”காடோடி” நக்கீரன் – நேர்காணல் பாகம்-1

0
415

நேர்காணல்: கி..திலீபன் (ஓலைச்சுவடி இதழாசிரியர்)

பன்முக அடையாளம் கொண்டவர் நக்கீரன். பணக்கண்ணோட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பெருநிறுவனஙக்ளின் இலாபநோக்கு மற்றும் அதீத நுகர்வு வேட்கையின்பால் நிகழ்த்தப்படும் காடழிப்பை ‘காடோடி‘ நாவல் மூலம் பதிவு செய்தவர். தாவரங்கள், காட்டுயிர்கள், பழங்குடிகள், சிற்றினங்கள் என எல்லாமும் ஆனதுதான் காடு என்பதை வாசகன் மனதில் ஆழமாய் பதித்த விதத்தில் காடோடி முக்கியத்துவம் பெறுகிறது. காடழிப்பு குறித்த இவரது கட்டுரையான ‘மழைக்காடுகளின் மரணம்’ virtual water எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்‘ ஆகிய கட்டுரைகள் சிறு நூல்களாக வெளிவந்து பரவலான கவனம் பெற்றவை. கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய தளங்களிலும் ‘பசுமை இலக்கியம்’ எனும் சூழலிய்ல எழுத்தைக் கொடுப்பவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ளது இவரது வீடு. ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் பறவைகளின் கீச்சிடல்களை அவ்வப்போது கேட்டவாறே அவருடன் உரையாடினேன்.

போர்னியோ வனப்பகுதியில் தாங்கள் பணிபுரிந்த அனுபவங்களின் புனைவு வடிவம் காடோடி. இதனை எழுதுவதற்கான தேவை குறித்து நீங்கள் உணர்ந்தது எப்போது?

போர்னியோ காட்டுக்குள் மரம் வெட்டும் நிறுவனத்தில் நான் புரிந்தேன். அந்தப் பணியில் இணைவதற்கு முன்பு எனக்கு சூழலியல் குறித்தான அறிவு மற்றும் காட்டின் மீதான புரிதலெல்லாம் இருக்கவில்லை. சாதாரணமான மனிதனாகத்தான் நான் காட்டுக்குள் நுழைந்தேன். பொதுவாக காடு என்றால் மரங்கள், விலங்குகள் மற்றும்  பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு என்பதுதான் தெரியும். ஆனால் பலர் அறிந்தேயிராததுதான் காடு. அதன் களிகையில் மட்டும் 14 லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கக் கூடிய அற்புதமான உலகம் காடு. அசல் பழங்குடிகளுடன் பழகும்போதுதான் காட்டைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படும். அவர்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும்போதே நமக்கு அது புரிய வரும். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத விழுமியம் கொண்டவர்கள் அவர்கள். நாங்களோ ஆடம்பர நோக்கத்துக்காக காடுகளை அழிப்பதற்காகச் சென்றிருந்தோம். பணம் என்கிற அற்பமான ஒன்றுக்காக எத்தனையோ பெரு வளங்களை இழக்கிறோம் என்பதை அவர்களுடன் பழகிய போதுதான் என்னால் உணர முடிந்தது. அப்போது என்னுள் எழுந்த மன எழுச்சி காடு சார்ந்த உயிரினங்களை பணத்துக்காக அழிப்பதற்கு ஒப்பவில்லை. ஆகவேதான் அப்பணியிலிருந்து வெளியேறினேன். பணிக்காலத்தில் நான் கற்றுணர்ந்த காடும் அதனூடான அனுபவங்களையும் எனது  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அதனைக் கேட்டவர்கள் எல்லோரும் அதனை எழுதும்படி சொன்னார்கள். போர்னியோ காட்டின் அழிவைக் களமாகக் கொண்டாலும் இங்குள்ள சூழலுக்கும் அது பொருந்திப் போகும் என்பதால் விழிப்புணர்வு நோக்கோடுதான் அதனை நாவலாக்கினேன். நான் எதிர்பார்த்துக்கும் மேலாக அந்நாவல் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

