கொங்கு நாடும் கதைச்சொல்லிகளும்

0
91

1985 களில் என் மூன்றாம் வகுப்பிலிருந்தே ஆண்டுக்கு ஒருமுறைச் சிவராத்திரியன்றுக் காங்கேயத்துக்குப் பக்கத்திலிருக்கும் ஆலாம்பாடி என்னும் ஊரில் இருக்கும் குலதெய்வக் கோவிலுக்கு என் வீட்டுப் பெரியோர்கள் என்னை அழைத்து வருவதுண்டு.

பதினைந்துக் கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அப்பிச்சி வீட்டுக்குப் போவதே நமக்கு ஏதோ பெருந்தொலைவு போல மகிழ்ச்சியாய் 28 என்ற பேருந்தில் போக வெகு ஆசையாக இருக்கும்போது, கிட்டத்தட்ட 70-80 கிலோமீட்டர் தொலைவில் அதுவும் இரண்டு மூன்றுப் பேருந்துகள் மாறி உடுமலை-தாராபுரம்-காங்கேயம் நகரங்களையும், உடுமலை முதல் மடத்துக்குளம்-கணியூர்-செலாம்பாளையம் (என் சின்ன மாமனார் ஊர்) வழியே அமராவதி பாய்ந்தோடிச் செழித்தப் பசுமைப் போர்த்திய வயல்களையும், வட்டமலை, ஊதியூர் மலை உள்ளிட்ட கோவில்களையும் பார்த்துக் கொண்டே புளியமரங்கள் சூழ் சாலையிற் செல்வது எவ்வளவு இன்பத்தைத் தரும் என்பதை இங்கே நான் விளக்கவேண்டியதில்லை.

எங்களின் குலதெய்வத்தின் பெயர் அண்ணன்மார். கொங்குநாடு என்றாலே அண்ணன்மார் அல்லது பொன்னர்-சங்கர் என்றப் பெயர்களை எல்லோரும் கேள்விப்பட்டிருக்கலாம். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாரை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றக் குறளின் பொருளைகொண்டு இவர்கள் ஏன் தெய்வமாகியிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.

கொங்குச் சமுதாயத்தில் பிறந்து வாழ்ந்தக் குன்றுடையான்-தாமரைநாச்சியார் என்றக் கணவன்-மனைவிக்கு ஒரே சமயத்தில் பிறந்த மூவர்தான் பொன்னர், சங்கர் மற்றும் தங்காயி என்னும் அருக்காணி நல்லத்தங்கம்.

இந்தக்கோவிலில் ஆண்டுக்கொருமுறைச் சிவராத்திரிப் பள்ளையத்தின் போது இரவு முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த அண்ணன்மார்களின் கதையை “உடுக்கையடித்துத் தெருக்கூத்துப் போல” நிகழ்த்துவார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீளும் இந்தக் கதையை ஒரே இரவில் முக்கியமான சிலநிகழ்வுகளின் உச்சக்கட்டக் காட்சிகளோடு நிகழ்த்தி முடித்தபின்னர் தான் பள்ளையம் படைத்துப் பூசை செய்வார்கள். மற்ற நாட்களில் மூன்று மாதங்களுக்கு இரவுநேரங்களில் உடுக்கையடிக் கலைஞர்களை வரவழைத்து பொருளுதவி, தங்க இடம், அரிதாரம் பூசிக்கொள்ள இடமொதுக்கிக் கொடுத்து, மண்/மணல் வாசலில்/திடலில் சாணம் தெளித்துக் கோலம்போட்டு வேப்பிலை, மாவிலையால் தோரணம் நாட்டி கதை நிகழ்த்தச் சொல்லிப் பக்தியோடு எங்கள் கொங்கு கிராமமக்கள் எல்லோரும் சுற்றிலும் உட்கார்ந்துக் கதைகேட்பதுண்டு.

உடுக்கையடிக் கதையில் பெரும்பாலும் புனைவுகள் மேலோங்கிக் கதை மாந்தர்களின் மேல் குறிப்பாகப் பெண் பாத்திரங்களின் மீது கழிவிரக்கம் எற்படுத்துமாறுதான் கதை ஒவ்வொரு நாளும் நகரும். தாமரைநாச்சியார் படும் இன்னல்கள் யாவும் தாம்படுவதைப் போன்றே நினைத்துக்கொண்டு எம்மக்கள் அழும் காட்சிகள் இன்றும் என்மனத்தில் இருக்கின்றன. ஒவ்வொருக் கலைஞரும் ஒவ்வொரு வடிவில் தமக்குத் தோன்றியதையெல்லாம் புனைந்துக் கதையோடுப் பின்னிச் சொல்லும் வல்லமையைக் கொண்டிருந்தார்கள். அதனால் அண்ணன்மார்கள் எங்களின் உணர்வுகளோடுக் கலந்தவர்களாக, ஏன் தெய்வநிலைக்கே உயர்ந்துவிட்டார்கள்.

