பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 1

0
180

காளையும் கரடியும் பணமுதலைகளும் – 1

ஷேர் மார்க்கெட் என்று சொன்னாலே காத தூரம் ஓடுபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் பகுதி உங்களுக்காகத்தான். ஒரு விசயத்தை வேண்டாம் என்று முடிவு செய்யும் முன் அதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது. பொத்தாம் பொதுவாக அது சரியில்லை இது சரியில்லை, இது நொட்டை அது நொள்ளை என்று குறை கூறுபவர்களிடம் அதைப் பற்றிய விளக்கம் கேட்டால் நமக்குக் கிடைக்கும் பதில் ஜீரோ மட்டுமே! ஆகவே இதனை நாம் வேண்டாம் என்று முடிவெடுக்கும் முன் தெரிந்து கொள்வோமா?

முன் குறிப்பு :

இது முழுக்க முழுக்க பாமரனும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு எழுதப்படும் கட்டுரையே. ஆகவே இந்தப் பகுதியில் புள்ளி விவரப் புலிகள் பதுங்கியே இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு கம்பெனி எப்படி உருவாகிறது?

கார்த்தியும், பார்த்தியும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட நண்பர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றனர். ஆக இரண்டு லட்ச ரூபாய் அவர்களின் முதலீடு. அந்த வருடம் 1980 என்று வைத்துக் கொள்வோம். வியாபாரம் அவர்களின் உழைப்பினால் நன்கு வளர்ந்து இன்றைய தேதிக்கு இரண்டு லட்சம் கோடி என்று வைத்துக் கொள்வோம். ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகுற மாதிரியில்லை இது. முப்பத்தி நான்கு வருட உழைப்புதான் இதில் பிரதானம். இவர்கள் முதலீடு செய்த இரண்டு லட்சம் என்பது ஒரு மூன்றாம் பார்ட்னர் மாதிரியே.

ஆயிற்றா? இந்த இரண்டு லட்சம் கோடிக்கு வருடா வருடம் நிகர லாபமாக மட்டும் 200 கோடி சம்பாதிக்கின்றனர். இப்போது இவர்களிருவரிடமும் ‘அடுத்தது என்ன?’ என்கிற ஒருமித்த கேள்வி கட்டாயம் தோன்றும். அதுதான்,

இந்த வருமானத்தை ரெட்டிப்பாக்குவது எப்படி?

இதில் ஒரு விதியை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். வருடா வருடம் கிடைக்கும் 200 கோடியை ரெட்டிப்பாக்குவதற்கு, அவர்களுக்கு இன்னொரு இரண்டு லட்சம் கோடி தேவை. அதற்காக அவர்கள் மறுபடியும் ஆளுக்கொரு இரண்டு லட்சம் போட்டு முப்பத்திநாலு வருடம் பின்னால் போக முடியாது. இப்போதே வேண்டும். அதற்கு அவர்கள் என்னென்ன செய்யலாம் என்ற கேள்வி வந்தவுடன் நம் மனதில் உதிக்கும் ஐடியாக்கள் என்னவாக இருக்கும்? வாங்க பார்க்கலாம்.

1)   கைமாற்றாக வாங்கலாம்.

2)   சொத்துக்களை அடமானம் வைக்கலாம்.

3)   வங்கிகளில் கடன் கேட்டு அப்ளை செய்யலாம்.

4)   கொள்ளையடிக்கலாம்.

5)   புதிய பார்ட்னரை சேர்த்துக் கொள்ளலாம்.

6)   இந்த எண்ணத்தையே கைவிட்டுவிடலாம்.

முதல் பாய்ன்ட். கைமாத்தாக இரண்டு லட்சம் கோடி என்பதெல்லாம், காமெடி பண்ணாதிங்க பிரதர் என்று பேசத் தெரிந்த எந்தக் குழந்தையும் சொல்லிவிடும்.