காடோடி படித்து விட்டு 40ஏக்கர் சொந்த நிலத்தில் ஒருவரும், 22 ஏக்கர் காட்டுப்பகுதியில் ஒருவரும் மரம் நடும் பணியை துவங்கியிருப்பதாகக் கூறினார்கள். எழுத்து செய்ய வேண்டிய பணி இப்படியாகத்தான் இருக்க வேண்டும். நைஜீரியக் கவிஞர் கென் சரோ விவாவை எனது முன்னோடியாகப் பார்க்கிறேன். எழுத்தாளனின் பணி உடற்பிரச்னையை எக்ஸ்ரே எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல. அதனை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர். எழுதி முடித்து விட்டு கடமை முடிந்து விட்டதாக உட்கார்ந்து விடக்கூடாது. களத்தில் இறங்க வேண்டும். பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் களப்பணியிலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 காடோடியில் போர்னியோ பழங்குடிகளின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக்கூறுகளைப் பதிவு செய்திருக்கிறீர். பொதுவாகவே பழங்குடிகள் காட்டின் மீது கொண்டிருக்கும் புரிதல் எத்தகையது?

பழங்குடிகளின் புரிதல் என்பது நம்முடைய புரிதலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் நமது உடலை தனித்தனி உறுப்புகளாகப் பார்ப்பதில்லை. முழு உடலாகத்தான் பார்க்கிறோம். அது போலவே அவர்களும் காட்டை மரங்கள், ஓடைகள், விலங்குகள், பழங்குடிகள் என தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. காடாகத்தான் பார்க்கிறார்கள். காட்டில் வாழும் பல உயிரினங்களில் தாமும் ஓர் உயிரினம் என்கிற புரிதல் உடையவர்கள் அவர்கள். நமது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ‘திணைப்பொணம் எரித்தல்‘ எனும் காட்டழிப்பு வேளாண்மையை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களது உணவுக்குத் தேவைக்குத் தகுந்தாற்போல், வேளாண்மைக்குத் தேவையான பரப்புக்கு மரங்களை வெட்டி, எரித்து விடுவார்கள். எரித்த இடங்களில் புல் முளைக்கும். அதை மான்கள் சாப்பிட அனுமதிப்பார்கள். பிறகு அங்கு வேளாண்மை செய்யத் தொடங்குவார்கள். மூன்று ஆண்டுகள் மட்டும் வேளாண் செய்து விட்டு, காட்டை வளர அனுமதிக்கும் பொருட்டு இடம் பெயர்ந்து விடுவார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட சில மரங்களை வெட்டுவதில்லை. குறிப்பிட்ட சில வகையான உயிரினங்களை வேட்டையாடுவதில்லை. போர்னியோ பழங்குடிகள் பிலியன் மரத்தை வெட்டமாட்டார்கள். கடல் நீரால் அரிப்புக்கு ஆளாகாத தன்மை கொண்ட பிலியன் மரத்தை கடல் மேல் வீடுகட்டுவதற்கான அடித்தளத் தூண்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்தத் தன்மையின் காரணமாக பிலியன் மரம் இன்றைக்கு உலகில் மிகவும் விலை மதிப்புள்ளதாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் பழங்குடிகள் அம்மரத்தை வெட்டவில்லை. ‘கேளையாடு‘ எனும் மான் வகையை அப்பழங்குடிகள் வேட்டையாடுவர். அந்த மான்கள் எப்போதும் தன் இணையோடுதான் இருக்கும். இணையில் ஒன்றை வேட்டையாடி விட்டால், அதைத் தேடித்திரியும் மற்றொன்றை எளிதாக வேட்டையாடி விடலாம். ஒரு முறை அப்படியாக கேளையாட்டை வேட்டையாடிக் கொண்டு வந்திருந்தனர். அதைப் பார்த்த பழங்குடி ஒருவர் ’இதனை வேட்டையாடியிருக்கக் கூடாது’ என்றார். காரணம் அது கேளையாட்டிலேயே இன்னொரு வகையான மான். அந்த வகை மான்களை அவர்கள் வேட்டையாடுவதில்லை. எண்ணிக்கை குறைவாக உள்ள அரிய இனம் என்பதால் அதனை வேட்டையாடியதற்காக அவர் வருந்தினார். காட்டின் மீதான ஆழமான புரிதலைக் கொண்டவர்கள்தான் பழங்குடிகள்.