கதைச் சொல்லிகள் எவரும் கவுண்டர் சாதியைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் கவுண்டர்களை நம்பிப் பிழைக்கவேண்டிய சூழல்கள் அவர்களுக்கு இருந்ததால், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகக் கதைகள் மாறியிருக்கின்றன என்பதை உணரமுடியும்.

கலைஞர் எழுதிய பொன்னர்-சங்கர் கதையை பழமை விரும்பிகளாக இருக்கும் இன்றைய சிலக் கொங்கு இளைஞர்கள் விரும்புவதில்லை. அண்ணன்மார்களைத் துளியளவும் குறைத்து மதிப்பிடாமல், கொங்கு வேளாளரின் மரபுக்குச் சிறிதும் இழுக்கு ஏற்படுத்தாமல், கதை நடந்த இடங்களுக்கு நேரிடையாகச் சென்றுக் களஆய்வுகள் செய்தும், பழைய உடுக்கையடிப் பாடல்கள், தமிழறிஞர்களின் ஆய்வறிக்கைகளைச் சான்றாகக் கொண்டும், ஒரு வரலாற்றுப் பதிவைப்போலக் கொண்டுசென்றவர் கலைஞர் என்பது எத்தனை இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.

ஐம்பத்தெட்டு வாரங்கள் (என் நினைவு) குங்குமம் இதழில் வெளிவந்தபோது கோவை மண்ணில் மட்டும் ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது என்பார்கள். என் நான்காம் வகுப்பிலேயே நான் நன்றாக தமிழை வாசிக்கும் திறன் பெற்றவனாயிருந்தேன்.

பாடப்புத்தகங்களில் வரும் கதைகளோடு, என் தந்தைக் கொணரும் கல்கண்டு, முத்தாரம், சாவி, கல்கி என்று எல்லாவற்றிலிருந்தும் கதைகளை நான் சத்தமிட்டு வாசிக்க என் பெரியவர்கள் லாந்தர் வெளிச்சத்தில் அமர்ந்தவாறுக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அந்தச் சமயங்களில் பொள்ளாச்சி-அங்கலக்குறிச்சி -சூலக்கல்-கோவை என்றுத் தெரிந்தவர்கள், உறவுகள் வீடுகளுக்கு எல்லாம் போய் வாங்கி வந்தக் குங்குமம் இதழ்களில் இருக்கும் கலைஞரின் அண்ணன்மார் வரலாற்றை மட்டும் வெட்டி எடுத்துப் பொள்ளாச்சி சக்தி பிரஸ்ஸில் (என் உறவினரின் அச்சகம்) கொடுத்து ஒட்டி ஒரேப் புத்தகமாக மாற்றிக் கொணர்ந்து வாசிக்கச் சொல்வார் ஆத்தா. கைகால் முகம் கழுவித் திருநீறுப் பூசிக்கொண்டுப் பகுத்தறிவுக் கலைஞரின் வரிகளைச் சத்தமிட்டு வாசிப்பேன். எங்கள் எல்லோருக்குள்ளும் பொன்னர் -சங்கரின் வீரமும், தங்காயியின் கனிவும், சொன்னசொல் மாறக்கூடாதென்ற தாமரைநாச்சியின் சூளுரையும் எங்கள் குருதியில் ஓடத்துவங்கும். சில இடங்களில் இரண்டுமுறைப் படிக்கச்சொல்லி சிரிக்கவோ அழுகவோ செய்வார்கள்.

ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டவன் போல அழுத்தம் திருத்தமாக வாசிப்பேன். சில இடங்களில் காதல், படுக்கையறைக் காட்சிகள் வரும்போதுத் தூக்கம் வருது சாமி.. நாளைக்கி ரவைக்கிப் படிச்சுக்கலாம் என்பார். அதை மூடி அதற்கெனத் தைத்த உறையில் வைத்துக் கொண்டு சென்றுப் பெட்டிக்குள் வைத்த பிறகுதான் தூங்கப் போவார் ஆத்தா.
பின்னாளில் என் ஆத்தா இறக்கும்போது அந்தப் புத்தகம் என் சித்தப்பா வீட்டில் இருந்தது. அங்கேப் போக்குவரவு இல்லையாதலால் இப்போது அது எங்கிருக்கிறது என்றுத் தெரியவில்லை.

