பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 4

0
81

காளையும் கரடியும், பண முதலைகளும் – 4

பங்கு பத்திரங்கள் – Share Certificates

ஆரம்பத்தில் பங்குகள் அனைத்து ஷேர் சர்ட்டிபிகேட்டுகளாக இருந்தது என்பதையும் நேற்று பார்த்தோம். அதை டீமேட்டாக மாற்றினால் மட்டுமே இப்போது விற்க முடியும். பிரைமரி மார்க்கெட்டில் வாங்கியதை அப்படியே அதே பேப்பர் பார்மேட்டிலேயே வைத்திருப்பதால், வைத்திருப்பவர்களுக்கே பிரயோஜனமில்லை. இன்னும் பலருக்கு தற்போது அது என்ன விலையில் இருக்கிறது என்பது கூட தெரியாமல் வைத்திருக்கிறார்கள். நானே இதை நேரடியாக கண்டிருக்கிறேன்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளை, சர்ட்டிபிகேட்டாக ஒரு பெரியவர் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதில் மொத்தம் 40000 இன்போசிஸ் பங்குககள் இருந்தது. இன்றைய தேதிக்கு அதன் மதிப்பு 975 X 40000 = 3,90,00,000/- (மூன்று கோடியே தொன்னூறு லட்சம்). அந்தப் பெரியவருக்கு ஐந்து பெண்கள். மனைவி இறந்து விட்டார். இவருக்கும் வயது தொன்னூறை தாண்டி விட்டது. அவரிடம் அணுகி இதை டீமேட்டுக்கு மாற்றித் தருகிறேன், எங்கள் நிறுவனத்தில் டீமேட் அக்கவுன்ட் ஒன்றை மட்டும் திறந்து கொள்ளுங்கள் என்று கேட்டோம். ஆனால், அவர் ஏனோ அதை டீமேட்டுக்கு மாற்றுவதற்கு மறுத்து விட்டார். பழமை விரும்பி போலும். அவர் இருக்கும் வீடு சொந்தமானதுதான். ஆனால், வீட்டில் அவரது மகள்கள் தையல் வேலை செய்து அந்த குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அந்தப் பெரியவர் இறந்து போனதாகவும் தகவல் வந்தது. அதுவும் அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து. நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்று விசாரித்து விட்டு வந்தோம். பின்னர் ஒரு முறை இதற்கெனவே அவர்களது வீட்டிற்கு சென்று பெரியவர் வைத்திருந்த ஷேர் சர்ட்டிபிகேட்டுகளைப் பற்றி கேட்டோம். அவர்கள் அத்தனை பேருக்கும் ஆச்சரியம். ஆனால், கொடுமை என்னவென்றால் அவர் அதை வைத்திருந்த இடம் அவரது மகள்கள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. தேடினார்கள். தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தேடுவார்கள். அதை அவர் இருக்கும்போதே டீமேட்டுக்கு மாற்றியிருந்தால், அவர்கள் இன்று கோடீஸ்வரர்கள். ஆனால் அதை அவர் வைத்த இடம்தான் யாருக்கும் தெரியவில்லையே. வீட்டையே சல்லடையாக சலித்துக் கொண்டிருக்கிறார்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக. எனக்கு அவரை முதல் முறை சந்தித்த போதே இன்னொரு விசயத்தைக் கண்டு அசந்து போனேன். ஏனென்றால், பெரியவர் இன்போசிஸ் ஷேர் சர்ட்டிபிகேட்டுகளைப் போல இன்னும் எண்பது கம்பெனிகளின் ஷேர் சர்ட்டிபிகேட்டுகளை வைத்திருந்தார். எதுவுமே 50000 ஷேர்களுக்கு குறைச்சலாக இல்லை. இன்போசிஸ் மட்டும்தான் ஐம்பதாயிரம் ஷேர்களுக்கும் குறைவாக 40000. இது பரவாயில்லை. என்றாவது அவர்கள் அவற்றையெல்லாம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால், இன்னும் பலர் அந்த ஷேர் சர்ட்டிபிகேட்டுகளை மர பீரோக்களில் வைத்து கரையானுக்கு தின்னக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கொடுமை. தன்னுடைய மதிப்பை தானே உணராமல் இருப்பது கொடுமைதானல்லவா?