அப்பழங்குடிமக்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

மரம் வெட்டும் நிறுவனத்தின் பணியாளனாக சென்ற எனக்கு ஒவ்வொரு மரத்துக்குமான டாலர் மதிப்பு மட்டும்தான் தெரியும். மரம் என்பது நம்மைப் போன்ற உயிரினம் என்பதை அவர்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். காட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற அறிவை அவர்களிடமிருந்துதான் பெற்றேன். ‘எல்லா மரத்தையும் வெட்டிட்டா இந்த ஒரு தலைமுறைதான் பணம் பார்க்கும். வெட்டாம விட்டா பல தலைமுறை பணம் பார்க்கலாம்’ என்று ஒரு பழங்குடிப் பெண் சொல்வது காடோடியில் இடம்பெற்றிருக்கிறது. நாகரிக மனிதர்களின் பணக்கண்ணோட்டத்தில் பார்த்தாலுமே கூட மரத்தை வெட்டுவது வருவாய் ரீதியிலும் இழப்புதான் என்கிற பழங்குடிப் பார்வை எவ்வளவு அறிவார்த்தமானது.

காடோடியில் போர்னியா காட்டின் தாவரங்கள், உயிரினங்கள் குறித்த பதிவும் அடக்கம். தாவரவியல், உயிரியல் சார்ந்த அறிவு வாழ்பனுபவத்தின் வாயிலாகக் கிடைத்ததா?

நாவல் எழுத எடுத்துக் கொண்ட ஐந்தாண்டு காலங்களில் இரண்டாண்டு காலம் பெயர்களையும், சம்பவங்களையும் மீட்டெடுப்பதற்காகவே செலவிட்டேன். சுற்றுலாப்பயணி போல் ஒரு காட்டுக்குள் ஒன்றிரண்டு நாட்கள் சுற்றி விட்டு வந்தால் தாவரங்கள், விலங்குகள், பறவைகளின் பெயர்களை முழுமையாக அறிவதற்கும், நினைவில் வைத்திருப்பதற்கும் வாய்ப்பில்லை. நான் பணியாற்றிய காலகட்டத்தில் ரேடியோவைத் தவிர பொழுதுபோக்கு எதுவுமில்லை. ரேடியோவே கூட செய்திகளை அறிந்து கொள்வதற்காக மட்டும்தான் பயன்பட்டு வந்தது. பொழுதுபோக்குக்கான வழிகள் ஏதும் இல்லாத சூழலில் காட்டை கவனிப்பதுதான் நேரத்தைக் கடத்தும் வழியாக இருந்தது. எல்லோருக்கும் தங்களது இளமைப்பருவ வாழ்க்கை நன்கு பதிந்து போயிருக்கும். என் இளமைப்பருவம் போர்னியோவில்தான் கழிந்தது என்பதால் அந்த நினைவுகள் ஆழமாகப் பதிந்திருந்தன. ஒவ்வொரு மரத்திலும் அதன் பட்டைகள் மற்றும் உள் அங்கங்கள் என்ன நிறத்தில் இருக்கும் என்பது வரை பலவற்றையும் அறிந்திருந்தேன். இரவு நேரத்தில் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டையாடப்படும் விலங்குகள் பற்றியான அறிதல், பகல் நேரத்தில் பார்க்கும் விலங்குகளின் பெயர் மற்றும் குணாதிசயங்கள் எல்லாம் பதிந்திருந்தன. இந்த நேரடியான அறிதலால்தான் ஒராங்குட்டான், பேய்க்குரங்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நுணுக்கமாக விவரிக்க முடிந்தது. எழுதப்பட்டதைக் காட்டிலும் நாவலில் விட்டுப்போனவைகள்தான் அதிகம். உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆழ்ந்த விவரணைகளுக்குள் செல்லும்போது இது ஒரு வகையில் உயிரியல் விளக்க நூலாக  அமைந்து விடுமோ என்கிற பயமும் இருந்தது. காடு என்பது எல்லாம் சேர்ந்தது என்பதை உணர்த்துவதே எனது நோக்கமாக இருந்ததால் பலவற்றை தவிர்த்து விட்டேன். 8 வகை இருவாட்சிகளை போர்னியோவில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அது குறித்து முழுவதையும் காடோடியில் எழுதவில்லை. அபூர்வமான பறவைகள் மற்றும் யானைகள் பற்றியும் எழுதவில்லை.

