கதிர் குறள் – 231

0
38

என்னடா, நானும் 4 நாளா பார்க்கறேன், ஆளே ஒரு மாதிரி இருக்க?

எப்படி இருக்கேன்?

தனியா உட்கார்ந்துக்கற? போனையே பார்த்துட்டுருக்க, மனசுக்குள்ள ஏதோ படம் ஓடற மாதிரி முகத்துல ரியாக்ஷனை மாத்திட்டே இருக்கியே? என்ன ஊருக்கு போனப்ப ஏதாவது சிக்கிருச்சா? இல்லை வீட்ல பார்த்து வச்சுட்டாங்களா?

அட ஏன்டா நீ வேற? உனக்கு ஆகிருச்சுன்னா வேற எவனும் நிம்மதியா இருக்க கூடாது, என்கிட்ட இப்போதைக்கு கல்யாண பேச்செடுக்காத

அப்படி என்னடா வெறுப்பு உனக்கு?

மச்சி சுதந்திரம் போயிரும்டா, படிப்பு முடிஞ்சு வேலைக்கு போனதுக்கப்புறம் தான் தனி ரூம்ல பிடிச்ச மாதிரி இருக்க முடியுது, அதை இன்னொருத்தங்களோட பகிர்ந்துக்க இப்ப நான் தயாராயில்லை, போதுமா?

அய்யய்ய, என்னடா இப்படி இருக்க? இதை அப்புறம் பேசிப்போம், லவ் காரணம் இல்லன்னா வேற என்ன போய்ட்டுருக்கு சொல்லு?

மச்சி பொன்னியின் செல்வன் படிச்சுருக்கியா?

டேய் அதைல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போதே படிச்சுட்டேன், ஏன் கேட்குற?

நான் இப்பதான் மச்சி படிச்சு முடிச்சேன், ஊருக்கு போய்ட்டு வரும்போது போரடிக்குதுனு பொன்னியின்செல்வன் ஆப் டவுன்லோட் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன், கீழ வைக்க முடியலை, ப்பா செமயா இருக்கு இல்லை

இப்பதான் இதையே படிக்கறியா? முடி இன்னும் நிறைய இருக்கு படிக்க

நான் இதுலயே கிறங்கிட்டான்டா, பாரேன் 1000 வருசம் கழிச்சும் அவங்களை பத்தி பேசிட்டு இருக்கோம், வாழ்ந்தா அப்படி வாழனும்டா

ஹா ஹா, என்னடா வெள்ளந்தியா இருக்க? கல்கி எழுதுனதால இவ்ளோ பேசற? எழுதலைன்னா? சரி உனக்கு தெரிஞ்சு காலம் கடந்தும் பேசறவங்க பேர் சொல்லு, ஹிட்லர்னு ஆரம்பிக்காத, கொஞ்சம் நல்லவிதமா பேசப்படறவங்களை சொல்லு

ம், யாரு, ம் அசோகர், கட்டபொம்மன், சிவாஜி, டக்னு தோணலை, இரு ஆ..ன், கடையேழு வள்ளல்கள் அதியமான், பாரி அந்த லிஸ்ட், கல்லனை கட்டுன கரிகாலன், யோசிச்சா நிறைய சொல்லலாம்

இப்ப நீ சொன்னவங்கள்ல அதிகபட்சம் பேரை நாம் இப்பவும் ஞாபகம் வச்சுக்க என்ன காரணம் சொல்லு

அவங்களோட வீரம், கொடைப்பண்பு, ஆட்சி பண்ணவிதம் தான் வேறென்ன?

இதுல வீரத்தை உன்னால தனியா காட்ட முடியாது, இராணுவத்துல சேர்ந்து நீ நிறைய பேரை ஜெயிச்சாலும் இந்தியாவோட வீரத்தை பார்த்தியான்னுட்டு போய்டுவாங்க, அடுத்து ஆட்சி பண்ண விதம், அதுக்கு முதல்ல பதவில்ல இருக்கனும், காமராஜருக்கு பதவி கிடைச்சது, அவர் நல்லது செஞ்சதனால பேசப்படறார். மிச்சம் இருக்கறது கொடைப்பண்பு, இதை உன்னால செய்ய முடியும். உன்னொட தேவைகளுக்கு மேல இருக்கறதை வீணா ஆடம்பரமா செலவளிக்காம, 3 தலைமுறைக்கு அப்புறம் வரப்போறவங்களுக்காக சேர்த்து வைக்காம இல்லாதவங்களுக்கு கொடுக்கனும், யாரையும் நீ தேடிப் போக வேண்டாம், நிச்சயம் உனக்கு பேர் தெரிஞ்ச ஒருத்தன், உனக்கு தெரிஞ்சே கஷ்டப்படுவான், அதை பார்த்து உச்சு மட்டும் கொட்டாம, முடிஞ்சதை செய், இது மாதிரி தொடர்ந்து செய்யறப்ப உன்னோட அடையாளமே மாறும். அது காலத்துக்கும் நிலைச்சு நிக்கும்.

நீ சொல்றதுல்லாம் கரெக்ட் தான், ஆனா அப்படி யாராவது இருக்காங்களா என்ன?

யார்கிட்டயும் போய் இப்படி இருங்கன்னு கட்டாய படுத்த முடியாது, ஆனா இப்படி இருந்தா நல்லதுன்னு சொல்ல முடியும், அதுக்கப்புறம் அவங்க இஷ்டம்

சரி எனக்கு சுருக்கமா சொல்லு, முடிஞ்சா செய்யறேன்

உன்னோட தேவைக்கு மேல இருக்குறதை இல்லாதவனுக்கு கொடு, அப்படி தரதால கிடைக்கற பேருக்கு ஆசைப்படு அப்பதான் தொடர்ந்து செய்ய முடியும், அது போதும் வாழ்க்கை முழுக்க வாழ ஒரு அர்த்தம் கிடைச்சாப்ல இருக்கும்

அதிகாரம்:புகழ் குறள் எண்:231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

752total visits,1visits today