரைக் கண்டேன். ஏனோ தெரியவில்லை செங்கொடியைக் காணவில்லை…

முற்றத்தின் முகப்பில் இருக்கும் சுவற்றிலும், இடப்பக்கம் இருக்கும் இன்னொரு சுவற்றிலும் போர்க்காட்சிகள். இதயத்தில் ஈழத்தில் நிற்பதைப் போன்ற ஒரு உணர்வு…

பள்ளிப் புத்தகத்தை நெஞ்சில் அணைத்தபடி பதுங்கு குழிக்குள் பயந்து கிடக்கும் குழந்தைகளையும், கரம் அறுக்கும், சிரம் கொய்யும் சிற்பங்களையும் கண்டபோது கலங்கும் இதயம் கற்பினியின் தனங்கள் அறுக்கும் காட்சி கண்டு நொறுங்கியே விடுகிறது….

சீறும் ராக்கெட்டுகள், பற்றி எரியும் பனைமரங்கள், வெடித்துச் சிதறும் கொத்துக் குண்டுகள், கை கால்கள் பிணைக்கப்பட்டு, ஆடைகள் களைந்து அம்மணமாக்கப்பட்டு பிணக்குவியலாய் கிடக்கும் மனிதநேயம் என்று ஒவ்வொரு சிற்பமும் மனத்திரையில் காட்சிகளாய் விரிகின்றன….

விடியலின் ஏக்கத்தை விழிகளில் சுமந்துகொண்டு முள்வேலிக்குள் இருந்து முகம் காட்டும் உலகின் மூத்தகுடியை கண்டு பதறும் போதும், யாழ் பொது நூலகம் பற்றி எரியும் சிற்பம் கண்டு சிந்தை கலங்கும் போதும் நம்மையும் அறியாமல் நம் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன….

அடப்பாவிகளா நூல்கள் என்பது வெறும் தாள்கள் என்றா நினைத்தீர்கள்? ஒவ்வொன்றும் உயிரல்லவா…!
உலகத்தின் அறிவுப்பசி போக்கும் பயிரல்லவா…!

கன்னங்களில் வழிந்த கண்ணீரை கைக்குட்டையால் துடைத்தபடி
முற்றத்தின் நடுவே வந்தேன். தமிழன்னையின் உருவத்தை தாங்கி நிற்கும் நினைவுத்தூண். உள்ளே நம் அன்னையின் அஸ்தி. முழந்தாளிட்டு தொட்டு வணங்கிவிட்டு நினைவு மண்டபத்தின் உள்ளே நுழைந்தேன்…

நினைவு மண்டபம் இரண்டு விசாலமான அறைகளைக் கொண்டதாக இருக்கிறது. முதல் அறை முழுவதும் ஓவியங்களாலும், நிழற்படங்களாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது…

முன் அறையின் முகப்பில் நுழைந்தவுடன் தலைக்குமேலே ஏதோவொரு ஏளனச் சிரிப்பு, திரும்பி அண்ணாந்து பார்த்தேன்.எரிந்து கிடந்தபோது எங்கே போனாய் என் தோழா என்று கேட்டு எள்ளி நகைத்துக் கொண்டே வரவேற்கிறாள் செங்கொடி ஓவியமாய்… தலை தாழ்ந்தேன்…

அவளைத் தொடர்ந்து அந்த அறையின் சுவர் முழுவதும் ஈழத்தில் விதைக்கபட்ட வீர விதைகள் விருட்சங்களாய் நிற்கிறார்கள் ஓவியங்களில்…

ஓவியத்தில் உள்ள ஒவ்வொருவரும் நம்மோடு கதைக்கிறார்கள். அடுக்கடுக்காய் கேள்விக் கனைகளைத் தொடுக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலாக கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறது நம் கண்ணீரைத் தவிர…

“பிழைக்கப் போனவர்கள் ஏன் நாடு கேட்கிறார்கள்?” என்று அறியாமையில் கேட்பவர்களின் கன்னத்தில் அறைந்து, இலங்கை “தமிழர்களின் தாய்மடி” என்பதையும், நாம் தான் அங்கு “பூர்வீக குடி” என்பதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிரூபித்து பதில் சொல்கிறது சில ஓவியங்கள்…

முன் அறையின் நடுக்கூடத்தில் பிணக்குவியலும் , போரில் காயமுற்று குற்றுயிரும் குலை உயிருமாய் கிடக்கும் உடல்களும் கிடத்தப்பட்டிருக்கின்றன நிழற்படங்களாய்…

நடந்தது போர் என்று நாடகமாடும் உலகநாடுகளே, இந்தப் நிழற்ப்படங்களில் ஒன்றைக் கூடவா உங்கள் கண்கள் காணவில்லை. கண்டும் காணாதிருந்த உங்கள் கண்கள் குருடாகவில்லையே?
கலங்காதிருந்த உங்கள் இதயத்தில் இடி விழவில்லையே? இறைவனென்று ஒருவன் இருப்பது உண்மைதானா?