பழங்குடிகளின் காடு சார்ந்த வாழ்வுரிமை குறித்துப் பேசும்போதெல்லாம் ‘’பழங்குடிகள் காட்டிலிருந்து வெளியேறி நாகரிக வாழ்க்கை வாழக்கூடாதா? என்கிற எதிர்க்கேள்வி எழுப்பப்படுகிறது. நாகரிகவாதத்தின் எதிராளிகளாக சூழலியளார்கள் பார்க்கப்படும் சூழலை எப்படி எதிர்கொள்வது?

இது போன்று பேசுபவர்களை முதலாளித்துவப் பார்வையுடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதாரம் மட்டும்தான் வாழ்க்கை என்று பார்க்கும் பொருள்மயப் பார்வை இது. பழங்குடிகள் குறித்த ஆழமான புரிதல் உடையவர்கள் இது போன்ற கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் காட்டைக் கைப்பற்றத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்களுக்கு நகர நாகரிக சிந்தனைகளைப் புகுத்தி அவர்களை வெளியேற்றுவதன் மூலம் அந்நிறுவனங்கள் தனது இயற்கை வள வேட்டையை ஆரம்பித்து விடும். பழங்குடிகள் வெளியேற வேண்டும் என்பதற்குப் பின்னுள்ள சுரண்டல் அரசியலோடுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். ஒரு கருத்தரங்கில் “உலகிலேயே அதிக செல்வங்கள் கொண்ட பழங்குடி மக்கள்தான் மிகவும் ஏழ்மையில் உள்ளனர்” என்று ஒருவர் பேசினார். அவரது கருத்தை மறுத்தேன்.’பழங்குடிகள் ஏழைகள் என்பதை எந்த அளவீட்டில் சொல்கிறீர்கள்? பணம் உள்ளவன் பணக்காரன். இல்லாதவன் ஏழை என்கிற சமவெளி மனிதர்களின் பார்வையைத் தவிர்த்து விட்டுப் பழங்குடிகளைப் பாருங்கள்” என்றேன். காட்டுக்குள் வாழும் ஒரு மனிதனுக்கு பணத்துக்கான தேவை என்பது அறவே இல்லை. மற்ற உயிர்கள் போல் காட்டுக்குள்ளேயே வாழ்ந்து, அங்குள்ள உணவுகளை சேகரித்து உண்ணும் அவர்களுக்கு எதற்குப் பணம்? பணம் இல்லாத காரணத்தால் அவர்களை ஏழைகள் என்று சொல்லி விட முடியுமா? பசுமை வேட்டை நடந்த போது நேரடியாகக் களத்துக்குச் சென்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது  என்னவென்றால்

‘’ஆயுதம் கொண்டு இவர்களை வெல்ல முடியாது. இம்மக்களிடம் பேராசை அறவே இல்லை. இவர்களை வெல்வதற்கு வீட்டுக்கு ஒரு  தொலைக்காட்சிப்பெட்டி கொடுத்தால் போதுமானது’’ என்றார். முதலாளித்துவம் கட்டமைத்திருக்கிற நாகரிகத்தை உள்ளே நுழைத்தாலே அவர்களை காட்டை விட்டு வெளியேற்றி விடலாம். இது போன்ற முதலாளித்துவ சிந்தனை உடையவர்கள்தான் பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி நாகரிகமாக வாழ வேண்டும் என்கிற குரலை எழுப்புகின்றனர்.

பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி வாழ்வதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாகரிக மனிதர்களின் நோய்க்கிருமிகளை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களது உடலில் இருக்காது.  ’துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு‘ என்கிற நூலில் இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மீது நோய்க்கிருமிகளைப் பரப்பிக் கொன்ற வரலாறு பதியப்பட்டுள்ளது. பழங்குடிகள் இல்லாத காடு என்கிற கொள்கையே பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்காகத்தான். பழங்குடிகளிடம் பொருள்மயச் சிந்தனை கிடையவே கிடையாது. தேவைகளுக்கும் மேல் சேர்த்து வைக்கும் ஆர்வமும் அவர்களுக்கு இல்லை. பழங்குடிகள் உணவு சேகரிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தனியுடைமைச் சிந்தனை கிடையாது. வேட்டையாடிய இரையை எல்லோரும் பங்கிட்டுச் சாப்பிடும் அவர்கள்தான் உலகின் முதல் கம்யூனிஸ்டுகள். உணவு சேகரிப்பு சமூகத்துக்கும், உணவு உற்பத்தி சமூகத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. உணவு சேகரிப்புச் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடிகளை உணவு உற்பத்திச் சமூகமாக மாற்றுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பழங்குடிகள் காடுகளிலிருந்து நகரங்களை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். காட்டுக்குள் பொதுவுடைமை வாழ்க்கை வாழ்ந்தவனால் நாட்டின் தனியுடைமைச் சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாமும் எல்லோருக்கும் பொதுவானது என்பதைக் கற்று வளர்ந்தவன் பணத்தை மையப்படுத்திய சமூகத்தில் வாழ முடியுமா? பழங்குடிகள் காட்டை விட்டு வெளியேறி நாகரிக வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் எது நாகரிகம் என்கிற கேள்வி முன் நிற்கிறது. நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நாகரிகம் என்பது உண்மையான நாகரிகம் அல்ல. நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது நமது நாகரிகம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்றே பழங்குடி மக்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு  நுகர்வோராக்கும் சிந்தனைதான் இது.

இந்த விமர்சனத்தை நீங்கள் நிச்சயம் கடந்துதான் வந்திருப்பீர்கள். காடோடி ஓர் ஆவணம் போன்ற தோற்றத்தை அளிப்பதாக எழும் விமர்சனத்துக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

காடோடியை ‘ஆவணநாவல்’ என்கிற வகைமைக்குள் பொருத்திக் கொள்ளலாம். மேலை நாட்டு இலக்கியங்களிலேயே Docu novel என்கிற பிரிவு இருக்கிறது. ஜோ.டி.க்ரூஸின் கொற்கை, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பூமணியின் அஞ்ஞாடி, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், இரா.முருகவேளின் மிளிர்கல் மற்றும் முகிலினி ஆகியவற்றை நாம் ஆவண நாவல் என வகைப்படுத்தலாம். புனைவிலக்கியத்தை விடவும் ஆவண நாவலை எழுதுவதற்கு மிகப்பெரும் உழைப்பைக் கொடுக்க வேண்டும். தமிழில் வெளிவந்துள்ள ஆவண நாவல்கள் எல்லாமும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. வரலாற்று நாவல்கள் போல் ஆவண நாவல்களும் ஒரு வகைமைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆவண நாவல் என்பதற்காக தகவல்களை மட்டுமே தொகுத்த அபுனைவாக அல்லாமல்ம், தகவல்களினூடாக புனைவைச் சாத்தியப்படுத்துவது ஒரு கலை. சங்க இலக்கியத்திலிருந்தே இம்மரபு இருந்து வருகிறது. நாம் வாழக்கூடிய உலகத்தில் இருப்பவற்றை ஆவணமாகப் பதிவு செய்வதில் தவறொன்றுமில்லை.

(தொடரும்…..)

  நேர் காணல்: ச. திலீபன் (ஓலைச்சுவடி இதழாசிரியர்)

2399total visits.