”காடோடி” நக்கீரன் நேர்காணல் – பாகம்-2

0
186

 நேர்காணல்: கி.ச.திலீபன் (ஓலைச்சுவடி இதழாசிரியர்)

காடோடி நாவலின் மூலப்பிரதியிலிருந்து 460 பக்கங்கள் நீக்கப்பட்ட பிரதிதான் வெளியாகியிருக்கிறது. அந்த 460 பக்கங்களில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது?  

காடு என்பது மரம் மற்றும் விலங்குகளின் தொகுப்பு கிடையாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்நாவலை எழுதினேன். 800 பக்கங்களுக்கு எழுதிய நாவலை 7 முறை திருத்தி 340 பக்கங்களாகச் சுருக்கினேன். இன்றைக்கு அதிக பக்கங்களை உடைய நூல்களை வாசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதால்தான் குறைவான பக்கங்களில் கொடுக்க நினைத்தேன். ஆனால் 800 பக்கங்களில் உணர்த்த வேண்டியதை 340 பக்கங்களுக்குள்ளேயே உணர்த்தி விட்டதுதான் காடோடியின் வெற்றி. பல்வேறு நாடுகளிலிருந்து பணிக்காக வந்து முகாமில் தங்கியிருந்தவர்களின் வாழ்க்கை சார்ந்த பதிவுகளைத்தான் நீக்கியிருந்தேன்.

வன அழிப்பு மற்றும் சுரண்டல்கள் இன்றைய இந்தியாவில் எந்தளவுக்கு இருக்கிறது?

உலகமயமாக்கலுக்கு முன்பே வன அழிப்பும், சுரண்டல்களும் நடந்தேறி விட்டன. நமது இலக்கியங்களில் காவிரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான குறிப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இன்றைக்குக் காவிரி வறண்டு போனதற்கான காரணம் அணைகள் கட்டப்பட்டதுதான் என்கிற தவறான கருத்து இங்குள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குடகு மலையை அழித்து காபித்தோட்டங்களை உருவாக்கினார்கள். மரங்கள் அழிப்புக்கான தொடக்கப்புள்ளி அதுதான். நீலகிரியில் சோலைக்காடுகளை அழித்து தேயிலைத் தோட்டத்தை உருவாக்கினார்கள். சோலைக்காடுகள் மழைநீரைத் தன் வசம் தக்க வைத்துக் கொள்பவை. மழை பெய்யாத காலங்களில் அவை தேக்கி வைத்திருக்கும் மழைநீரைக் கசிய விடும். இதனால்தான் கடும் கோடையிலும் நதிகள் வற்றாமல் இருந்தன. அப்படிப்பட்ட சோலைக்காடுகளை தேயிலை யூகலிப்டஸ் நட்டார்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஓடைகள் அப்போது அழிக்கப்பட்டன. காடுகளை அழித்ததன் காரணமாகத்தான் மழை அளவு குறைந்துள்ளது என்கிற விழிப்புணர்வை சூழலியலாளர்கள் ஏற்படுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை கடந்து வந்த சட்டமன்றத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் ஒரு சிறப்பம்சம் இருந்தது. அனைத்துக் கட்சியினரும் தங்களது தேர்தல் அறிக்கையில் சூழலியல் பிரச்னைகளைச் சேர்த்திருந்தார்கள். அது பசுமை இலக்கியத்தின் வெற்றி என்று சொல்லலாம்.

பசுமை இலக்கியம் என்கிற வகைமை உருவெடுப்பதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்தவை எவை?