உடுக்கையடிக் கதைகளில் கட்டிய மனைவியரைத் தம் தாயாரின் சூளுரைக்காகத் தீண்டாமல், அடிமைகளாக வைத்திருந்தார்கள் என்றும் இது வீரத்தில் ஒருவகைப் போலச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணன்மார் தந்தைவழி வந்த உறவுகள் செய்யும் சதிகளால் தான் போரில் தம்மை மாய்த்துக் கொள்கிறார்கள். ஆயினும் வேட்டுவக்கவுண்டர்களுக்கும், கொங்குக்கவுண்டர்களுக்கும் இதுபோன்றப் புனைவுக்கதைச் சொல்லிகள் தீராப்பகைமை ஏற்படுத்திவிட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

கதையில் ஒருசாராரை மட்டுமேப் புகழ்ந்து எதிரில் இருப்பவரை ஒருத் தீய வடிவாகவே மக்கள் முன் நிறுத்தவேண்டும் என்பதுக் கதைசொல்லிகளுக்கு கதை நிகழ்த்துமிடங்களில் இருந்த நிர்ப்பந்தமும் காரணமாக இருக்கலாம். இதை சிலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் நானறிவேன். ஆகவே கலைஞரை வாசிக்காமலேயே நாளைக்குக் கருத்துச் சொல்லப் போகின்றவர்களிடத்தில் என்னிடத்தில் விடை இல்லை.

எனக்குத் தெரிந்து ஐந்துவகைகளில் அண்ணன்மார் கதை நிகழ்த்தப்படுகிறது. “பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்” என்று எங்கெங்கோத் தோன்றும் நதிகள் நிறைவாகக் கடலினை அடைவதுப்போல கலைஞர்கள் நிறைவாக அண்ணன்மார்கதையின் உச்சக்கட்டக் காட்சியான “படுகளத்தை” (போர்க்களத்தில் தம்மையே மாய்த்துக்கொள்ளும் காட்சி) அடைவார்கள். அப்போதுதான் அவர்கள் “படுகளக்கண்ணி” என்ற வகைப்பாடலைப் பாடுவார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இரவு முழுவதும் அண்ணன்மாரை, அவர்களைப் பங்காளிகள் படுத்தியப் பாட்டை, அவர்கள் தூண்டிவிட்டதால் அண்டைநாடானத் தலையூரை ஆண்டுவந்த வேட்டுவ மன்னனின் காரணமற்றப் பகையை என்று நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருப்பார்கள் எம்மக்கள்.

எம்மக்களின் நெஞ்சத்தில் படுகளத்தில் அவர்கள் மாண்டுவிடுவார்கள் என்றுக் கதையில் சொல்லும்போதே இளகியமனத்தோர் மயங்கிச் சாய்வார்கள்.அதோடு உடுக்கையடியும், ஓங்காரம் மிகுந்த அந்த அழுகைப் பாடலும் நிறைகுறையறியாத என்னையே அழவைக்குமென்றால், வேறு எவ்வுலகையும் அறிந்திராத மக்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். அவ்வாறுக் கீழேச் சாய்கின்றவர்களை அண்ணன்மாரின் உடலங்களாகக் கருதி வெண்கோடிப் போர்த்திக் கிடத்தி, அண்ணன்மாரின் உடன்பிறந்தத் தங்காயியாக உருவகம் செய்தக் கன்னிப்பெண் ஒருத்தியின் தலைமேல் புனிதநீர் கொணர்ந்து, உடுக்கையடியுடன் “ஐயோ பெரியண்ணா… எங்க சின்னண்ணா….நீங்க மானுடங் காத்தவுங்க…மண்ணக்கட்டி ஆண்டவுங்க…சீம காத்தவுங்க..சிறப்பாப் பொழச்சவுங்க.. இப்படி மாண்டுபோயிட்டீங்களே சாமீ…உங்கத் தனிப்பிறவி தங்காயி நான் என்ன செய்வேன் ” என்றுப் பாடியழுது நீர்தெளிக்க, விழுந்த படுகளங்கள் ஒவ்வொருவராகப் பொழுது கிழக்கில் உதிக்கும் முன்னர் எழுப்பிவிட ஆலாய்பறப்பார்கள். எழுப்பமுடியாத படுகளங்கள் உயிரற்றுப் போன வரலாறுகளும் நடந்திருக்கிறது.
சரி நான் சொல்லவந்ததைச் சொல்லிவிடுகிறேன்.

