காதல் கசக்கவில்லையடி கண்ணம்மா!

0
120

மே 26, 2012 இரவு 9.30 சென்னை

அவன், ” ஏன் மது என்னுடன் வாழ உனக்கு பிடிக்கவில்லையா.??  இது  நிஜம்தானா? இனி நான் தனி தானா? எப்படி மது!! நான் உன்னை துன்புறுத்தினேன்  என்று பொய் சொன்னே? ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?? பத்தொன்பது வயதில் காதல், இருபதில் திருமணம், இருபத்திமூன்றில் முறிவு., நம்முள் காதல் இவ்வளவு தானா மது..?? காதலிக்கிறேன் என்று தினமும் சொன்னால் தான் அன்பு புரியுமா? காதல் சிரிப்பு மட்டும் தானா? கோபம் எல்லாம் காதல் இல்லையா? உன் மேல் மட்டும் தவறே இல்லையா மது?? நான் இல்லாமல் உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ” எரிமலையாக குமுறினார்.

மே 26, 2012 இரவு 9.45 சென்னை.

அவள், “ஈகோ பாரேன்  அவனிற்கு. முகம் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டானாம்!! எனக்கென்ன இருபத்திமூன்று வயது தானே. அவனில்லை என்றால் என்னால் வாழவே முடியாதா என்ன?? கோபம் வந்தால் கை ஓங்குவானா என்னை பார்த்து. என் மேல் பாசம் என்றல்லவா நினைத்தேன். அம்மா, அப்பா சொன்னது சரி தான் காசு பணம் மட்டும் தான் அவனிற்கு முக்கியம். என்னை கல்யாணம் செய்துக்கொண்டால் என் சொத்தெல்லாம் வரும் என்ற நினைப்பு இருந்திருக்கும். பொங்கி வழிந்த அன்பெல்லாம் எங்கே போனது . என்னால் அவன் இல்லாமலும் சந்தோஷமாக ஒரு குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். வாழ்ந்து காட்றேன்.”

ஜூன் 21, 2012 இரவு 10.30 சேலம்

அவள்,” அவனால் மட்டும் தூங்க முடிகிறது.. ஏன் என்னால் முடியவில்லை. இன்னமும் வாட்ஸ் அப்பில் ஆக்டிவாக இருக்கிறான். பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கான். நான் மட்டும் ஏன் ஓய்ந்து போய் இருக்கிறேன். இனி  நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என்னை கஷ்டப்படு…த்திய அவனே நிம்மதியாக இருக்க என்னால் முடியாதா என்ன!! எப்படியெல்லாம் பொய் சொல்லி என்னை மயக்கினான். அவன் என் வாழ்கையில் இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவனை  விட்டு வந்து ஒருமாதமாகி விட்டது. இந்த அழுகை மட்டும் வராமல் இருந்தால் நல்ல இருக்கும். மறந்தே போனானா என்னை!! என்னால் மட்டும் ஏன் முடியவில்லை.

ஜூன் 29, 2012 இரவு 11.00 சென்னை

அவன் மனம், “உடம்பெல்லாம் கொதிக்குதே மது!! முடியவில்லையே என்னால்… நானும் மனிதன் தானே கோபம் வரும் தானே!! ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசியதற்கா இந்த தண்டனை. திருமணம் செய்துக்கொண்ட அன்று “இனி உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்” என்றாயே. எல்லாம் பொய்யா?? பொய்யாகி போகும் என்று யார் கண்டார். ஏதேனும் ஒரு வகையில் என்னை தொடார்புக்கொள்ள கூட உன்னால் முடியவில்லையா…!! எப்படி உன்னால் என்னிடம் இருக்கும் கோபத்தை இவ்வளவு நாள் மனதில் வைத்துக்கொள்ள முடிகிறது. வெளிபடையானவள் நீ எப்படி மாறினாய்.”கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தான் அவன்.

