கதிர் குறள் 258

0
51
ஒரு சீனக் கதை. ஒரு நாட்டில் மன்னர் இறந்து விட்டதால் சிறு வயதில், ஒரு
20 வயது என வைத்துக் கொள்வோமே, இளவரசனை மன்னனாக்கி விட்டார்கள். ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். தாயும் அவன் சிறு வயதாக இருக்கையில் இறந்த விட்டபடியால் மன்னன் அவனை அவன் இஷ்டத்திற்கே வளர அனுமதித்து இருந்தார். கல்விக் கூட பெரிதாய் கற்கவில்லை.
மன்னனாக பொறுப்பேற்றதும் தடால் புடால் உத்தரவுதான். நாடே அரசன் என்ன புதிதாக ஏதாவது உத்தரவு போடுவானா என்று பயப்படும் அளவிற்கு இருந்தது அவன் ஆட்சி நடத்தும் விதம். அவன் மோசமானவன் எல்லாம் இல்லை. முரட்டு வாதம் செய்பவன். நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது.

உடனடியாக நிலங்களை, விளைச்சலை அளக்க சொன்னான். மக்கள் தொகையை கணக்கெடுக்க சொன்னான். இரண்டையும் வைத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
விளைச்சலுக்கு மீறிய மக்கள்தொகை இருப்பதே பஞ்சத்திற்கு காரணம். அதனால் 60
வயதிற்கு மேல் ஆன வயதானவர்களை நாட்டிற்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில்
விட்டு விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். அந்த நாளில் இருந்து மக்கள்
தொகை கணக்கெடுப்பில் உள்ள விவரங்களை வைத்துக் கொண்டு யாருக்கெல்லாம் 60
வயது முடிகிறதோ அவர்கள் வீட்டிற்கு அடுத்த நாள் காவலாளிகள் சென்று
வயதானவர்களை காட்டிற்கு கொண்டு சென்று விட்டு விட்டார்களா என்று
சோதிப்பார்கள். தவறினால் தண்டனை உண்டு. அதற்காகவே மக்கள் ஒருநாள்
முன்பாகவே பயத்தில் கொண்டு சென்று விட்டு வந்து விடுவர்.

ராமுவின் தந்தைக்கு 60 வயது முடிந்தவுடன், அனைவரும் பார்க்கும் படி
தந்தையை காட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, இரவு யாருக்கும்
தெரியாமல் திரும்ப அழைத்து வந்து வீட்டில் இருக்கும் நிலவறையில் மறைவாக
தங்க வைத்தான். தன்னை வளர்க்க தந்தை பட்ட பாடுகளை உணர்ந்த எந்த மகனாலும்
தந்தையை கைவிட இயலாது. இப்படியாக மன்னனிடம் பிரச்சனை என்று போனால் ஆணை பிறப்பிக்கிறேன் என்று வேறு பிரச்சனையை கிளப்புகிறான் என்பதால் மக்கள்
தங்கள் பிரச்சனைகளுடனே வாழ பழகினார்கள்.

ஆதலால் எதுவும் முக்கிய வேலைகளற்று இருந்த அரசன் ஒரு போட்டியை
அறிவித்தான். சாம்பலால் ஒரு கயிறினை செய்து கொண்டு வருபவர்களுக்கு பரிசு
என்பதுதான் அந்த போட்டி. சாம்பலால் எப்படி கயிறு செய்வது என அனைவரும்
யோசிப்பது போல ராமுவும் குழம்ப, அதைக் கண்ட அவனது தந்தை ஒரு யோசனை
சொன்னார். ஒரு நல்ல தாம்பு கயிறினை மண்ணென்னெயில் ஊற வைத்து, பின் ஒரு
தட்டில் வைத்து எரித்தால் வரும் சாம்பலானது கயிறு வடிவத்தில் இருக்கும்.
அதனை சாம்பல் கயிறு என சொல்லி பரிசு வாங்கலாம் என்பது தான் அந்த யோசனை.
அதனை அப்படியே செய்து ராமுவும் பரிசுடன் வந்தான்.

அடுத்த போட்டி சில நாட்களில் அறிவிக்கப்பட்டது. முட்டையில் கூர்முனை
தரையில் இருக்கும் வண்ணம் நிற்க வைக்க வேண்டும். இம்முறையும் ராமுவின்
தந்தை அதற்கு வழி சொன்னார். கூர்முனையை தரையில் பதமாக அடித்து சிறிது
சமமாக்கி நிற்க வைக்க பயிற்சி தந்தார். நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டு
சென்ற இராமுவும் அரசவையில் செய்து காட்டி பரிசுடன், அரசவையில் பணியும்
பெற்றுக் கொண்டான்.

அடுத்தது யாரும் தட்டாமல் ஓசை எழுப்பும் மத்தளத்தினை செய்து கொண்டு
வருபவர்களுக்கு கேட்கும் பரிசு என அறிவிக்கப் பட்டது. இம்முறையும்
இராமுவின் தந்தை யோசனை சொன்னார். மத்தளத்தினுள் தேனிக்களை வைத்து மூடி
இரு பக்கமும் தோலை வைத்து கட்டினால் வெளியேற பறக்கும் தேனிக்கள் மோதி ஓசை எழும்பும் என்பது தான் அந்த யோசனை. இராமுவும் அதனை செய்து காட்டி
போட்டியில் வென்று விட, என்ன பரிசு வேண்டுமென கேட்க, வயதானவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், மன்னன்
நினைப்பது போல் முதியவர்கள் எதற்கும் பயனற்றவர்கள் இல்லை என்றும், அதற்கு
இந்த 3 போட்டிகளிலும் தான் வெல்ல காரணமாயிருந்த தன் தந்தையே உதாரணம் என
சொல்ல, அவன் தந்தையை அரசவைக்கு அழைத்து வர சொல்கிறான் மன்னன்.