பசுமை இலக்கியம் என்கிற வகைப்பாடாகவெல்லாம் அது உருவெடுக்கவில்லை. 90க்குப் பிறகான உலகமயமாக்கலின் விளைவுகளாக சூழலியல் பாதிப்புகளைச் சந்திக்கிறோம். ஆரம்பத்தில் நாம் வளர்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தது போலியானது என்பதை 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர ஆரம்பிக்கிறோம். அதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிய போது எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகள் வாயிலாக அதனை முன் வைக்கின்றனர். இப்படியாக இயல்பாக, பரவலாக தொடங்கி எழுதப்பட்டதுதான் பசுமை இலக்கியம். பெண்ணியம், தலித்தியம் ஆகியவற்றை எழுதுவதற்கான நெருக்குதல் கால சூழலில் ஏற்பட்டது போல் சூழலியல் குறித்தான எழுத்தும் காலத்தால் தீர்மானிக்கப்பட்டதுதான். முதலில் அபுனைவில் தொடங்கி பின்னர் புனைவாக உருவெடுக்கிறது. காடு மற்றும் காட்டுயிர்கள் பாதிப்பில் தொடங்கிய இவ்வெழுச்சி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு பிறகு வீரியமடைந்தது. கெயில், மீத்தேன், நியூட்ரினோ என சூழலுக்கு விரோதமானவற்றின் மீதான போராட்ட உணர்வைத் தூண்டுகிற எழுத்தாகவும் உருப்பெற்றது. சூழலியல் போராட்டத்தின் எழுத்து வடிவமே பசுமை இலக்கியம் என்கிற வகைப்பாடாக மாறியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அயல் மொழியில் வெளியான சூழலியல் சார் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்கான தேவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. காலம் தனக்கான தேவையை தானே நிவர்த்தி செய்து கொள்ளும் என்கிற விதியின் அடிப்படையில் பார்த்தோமென்றால் உலகமயத்தின் பிடியில் சிக்குண்டிருக்கும் இக்காலத்தின் தேவை பசுமை இலக்கியம் எனலாம்.

தமிழ் இலக்கியத் தளத்தில் பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் ஆற்றி வரும் பங்கு எத்தகையது?

பசுமை இலக்கிய எழுத்தாளர்களுக்கு இரண்டு சவால்கள் இருக்கிறது. அரசு, அதிகாரம், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துதான் தங்கள் எழுத்தை முன் வைக்கிறார்கள். இலக்கிய எழுத்தாளர்கள் அது போன்ற பிரச்னைகளை சந்திக்க மாட்டார்கள். நெருக்குதல் இருந்தாலும் சூழலியல் குறித்தான விழிப்புணர்வு மற்றும் இழந்து போன கலைச்சொற்களை மீட்டெடுக்கும் பணி எங்களது முதன்மையானதாக இருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகளின் வீச்சு எந்தளவுக்கு இருக்கிறது?

நவீன இலக்கியங்கள் மேற்கத்திய இசங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. முற்போக்கு இலக்கியம் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பசுமை இலக்கியம் என்பது நமது நிலம் மற்றும் பாரம்பர்ய வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இழந்த சொற்களை மட்டுமல்ல இழந்த வரலாற்றையும் மீட்டெடுத்தல் இதன் முக்கியப் பணியாக இருக்கிறது. ஐந்திணைப் பகுப்பு என்பது இன்றைக்கு பழங்குடிகளிடம் கொள்கை அளவில் மட்டுமே இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டிய இனம் தமிழினம். குறிஞ்சியும் முல்லையும் கெட்டுப்போனால் அது பாலை ஆகும் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் மருதமும் நெய்தலும் கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது. பாலை என்பது தற்காலிக நிலம்தானோ தவிர தனித்த நிலம் கிடையாது. இன்றைய சூழலில் நாம் பாலையை தனித்த நிலமாக்குவதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்புவதற்கான உள் அசைவை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதால் பசுமை இலக்கியங்கள் வாசகர்கள் மனதுக்கு நெருக்கமானதாகிறது.