அண்ணா என்ற குரல்கேட்டு அதிர்ந்து திரும்பினேன். தலையில் கட்டோடு தரையில் கிடத்தப்பட்டிருந்த தளிர் ஒருத்தி தான் அழைத்திருந்தாள். தலையிலிருந்து கன்னத்தில் வழிந்த குருதியை துடைத்தபடியே சொன்னாள், அண்ணா இங்கிருக்கும் படங்கள் தான் நிழல்களே தவிர நடந்தவை அனைத்தும் நிஜம்.
வழிகின்ற குருதி நிஜம்.
வலிக்கின்றன ரணங்கள் நிஜம்,
கிடக்கின்றன பிணங்கள் நிஜம், என்றாள்.

அதற்குமேல் அவளின் வார்த்தைகளைக் கேட்டால் இதயம் வெடித்துவிடும் என்ற பயத்தில் காதுகளைப் பொத்திக்கொண்டு கால்களை நகர்த்தினேன் அடுத்த அறை நோக்கி…

நினைவு மண்டபத்தின் முன் அறையிலிருந்து பின் அறைக்குச் செல்லும் வழியின் இருபுறமும் ஈழத்து வரலாறு சொல்லும் புத்தகப் பூக்கள் பூத்துக்கிடக்கின்றன…
படித்து பிடித்தவர்கள் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்…

முன் அறையை விட பின் அறை மிகவும் விசாலமாய் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை படைத்து, பராமரித்து, பாதுகாத்து வரும் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையினர் நம்மை உள்ளே வரவேற்கிறார்கள். திறந்தவெளி அலுவலகமும், சிறிய ஆலோசனைக்கூடமும் இருக்கிறது.

தமிழனாய் பிறந்து தரணியில் புகழ்பெற்ற அத்தனை தலைவர்களையும் அங்கே கண்டேன். வீரமும், ஈரமும் கொண்ட ஓர் இனம் மதியும் மானமும் இழந்து கிடக்கும் இன்றைய நிலையின் காரணம் குறித்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் சுவர்களில் சித்திரங்களாய் அமர்ந்துகொண்டு…

வையத் தலைமை கொள்ள வேண்டிய ஓர் இனம் வையம் முழுவதும் ஓடி ஓடி வாடகை நாடுகளில் வசிப்பதன் காரணம் குறித்துக் கேட்டேன்…

ஒற்றுமையின் பலத்தை உணராது போனது என்றார் ஒருவர். சாதி என்னும் சாக்கடையை சந்தனம் என்று பூசிக்கொண்டது என்றார் மற்றொருவர். போலித் தலைவர்களின் பின்னே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாய் நிற்பது என்றார் வேறொருவர். அவர்களிட்ட பட்டியல் அத்தனையும் உண்மை என்பதால் அவமானத்தோடு அங்கிருந்த அலுவலகம் நோக்கி நடந்தேன்…

முற்றத்தின் பராமரிப்புக்கு விரும்பினால் நன்கொடை கொடுக்கலாம் என்ற அறிவிப்பை பார்த்தேன். என்னால் இயன்றதைக் கொடுத்து ரசீது பெற்று மீண்டும் மண்டபத்தின் வாயிலுக்கு வந்தேன்.

“அண்ணா இங்கே வாருங்கள்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். திரும்பிய திசையிலிருந்த சிறுவர் பூங்காவின் நுழைவாயிலில் இருந்துகொண்டு புன்சிரிப்போடு அழைத்தான் பாலச்சந்திரன்.

