மனச்சோர்வை தவிர்ப்பது எப்படி?

0
19

மனச்சோர்வுக்கு (depression) அறிவுரை ஆலோசனை மட்டும் உதவாது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலும், வேறு யாருக்கு இருந்தாலும் மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுக்க வேண்டும். ஆலோசனைகள் மூளையில் ஏறாது. சில சமயம் உங்கள் ஆலோசனை பலனளிக்காமல் சம்பந்தப்பட்டவர் ஊரை விட்டே ஓடுவதும் தற்கொலை செய்துக் கொள்வதும் நடக்கும். எனவே ஒழுங்காக மருத்துவரை பார்ப்பதே சரி.

மன அழுத்தம் (stress)
மன சோர்வு (depression)
மன கவலை (worry)
மனப்பதற்றம் (anxiety)
எல்லாம்
வேறு வேறு விஷயங்கள்.

மன அழுத்தம் (stress) ஒரே விஷயத்தை நீண்ட நேரம் சிந்திப்பது. பெரும்பாலும் 24 மணி நேரமும் அந்த சிந்தனை இருக்கும். மன அழுத்திற்கான காரணத்தை உங்கள் சிந்தனைகளை கவனித்து நீங்களே உணர முடியும்.

இதற்கு ஒரே தீர்வு சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதே.

என்ன செய்ய வேண்டும்? அதை எப்போது செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிந்தித்து விட்டு வேறு வேலைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
செயல்படுவதற்கான நேரம் வரும் வரை அமைதியாக அதை மறந்து இருக்கும் மனப்பழக்கம் வேண்டும். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்.

இதையெல்லாம் முறையாக செய்ய ஆரம்பத்தில் எழுதி வைத்து செய்யலாம். என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதை எழுதி வைத்துக் கொண்டு மறந்து விட வேண்டும். தேவையான நேரத்தில் மட்டும் அதைப்பற்றி சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும். அதுதான் ஒரு சிறந்த ஆளுமை. இந்த பழக்கம்தான் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் காப்பாற்றும் என்பதை உணர வேண்டும்.

இதை வேறு யாராவது நமக்கு பழக்கப்படுத்த வேண்டும் அல்லது சின்னதாக ஒரு மந்திரம், மாத்திரை மூலம் சாதிக்க வேண்டும் என்ற சோம்பேறி மனோபாவத்தை விட வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் நம்மால் மட்டுமே முடியும் என்ற பொறுப்புணர்வும் மட்டுமே மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். மற்றவர்களிடம் மீண்டும் மீண்டும் பேசி அதுவே ஒரு போதை ஆகி விடும். ரிலாக்ஸ். Plan. Believe. Wait till the time of execution. Act. That’s the pattern of thinking and acting that you require.

மன சோர்வு (depression) என்பது முற்றிலும் வேறு. பயம், கோபம், குற்ற உணர்வு, இந்த மூன்று உணர்வுகளை உங்கள் மீது அதிகமாக வெளியில் இருந்து வேறொருவர் திணிப்பதும், நீங்களே மிகைப்படுத்தி உணர்வதும்தான் மனசோர்வின் விதை.

சாதாரணமாக 20 நிமிடத்துக்கு மேல் எந்த உணர்வும் இருந்தால் நீங்கள் செய்வது தவறு என்று உணருங்கள். 10 நிமிடத்துக்குள் உணர்வில் இருந்து வெளிவந்து திட்டம், செயல் என்று அடுத்த நிலைக்கு செல்லுங்கள். மற்றவர்கள் உங்கள் மீது இந்த உணர்வை திணிப்பதாக தோன்றினால் சரியாக அடையாளம் கண்டு, அந்த சமயங்களில் மூச்சில் கவனம் செலுத்தி அந்த உணர்வுகளை ஏற்றுக் கொள்ளாமல் இருங்கள். பெரும்பாலும் தனது காரியத்தை முடித்துக் கொள்ள(வணிக இலக்குகளை அடைதல்) பயம், கோபம், குற்ற உணர்ச்சி இவற்றை கம்பெனி மீட்டிங்குகளில் தூண்டுவது நடக்கிறது. நாமும் இது போன்று மற்றவர்களை தூண்டி காரியத்தை முடித்துக் கொள்கிறோம் என்பதையும் மறுக்க கூடாது. இன்றைய வேகமான உலகில் மனிதனை விரட்டி ஓட்ட மூக்கனாங்கயிறு போல இந்த உணர்வுகளை நாம் துஷ்பிரயோகம் செய்கிறோம். இதெல்லாம் மன சோர்வின் காரணங்கள். மன சோர்வு என்பது வேறு.

