மரகத நாணயம் – சினிமா விமர்சனம்

0
37

முதல் படத்தில் Fantasy Adventure Comedy ஜானரை கையிலெடுத்திருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.கே. சரவன்.

11 ஆம் நூற்றாண்டில் தவமிருந்து மரகத நாணயத்தை பெறுகிறான் அரசன் இரும்பொறை. பலன்? சிற்றரசு பேரரசாக வியாபிக்கிறது. கால ஓட்டத்தில் இவ்வரசனிடமிருந்து வெவ்வேறு நபர்களுக்கு கைமாறுகிறது ம.நா.

‘தொட்டவன் கெட்டான்’ எனும் ராசிகொண்ட நாணயம் என்பதை அறிந்தும் பெருந்தொகைக்காக இதனை கைப்பற்ற நினைக்கிறான் நாயகன் செங்குட்டுவன். ஆட்டம் ஆரம்பம்!!

பார்த்தாலும், பேசினாலும் ‘சீரியஸான ஆள்போல’ என நினைக்கும் நபர்கள் 100% செமத்தியான காமடி சென்ஸ் உள்ளவர்களாக இருந்து நம்மை ஆச்சர்யப்படுத்துவார்கள். அந்த லிஸ்டில் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவனை சர்வ நிச்சயமாக சேர்த்து விடலாம்.

முதல் 20 நிமிடத்திற்குள்ளேயே காற்று போன பலூன்களாக தொங்கிவிடும் தமிழ்ப்படங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் துவக்கம் முதலே அடுத்து என்ன நடக்கப்போகுது எனும் ஆவலை கிளப்பி வைட்டான நகைச்சுவை விருந்தை படைத்திருக்கிறார்.

‘முனீஷ்காந்த்’ ராமதாஸின் குரல் மாற்றத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ‘தெறி’ காமடி. ‘தப்பா குறிவச்சிட்டு ஜஸ்ட் மிஸ்ஸுன்னு சொல்றான் பாரு’ வசனம் ஒரு சோறு பதம். ஆனந்த்ராஜ், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர் முதல் இதர துணை நடிகர்கள் வரை பக்கா காஸ்டிங். முண்டாசுப்பட்டியை விட இப்படம் ராமதாஸிற்கு மும்மடங்கு பெயர் வாங்கித்தரும். மினிமம் கியாரண்டி தந்த ‘யாகாவாராயினும் நா காக்க’விற்கு பிறகு ஆதிக்கு ம.நா. ஒரு ட்ரிபிள் ஜம்ப் வெற்றி. பேவரிட் என்றில்லாவிட்டாலும் ‘நோ நான்சென்ஸ்’ நடிகை எனும் பெயரை நிக்கி கல்ராணி தக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ், எடிட்டர் பிரசன்னா, ஒளிப்பதிவாளர் ஷங்கர் என அனைவருமே.. சிறப்பு. சிறப்பு!!

‘மரகத நாணயத்தை கைப்பற்ற வேண்டும்’ எனும் டாஸ்க்குடன் ஆவிகளுடன் சுற்றும் நாயகன் அவைகளை காமடி பண்ண விட்டு வேடிக்கை பார்த்ததை விட இன்னும் வேலை வாங்கி இருந்தால் லாஜிக்கலாக இருந்திருக்கும்.

அறிமுக இயக்குனர், ஸ்டார்கள் இல்லாத நடிகர் குழு, Fantasy Adventure Comedy. இப்படி ஒரு காம்பினேஷன். ஆனாலும் தரத்தில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படைப்பாக மரகத நாணயம் இருக்கும் என நம்புகிறேன்.

தீவிர மெனக்கெடலை சிதறாமல் திரையாக்கம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.கே. சரவன். சீக்கிரம் அடுத்த படத்தோட வாங்க சார். ஐ ஆம் வைட்டிங்.

2378total visits.