காடோடியின் களம் போர்னியோ வனப்பகுதியாக இருந்தாலும் அதை நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் காடுகள் அழிப்போடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தமிழ் பசுமை இலக்கியத்தைப் பொறுத்த வரை எங்கே சுற்றினாலும் அதன் வேர் தமிழக்த்தில்தான் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் சூழலியல் சார்புடைய புனைவு, அபுனைவுகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. எழுத்து என்பது செயல்பாடுகளை நோக்கித் தள்ளும் உந்து சக்தியாக இருக்க வேண்டும். இன்றைக்கு இளம் தலைமுறையினர் பலரும் ஆக்கப்பூர்வமான சூழலியல் செய்ல்பாடுகளை களத்தில் இறங்கி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் எந்த வகைமை இலக்கியமும் செய்யாத இச்சாதனையை பசுமை இலக்கியம் செய்திருக்கிறது என்பதை பெருமையாகவே சொல்லலாம். ஜோடி க்ரூஸ்-ன் ஆழி சூழ் உலகு ச.பாலமுருகனின் சோளகர்தொட்டி போன்ற பெயர் பெற்ற நூல்கள் எல்லாம் சூழல் சார்ந்த நூல்கள். இவர்கள் யாரும் பெரிய எழுத்தாளர்கள் கிடையாது. தன்னுள் உணர்ந்த பாதிப்பின் வெளிப்பாடு எழுத்தாக உருவாகுகிறது. மார்க்சிய நூல்களில் கூட சூழலியல் சார்ந்த மொழிபெயர்ப்புகள் வெளி வருகிறது. ஜே.சி.குமரப்பா உள்ளிட்ட பொருளியல் அறிஞர்கள் கவனம் பெறுகிறார்கள். பசுமை இலக்கியம் காலத்தின் தேவையாக இருப்பதுதான் இவற்றுக்குக் காரணம்.

 பசுமை எழுத்தாளர்கள் தமிழ் கலைச்சொற்களை உருவாக்கவும் இழந்த சொற்களை மீட்டெடுக்கவும் செய்கின்றனர். ’காடோடி’ ‘கவிகை’ ‘மறைநீர்’ மாதிரியான கலைச்சொற்களை உங்களது எழுத்துகளின் வாயிலாக அறிய நேர்கிறது. கலைச்சொற்களின்  தேவையை நாம் எந்த நோக்கில் அணுக வேண்டும்?

பண்டிதர்கள் மற்றும் தமிழ் புலவர்கள் மொழியைத் தூக்கிப் பிடிப்பது போல் நாங்கள் நமது மொழி என்கிற காரணத்துக்காக மட்டும் அதனை முன் நிறுத்தவில்லை. மொழியை அகழாய்வு செய்து பார்த்தோமென்றால் மொழியின் வரலாறுக்குள் அதன் இனத்தின் வரலாறும் அடக்கம். சூழலுக்கும் மொழிக்குமான உறவு மிகவும் நெருக்கமானது,. பல்லுயிர்ப்பெருக்கம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் மொழி மற்றும் அதன் சொற்கள் வளமாக இருக்கும். வெப்பமண்டல நாடுகளில்தான் பல்லுயிர்ப்பெருக்கம் அதிகமாக இருக்கும். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில்தான் மொழிகள் அதிகம். ஆங்கிலம் என்பது பல்லுயிர்ப் பெருக்கம் இல்லாத மொழி. உதாரணத்துக்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கு புலியை டைகர் என்றும் யானையை எலிஃபெண்ட் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம். தமிழில் யானையைக் குறிப்பதற்கு முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறது. புலியைக் குறிக்கு பனிரெண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கிறது. யானையையும் புலியையும் பார்த்தேயிராத நாட்டவனின் மொழியை நாம் பயன்படுத்தும்போது நமது மொழியில் உள்ள இத்தனைச் சொற்களையும் நாம் இழந்து விடுகிறோம். புலி என்கிற பெயர் புல்லுதல் (முன்னங்காலால் அறைதல்) என்பதனைக் குறிக்கும் காரணப்பெயராக இருக்கிறது.  டைகர் என்கிற சொல்லுக்கு என்ன காரணம் இருக்கிறது? ஐரோப்பிய மனிதன் மெசபடோமியாவில் உள்ள டைகரிஸ் நதிக்கரையில்தான் முதன் முதலாக புலியைப் பார்க்கிறேன். ஆகவே அதற்கு டைகர் எனப் பெயர் வைத்து விட்டான். நமது மொழியில் உள்ள ஒவ்வொரு பெயர்களும் அதனதன் பண்புகளின் அடிப்படையிலானது. புல்லுதல் என்பதுதான் புலி என்பது, தமிழ் இனத்தின் விலங்கு புலி என்பதற்கான ஆதாரம். புலி என்னும் ஒரு சொல்லை இழப்பதன் மூலம் பெரும் வரலாற்றையே இழக்கிறோம்.

