கதிர் குறள் – 256

0
91

வியாபாரம் செய்வது ஒரு மிகப் பெரிய கலை. அனைவராலும் செய்து விட முடியாது. மற்ற திறமைகளை போல இதுவும் தனித்திறமை தான். வீட்டிற்கு அருகில் இருக்கும் பாய் மளிகை கடைக்கு சென்று ஏதாவது பொருள் கேட்டால் உடனே எடுத்து போட்டு “வேற?” என்று அழுத்திக் கேட்பார். எத்தனை பொருள் வாங்கினாலும் அவர் கேட்கும் தொனியில் அந்த “வேற” எனும் வார்த்தையே நீண்ட நாட்களாக வாங்க நினைத்து தள்ளிப் போட்டிருந்த பொருளை வாங்க வைத்து விடும். மிரட்டல் இல்லை. அது ஒரு மாதிரியான தொனி.

ஒரு பொருளை விற்பது தனி திறமை தான். ஆனால் அனைத்தும் வியாபாரம் ஆவது சரியா? உதாரணத்திற்கு ஒரு நகைச்சுவை துணுக்கு. அதிகம் கேட்டிருப்பீர்கள். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாளர், அவர் முதலாளியிடம் அவசரமாக ஓடுவார் “சார், நாம் விற்ற வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்து விட்டது. பள்ளத்தில் வீடு கட்டி கொடுத்தது நம் தவறு தான். அவர்களுக்கு நஷ்ட ஈடாக ஏதாவது தரலாம், வாருங்கள்” என சொல்ல, அதற்கந்த முதலாளி “அட முட்டாளே, வீட்டை சுற்றி வெள்ளம் என்றால் எதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும்? படகு வியாபாரம் செய்வோம் வா” என்பார்.

இதில் வரும் முதலாளியின் குணம் வியாபார மூளை என அனைவராலும் புகழக்கூடியதாக சித்தரிக்கப் படுவதுதான் கொடுமை. இதை நாமும் தவறாக நினைக்க மாட்டோம். ஏனென்றால் நாம் இதனை கேட்கையில் நம்மை அந்த முதலாளி இடத்தில் தான் வைத்து பார்ப்போம். வீடு வாங்கி ஏமாந்து போனவர்களின் இடத்தில் இருந்து யோசிக்க மாட்டோம். அப்படித்தான் சொல்லி வளர்க்கப் படுகிறோம். வியாபாரத்தை பற்றி சொல்கையில் அவ்வபோது “நுகர்வோராக யோசியுங்கள்” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் தான் நாம் எந்தெந்த விதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்பதே புரியும்.

வியாபாரத்தில் என்ன ஏமாற்றம்? கலப்படத்தை பற்றி பேசப்போகிறேனா என்று நினைக்காதீர்கள். அதிலாவது நாம் விரும்பி வாங்கும் பொருளில் பாதி மட்டும் தான் ஏமாற்றப் பட்டிருப்போம். நான் சொல்ல வருவது, நம்மை வாங்க வைக்க கட்டாய படுத்துகிறார்களே, அந்த வியாபாரத்தை பற்றி. நெடுந்தூர பேருந்து பயணம் செய்பவர்கள் அதிகம் அனுபவப்பட்டிருப்பீர்கள். நள்ளிரவில், நீங்கள் உறக்கத்தில் இருந்தாலும், ஒரு மோட்டலில் வண்டி நிற்கும். உள்ளே குழந்தைகள் தூங்கினாலும் கவலைப்படாமல் பேருந்தை சுற்றி ஒருவர் தகரடப்பாவை இரும்பு கம்பியால் தட்டி அனைவரையும் எழுப்பி விடுவார். அதனால தூக்கம் தெளிந்தவர்களில் பாதி பேராவது கட்டாயம் டீ குடிக்க செல்வார்கள். இந்த இடத்தில் வியாபாரம் கட்டாயமாக்கப் படுகிறதா இல்லையா?

இன்னொரு பக்கம் திரையரங்கிற்கு வருவோம். இந்திய சினிமாவில் யார் எத்தனை முக்கினாலும் இடைவேளை விடாமல் தொடர்ச்சியாக ஓடும்படி ஒரு படம் எளிதாக எடுத்து விட முடியுமா? தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ள மாட்டார். தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டாலும் திரையரங்க உரிமையாளர்கள் சண்டைக்கு வருவார்கள். அத்தனையும் மீறி படம் எடுக்கிறீர்களா? எடுத்துக் கொள்ளுங்கள். ஹாலிவுட்டில் இருந்து வரும் ஒன்னரை மணி நேர படத்திலேயே யாராவது வாயை பிளக்கும் காட்சியை ஃபிரிஸ் செய்து தமிழில் “இடைவேளை” என்று ஸ்லைடு போடுபவர்களுக்கு இந்திய 2 மணி நேர சினிமாக்களில் போடுவது என்ன கடினமா? அப்படி எதற்காக கட்டாயமாக இடைவேளை விடுகிறார்கள். மக்களில் பாதிப்பேர் சுகர் பேஷண்ட் என்ற அக்கறையா? கேண்டின் வியாபாரம். இருமடங்கு விலை வைத்து செய்யப்படும் வியாபாரம். அதற்கு இடைவேளை கட்டாயம். இந்த இடத்தில் வியாபாரம் திணிக்கப்படுகிறதா இல்லையா? இந்த இடைவேளை குறித்த அரசியலை “காக்க முட்டை” பட இயக்குனர் மணிகண்டன் பேசுகையில் தான் புரிந்து கொண்டேன்.