செகன்ட் பாய்ன்ட். ரெண்டு லட்சம் கோடிக்கு அடமானம் வைக்க அவர்களிடம் சொத்துக்கள் வேண்டும். அடுத்தவன் சொத்தை வைக்க அவர்களுக்கு உரிமை கிடையாது என்கிற அடக்குமுறை சட்டம் நம் நாட்டில் இன்னும் இருக்கிறது என்பதை ஞாபகம் கொள்க. அப்படியே அவர்களிடம் இரண்டு லட்சம் கோடிக்கு சொத்துக்களிருந்தாலும், தேய்மானம், வண்டிச்சத்தம் போக அவர்களுக்குக் கிடைப்பது அதில் நாற்பது சதவிகித அமவுன்ட்டே. ஆகவே இந்த பாய்ன்ட் ஸ்ட்ரைக்ட் அவுட்.

மூன்றாவது பாய்ன்ட். நேர்மையாக கடன் கேட்டு வங்கிகளில் முறையிடலாம். ஆனால், இங்கேதான் நாம் RBI அதாவது ரிசர்வ் வங்கி தனது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கொள்கையை கடைபிடிக்கிறது என்பதை உணர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரு சாமானியன் அதாவது ‘ரெசிடென்ட் இண்டிவிஜுவல்’ தனக்கு கடன் வேண்டும் எனக்கேட்டு வங்கியில் விண்ணப்பிக்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும், அவன் இரண்டு வழிகளில்தான் தனது கடனை பெற முடியும்.

1)   பட்டியலில் உள்ள நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.15,000/-க்கும் மேல் பெறுபவனாக இருக்க வேண்டும்.

2)   முறையாக லைசன்ஸுகள் பெற்று தனது தொழிலை ரெஜிஸ்தர் செய்து தொழில் நடத்துபவனாகவும் அதில் வரும் வருமானத்திற்கு  கடந்த மூன்று வருடங்களாக வரி கட்டுபவனாகவும் இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் இல்லாதவன் வங்கியில் கடன் வாங்க முடியாது. அல்லது விவசாயியாகவோ, சொந்த வீடோ இருக்க வேண்டும். அப்போதும் நிலத்தின் மீதோ வீட்டின் மீதோதான் கடன் கிடைக்கும்.

மீண்டும் ஒரு யூடர்ன் போட்டு மூன்றாவது பாய்ண்டிற்கு திரும்புக. இவ்வளவு வழிமுறைகளிருக்கையில் கார்த்தியும் பார்த்தியும் முறையாக தனது வியாபாரத்தை ரெஜிஸ்தர் செய்தே மேற்கூறிய இரண்டாவது பாய்ன்டை நிறைவு செய்கிறவர்களாகவே இருந்தாலும், ஒரே வங்கியில் அவ்வளவு கடன் கிடைக்காது. கிடைத்தாலும் அவர்களது சொத்து மதிப்பு மற்றும் நிறுவன மதிப்பு இவற்றின் இன்றைய மதிப்பில் ஐம்பது சதவிகிதம்தான் கிடைக்கும். மீதிக்கு மீண்டும் ஒன்னு ரெண்டு மூனு என்று பாய்ன்டுகளை எழுதி ஆட்டத்தை மீண்டும் ஆட முடியாது.

அப்படியே எதாவது ஒரு மாரியம்மன் இந்தியன் பேங்கில் கடன் கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். மாதா மாதம் தவணையும் வட்டியும் அடைத்து அசலையும் அடைத்து முடிப்பதற்குள் நிறுவனத்தில் ஏதாவது இயந்திரக் கோளாறு, தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை, கோடவுனில் தீவிபத்து என்று ஏதாவது வந்து விட்டால் (இதெல்லாம் ஒரு நிறுவனம் அன்றாடம் சந்திக்கும் சகஜமான சாதரணமான பிரச்சினைகள்) அசலை வங்கியில் அடைத்து முடிப்பதற்குள் கம்பெனி திவாலாகி கார்த்தியும் பார்த்தியும் மீண்டும் முப்பத்திநாலு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டி வரும். ஆகவே இந்த பாய்ன்டும் ஆகா…து!