ஆகஸ்ட் 18, 2012 இரவு 11.30 கொடைகானல்

அவள்,” சே..!! எங்கே போனாலும் இவன் ஞாபகம் வருதே. இதே ஓட்டலில் தானே தங்கினோம். எப்படி எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நினைவுகள் வருகிறது. அவனுக்கென்ன நித்யா, வித்யா என்று ஏதாவது பொண்ணுங்க கிட்ட பேசிட்டு இருப்பான். பேசி மயக்குவதில் பெரிய மன்னன் ஆச்சே!! உன் கண்ணு நல்ல இருக்கு. உன் மூக்குத்தி நல்லா இருக்கு!! எப்படியெல்லாம் பேசினான். எவ்வளவு சந்தோசம், குதூகாலம் என்று அதெல்லாம் எப்படி பொய்யாகி போனது. திருமணம் ஆன பின்பும் பொறுப்பற்று இருந்தவன் அவன் தானே. அதை எடுத்து சொல்ல ஆரம்பித்ததில் தானே தொடங்கியது. குடும்பம் என்றான பின் இரண்டு லட்ச ரூபாய்க்கு வண்டி தேவையா என்ன? ச்சே… நான் என் பிரெண்ட்ஸ் கூட வெளிய போனது தப்பு என்றால் அவன் செய்ததும் தப்பு தான்.” நடந்தவற்றை யோசித்துக்கொண்டே அவள் நேரம் பறந்தது.

அக்டோபர் 19, 2012 இரவு 10.30, சென்னை

அவன் மனம் “மதும்மா நான் டெல்லி போறேனே. அதுக்குள்ளே உன்னை ஒரு தடவை  எங்கேனும்  பார்த்திடனும். உனக்கு தானே தெய்வ நம்பிக்கை அதிகம். எனக்காக உன் வேண்டுதல்கள் எத்தனை இருக்கும்? என் வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான். உன்னைப் பார்க்க வேண்டும். உன் கோபத்தோட அளவு  இவ்வளவு  பெரிசு என்று அன்றைக்கே தெரியலையே  எனக்கு.  ப்ரெண்ட் சொல்றான்  காதலிக்கிறேன் என்று. எனக்கு பொறாமையா  இருக்கே, நீ இல்லையே என் கூட. தியேட்டர், பீச், பார்க் எங்க ஜோடியா இருக்குறவன பார்த்தாலும் சுட்டு  கொல்லனும் என்று கோபம் வருதே. இவங்ககுள்ள எல்லாம் சண்டையே  வராதா ?? அம்மா என்னை பார்த்து கஷ்டப்படறது என்னால தாங்கிக்கவே முடியலையே. நான் டெல்லி போறேன் இன்னும் தனியா போறேனே. நீயில்லாத பயணங்களை நான் கனவிலும் கண்டதில்லை மது. புலம்பல்களுடன் அவன் பயணங்கள் தொடர்ந்தது.

டிசம்பர் 12, 2012 இரவு 10.30 சேலம்

அவள்” அப்படி எங்கே போயிருப்பான். சென்னையில் பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டது என்கிறான் அந்த அசோக். அமெரிக்கா லண்டன் என்று சுற்ற போயிருப்பானோ??? அப்படியெல்லாம் தானே  போக பிடிக்கும் அவனிற்கு. தலைவலி நானும் இல்லை கூட. சுற்ற போயிருப்பான். சம்பாதிக்கும் காசை சேர்த்து வைக்கலாமென்று என்று சொன்னேன் அதில் என்ன தப்பு. சண்டே லீவ் பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போனேன் அதில் என்ன தப்பு. எனக்கு துணி துவைக்க பிடிக்காது என்று அவனிற்கு தெரிந்து தானே கல்யாணம் செய்துக்கொண்டோம். பின் அதெல்லாம் செய் என்று சொன்னால் எப்படி???? உன் டிரஸ் உன் இஷ்டம் சொன்னவன் வெஸ்டெர்ன் போட்டால் திட்டலாமா??? அவனுக்கொரு நியாயம் எனொக்கொரு நியாயமா? எப்படியோ போகட்டும் சாடிஸ்ட். என்று நியாயம் பேசிக்கொண்டாள்.