எந்த விஷயமும் வியாபாரம் ஆகும் வரை தான் அதற்கான புனிதத்துவம் எல்லாம். இன்றைய சூழலில் அனைத்தும் வியாபாரம் தான். நீட் தேர்வு வந்த பின் எத்தனை கோச்சிங் செண்டர்கள்? 3 மாதத்திற்கு ஒரு இலட்சமாம். கேட்கும் போது நானெல்லாம் வாழ தகுதியற்றவனோ என்று தோன்றியது ஒரு கணம். மருத்துவ வியாபாரத்தை பற்றி சொல்லவே வேண்டாம். உலகில் அதிகம் இலாபம் கொழிக்கும் தொழில் ஃபார்மா தான். அடுத்து காப்பீட்டு நிறுவனங்கள். இவையனைத்தும் மனிதர்களுக்குள் நிகழும் வியாபாரங்கள். மற்ற உயிர்களை மையப்படுத்தி நடக்கும் வியாபாரங்கள் தான் எத்தனை? குதிரை ரேசில் இருந்து செல்லப் பிராணிகள் வளர்ப்பு வரை.

செல்லப் பிராணிகள் வளர்ப்பு எனக்கு எப்போதும் குழப்பமான ஒன்று. எதற்கு வீட்டில் பிராணிகள்? மனிதனின் முதல் செல்லப் பிராணி நாய்தான். வேட்டைக்கு உதவவும் வீட்டை காவல் காக்கவும் பயன்பட்டது. அடுத்து மாடு பால் தர பயன்பட்டது, விவசாயத்திற்கும் மிக முக்கியம். அதே போலத்தான் ஆடும். பூனை பற்றி தனியாக சொல்ல தேவையில்ல. எலி வேட்டைக்கு. கோழி வளார்ப்பு அனைவரும் நினைப்பது போல இறைச்சிக்காக துவங்கவில்லை. மனிதன் முன்பு கட்டாந்தரையில் படுக்கும் வண்ணம் தான் வீடு காட்டினான். சுற்றிலும் புல், பூண்டுகள் மண்டி கிடக்கும். புழுவும் பூச்சிகளும் வீட்டினுள் நுழைவது எளிது. எந்நேரமும் இடைவிடாது கொத்திக் கொண்டு திரியும் கோழியானது அவற்றினை வீட்டில் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ளத்தான் வளர்க்கப்பட்டது. அது போடும் முட்டையைத்தான், கோழிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத்தான் மனிதன் முதலில் உட்கொள்ள துவங்கினான். அடுத்து தான் கோழியை சமைத்து உண்ண பழகினான். இப்போது கோழி வளர்ப்பே உணவுக்காகத்தான் என்றாகி விட்டது. இன்று கோழி இறைச்சியில் மட்டும் சமைக்க எத்தனை இரகங்கள்?

கட்டாயம் கோழி சாப்பிட வேண்டும் என்பது போல் உடல் உழைப்பு இல்லாதவர்களும் தொடர்ச்சியாக சாப்பிட்டு கொண்டுதானே இருக்கிறோம்? என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதன் பின்னும் பெரிய வியாபாரம், சந்தை இருக்கிறது. அதில் தவறில்லை. இந்த ஒரு நூற்றாண்டில் பல மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு பிறகு சடாரென உயர்ந்த மக்கள் தொகை. அத்தனை பேருக்கும் தேவைப்பட்ட புரதசத்து. அதை வைத்து பிராய்லர் ரக கோழிகளை கண்டறிந்து வெற்றிகரமாக நிகழ்த்திய அமெரிக்க வியாபார மூளை. இவையனைத்தும் நம்மை எங்கு கொண்டு வந்திருக்கிறது பாருங்கள். என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாமா முடிவெடுக்கிறோம்.

மற்ற விஷயங்கள் வியாபாராமானால் மனிதனுக்கு மட்டும் தான் இழப்பு. உணவும் குறிப்பாக அசைவமும் வியாபாரமாகி வருவது ஒட்டு மொத்த உயிர்சமநிலைக்கு ஊறு விளைவிக்கும். நேற்றைய குறளில் சீனர்களின் பன்றிக் கறி மோகம் எப்படி பிரேசில், அர்ஜென்டினாவில் காடுகளை அழிக்கிறது என்று கூட பார்த்தோம்.

அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் துறவறம் பூண்டவர்கள் அசைவத்தை தவிர்ப்பது அவர்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதுடன், வாங்குபவர்கள் எண்ணிக்கை ஒரு குறித்த சமநிலையை தாண்டாமல் பார்த்துக் கொள்வதால் விற்பனையும் கட்டுக்கடங்காமல் செல்லாது என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்று துறவறம் என்பதற்கு பதிலாக உடம்பில் கொழுப்பு கூடியதால் மாமிசத்தை தவிர்த்து விடுங்கள் என மருத்துவர்கள் சொல்வது உயிர் சமநிலைக்கு உதவுகிறது என நினைத்துக் கொள்வோம். ஏதோ அந்த வகையிலாவது அசைவ வியாபாரம் குறைகிறது என ஆறுதல் பட்டுக் கொள்வதனை தவிர வேறு வழியில்லை இன்றைய சூழலில்.

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: துறவறவியல்

அதிகாரம்: புலான்மறுத்தல் குறள் எண்:256

தினற்பொருட்டாற் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

உரை: புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவர்.

-கதிர் ராத்

439total visits.