நவீன காலத்தில் புதிதுபுதிதாக நிறைய பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழ் மொழியில் புதிய கலைச்சொற்களை உருவாக்குதல் என்பது நாம் நமது மொழிக்கு ஆற்ற வேண்டிய கடமை. ஆற்றல் உள்ள மொழியை செழுமைப்படுத்துவது எழுத்தாளர்களின் கடமை. தியடோர் பாஸ்கரன் அருமையாகச் சொல்வார் நாம் முதுகுக்குப் பின் ஒரு வங்கியையே வைத்துக் கொண்டு வேற்று மொழியிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று.

சூழலுக்கும் மொழிக்குமான தொடர்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு பப்புவாநியூகினியா நாட்டை முன்னுதாரனமாகச் சொல்லலாம். உலகிலேயே இந்நாட்டில்தான் அதிக மொழி புழங்குகிறது. இதற்குக் காரணம் அங்கு சூழல் அழியாமலும்  சிதையாமலும் இருப்பதுதான். பல்லுயிர்ப்பெருக்கம் உள்ள இடத்தில் மொழி வளம்பெறும். ஒரு பூ மொட்டிலிருந்து பூப்பதற்குள் அதன் நிலைகளைக் குறிக்க நனை, முகை, அரும்பு, மலர், அலர், வீ என இத்தனை பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஃப்ளவர் எனும் ஒரு வார்த்தையில் இதனை நாம் சுருக்கி விடுகிறோம். சூழலுக்கு நெருக்கமாக வாழ்ந்ததால்தான் பூ மலர்வதற்கான நிலைகளை கவனித்து அதற்கான பெயர்களையும் சூட்ட முடிந்திருக்கிறது. மாட்டு வண்டி இன்றைக்கு வழக்கொழிந்து போய் விட்டது. மாட்டு வண்டிக்கென நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. மாட்டு வண்டியை இழக்கும்போது அந்த சொற்களையும் நாம் இழந்து விடுகிறோம். ஆனால் இங்கு மாறாக புலியை நாம் இழக்கவில்லை ஆனால் அதைக் குறிக்கும் சொற்களை மட்டும் இழந்து கொண்டிருக்கிறோம். நூற்றுக்கணக்கான சொற்களை பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள், உருவாக்கியிருக்கிறார்கள். இது காலத்தின் தேவை.

கலைச்சொற்களை பொதுமைப்படுத்துவதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் தேவை? எந்த வழிகளில் நாம் கலைச்சொற்களைப் பெறவும் உருவாக்கவும் முடியும்?

 கலைச்சொற்களை மக்களின் புழங்கு மொழியில் உருவாக்கும்போதுதான் அது வெற்றியடையும். இதற்கு நாம் மலேசிய – சிங்கப்பூர் தமிழர்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம். மலேசியா மற்றும் சிங்கப்பூரின் அரசியல் கட்டமைப்பு அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் கலைச்சொற்களை அங்குள்ள ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து புழக்கத்துக்குக் கொண்டு வருகின்றன. கலைச்சொற்களை உருவாக்குவதிலும், தமிழின் வளர்ச்சியிலும் அவர்கள் காட்டும் முனைப்பு அபாரமானது. தமிழ் எழுத்துரு அங்குதான் கண்டறியப்பட்டது. வானொலி, தொலைக்காட்சி, இணையம் என இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் இது போன்ற பல கலைச்சொற்கள் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் உருவாக்கப்பட்டதுதான். அவர்கள் கைப்பேசி, மின்மடல், செய்மதி (செயற்கைக்கோள்) அழைப்பாணை (சம்மன்) போன்ற நல்ல தமிழை இயன்றளவும் பயன்படுத்துகின்றனர். போர்னியோவில் மலேசியச் செய்திகள் கேட்பதின் வாயிலாக எனது மொழி அறிவு வளப்பட்டது.