ஜனவரி 2, 2013 காலை 4.30 புதுடில்லி 

அவன் ,” மது!! உன் ஞாபகம் என்னை கொல்லுது. சனியனே எதுக்குடி என் வாழ்கையில் வந்த..?? ஒனக்கு டி போட்டு கூப்பிட பிடிக்காது தானே?? நான் தண்ணி அடிச்சா பிடிக்காது தானே??? அப்படி தான் செய்வேன். உன்னால என்ன முடியும் என்னை அனாதையா விட்டுத் போக முடியும்…….. போய்ட்ட!!! போ!! யாருக்கு வேணும் உன் சகவாசம். நான் இப்போ சந்தோஷமா தான் இருக்கேன். இதோ கைல தண்ணி, வெளில எனக்கு புடிச்ச வண்டி, கூட பிரெண்ட்ஸ். என்ன??? நிம்மதி தான் இல்லை” “விடு மச்சி பழகிடும்” “அவ இல்லாத ஒரு வாழ்கையை நினைச்சிக் கூட பார்க்க முடியல அதான் சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணி சட்டுபுட்டுனு டிவோர்சும் ஆகியாச்சு. ஒரு பொண்டாட்டியா நடந்துக்கிட்டாள். எனக்கு தான் புரியல.புகழ்ந்துட்டே இருந்தவ குறை சொல்ல ஆரம்பிச்சது புடிக்கல. நான் தான் உலகம் என்று இருந்தவள் சட்டென்று உலகத்தோட ஒட்டினது புடிக்கல. இன்னைக்கு எனக்கே என்னை புடிக்கல. “

பிப்ரவரி 14, 2013 இரவு 10.30 சேலம்

அவள் ” போன வருஷம் இந்த நாள் தானே எனக்கு எமனாக வந்தது. காதலித்தவன் காதல் வாழ்த்து சொல்லாமல் போனது. பிறந்த நாளை மறந்தே போனது. சிரிக்கல!!  காலைல குட் மார்னிங் இல்ல எத்தனை? எத்தனை? இதில் இன்னொரு கல்யாணமாம் வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்களே விக்கி. அம்மாவிற்கு வெறுப்பாகி போனேன். அப்பாவிற்கு தலைவலியாகிப் போனேன். எனக்கே பாரமாகி போனேன். இப்படியே யோசித்து வாழ்க்கை வீணாகி போகுமா என்ன? ஏன் பெண்ணாக  பிறந்தால் கல்யாணம் செய்தே ஆக வேண்டுமா? அது என்ன ஆண் மேல் தவறென்றாலும் தண்டனை பெண்ணுக்கு தானா.? நான் வாழாவெட்டி என்றால் அவன் யாராம்? உருப்படியாக நம்பி  வந்த பெண்ணை வைத்து வாழ தெரியாத முட்டாள் தானே. அதை ஏன் யாரும் சொல்லிக்காட்டாமல் இருக்கிறார்கள்.”

ஜூன் 16, 2013 இரவு 11.00 டெல்லி

அவன் ” சென்னை வர போறேனே மதும்மா. என்னை பார்த்தால் என்ன பண்ணுவாள்?? எப்படி இருப்பாள்?? என்னை மறந்திருப்பியோ மது . இன்னைக்கும் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியலையே என்னால் !! உன்னால மட்டு முடியுமா என்ன?? இரண்டு வாரத்தில் மாறினவள் தானே ஆறு ஏழு ஒரு வருடத்தில் மறந்தே போயிருப்பாள்.”

