பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் -3

0
72

காளையும் கரடியும்பணமுதலைகளும் – 3

சென்ற பகுதி வரை நாம் பார்த்தது Primary Market.  அதில் ஒரு கம்பெனியிலிருந்து வெளியாகும் பங்குகளை நேரடியாக வாங்கும் / கம்பெனி நேரடியாக மக்களிடம் தங்களது பங்குகளை கொண்டு செல்வது பற்றி பார்த்தோம். இதில் ஒரு விசயத்தை நாம் உணர்ந்திருப்போம். அந்தப் பங்குகளின் விலை. அதை நாம் நிர்ணயம் செய்ய (Bidding) முடியாது. கம்பெனி நிர்ணயிக்கும் விலையில் நாம் விண்ணப்பித்து பெறுகிறோம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு 27 நாட்கள் கழித்து அந்த பங்குகளை அலார்ட் செய்யப்பட்டிருந்தால், குறுஞ்செய்தி மூலம் தகவல் வரும். அதற்கடுத்த நாள் அவர்களது டீமேட் கணக்கில் அந்தப் பங்குகள் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கும். அதாவது Secondary Market. அது கீழ்கண்டவாறு அதன் விலைகள் நொடிக்கொருமுறை மின்னி மின்னி மாறிக் கொண்டிருக்கும்.

விண்ணப்பித்து பங்குகள் அலார்ட் ஆகாதவர்களுக்கு குறுஞ்செய்தி 27ஆம் நாள் வராது. குறுஞ்செய்தி வரவில்லையென்றால் பங்குகள் அலார்ட் ஆகவில்லை என்று அர்த்தம். அவர்கள் பங்குகளுக்காக விண்ணப்பித்திருந்த அமவுன்ட் Warrant ஆக தபாலில் வந்து சேரும். வாரன்ட் என்பது கிட்டத்தட்ட டிமான்ட் டிராப்ட்டை போன்றது. அதனை வங்கியில் அவரது கணக்கில் செலுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது ப்ரைமரி மார்க்கெட்டில் அவைலபிளாக உள்ள புதிய IPO application – களை நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள https://www.nseindiaipo.com/issueforms/html/ இந்த இணைப்பை கிளிக்கலாம்.

Demat – Dematerialisation

ஓகே. நடுவில் நாம் சென்ற பாராவில் டீமேட் என்ற ஒரு பதத்தைப் பார்த்தோம் அல்லவா? அதென்ன டீமேட்?

அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி.

ஒரு ரெனால்ட்ஸ் பேனா இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதை அந்த ரெனால்ட்ஸ் கம்பெனியில் இருந்து மட்டும்தான் தயாரிக்க முடியுமா?

யார் வேண்டுமானாலும் ரெனால்ட்ஸ் பேனாவை தயாரிக்கலாம். எப்படி? அதற்கு ஒரு உருவம் இருக்கிறது. நம்மால் அதன் அளவுகளையும் நீளங்களையும் உட்பொருட்களையும் எளிதாக கண்டறிந்து அதைப் போன்றதொரு போலியினை Fake Reynolds Pen-ஐ உருவாக்க முடியும்தானே? இப்படி கண்ணால் காண முடிகின்ற, கையால் தொட்டு உணரக் கூடிய எந்த ஒரு பொருளுக்கும் டூப்ளிக்கேட் வடிவம் கொடுக்க முடியுமல்லவா? அதேதான், அதன் போலியினை உருவாக்க முடியுமல்லவா? இதனால் என்ன பெரிய லாபம் கிடைத்து விடப் போகிறது என்று அசட்டையாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அந்நியன் டயலாக்தான் இதற்கு சரியான விளக்கம். அஞ்சு பைசா திருடினால் தப்பொன்றும் கிடையாது. அஞ்சு கோடி பேர் அஞ்சஞ்சு முறை அஞ்சு பைசாக்களை திருடினால் அது மிகப்பெரிய கொள்ளையல்லவா!

இப்போது கிட்டத்தட்ட எதற்காக இந்த விளக்கம் என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

ஆரம்பத்தில், நிறுவனத்தின் பங்குகள், சர்ட்டிபிகேட்டுகளாகத்தான் மேற்கண்டவாறு இருந்து வந்தன. காலையில் ஒன்பது மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் பங்குகளை வாங்கி விற்பவர்கள் கூடுவார்கள். அங்கே ஒரு மேடையும், கரும்பலகையும் இருக்கும். மணியடித்து மார்க்கெட்டை ஆரம்பிப்பார்கள். குறிப்பிட்ட பங்குகளை விற்பவர்கள் அதன் ஆரம்ப விலையைச் சொல்லி ஏலத்தை ஆரம்பிப்பார்கள். அதற்கு மேல்விலை கோரி பங்குகளை விற்பதுவும் வாங்குவதுமாகத்தான் பங்குச்சந்தை இயங்கி வந்தது. ஆனால், நாட்டில் போலி சர்ட்டிபிகேட்டுகளின் புழக்கம் அதிகப்படியாக இருந்து வந்ததைக் கண்டறியப்பட்டது. உருவம் என்று ஒன்று இருந்தால்தானே அதற்கென போலிகளை உருவாக்க முடியும் என்று நினைத்த SEBI – Securities Exchange Board of India டீமேட் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. டீமேட் (Demat) என்றால், உருவமில்லாத எலெக்ட்ரானிக் மெட்டீரியல் என்று பொருள்.