மலேசியாவில் உருவாக்கப்படும் கலைச்சொற்களை அந்நாட்டுக் கலாச்சாரத்துறையும், கல்வித்துறையும் அங்கீகாரம் அளித்து அதனைப் பரவலாக்கம் அடைய வழிவகை செய்கின்றன. அது போல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அதற்கடுத்த நிலையில் எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இதனை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியான பயன்பாடுகள் வாயிலாகத்தான் ஒரு சொல் புழக்கத்துக்கு வரும். ஊடகங்கள் மூலம்தான் புதிய சொற்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். பசுமை எழுத்தாளர்கள் கலைச்சொற்கள் உருவாக்கும் பணியை செயல்பாடாகவே முன்னெடுக்கிறோம். virtual water குறித்த கட்டுரை எழுதினேன். விர்ச்சுவல் என்பதற்கு மெய்நிகர் என்கிற நல்ல தமிழ்ச்சொல் இருந்தால் மெய்நிகர் நீர் என்பது பொருத்தமாக இருக்காது. அதனால்தான் அதனை  ‘மறைநீர்‘ என்று எழுதினேன். இது போன்று உருவாக்கப்படும் கலைச்சொற்கள் பரவலாக்கமடைந்து வருகின்றன. ஊடகத்துறையில் மொழி மீதான  அக்கறை கொண்டவர்கள் இதனை தீவிரமாகவே முன்னெடுக்கிறார்கள்.

 புவியியல் அமைப்புப்படி புவிமையக்கோட்டின் கீழ் உள்ள வெப்ப மண்டல நாடுகளில்தான் இயற்கை மற்றும் உயிரிவளம் அதிகம். இருந்தும் வளம் செறிந்த வெப்பமண்டல நாடுகள் கடனாளிகளாக இருக்கும் முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?

 அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மூலதனங்கள் இங்குதான் கிடைக்கின்றன. இந்நாடுகள் இல்லையேல் அவர்கள் இல்லை. பீரங்கி, அணுகுண்டு போல்  பொருளாதாம் என்பது இங்கு ஓர் ஆயுதமாக முன்னெடுக்கப்படுகிறது. ஒரு நாட்டைக் கையகப்படுத்துவதற்கு அதன் பொருளாதாரச் சந்தையைக் கையகப்படுத்தி விட்டால் போதும். இதனடிப்படையில்தான் மரபணு மாற்றம் இங்கே காலூன்றுகிறது. கார்பன் டிரேடிங்கை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாடுகளும் வெளியேற்றும் கார்பன் அளவு காரணமாகத்தான் புவி வெப்பமடைகிறது. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மரங்கள் வளர்க்கச்சொல்லி வளர்ந்த நாடுகள் நிதியுதவி அளிக்கின்றன. அவர்கள் வெளியேற்றும் கார்பனை கட்டுப்படுத்த இன்னொரு நாட்டில் மர வளர்ப்பை ஊக்குவிக்கிறார்கள் என்பது போலான தோற்றம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் இதற்குள் மறைமுகமானதொரு அரசியல் இருக்கிறது.

காட்டில் மரங்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் நிதி கொடுத்து காடு என்பது காடு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்கிற கருத்தை முன் வைக்கின்றனர். காலனியாதிக்க நாடுகள் தங்களுக்கு என்ன தேவையோ அந்தக் கருத்தை ஆணித்தரமாக நிறுவ முடிகிறது. காடுகள் எல்லோருக்கும் பொதுவானது என்று சொன்னால் பெட்ரோலும் பொதுவானதுதானே? என்று நாம் எதிர்க்கேள்வி கேட்க முடியும். ஆனால் நாம் அவர்களுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம். வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய சூழலியல் சீர்கேடுகளால், மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பை மதிப்பிட்டால் அவர்கள் அளித்த கடனை விட மூன்று மடங்கு அதிகம். அப்படிப் பார்க்கும்போது அவர்கள்தான் நமக்குக் கடனாளிகள்.

 உலகமயம் மோசமானதொரு கலாச்சாரத்தை நம் மீது திணிக்கிறது என்றாலும், மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறார்கள்.