ஜூலை 2, 2013 இரவு 10.30 சேலம்

அவள் ” விக்கி இனி நீ இல்லவே  இல்லையா என் வாழ்கையில். அந்த இடத்தில் உன்னை தவிர வேறு யாரையும் யோசிக்கவே முடியலையே.  உன் காதல், கோபம், முத்தம், எதுமே எனக்கில்லையா?? கண்டவனெல்லாம் பெண் பார்கிறேன் என்று பார்வையிலே கொள்கிறான்  விக்கி. பேச்சோ அதுக்கும் மேல, யாரிடமும் சொல்ல முடியலையே. சொன்ன அம்மாவும் தள்ளிப்போட வழி பார்க்கிறேன் என்று என்னை தானே குத்தம் சொல்றாங்க. அவன் அம்மா கிட்ட பேசி பார்ப்போமா. அவன் தானே தப்பு செய்தான். பாவம் ஆண்ட்டி எவ்வளவு அட்வைஸ் பண்ணாங்க. நான் தான் கேட்காம போய்ட்டேன். “

ஆகஸ்ட் 13, 2013 இரவு 11.00 டெல்லி

அவன் ” கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டளாம்!! மனசு என்ன கல்லா? ஐயோ நிஜமாவே காதலோடு தானே கல்யாணம் செய்தோம். அது  வயதுக்கோளாரில்லை தானே. எத்தனை போராட்டம் கல்யாணம் செய்துக்க, ஒரே வார்த்தையில் காதல் இல்லை நமது கல்யாணமில்லை சொல்லிட்டு போய் இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்கறா??, என்னைப்போல் வலிக்கவே இல்லையா அவளிற்கு?? இவளை போய் அம்மா பெருசா பேசுறாங்க. கூப்பிடலைனாலும் கல்யாணத்துக்கு போய் நல்ல பிங்க் ரோஸ் பொக்கே கொடுத்து நல்லா சாப்பிட்டு “அவனையும் டேய் புருஷானு கூப்பிடுவியா  என்னனு கேட்கனும்.”

டிசம்பர் 14, 2013 இரவு 12.00 சென்னை

அவள் ” எதுவும் வேண்டாம் எனக்கு என் சம்பாத்தியம் போதும் எவன் ஆறுதல் துணை கன்றாவி எல்லாம் வேண்டாம். நான் தனி தான், போதும் இந்த கைதிதனம். நான் யாருக்கும் பாரமாக வேண்டாம். படிப்பு இருக்கு சோறு போட, எதிர்பார்ப்பு ஏமாற்றமில்லாத வாழ்கை போதும். ஐம்பது வயதானபின் எதாவது ஆசிரமத்தில் போய் சேர்ந்து கொள்ளலாம், இன்னும் கொஞ்ச நாள் போனதும் பெண்பிள்ளை ஒன்றை தத்து எடுத்துக்கொள்ளலாம். அவளை தைரியமான பெண்ணாக ஆண்களை நம்பி வாழாத பெண்ணாக வளர்க்கனும்.”

மார்ச் 16, 2014 சென்னை

அவள் ” தவறேதும் நானும் செய்திருப்பேனோ ??” ஆராய்ந்தாள். அன்றைய சூழல் எதுவும் யோசிக்க தோன்றவில்லையே!!. இனி  எது செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். இனிமேல்லெல்லாம் வேதனையை தாங்க முடியாது. இந்த வெறுமை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே. இந்த சிங்கார சென்னை கூட இப்படி போர் அடிக்குமா என்ன?? எங்கே பார்த்தாலும் மக்கள் தனிமையே இல்லை. இவங்களுக்கெல்லாம் கஷ்டமே இருக்காதா?, எங்க பார்த்தாலும் ஜோடி ஜோடியாக. நம்பாதீங்கடா ஏமாத்துக்கறாங்களாக தான் இருப்பாங்க.  அது சரி அந்த கடவுளுக்கு என் வாழ்க்கை மட்டும் தான் ப்ளே க்ரௌண்ட் போல. “

