பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2

0
120

காளையும், கரடியும் – பண முதலைகளும் – 2

நாம் இப்போது கார்த்திக்கும் பார்த்திக்கும் என்ன ஐடியா தரலாம்?

நமக்கு இரண்டு லட்சம் கோடி பணமும் வேண்டும். அதைக் கடனாகவும் வாங்கக்கூடாது. அதற்கு வட்டியும் கட்ட மாட்டோம். பார்ட்னர்ஷிப்பும் சேர்த்தக் கூடாது. வேறு என்னதான் செய்வது?

ஒரே ஒரு வழிதான்!

அது, பார்ட்னர்ஷிப் நல்ல யோசனைதான். ஆனால், பார்ட்னர்களின் முதலீடு இவர்களது முதலீட்டுக்கு சமமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கார்த்தியும் பார்த்தியும் சேர்ந்து இரண்டு லட்சம் கோடி வைத்திருகிறார்கள் அல்லவா? அதை 52 சதவிகிதமாக கணக்கில் வைத்துக் கொள்வோம். இனி வரப்போகும் மொத்த பார்ட்னர்களின் முதலீட்டுத் தொகையின் சதவிகிதம் 48-க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த புதிய பார்ட்னர்களை மிகச் சிறிய அளவிலான முதலீடுகளோடும், அவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் அவசியம்.

இப்படி பொது மக்களிடம் முதலீட்டை பெறுபவர்கள் பொதுத்துறை நிறுவனமாக இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே பொதுமக்களை தனது பார்ட்னர்களாக அதாவது பங்குதாரர்களாக ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆயிற்றா? அதிலும் ஒரு அதி முக்கிய சிக்கல் இருக்கிறது!

ஆம். அதை கார்த்தியும் பார்த்தியும் நேரடியாக சென்று எந்த குப்பனிடமும் சுப்பனிடமும் தனது நிறுவனத்தின் பங்குகளை விற்க முடியாது. இந்த இடத்தில்தான் செபி (Securities Exchange Board of India) இதற்கான விதிமுறைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே பொதுமக்களிடம் பங்குகளை விற்று நிதி திரட்டுவதை செபி மூலமாகத்தான் செய்ய முடியும்.

எப்படி? வாருங்கள் பார்க்கலாம்…

செபியிடம் கார்த்தியும் பார்த்தியும் சென்று தங்களைப் பற்றிய விவரங்களை வாய்வழியாகச் சொல்லி எங்களுக்கு இந்த உதவியை செய்து தாருங்கள் என்று நேரடியாகக் கேட்க முடியாது. அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:

 1. தனது நிறுவனத்தை தனியார்துறை நிறுவனத்திலிருந்து, பொதுத் துறை நிறுவனமாக மாற்ற வேண்டும்.
 2. அதற்கு நிறுவனத்தில், ஏ.ஜி.எம் (Annual General Meeting) நடத்தியிருக்க வேண்டும்.
 3. அந்தக் கூட்டத்தில் மினுட்ஸ் (Minutes) பாஸ் செய்து அனைவரும் கையெழுத்திட்டு கம்பெனி செக்ரட்டரியின் ஒப்புதலும் இருக்க வேண்டும்.

இந்த மூன்றுடனும் இன்னொன்றையும் இணைக்க வேண்டும். மன்னிக்க. அந்த இன்னொன்றோடுதான் இந்த மூன்றையும் இணைக்க வேண்டும். அதன் பெயர்தான்,

ரெட் ஹியரிங் ப்ராஸ்பெக்டஸ் (Red Herring Prospectus):

ஒரு சாமானியன், தனக்கு கடன் வேண்டும் என்று வங்கியில் அப்ளை செய்கிறான் என்றால், அவன் என்னென்ன செய்ய வேண்டும்? தான் இன்னார்தான், இன்ன இடத்தில் இவ்வளவு காலமாக வசிக்கிறேன். இன்னாரின் மகன் / மகள், இன்ன கம்பெனியில் இன்ன வேலை பார்க்கிறேன். இவ்வளவு சம்பளம். இவ்வளவு காலமாக குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என்று நமது ஜாதகத்தையே மொத்தமாக அதற்குரிய ஆவணங்களின் நகல்களோடு இணைத்து விண்ணப்பித்தால், BV, RV, IV என்று மூன்று நிலைகளில் உங்களைப்பற்றி தீர விசாரிப்பார்கள். அதென்ன BV, RV, IV.

BV = BUSINESS VERIFICATION

RV = RESIDENT VERIFICATION

IV = INCOME VERIFICATION

இது போக CIBIL ஸ்கோர் வேறு 700-க்கு மேற்பட்டு இருக்க வேண்டும். சிபில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இவ்வளவு படிகளைக் கடந்து பத்து நாள் முதல் ஒரு மாதத்திற்குள்தான் வங்கி தங்களுக்கு கடன் அளிக்கும்.