நமது வாழ்க்கை முறைக்குள் காலையில் எழுந்ததும் பல் துலக்குகிற டூத் பேஸ்ட் தொடங்கி இரவு உறங்கும்போது பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரைக்கும் அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திதான். அந்நிறுவனங்களின் உற்பத்தி இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை மனிதர்களாக பார்ப்பதில்லை. நுகர்வோராக மட்டுமே பார்க்கின்றன. முந்தைய தலைமுறையில் ஆடம்பரமாகக் கருதப்பட்டவை பலவும் இன்றைக்கு அத்தியாவசியமானதாக மாறி விட்டது. காரணம் உட்சபட்ச நுகர்வுக்கலாச்சாரம்தான். மனிதர்கள் மீது மிகையான உற்பத்தியைத் திணிக்கிறார்கள். இதை நாம் புரிந்து கொண்டு இதிலிருந்து மீண்டெழ நமக்கு சூழலியல் அறிவு தேவைப்படுகிறது. பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்திருக்கும் இடத்தில் தற்சார்பு வாழ்க்கை இருக்கும். மனிதனின் தற்சார்பை அழித்தால்தான் அவனை நுகர்வோராக மாற்ற முடியும் என்கிற தெளிவோடுதான் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்லுயிர்த் தன்மையை அழிப்பதுதான் அதன் முக்கியக் குறிக்கோள். அதைத்தான் நாம் சூழலியல் அழிவு என்கிறோம். இந்தியாவின் நகர்மயமாக்கலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதனை நாம் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்றே சொல்லலாம். பசுமை இலக்கியத்தின் வாயிலாக இப்போதைக்கு இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் முக்கியப்பணியாக இருக்கிறது.

மறைநீர் virtual water குறித்த ஆய்வை தமிழில் கட்டுரையாக்கியவர் நீங்கள். நீர்மேலாண்மை, நீர் பங்கீடு குறித்த புரிதல்களை நம் அரசு கொண்டிருக்கிறதா?

உலகமயமாக்கலுக்கு முன்பும் சரி பின்பும் சரி விவசாய, மக்கள் நலனை விட பெரிய நிறுவனங்களின் இலாபநோக்குக்கு இசைவாகத்தான் அரசு செயல்பட்டு வருகிறது. உலக வங்கிகள் நிதி உதவி அளிக்கும்போது தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் அளிக்கிறது. இன்றைக்கு அணை கட்டுவது என்பது விவசாயிகளின் நலனுக்காக என்று நாம் நினைத்தால் அது நம் மடத்தனம். அணையின் கரையில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை உருவாக்குவதற்காகத்தான் அணை கட்டப்படுகிறது என்பதே உண்மை. 1970ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் மற்றும் 41127 குளங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு நாம் பல ஏரி, குளங்களை ஆக்கிரமித்து விட்டோம். இதற்காகவெல்லாம் கொஞ்சமேனும் கவலை கொள்ளாத அரசுக்கு எப்படி அக்கறை இருக்கும்?

பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம் அடைந்த படிப்படியான வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் உலகமயமாக்கலுக்குப் பிறகான வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது. இதன் காரணமான நகர்மயமாதல், அதன் பொருட்டு விளைநிலங்கள் அழிப்பு என உலகமயத்தின் சீர்கேடுகளிலிருந்து நாம் எதிர்காலத்தை எப்படி மீட்பது?

 இதற்கு முக்கியக்காரணம் நமது வாழ்வியல் மாறிப்போனதுதான். காலனியப்படுத்தப்படும் நாடு காலனியாதிக்க நாட்டின் பண்பாட்டை உயர்வாகப் பார்க்கிறது. அதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடைவிரிக்கின்றன. உயர்குடி, நடுத்தரம், அடித்தட்டு என மூன்று தரப்பு மக்களுக்குமான சந்தையை அவர்கள் கைக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் உயர்குடி மக்களுக்கானது என்று கருதப்பட்டவைகள் அனைத்தும் நடுத்தர மக்களை நோக்கிப் பாய்ந்ததுதான் உலகமயம். தற்சார்பை இழந்து நகரம் என்னும் ஒரு புள்ளியில் மக்கள் குவிந்து வாழும்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் எளிமையாக இருக்கும். ஒரு புறம் நகரங்களை நோக்கி மக்களைக் குவிப்பது, மறுபுறம் கிராமங்களுக்குள் ஊடுருவுவது என்கிற திட்டத்தோடு அவை இயங்கி வருகின்றன.