இந்த வகையில் இவை அறிமுகப்படுத்தப்பட்ட பின், பங்குகளை வாங்க வேண்டும் என்றால், எதாவது ஷேர் புரோக்கர்களிடம் நமது KYC – Know Your Client ஆவணங்களை சமர்ப்பித்து அக்கவுன்ட் ஒன்றினை ஆரம்பித்துக் கொள்ளலாம். அதில் நாம் தேவையான அளவு பணத்தினை ட்ரான்ஸ்பர் (Pay-in) செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுகளில் நமக்கு தேவையான பங்குகளை வாங்கும்போது அந்தப்பணம் அக்கவுன்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். வாங்கிய பங்குகளும் அக்கவுன்டில் வரவு வைக்கப்படும். ஆனால் அவை எவற்றையும் உருவமாக காண முடியாது. வெறுமனே எண்கள்தான்.

பங்குகளை வாங்கினாலோ விற்றாலோ அதன் விபரங்கள் உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதுபோக உங்கள் மெயில் அக்கவுன்டிற்கு அந்த செய்திகள் விபரமாக கான்ட்ராக்ட் நோட் (Contract Note) அல்லது டிஜிடல் கான்ட்ராக்ட் என்ற பில்லாகவும் அனுப்பப்படும். ஆரம்பத்தில் இந்த பில்கள் தினசரி கொரியரில் அனுப்பப்பட்டு வந்தது. இப்போது இந்திய காடுகளையும் மரங்களையும் காப்பதற்காக Save Tree என்ற ஆப்சனை டீமேட் அக்கவுன்டை ஆரம்பிக்கும்போதே டீபால்ட்டாக டிக் செய்து, கொரியர் அனுப்புவதை ஷேர் புரோக்கர்கள் நிறுத்திக் கொண்டனர்.

அதெல்லாம் சரி. எவ்வளவு தெளிவாகக் கூறினாலும், ஒருசிலர் என்னிடம் மாற்றமேயில்லாமல் ஒரு கேள்விகளை கேட்பதுண்டு. அது

“எங்கிட்டத்தான் பேங்க் அக்கவுன்ட் இருக்கே, அப்புறம் எதுக்கு டீமேட் அக்கவுன்ட்? பேங்க் அக்கவுன்ட்லயே ஷேர் வாங்கிக்கலாம்ல?”என்பார்கள்.

அதாவது நண்பர்களே, வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், அதனை எடுக்கவும் மட்டுமே முடியும். அது பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே. எப்படி பணம் சேமிக்கவும், சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கவும் வங்கிச் சேமிப்புக் கணக்கோ, அதேபோலத்தான் டீமேட் அக்கவுன்டும். ஆனால், டீமேட் அக்கவுன்டில் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது.

ஆம், அதற்கென Trading account என்று ஒரு அக்கவுன்ட் தேவை. டிரேடிங் அக்கவுன்டில் பங்குகளை வாங்கலாம். விற்கலாம். ஆனால், வாங்கிய பங்குகளை சேமித்து வைப்பதற்குத்தான் டீமேட் அல்லது DP – Depositary Participant account.

தெளிவாகச் சொல்வதானால், டீமேட் கணக்கினை ஆரம்பிக்கும்போதே டிரேடிங் கணக்கும் சேர்த்தேதான் ஆரம்பிக்கப்படும். இரண்டிற்கும் எண்கள் வேறு வேறு. ஆனால், இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. டிரேடிங் அக்கவுன்டில் பங்குகளை வாங்கி, டீமேட்டில் ஹோல்ட் செய்து கொள்ளலாம். பின்னர் அதனை விற்க வேண்டிய சமயத்தில் அந்தப் பங்குகளை டீமேட்டிலிருந்து எடுத்து டிரேடிங் அக்கவுன்டில் விற்றுக் கொள்ளலாம். புரிகிறதா?

நாளை இன்னும் விரிவாக பார்ப்போமா?

– கார்த்திகேயன் மணி

முந்தைய பதிவை படிக்க..

பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2

 

 

546total visits,3visits today