ஒரு சாமானியன் கடன் வாங்கவே இத்தனை ஃபார்மாலிட்டீஸ் மற்றும், விசாரணைகள் இருக்கிறதே, இரண்டு லட்சம் கோடியை பொது மக்களிடமிருந்து வாங்கப் போகும் ஒரு நிறுவனத்திற்கு ஃபார்மாலிட்டீஸ் என்னென்ன இருக்கும்? அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்?

பெரிதாக ஒன்றுமில்லை. குறிப்பிட்ட நிறுவனத்தை கார்த்தி மற்றும் பார்த்தியான நாங்கள் இருவரும் சேர்ந்து 1980-ல் ஆளுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்து என்று ஆரம்பித்து, இன்றைய தேதி வரை முப்பத்திநான்கு வருடங்களுக்கும், என்னென்ன கணக்கு வழக்குகள் உள்ளனவோ அத்தனையையும் சேர்த்து அந்த நிறுவனத்தில் உள்ள சிறிய குண்டூசிக்குக் கூட கணக்கு காட்டி ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த அறிக்கையின் பெயர்தான் ரெட் ஹியரிங் ப்ராஸ்பெக்டஸ் (Red Herring Prospectus). அம்மாம்பெரிய அறிக்கை அது!

அதனை செபியிடம் சமர்ப்பித்தால், ஆறு முதல் அறுபது பேர்கள் கொண்ட விசாரணைக்குழு அந்த நிறுவனத்திற்கு வந்து, தங்கி, அவர்கள் அளித்த அறிக்கையின் விவரங்கள் எல்லாம் சரியானதுதானா என்று ஒவ்வொரு டேபிளாக அமர்ந்து, ஒவ்வொரு ஆவணங்களின் ஒவ்வொரு பக்கங்களையும் வரிக்கு வரி விடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி ஆராய்ந்து, அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை பரிபூரணமாக திருப்தியளித்த பின், அந்த நிறுவனத்தை பொதுமக்களிடம் பங்குகளை விற்பதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் காலஅளவு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை.

இனிஷியல் பப்ளிக் ஆஃபர் (IPO):

செபி தனது ஒப்புதலை அளித்தபின்பும் அந்த நிறுவனம், நேரடியாக தனது பங்குகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அதன் படிநிலைகளை நாம் பின்வருமாறு காண்போம்.

 1. பங்குகளை மேல்விலை கீழ்விலை (Price Band) வகுக்க வேண்டும்.
 2. தகுந்த ரெஜிஸ்தராரிடம் இந்த வேலையை ஒப்படைக்க வேண்டும்.
 3. ஷேர் புரோக்கர்கள் மூலமாக அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதை ரெஜிஸ்தரார் பார்த்துக் கொள்ளும்.
 4. பொதுமக்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்காக விண்ணப்பிக்க வேண்டிய தேதியை அறிவித்து ரெஜிஸ்தரார் விளம்பரம் செய்வார்.
 5. அந்த விண்ணப்பங்களை ரெஜிஸ்தரார் எல்லா வகையான ஷேர் புரோக்கர்களிடமும் அனுப்பி வைத்திருப்பார்.
 6. விண்ணப்பிக்க வேண்டிய காலம் முடிவதற்குள் ஷேர் புரோக்கர்ஸ் அந்த விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்கள் மற்றும் வரைவோலையோடு பொதுமக்களிடமிருந்து பெற்று ரெஜிஸ்தராரிடம் அனுப்பி வைப்பார்கள்.
 7. அவர்கள் அதனை சரிபார்த்து பங்குகளை தக்க விண்ணப்பங்களுக்கு ஒதுக்கீடு (Allot) செய்வார்கள்.
 8. அலாட் ஆன பங்குகள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளிலிருந்து 27 நாட்கள் கழித்து விண்ணப்பித்தவர்கள் கணக்கிற்கு வந்து சேரும்.

இதுவரை நடந்த செயல்முறைகள் எல்லாமே முதன்மை சந்தை (Primary Market) எனப்படும். ஒரே குழப்பமா இருக்கிறதல்லவா? அப்போ எப்பத்தாண்டா நான் ஷேர் வாங்கி விப்பேன் என்று மண்டை காய்கிறதா? இதனையே புரியும்படி அடுத்த பகுதியில் பார்ப்போமா…

-கார்த்திகேயன் மணி

முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

https://kalakkaldreams.com/lets-know-about-stock-market-part-1-by-kama/

575total visits,1visits today