ஒரு காலத்தில் உயர்குடி மக்களுக்கான பானமாக இருந்த பெப்சி, கொக்ககோலா இன்றைக்கு அடித்தட்டு மக்களையும் சென்றடைந்து விட்டது. உயர்குடி மக்களுக்கான சந்தையை கே.எஃப்.சி போன்ற நிறுவனங்கள் கைக்கொண்டு விட்டன. நாளடைவில் பிட்சாவும், பர்க்கரும் கிராமங்களில் கூட விற்பனை செய்யபடலாம். அப்போது உயர்குடி மக்களுக்கு வேறொரு சந்தையை உருவாக்கியிருப்பர். உணவுக் கலாச்சாரத்தை மாற்றி தனது பொருளை சந்தைப்படுத்துவது, அதன் காரணமான உற்பத்தியாகும் நோய்களாலும் மருந்து சந்தையை உருவாக்கி இரட்டை லாபம் பெறுவதே பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். நம்முடைய பண்பாட்டை விட நுகர்வுப்பண்பாட்டை மேலாகக் கருதியதால் வந்த மாற்றம் இது. விழிப்புணர்வும், அதற்கு எதிரான குரலுமே மாற்றத்தைச் சாத்தியப்படுத்தவல்லது. எதிர்க்குரல்கள் மூலம்தான் இன்றைக்கு பலவையும் சாத்தியப்பட்டிருக்கிறது. குளிர்பான விளம்பரத்தில் நடித்த நடிகன் அதே குளிர்பானத்துக்கு எதிராக வசனம் பேசுவது கூட இந்த எழுச்சியால்தான்.

நீங்கள் இணைந்து முன்னெடுத்த ‘தண்ணீருக்கான பொதுமேடை’ என்கிற பிரச்சாரத்தில் எவற்றை முன்னிறுத்துகிறீர்கள்.

தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டதுதான் ‘தண்ணீருக்கான பொதுமேடை’. தமிழகத்திலுள்ள 20 அமைப்புகளை ஒன்றிணைத்து, இந்தியாவின் தண்ணீர் மனிதரான ராஜேந்தர் சிங்கை வரவழைத்துக் கூட்டம் நடத்தினோம். அரசுக்குச் சொந்தமான பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வழக்கொழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக நடத்தப்பட்ட அக்கூட்டத்தின் வெற்றியாக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பொது இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது மட்டும் இப்பிரச்சாரத்தின் நோக்கமல்ல. தண்ணீரைத் தனியார்மயமாக்கலும், விலை வைத்தலும் கூடாது. ஒவ்வொரு மனிதனுக்கும் நாளொன்றுக்கு 135 லிட்டர் தண்ணீருக்கு உரிமை உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

சமீபத்தில் பசுமை எழுத்தாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். இதன் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி.

முன்பே சொன்னது போல எழுத்தாளர்களுக்கு சமூகப்பொறுப்பும் இருக்கிறது. எழுத்தைத் தாண்டியும் செயல்பாட்டளவில் அடுத்த கட்ட நகர்வுகளைத் துவக்க வேண்டும் என்பதே அக்கூடுகையின் நோக்கம். சூழலியலேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அந்தந்த பிரிவுகளில் தனித்தியங்கிக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்கும்போது தத்தம் மற்ற துறைகள் சார்ந்த புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.   கலைச்சொற்களை உருவாக்குதல், சூழலியல் புரிதலை ஏற்படுத்தும்படியான பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல், காட்டுயிர் குறித்த சிந்தனைகளை எப்படி உருவாக்குவது? என்பது போன்று பலவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டன. பல துறைகளைச் சார்ந்தவர்களின் பரந்துபட்ட பார்வைகள் மூலம் அறிவை விசாலப்படுத்தியதே இச்சந்திப்பின் வெற்றி எனக்கூறலாம். கலந்து கொண்ட அனைவரது கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆண்டுதோறும் இது போன்ற சந்திப்பை நடத்த உள்ளோம். சந்திப்பு என்றால் எல்லோரும் ஒரு இடத்தில் கூடி, கலந்து பேசிவிட்டு கலைந்து செல்வதாக மட்டும் இருக்கக் கூடாது. அடுத்த சந்திப்பில் இந்த சந்திப்பில் பேசப்பட்டவைகள் செயல்வடிவம் பெற்றிருக்கின்றனவா? அவை எந்தளவுக்கு வீரியத்துடன் இருக்கின்றன? என்பது குறித்துப் பேசுவதாக அமையும்.

-முற்றும்

நேர்காணல்: கி.ச. திலீபன் (ஓலைச்சுவடி இதழாசிரியர்)

3028total visits.