நான்காவது பாய்ன்ட். இதெல்லாம் எதுவும் வேண்டாம். கொள்ளையடிக்கலாம் என்றால் அவர்கள் ஆளுக்கு இரண்டு லட்சம் போட்டு நேர்மையாக தொழில் தொடங்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே! இவ்வளவு கஷ்டப்பட்டு முப்பத்துநாலு வருடம் உழைத்து அதை மீண்டும் உருவாக்குவதற்கு பதிலாக, ஸ்வார்டு ஃபிஸ், ஓசன் லெவன், ட்வெல்வ், தர்ட்டீன் மற்றும் சிவாஜி, மங்காத்தா படங்களை டாரன்டில் சல்லிசாக டவுன்லோடு செய்து விடிய விடிய பார்த்து இருட்டு கோடவுனில், ஒரே ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் பிளான் போட்டு கோடான கோடி வகையறா ஐட்டம் டான்ஸ் ஆடி, விடியக்காலையில் முகத்தில் மரு வைத்து மாறுவேஷம் போட்டுக் கொண்டு பேங்க் பேங்காக கொள்ளையடிக்கக் கிளம்பியிருக்கலாம். ஆனால், அது நமது அகில இந்திய அடக்குமுறைக் கொள்கையின்படி நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் ஐடியா என்பதால் அடுத்த பாய்ன்டுக்கு விடு  ஜூட்….!

ஐந்தாவது பாய்ன்ட். கார்த்தியும் பார்த்தியும் சேர்ந்து இரண்டு லட்சம் கோடி அதாவது நிறுவனத்தை வேண்டாம் என்று பிரித்தால் ஆளுக்கு சரிபாதி. அதுதான் அவர்களது ஒப்பந்தம். இப்போது புதிதாக மூர்த்தி என்பவரை கம்பெனியின் பார்ட்னராக சேர்க்கிறோம். அவர் மட்டுமே இரண்டு லட்சம் கோடி முதலீடு செய்கிறாரென்றால், அவர் மட்டும்தான் இவர்களது கம்பெனியின் முதலாளி ஆக முடியும். அப்புறம் இவர்கள் இருவரும் பணம் முதலீடு செய்த வெறும் பார்ட்னர்ஸ் மட்டுமே. ஆகவே ஓனர்ஷிப் பறிபோய்விடுமாதலால் பார்ட்னர் சேர்த்துதல் ஆகாது. சரி வேண்டாம். மூர்த்தியிடம் ஒரு லட்சம் கோடியும், கீர்த்தி என்கிற இன்னொரு புதிய பார்ட்னரிடம் ஒரு லட்சம் கோடியும் பெற்று சேர்த்துக் கொள்ளலாம் என்றால், அதிலும் சில மறைமுக சிக்கல்கள் உள்ளன.

அதாவது, கார்த்தி, பார்த்தி, மூர்த்தி, கீர்த்தி இந்த நால்வரில் யாராவது ஒருவர் இன்னொருவருடன் கூட்டு சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொண்டால், (இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்) கார்த்தியிடம் கீர்த்தி ரகசியமாக பேசி, நாம் இருவரும் ஒன்றாகிவிடலாம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டால், ஒரு லட்சம் கோடியும், ஒரு லட்சம் கோடியும் ஒன்று சேர்ந்து, இரண்டு லட்சம் கோடியாகி, அவர்களிருவரும் கம்பெனியின் ஏகோபித்த ஓகோபித்த ஓனர்களாய் மாறிவிடுவார்கள். அப்புறம் இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களின் நிலை சேடு ஸ்மைலிதான் L

ஆகவே இப்படியாக பார்ட்னர்ஷிப் சேர்த்துவதில் பிரச்சினைகள் இருப்பதால் இந்தப் பாய்ன்டையும் ஒதுக்கிவிடலாம். அல்லது பின்னர் சீர்தூக்கிப் பார்க்கலாம். இப்போது பார்த்தவரைக்குமே போதுமானது என்பதால் ஆறாவது பாய்ன்டிற்கு செல்லலாம் என்றால், அதற்கெதற்கு இத்தனை யோசனைகள். பேசாமல் இப்போது கிடைக்கும் 200 கோடியை மட்டுமே வைத்துக் கொண்டு செவ்வனே வாழலாம் என்றால் கம்பெனியின் குட்வில் அதாவது நன்மதிப்பு நற்பெயர் கெட்டுவிடும்.

வேறென்ன செய்யலாம்? நாளை பார்ப்போமா?

-கார்த்திகேயன் மணி

514total visits,1visits today