ஆகஸ்ட் 10, 2014 இரவு 10.30 சென்னை

 அவன் “நாளைக்கு அவ நம்பர் வாங்கி போன் பண்ணி எங்கேனும் வர சொல்லி பார்க்கனும். ஏன்டீ!! எனக்கு இப்படி துரோகம் பண்ண என்று கேட்கனும். நான் சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லனும். அவ எதிர்க்க அழுதிட கூடாது. நம்ப ரேஸ் பைக் எடுத்திட்டு போகலாம். விட்டுகொடுத்து பழகு, சூழல் தெரிந்து நடந்துக்கோ, மத்தவங்களுக்கு அவங்க ஸ்பேஸ் கொடு, புரியாமல் குரல் ஓங்கி பேசாத என்றெல்லாம் அறிவுரை சொல்லிட்டு வரனும். முடிந்தால் ஒரே ஒருமுறை… சீ  வேண்டாம் அவள் இன்னொருவனுக்கு மனைவி”

ஆகஸ்ட் 14, 2014, இரவு 11.30 சென்னை

அவள் ” அவனை பார்த்தால் என்ன பேசலாம். ஏனோ பார்ப்பேனோ என்று தோனுதே. தனியாக இல்லாமல் பெண்ணோடு இருந்தால்.??!! யாரோப்போல் என்னால் போக முடியுமா என்ன ? போன் செய்து பேசிவிடலாமா? எதற்கு ஈகோ? ஒருவேளை என்னைப்போல் அவனும் என்னை மறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி தான் இருக்க வேண்டும். காய்ச்சல் என்றலே அழுவானே!! மறந்தா போயிருப்பான். வருவான் என்ற நம்பிக்கையே இவ்வளவு இனிக்கிறதே. ஐயோ! என் மகிழ்ச்சியை நானே தொலைத்துவிட்டேனே. பார்த்தவுடன் நீ சொன்னது சரி தான் விக்கி வாழ்கை அனுபவிக்க தான் கவலைப்படவோ துக்கமென்றும் கஷ்டமென்றும் அலட்டிக் கொள்வதற்கோ இல்லை என்று சொல்லணும். இனி நாம்ப பிரியவே கூடாது என்று சொல்லனும். வீம்பா நின்னான் என்றால் தொபுக்கடீர்ன்னு கால்ல விழுந்திரனும். கல்யாணத்தன்னிக்கே விழ விடல இப்போ விடுவானா என்ன?, ஆனாலும் விழனும் நல்ல மனைவியாக இருப்பேன்டா என்று கத்தனும்.” கற்பனை இனித்தது.

இப்பவே போன் பண்ணா என்ன??? நானே ஆரம்பிக்கிறேன். எதுக்காக காத்திருக்கனும். எடுக்காம போய்ட்டா!! எடுத்தா எப்படி ஆரம்பிக்க???

கைகளை தானாகவே அவன் கைபேசி எண்ணை அழுத்தியது. இதயம் நூறு மடங்கு அடித்தது.

அவன் கைபேசி திரையில் இரண்டரை ஆண்டுகளாய் எதிர்ப்பார்த்த அந்த எண்ணில் இருந்து அழைப்பு. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி திருவிழா.

உணர்ச்சிகள் வார்த்தையில் சொல்லமுடியாததாக இருக்க, அழைப்பு மணியோசை கேட்ட இரண்டு மைக்ரோ செகண்ட்ஸில் அது கேட்டது.

அழுத்தமாக இதயத்தின் துடிப்பை நிறுத்தி ரசித்து இயங்க வைக்கும் அவன் குரலில் “மது…………………….” செவியில் நுழைந்து பற்றுதலுக்கு துடித்துக்கொண்டிருந்த உயிர்க்கு ஆதரவாய்.

கடந்து வந்த நாட்களின் தேவை புரிந்தது அவளிற்கு.

அவன் கண்கள் தானாக பணித்தது. விரல் எப்போது அந்த பச்சை பொத்தானை அழுத்தியது என்றே அவன் அறியான். அவன் உதடு தானாக மது என்றது. அவள் பதில் குரல் கரைந்துக்கொண்டிருந்த உயிரை நொடியில் கூட்டி வாழ்வதற்கான மொத்த கனவையும் சிலிர்த்து எழ வைத்தது.

-ஸ்வேதா சந்திரசேகரன்

611total visits.