இத்தனை சோகத்திலும் எப்படிச் சிரிக்கிறாய் தம்பி என்றேன். நான் விளையாட முடியாவிட்டாலும் என் பெயரில் உள்ள இந்த சிறுவர் பூங்கா இத்தனை குழந்தைகளை மகிழ்விக்கிறதே அண்ணா அது போதுமே என்றான். தன்னலம் கருதா தலைவனின் தனயனல்லவா அது தான் உன்னிடம் இத்தனை பொதுநலம் என்றேன்…
சிரித்துக்கொண்டே ஓடி சிறுவர்களோடு கலந்துவிட்டான்…

பாலச்சந்திரனிடம் பாடம் கற்ற மனதிருப்தியோடு மீண்டும் முற்றத்தின் நடுப்பகுதிக்கு வந்தேன்…
நடுப்பகுதிக்கு வந்த நான் கண்ட காட்சி பேரதிர்ச்சி…

தாங்கள் நிற்பது எப்பேர்ப்பட்ட இடம் என்பதை துளியும் உணராமல் உணர்வற்று உலாத்திக் கொண்டிருக்கும் ஒரு மாக்கள் கூட்டத்தையே கண்டு ரத்தம் சூடாகி பித்தம் தலைக்கேறியது…

கூடி அமர்ந்து குடும்பக் கதை பேசுகிறது ஒரு கூட்டம்…
“நாய்க் காதல்” நடத்திக் கொண்டிருக்கிறது ஒரு இளஞ்ஜோடி.
அலைபேசியில் சத்தமாய் யாரோடோ ஒரு யுத்தமே செய்துகொண்டிக்கிறார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர். செல்பிக்காக இளித்துக் கொண்டிருக்கிறார்கள் இரு இளைஞிகள்.

அடப்பாவிகளா…

இமயம் முதல் குமரி வரை கொடிநாட்டிய ஓர் இனம்….
கப்பல் படை கட்டி (மரக்கலம்) வங்காள விரிகுடாவின் கரையோட நாடுகளையெல்லாம் கட்டி ஆண்ட ஓர் இனம்…
சொற்ப, அற்ப இனமான சிங்களனின் சூழ்ச்சியால், தன் தொப்புள் கொடி உறவுகளின் வஞ்சத்தால் உலக நாடுகளோடு போராடி வீழ்ந்த வரலாறு சொல்லும் இடமல்லவா அது…

யானை கட்டி போரடித்து, போரும் செய்த ஓர் இனம் வாழ்ந்த கதையையும்….  அதே இனம் கேட்பார் யாருமின்றி, உதவிக்கரம் நீட்ட ஒருவருமின்றி, ஒருவேளை உணவுக்கும் வழியின்றி, தங்கள் இனத்தின் அழிவுக்குக் காரணமான அரக்கர்களிடமே…. வக்கின்றி, வதியிழந்து, முள்வேலிக்குள் கையேந்தி வரிசையில் நிற்குமளவுக்கு வீழ்ந்த கதையையும் கண்ணீரோடு சொல்லும் களமல்லவா அது…

ஏதோ கேளிக்கை பூங்காவிற்கு வந்திருப்பதைப் போல் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்கிறீர்களே இது நியாயமா…?
இது தான் நாகரீகமா…?
நாக்கை பிடுங்கிக்கொள்வது போல் நாளு கேள்வியாவது கேட்டுவிடத் துடித்தது நெஞ்சம்…

தன்னை பாதிக்காத எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாக்கிவிட்டவர்கள் என்ன சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் திருந்தமாட்டார்கள் ஏனெனில் இப்போது எம் இனத்துக்கு மான உணர்வு பஞ்சம்….

இதற்கு மேல் அங்கு இருந்தால் உயர் ரத்த அழுத்தத்தில் உயிர் போய்விடும் என்பதால் வேதனையோடு வெளியேறி விட்டேன்…

நான் உங்களுக்குச் சொல்லவதெல்லாம் ஒன்று தான்…
ஒருவேளை… ஒருவேளை நீங்கள் அங்கு சென்றால் ஒரு வழிபாட்டுத்தலத்திற்குள் செல்லும் மனநிலையோடு செல்லுங்கள்…
முடிந்தால் பூக்களோடு செல்லுங்கள் முற்றத்தில் வைத்து வணங்கிவிட்டு வாருங்கள்…

குழந்தைகளோடு போனால் நம் இனம் வாழ்ந்த வரலாற்றையும், போராடி வீழ்ந்த வரலாற்றையும் எடுத்துச் சொல்லுங்கள்…
இது பழம்பெருமை பேசுவதற்கோ அல்லது புலம்பி ஒப்பாரி வைப்பதற்கோ அல்ல….

மாறாக…
கடந்த காலம் நினைவில் இருந்தால் தான் நிகழ்காலத்தில் நிதானமாய் நடை போட முடியும்…
என்னோடு பயணித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்…

-ச. தாஸ்

2840total visits,1visits today