தூதுவன் – திங்கள் தொடர்

0
44
அச்சு அசல் தமிழ் சினிமாக்களிலும் சீரியல்களிலும் வரும் கணவர்கள் போலவே அந்த ஆஸ்பத்திரி அறையின் வாசலில் டென்ஷனாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் குட்டியப்பு.
தனியேயிருந்தான். கூட யாருமே இல்லை. காதல் கலப்புத் திருமணம் என்பதால் இரு குடும்பங்களிலும் சேர்க்கவில்லை.
இந்தக் குழந்தை பொறந்து தான் எல்லாரையும் ஒண்ணு சேர்க்கணும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான். எல்லாமே நார்மல் தான். பிரசவத்தில் ஒன்றும் பிரச்னையிருக்காது என்று ஏற்கனவே டாக்டர்கள் சொல்லி விட்டதால் பெரிசாக டென்ஷன் எதுவுமில்லையென்றாலும் என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. யாரிடமாவது பேசினால் பரவாயில்லை போல் தோன்றியது.
அங்கிருந்த சேரில் அமர்ந்து சில நிமிஷங்கள் கண்களை மூடினான். கண்களைத் திறந்தவுடன் அருகில் சாம்பிராணியும் பிஸ்கட்டும் கலந்த மணம். பார்த்தான். அவர் அமர்ந்திருந்தார். இவனைப் பார்த்து புன்னகைத்தபடி. “யாரு இவரு? எப்ப வந்தார்?” என்று குழம்பினான்.
அவர் அவனைப் பார்த்து “எப்படி இருக்கே?” என்றார்.
“நான் நல்லா இருக்கேன். நீங்க யாருங்க?” என்றான்.
அவர் அதற்கு பதில் சொல்லாமல் “குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ணியாச்சா” என்றார்.
“பண்ணியாச்சு. நீங்க யாருங்க” என்றான். மீண்டும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் “ என்ன பேரு?” என்றார்.
“சின்னக் குட்டியப்புன்னு வெக்கப் போறோம், அது சரி நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க என்றான் எரிச்சலுடன்.
“என்னைப் பார்த்தா உனக்கு யார் மாதிரி தோணுது?” என்றார்.
“ ப்ரூஸ் அல்மைட்டி படத்துல வர மார்கன் ப்ரீமேன் மாதிரி இருக்கீங்க. ஆனா தமிழ் பேசறீங்க.” என்றான். அவர் சத்தமாக சத்தம் வராமல் சிரித்தார். “கிட்டத்தட்ட அது மாதிரி தான். ஆனா அதுக்கு அடுத்த லெவல் நான்” என்றார்.
திருதிருவென விழித்தான் குட்டியப்பு. “நான் உனக்கு ஒரு சேதி சொல்ல வந்திருக்கும் தூதுவன்” என்றார்.
என்ன என்பது போல் அவரைப் பார்த்தான். “ததாஸ்து” அப்படிங்கற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கியா? என்றார். அவன் ஆர்வமானான்.
“ஆமாங்க. எங்க அம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்க. மேல வானத்துல தேவர்கள் சும்மா வாக்கிங் போவாங்களாம். அப்ப அவங்க யாரையாச்சும் பாத்து ததாஸ்துன்னு சொன்னா, யாரைப் பாத்து சொல்றாங்களோ அவங்க மனசுல நினைக்கிறதோ இல்லன்னா அந்த நிமிஷம் அவங்க பேசுற விஷயமோ அப்படியே நடந்திருமாம். அதனால எப்பவுமே நாம நல்ல வார்த்தைய மட்டும் தான் பேசணும்னு சொல்லுவாங்க” என்றான்.
அவர் சிரித்தபடி “ கிட்டத்தட்ட அந்த கான்செப்ட் தான். இப்ப நான் எதுக்கு வந்திருக்கேன்னா” என்று நிறுத்தினார். அவன் சாக்லெட்டை கையில் வைத்திருக்கும் அம்மாவை பாப்பா பார்ப்பதைப் போல் பார்த்தான்.
அவர் தொடர்ந்தார். “ உன் லைப்ல அந்த ததாஸ்து மொமன்ட் எப்ப நடந்ததுனு உங்கிட்ட இன்பார்ம் பண்ண சொல்லி எனக்கு உத்தரவு. அதான் வந்தேன்” என்றவர் கோட்டுக்குள்ளிருந்து அந்த ஐபேடை எடுத்தார்.
அதை ஆன் செய்து அவன் மடியில் வைத்தார். அதில் ஒரு காணொளி ஓடத் துவங்கியது. அதைப் பார்த்தவன் திகைத்தான் . சட்டென்று திரும்பிப் பார்த்தால் அவரைக் காணவில்லை. குழம்பியவனை மீண்டும் வீடியோ ஈர்த்தது. அதில் ஆழ்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் அதிரத் துவங்கினான். இதுவா.. இது… இது….என்று யோசித்தவனை திடுக்கென்று கலைத்தது அந்த அறைக்குள்ளிருந்து வந்த வீல் என்ற அலறல்.
இது குழந்தையுடையது மாதிரி இல்லையே? ஐபேடை பக்கத்து நாற்காலியில் எறிந்து விட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடியவன் உள்ளே கண்ட காட்சியில் அவனும் வீல் என்று கத்திக் கொண்டே மயங்கி விழுந்தான்.
வெளியே ஐபேடில் வீடியோ ஓடிக் கொண்டிருந்தது.
மிதபோதைச் சந்திப்பு ஒன்றில் குழந்தை வளர்ப்பு பற்றி சலித்துக் கொண்ட நண்பனிடம் குட்டியப்பு சொல்லிக் கொண்டிருந்தான். “ யம்மாடியோ. நீ சொல்றதெல்லாம் பாத்தா பயமா இருக்குடா. எனக்கெல்லாம் புள்ள பொறந்தா வளர்க்கறதெல்லாம் வேணாம் சாமி. மொதல் மூணு வருசத்த அப்டியே அலாக்கா ஜம்ப் பண்ணி நடக்கற பேசற லெவலுக்கு வந்திரணும். அப்ப தான் நாம சொல்றபடி கேக்கும். பேம்பர் மாத்தற வேலையெல்லாம் நெனச்சாலே..யம்மா” என்று பேசிக் கொண்டிருந்தான்.
உள்ளே மயங்கிக் கிடந்த குட்டியப்புவை அருகில் அமர்ந்து “யப்போவ்… ஏந்திரிப்பா” என்று உலுக்கி எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான் சில நிமிஷங்களுக்கு முன்பே பிறந்திருந்த சின்னக் குட்டியப்பு.
-ஹரீஷ் கணபதி

364total visits,1visits today