மன சோர்வு(depression) என்பது

1.முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலை. மொத்த வாழ்க்கையே தோல்வி என்று தோன்றும். இனி வாழ்வை மெல்ல மெல்ல ஓட்டி சென்று முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்து விடுவோம்.

2. சின்ன சின்ன காரியங்களை செய்வதற்கும் ஆற்றல் (எனர்ஜி) இருக்காது. காலையில் படுக்கையில் இருந்து எழவே முடியாது. யாரும் இல்லை என்றால் படுக்கையில் இருந்து எழவே மாட்டோம்.

3. மூச்சு முதல் எலும்பு வரை மெல்லிய நடுக்கம் இருக்கும்.

4.பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டால் உடல் நடுங்குவது போல 24 மணி நேரம் உணர்வோம்.

5.வாழ்வை முடித்து கொள்ளும் எண்ணம் வரும். அல்லது குறைந்த பட்சம் வாழவே பிடிக்கவில்லை என்று நினைப்போம்.

6.எப்போதும் எரிச்சல் வரும். சின்ன சின்ன முரண்பாடுகள் கூட பெரும் சண்டையாக மாறும்.

7.முன்னால் நாம் விரும்பி செய்த காரியங்கள் மீது கூட ஆர்வம் வராது. எதன் மீதும் ஆர்வம் வராது செக்ஸ் உட்பட.

8.அதீத பசி அல்லது பசியே இல்லாத நிலை.

9.குறைவான தூக்கம் அல்லது தூக்கமே இல்லாத நிலை.

10.ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் மகிழ்ச்சியாக உணர இயலாத நிலை.

மொத்தத்தில் நமது வாழ்வின் மீது நமது கட்டுப்பாடு போய் விடும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மன சோர்வு. இல்லையென்றால் அது வெறும் மனக்கவலை.

மனச்சோர்வுக்கு (depression) அறிவுரை ஆலோசனை மட்டும் உதவாது. மருந்துகள் எடுக்க வேண்டும். மருந்து எடுத்தால் 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் பூரண குணம் கிடைக்கும். இல்லையென்றால் 10 வருடங்கள் கூட ஆகும்.

மனப்பதற்றம்(anxiety) என்பது தவறான அளவுக்கு அதிகமாக வினையாற்றுவது (react செய்வது). இதனால் பல காரியங்களை சரியாக முடிக்க முடியாமல் தோல்வி அடைந்து ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிகொள்ளும் மனநிலை வரும். அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

ஆண்களின் விரைவாக விந்து வெளியேறல் பிரச்சினை மனப்பதற்றத்திற்கு சிறந்த உதாரணம். இதற்கும் மருந்துகள் உள்ளன. ஆனாலும் இது ஒரு பழக்கம் என்பதால் மருந்துகளின் மீது சார்ந்து இருக்காமல் அமைதியாக செயல்பட பழகி கொள்வதே நல்லது.

வெறும் மனக்கவலைக்கு (worry) மனச்சோர்வுக்கான (depression) மாத்திரை எடுப்பதும் தவறு. ஏனென்றால் மனச்சோர்வு (depression) மாத்திரைகள் உடலில் சேரடோனின் (serotonin)அளவை கூட்டும். அது நிறைய பக்க விளைவுகளை உண்டு பண்ணும். அந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வதும், இடையில் விடுவதும் மோசமான விளைவுகளை உண்டு பண்ணும்.

-மு. முத்துவேல்

703total visits,3visits today