ஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்

0
117

வாழ்க்கைல சில நிகழ்ச்சி நம்ப முடியாத அளவுக்கு நடந்து தொலைக்கும். சின்ன வயசுல ஊர்ல ஸ்கூல் லீவுல பக்கத்து வீட்டுல இருக்கிற பசங்க பொண்ணுக கூட சேர்ந்து விளையாடுவோம்.

என்னை மாதிரி ஒண்ணாவது படிக்கிற ஆளுல ஆரம்பிச்சு எட்டாவது படிக்கிற ஆளுக உண்டு. அப்படித்தான் ஒரு ஞாயித்துக்கிழமை எல்லாரும் சேர்ந்து விளையாடிட்டு இருந்தோம். ஆனா அது எனக்கு மட்டும் சனியா இருக்கும்னு அப்பத் தெரியலை.

பக்கத்து வீட்டு அக்காவோட மாமா பையன் லீவுல வந்திருந்தான். அவன் அப்ப ஏழாவது படிச்சிட்டு இருந்தான். நான், அவன்,  அவன் அத்தை பொண்ணும் பையனும், இன்னொரு பக்கத்து வீட்டுப்பையன்னு அஞ்சு பேரும் விளையாடிட்டு இருந்தோம்.

அப்பத்தான், அவன் ஒரு குண்டை போட்டான். நாம எல்லாரும் ஏன் இப்ப பீடி குடிக்கக்கூடாது. வீட்டுல யாரும் இல்லை இனி சாயந்திரமாத்தானே எருமைக்கன்னைப் பிடிச்சுட்டு வருவாங்கனு பத்த வைக்க, மத்தவங்களும் ஒரு நப்பாசைல சரினு சொல்லிட்டாங்க.

நான்தான் குரூப்ல சின்னப் பையனா பீடி வாங்க என்னையே அனுப்பினாங்க. ஆங் இங்க ஒண்ணு சொல்லணும் எங்க வீடு இருக்கிற அமைப்ப பத்தி. ஒரு செவ்வகத்துல ஒரு பக்கம் எங்க வீடுனா அதோட நேர் எதிர் சைடுல தான் பொட்டிக்கடை. இப்ப மீதம் இருக்கிற ரெண்டு பக்கமும் அந்த கடைக்கு போக வழி இருக்கு.

நாங்க விளையாடிட்டு இருக்கிற வீடு இருக்கிற வழி குறுகலா இருக்கும். சைக்கிள்ல மட்டும் அதுல போலாம். ஆட்டோ. கார் இப்படி எதாச்சும் வந்தா இன்னொரு வழியாத்தான் வரணும். அதான் மெயின் தடம்.

நான் அவங்ககிட்ட ஒரு ரூவா வாங்கிட்டு வேகமா பொட்டிக்கடைக்குப் போனேன். அது என் கிளாஸ்ல படிக்கிற பொண்ணு அவங்க கடை. நான் கடைக்குப் போனப்ப அங்க என் கிளாஸ்மேட்டோட அம்மா இருந்தாங்க. அவங்கள பார்த்ததும் பீடி வாங்க தயக்கம். அதுமில்லாம எதாச்சும் கேள்வியா கேட்டு வைப்பாங்க.

நான் தயங்கிட்டே நின்னேன். சரி மெயின்ரோட்டு கடைக்கே போய் வாங்கிடலாம்னு திரும்பும்போது அவங்க என்னைப் பார்த்து கூப்பிட்டுட்டாங்க. சரி ஆனது ஆச்சுனு ஒரு ரூவாய்க்கு பீடி கொடுக்க சொன்னேன். ஏன் ஒரு ரூவாய்க்கு அப்பா கட்டா தானே வாங்குவாங்கனு கேட்டாங்க. நான் ஏதோ சமாளிச்சுட்டு வந்துட்டேன். வண்டிய ஸ்டார்ட் பண்ணி ட்ர்ர்ர்ர்ர்னு அவங்க வீட்டுக்கு வந்து பார்த்தா பக்காவா அரேஞ்ச்மெண்ட் பண்ணிட்டாங்க. ரெண்டு கயித்துக்கட்டல எடுத்து நிறுத்தி அது மேல அரிசி சாக்கப் போட்டு மூடி கட்டல் சந்துல உக்காந்து பீடி புடிக்க ஆரம்பிச்சாங்க. வாசனை தெரிஞ்சிடக்கூடாதுனு ஊதுபத்தி ஒண்ணையும் பத்த வெச்சிட்டாங்க.

அந்த பொண்ணும் அவங்க தம்பி ரெண்டு பேரும் அவங்க மாமா பையனும் சூப்பரா பீடி புடிச்சாங்க. இன்னொரு சின்னப்பையன் பயந்து மாட்டேனுட்டான். என்கிட்ட ஒரு பீடியை பத்தவெச்சுக் கொடுத்து வாய்ல வெச்சு இழுடானு சொன்னாங்க. நானும் பீடிய வாய்ல வெச்சு காத்த உள்ள உறிஞ்சினேன்.

உறிஞ்சின வேகத்துல மொத்த பொகையும் உள்ள போயிடுச்சு. பொக்பொக்குனு இருமிட்டே பீடியை அய்யே இது நல்லாவேயில்லைனு வீசிட்டேன். அதையும் அவங்க மாமா பையன் குடிச்சு காலி பண்ணினான். கிளம்பறதுக்கு முன்னாடி பீடி வாங்கி குடிச்சத யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சாமி மேல சத்தியம் பண்ணித் தரச் சொன்னாங்க. நானும் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு மறுபடியும் அங்கேயே விளையாடிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்து அப்பா கூப்பிட்டாங்கனு கூட்டிட்டுப் போனான்.

– சிரிச்சே தொலைப்பவன்

1116total visits,6visits today