இராமுவின் தந்தை வந்தவுடன் “முதியவர்களை நாடு கடத்தும் சட்டத்தை ரத்து
செய்ய தயார். அப்படி செய்தால் நாட்டில் மீண்டும் பஞ்சம் ஏற்படாமல் இருக்க
வழி சொன்னால், இப்போதே சட்டத்தை ரத்து செய்கிறேன்” என்று மன்னன் கூற,
இராமுவின் தந்தை “மன்னா, நாட்டில் விளைச்சல் அளவும் மக்கள் தொகையும்
சமமாக இருக்க வேண்டும் என்பது உண்மை தான். விளைச்சல் குறைவு என மக்கள்
தொகையை குறைக்க நினைப்பதை விட, மக்கள்தொகைக்கு ஏற்ற வண்ணம் விளைச்சலை பெருக்கலாமே? பயனற்று கிடக்கும் தரிசு நிலங்களையும், காடுகளையும்
திருத்தி விளைநிலங்களாக்கலாமே” என்று கூற, தன் தவறை உணர்ந்த மன்னன், உடல்
உழைப்பால் பயன்படமாட்டார்கள் என நினைத்த முதியவர்களின் அறிவுத்திறன்
நாட்டிற்கு மிகவும் அவசியம் என புரிந்துக் கொண்டு சட்டத்தை ரத்து செய்கிறான்.

இந்தக் கதையை அனைவரும் படித்திருப்போம். இதில் முதியவர்கள்
அறிவுடையவர்கள், அவர்களை உடல் திறனை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது
என்பது தான் கதையின் நீதி. சரி இளைஞர்களுக்கு இல்லாத அறிவுத்திறன்
முதியவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? அனுபவத்தினால் வருகிறது. அனுபவம்
என்றால் என்ன? பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு விஷயத்தை ஏற்கனவே ஒரு முறை செய்து பார்த்தவர்கள், அதில் தோல்வியோ வெற்றியோ, ஏற்கனவே செய்தவர்களுக்கு
புதிதாய் செய்தவர்களை காட்டிலும் அவ்விஷயத்தை குறித்து ஒரு புரிதல்
இருக்கும்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் என்ன செய்தால் வெற்றி கிட்டும் என்பதை விட
என்ன செய்தால் தோல்வியில் போய் முடியும் என புரிந்து எதை செய்யக் கூடாது
என சொல்வதே அனுபவசாலிகளுக்கு அழகு. குழந்தை பிறந்தால் என்ன கொடுக்க
வேண்டும் என்பதை விட என்ன கொடுக்க கூடாது என்பதில் தானே முக்கியத்துவம்
இருக்கிறது. ஏன் விவசாயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், எதுவுமே உங்களுக்கு
தெரியாது. அது பற்றி பாடமும் படித்ததில்லை. நிலமும் வயலும் தந்தால்
விளைச்சலை காட்ட முடியுமா நம்மால்? ஒவ்வொரு பயிரையும் எப்போது விதைக்க
வேண்டும், எவ்வளவு தண்ணீர் விட வேண்டும், எப்போது விட வேண்டும், என்ன வகை
உரமிட வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே விவசாயம் செய்தவர்கள் சொல்லாமல் ஒரு தலைமுறையால் செய்து விட முடியுமா?

நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் பாடங்களில் இருப்பது, அது
மருத்துவமோ பொறியியலோ அனைத்துமே ஏற்கனவே இருந்த ஒருவரின் அனுபவம் தானே? அனுபவம் மட்டுமே இங்கு அறிவு எனப்படும். அந்த அனுபவம் அனைவருக்கும்
சென்றடைய வேண்டும் என்பதற்காக புத்தகத்தில் எழுத்து வடிவமாக மாற்றப்பட்டு
பாடமாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது. அப்படி வெறும் பாடங்களை மட்டும்
படித்து முடித்து விட்டு 22 வயதில் எல்லாம் மூத்தவர்களை விட அறிவானவர்கள்
என நினைத்துக் கொள்கிறோம். என்ன போன தலைமுறையை விட இணையமும் மொபைலும் அதிகம் பயன்படுத்த தெரியும். வேறு எதுவும் சிறப்பாக சொல்வதிற்கில்லை.

அனுபவம் மிக்கவர் என்றால் நல்ல அறிவு படைத்தவர் என்று அர்த்தம். அனுபவம்
மிக்கவர் என்றால் வயதானவர் என்று அர்த்தம். அப்படி என்றால் வாழ்வில் எது
சரி, எது தவறு, எது தேவை, எது தேவையற்றது என பிரித்து பார்க்கும் அளவு
அறிவுடையவர் என்றால் வாழ்க்கையை முழுமையார் வாழ்ந்து முடித்த வயதான
அனுபவசாலி என்று அர்த்தம். அத்தகைய வயதானவர்கள் அசைவம் சாப்பிடுவதை
தவிர்ப்பர். அது தான் அவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும், உலகிற்கும்
நல்லது என்கிறார் வள்ளுவர்.

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: துறவறவியல்

அதிகாரம்: புலான்மறுத்தல் குறள் எண்:258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

உரை: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர் உயிரினடத்திலிருந்து
பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.

-கதிர் ராத்

453total visits.