கனவுலகவாசி பாகம் – 1

0
31

#கனவுலகவாசி
#தொடர்_எண்_1

நான் வினோத். ஒரு டிடெக்டிவ். நம்ப மறுக்கிறீர்கள் அல்லவா. நான் சொல்வதை பொறுமையாக கேளுங்கள். பிறகு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

நான்கு-ஐந்து பெரிய மனிதர்கள் என்னை தேடி வந்து இருந்தார்கள். அவர்கள் முகம் வெளிறியப்படி இருந்தது. எதோ பெரிய பிரச்சனைகளோடு வந்து இருக்கிறார்கள்.

எப்படி கண்டுப்பிடித்தேன் பார்த்தீர்களா? இப்போதும் என்னை டிடெக்டிவ் என நம்ப மாட்டீர்கள் தானே… சற்று பொறுங்கள்.

வந்த நால்வரிடமும் கவலை தோய்ந்த முகம். ஊரில் ஆண்கள் எல்லாரும் ஒவ்வொருவராக காணாமல் போயிக் கொண்டு இருக்கிறார்களாம். அவர்களை கண்டுபிடித்து தர வேண்டுமென்றார்கள். வேலை முடிந்தால் என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்றார்கள்.

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். என்ன கேட்பது என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஊரில் பாதி நிலம்? அழகான பெண்?, ச்ச்சே… இது என்ன சங்க காலத்து யோசனைகளாய் தோன்றுகின்றதே என்று நெற்றில் அடித்துக் கொண்டேன்.

ஊர் பெயரை குறித்துக் கொண்டு, அவர்களை அனுப்பி வைத்தேன். இரவு கிளம்பி வருவதாகவும் சொல்லி அனுப்பினேன்.

#அன்றிரவு….

ஒரு மாதத்தில் இந்த வழக்கு முடியுமென கருதி தேவையான துணிகள், கொஞ்சம் புத்தகங்கள், என்னுடைய லேப்டாப் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

நெடுஞ்சாலைக்கு சென்று பஸ் ஏற்ப வேண்டும். இங்கே பஸ் நிறுத்தங்கள் ஒன்றும் கிடையாது. பஸ் நிறுத்தம் போக வேண்டுமென்றால் 3கிமீ போக வேண்டும்.

நெடுஞ்சாலையில் நின்றுக் கொண்டு இருந்தேன். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு லாரி அருகில் நின்றது.

“போகிற வழியில இறக்கி விடுறேன் வாங்க.” க்ளீனர் கூப்பிடதும் ஏறிக் கொண்டேன்.

“எங்க போறீங்க சார்?” மெதுவாக பேச்சுக் கொடுத்தார் ட்ரைவர்.

“கோனேரிகுப்பம். அங்க என் சொந்தக்காரங்க இருக்காங்க. பார்க்க போறேன்.”

“ஐய்ய்ய்ய்யோ.. அந்த ஊரா? கொஞ்ச நாளா ஆம்பளைங்க காணாம போயிட்டு இருக்காங்க. நீங்க வேற அந்த ஊருக்கு போறீங்க. கொஞ்சம் கவனமா இருங்க சார்” க்ளீனர் உண்மைய சொன்னாலும், கொஞ்சம் ஜெர்க் என்று தான் இருந்தது. பெரிய பிரச்சனையாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பொதுவாய் சிரித்து வைத்து, உட்கார்ந்தப்படியே கண்ணயர்ந்தேன்.

விடியற்காலை 4மணி அளவில் ரோட்டோரமாய் வண்டியை நிறுத்தி இறக்கி விட்டார்கள். “பக்கத்தில” தான் என்றான் க்ளீனர்.

லாரி போன பிறகு கும்மிருட்டில் சாலையை பார்த்தேன். யாருமில்லை. ஒரு புளிய மரத்தின் பின்புறம் இருந்து வெளிச்சம் வந்து அணைந்தது. புளிய மரத்தை நோக்கி நகர்ந்தேன். பெண் உருவம் ஒன்று வெளியே வந்தது.

“என்ன சார்? கண்டுக்கிறீயா?”

எனக்கு புரிந்தது. “அந்த மாதிரி எல்லாம் வேணாம். இங்க கோனேரிகுப்பம் போற வழி சொல்லுங்க”.

அடச்ச்சீ… போணி பண்ணுவன்னு பார்த்தா… அவள் முகம் சுளித்துக் கொண்டு வழியை சொன்னாள்.

” இந்த பாதைல போனா அரைக் கிலோமீட்டர் தான்.”

இருட்டில் அவள் முகம் தெரியவில்லை. நன்றி சொல்லி விட்டு கிளம்பினேன்.

கொஞ்ச தூரம் நடந்ததும்….

“யோவ்….. ?” அந்த பெண் குரல் தான். அவள் தான் அழைத்திருந்தாள். திரும்பி பார்த்தேன்.

“அந்த ஊர்ல ஆம்பளைங்க காணாம போறாங்களாம். ஊருக்கு புதுசா இருக்க. கொஞ்சம் சூதானமா இரு” என்றாள்.

லேசாக பயம் வந்தது.

-ராஜி

தொடரும்…

3307total visits,52visits today