சிலர் இந்த விசயம் தெரிந்தவுடம் குறைந்தபட்சம் Dematerialization செய்து கொள்ள சம்மதித்து தானே முன்வருகின்றார்கள். அப்படி ஒரு பெரியவர் என்றோ வாங்கிய 500 Bank of Madura வின் பங்குகள், ICICI Bank பங்குகளாக மாறி, மூன்று நான்கு முறை போனஸ் அனவுன்ஸ் செய்திருந்தபடியால், 3000 ICICIBank பங்குகளாக மாறியிருந்தது. அவர் இதற்காக இன்வெஸ்ட் செய்திருந்தது வெறும் 5000 ரூபாய்க்கும் குறைவு. ஆனால், அவர் எங்களை அணுகியபோது அதன் மதிப்பு முப்பது லட்சம்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள், தங்கள் வீட்டு பீரோக்களை குடைந்து பாருங்கள். எதாவது புதையல் அகப்படலாம். அல்லது இதைப் பற்றி தெரியாமலேயே வீட்டில் எதோ முக்கியமான / முக்கியமற்ற அட்டைக் காகிதம் என்று பூட்டியே வைத்திருக்கும் உங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அது உங்களை லட்சாதிபதியாகவும் ஏன் கோடீஸ்வரனாகவும் கூட மாற்றும் மதிப்பைக் கொண்டது என்பதை.,

குறிப்பு : பல கம்பெனிகள் இன்றைய தேதிக்கு அதில் Delist ஆனதாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. இன்னும் சில கம்பெனிகள் Name change, Merge / Demerge ஆகி பெயர் மாற்றம் கண்டிருக்கலாம். இல்லையென்றால், வேறு கம்பெனி Take over செய்யப்பட்டும் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம். உதாரணத்திற்கு Satyam கம்பெனியின் பெயர் இன்றைய தேதிக்கு Mahendra நிறுவனத்தால் வாங்கப்பட்டு MahendraSatyam என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. இந்த சத்யம் நிறுவனத்தின் கதையை பிரிதொரு சமயத்தில் விளக்குகின்றேன். ஏனென்றால், அதற்கு முன் நாம் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் கடல் அளவு இருக்கின்றது. நாம் நத்தை வேகத்தில் ஊர்ந்தாவது கடலை கடக்க முயற்சிப்போம்.

அப்படி எதாவது ஷேர் சர்ட்டிபிகேட்டுகள் இருப்பதாகத் தெரிந்தால் நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1)   முதலில் அந்த கம்பெனி ஆக்டிவ்-ஆகவும் லைவ்-ஆகவும் இருக்கிறதாவென்று தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
2)   பெயர் மாற்றம், நிறுவன மாற்றம் இன்னபிற விவரங்களைக் கண்டறிய வேண்டும்.
3)   அதன் இன்றைய விலையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அதனை டீமேட்டுக்கு மாற்றுவது. அது பற்றிய ஆர்வம் பிறக்கும்.
4)   Certificate எவர் பெயரில் இருக்கிறதோ, அந்த நபர் உயிருடன் இருந்தால் நலம். இல்லையென்றால் Death Certificate, Affidavit, No objection certificate, Legal Heir Certificate என்று மேண்டேட்டரி லிஸ்ட்டுகள் நீளும். ஏகப்பட்ட அலைச்சலும் கால விரயமும் ஆகும்.
5)   அப்படி அந்த நபர் உயிரோடிந்தால், அவர் பெயரில் ஒரு டீமேட் அக்கவுன்ட்டை ஓபன் செய்யவும். டீமேட் கணக்கை ஆரம்பிக்க தேவையான உப டாக்குமென்ட்டுகளை கட்டுரையின் இறுதியில் பட்டியலிடுகிறேன்.
6)   ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் டீமேட் கணக்கை ஆரம்பித்து விடலாம். Signature mismatch, document incorrect என்று சில விசயங்களால், சில சமயம் பத்து நாட்கள் கூட ஆகலாம். பொறுமை காக்கவும்.
7)   அக்கவுன்ட் ஆரம்பித்ததும் இந்த சர்ட்டிபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு (முடிந்தால் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்) Dematerialization Form இணைத்து அதனை ரெஜிஸ்தராருக்கு அனுப்பும் பணியினை இலவசமாகே உங்களது ஷேர் புரோக்கர் பார்த்துக் கொள்வார். பத்து பைசா செலவேதும் இல்லை.
8)   ஒன்று அல்லது அதிகப்படியாக இரண்டு மாதங்களுக்குள் அந்த ஷேர் சர்ட்டிபிகேட்டுகள் Demat Mode – க்கு மாறி விடும். அதாவது பிரைமரி மார்க்கெட்டிலிருந்து செகண்டரி மார்க்கெட்டுக்கு.
9)   உடனே அதனை விற்க வேண்டுமா / வேண்டாமா என்பதெல்லாம் அந்தக் கம்பெனியின் வளர்ச்சியையும், உங்களது தற்போதைய பணத்தேவையையும் பொறுத்தது.

டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள் :

1)   PAN Card Xerox
2)   Address Proof (Voters ID, Driving License, Passport, Aadhaar card) Xerox
3)   Bank Statement / Bank Passbook Xerox (for six months)
4)   Check leaf
5)   Passport size photo 2
ஹலோ பாஸ், எங்கே கிளம்பிட்டிங்க? ஓ புதையலைத் தேடியா! தேடுங்க தேடுங்க. நாளை சந்திப்போம்.

-கார்த்திகேயன் மணி

முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

https://kalakkaldreams.com/lets-know-about-stock-market-part-3-by-kama/

1149total visits,6visits today