இப்படிப்பட்டப் புனைவுகளால் ஆலாம்பாடியில் பிறந்து வாழ்ந்து மறைந்த எங்கள் மூதாதையரில் ஒருவரான பெரியசாமி அல்லது பெரியண்ணனின் நடுகல் வழிபாடு இன்று அண்ணன்மார்கள் வழிபாடாகக் கோவிலாகவே மாறிவிட்டது என்று நினைக்கிறேன். என் பால்ய வயதில் கோவிலுக்குச் செல்லும்போது நான் பார்த்தக் காட்சியை விளக்குகிறேன்.

ஒரு ஈரோடு மண்ணுக்கே உரிய மண்ணும்-ஓடைக்கல்லும் சேர்த்துக் குழைத்துக் கட்டிய மதிலினில் உள்ளே ஓரத்தில் வளையோடு போட்டு வேய்ந்த ஒரு வீடும், ஒற்றைக் கதவு கொண்ட நடையும், பரந்துக் கிடந்த வெற்றிடத்தின் நடுவில் இல்லாமல், தென்மேற்கு மூலையில் இருந்த ஒரே ஒரு சிறு குகை போல இருந்தச் சுண்ணாம்புச் சுதையில் வைக்கப்பட்டிருந்த நடுகல் தான் தெய்வம். இவரைத்தான் பெரியண்ணன் என்றார்கள்.

அதே ஊரின் இன்னொரு மூலையில் சின்னண்ணுக்குக் கோவில் இருப்பதாகவும், அங்கே செல்பவர்கள் யாரும் பெரியண்ணன் கோவிலுக்கு வரக்கூடாது என்றும் சொல்லிக்கொண்டிருந்தனர். அதெப்படிக் கதையில் அண்ணனுக்காக (பொன்னர்) உயிர் துறக்கும் சங்கரும், தம்பிக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் பொன்னரைப் பற்றித் தானேக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கேப் பிரிந்திருக்கிறார்களே எப்படி என்று நான் நினைப்பதுண்டு?

பின்னாளில் புதிதாகக் கோவில் கட்டப்பட்டப் பிறகு பெரியண்ணன்-சின்னண்ணன்-தங்காயியாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள். புதிய தெய்வவடிவங்கள் இன்றுப் பூசைப் பெற்றுக்கொள்கின்றன. எங்களின் முன்னோர்கள் வேறு பெயரில் வழிபடப்படுகிறார்கள். இதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

சிவன்மலையைச் சுற்றி அமைந்த எட்டுத்திக்குக் காளிகளில் ஒருத்தி உலகம்மை. அவள்தான் எங்களின் முன்னோர்களில் ஒருத்தியென்று என் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் யாருக்குத் தெரியுமென எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையான பெரியண்ணன் யாரென்றேத் தெரியாமல் புதிது புதிதாகக் கொணரப்பட்டத் தெய்வங்களை நிர்மாணம் செய்தாயிற்று. தெய்வங்களின் மொழிகூட இப்போதுத் தமிழ் இல்லை.

ஸ்ரீ அண்ணன்மார் ஸ்வாமி மற்றும் ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமிகளுக்குத் தெரிந்த சமஸ்கிருதத்தில் எங்கள் குறைகளை மொழிபெயர்த்துச் சொல்ல ஆட்களையும் சேர்த்துக்கொண்டோம். அவர்கள் அன்பு நாமதேஷ்யா ஆயுர் -ஆரோக்ய-குல-சம்பத்தானாம்-என்று மொழிபெயர்ப்பார்கள். நாங்களும் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்துவிட்டு எங்கள் குறைகளைப் பெரியண்ணனிடம் சொல்லிவிட்டு வருவோம். ஆனால் பெரியண்ணனுக்குப் புரியுமாவெனத் தெரியவில்லை…

இனிக் காலத்துக்கும் வலியக் கவுண்டர்களுக்கு அஞ்சிப் புனைந்துக் கதைச்சொல்லிகள் செப்பியவைகள்தான் வரலாறுகள் என்று ஆகிவிடுமென்று நினைக்கிறேன்.

-முனைவர். அன்புச்செல்வன்

1292total visits,3visits today