ஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும் பாகம்-2

0
79

அண்ணன் வந்து கூப்பிட்டதும் அவன் கூட வீட்டுக்கு போனேன். வீட்டுல அப்பா அப்பத்தான் வெளிய இருந்து வந்திருந்தாங்க போல சட்டையும் லுங்கியுமா இருந்தாங்க.

எங்கள பார்த்ததும் அண்ணனைப் போய் வாசக் கதவை சாத்திட்டு வாடானு சொன்னாங்க. அப்பறமா என்னைப் பார்த்து பொட்டிக்கடைக்கு போனியானு கேட்டாங்க. எனக்கு என்ன சொல்லறதுனு தெரியல ஒருவேளை அப்பா இந்த தடத்துல வந்து இருப்பாங்களோ இப்ப என்ன பண்ணறதுனு.

இந்தவாட்டி அப்பா பொட்டிக் கடைல என்ன வாங்கினேனு சத்தமாவே கேட்டாங்க. நாங்க வாசம் தெரியாம இருக்கணும்னு கடலை மிட்டாயும் ஒரு ரூவாய்க்கு வாங்கிட்டு போய் இருந்தோம். இந்த ஐடியாவும் ஊருக்கு வந்த அந்த ஒறவுக்காரப் பையனோடது தான். சரி அதை மட்டும் சொல்லுவோம்னு கடலமுட்டாய் வாங்கினேன்னு சொல்லி முடிக்கல அப்பாவோட கை பளார்னு என் கன்னத்துல இறங்குச்சு.

வலில கண்ணுல தண்ணி வந்துச்சு.  அப்பா கோபத்துல வீட்டுல கிடந்த டைலரிங் டேப்ப எடுத்து ரெண்டா மடிச்சு எடுத்துட்டு வந்தாங்க. பொட்டிக் கடைல என்ன வாங்கினேனு கேட்டாங்க டேப்ப பார்த்த பயத்துல பீடி வாங்கினதையும் சொல்லிட்டேன். பீடி யாருக்கு வாங்கினேனு அடுத்த கேள்வி வந்துச்சு, சாமி மேல வேற சத்தியம் பண்ணியிருக்கோமேனு பெரியப்பாவுக்குனு சொன்னேன் டேப்பாலயே கால்ல அடி விழுந்துச்சு.

பெரியப்பா பீடி குடுக்கிறது இல்லையேனு கேட்டுட்டே அடிச்சாங்க. அக்கப்பானு எதிர்த்த வீட்டுக்காரரை சொன்னேன் மறுபடியும் அடி. அவரும் குடிக்க மாட்டாராம், கடவுளே என்ன செய்ய. மிச்சம் இருந்தது அந்த பொண்ணோட அப்பா தான். மாமா வாங்கிட்டு வரச் சொன்னாங்கனு சொன்னேன் அடி வேகவேகமா விழ ஆரம்பிச்சுது.

அப்பவே புரிஞ்சுக்கிட்டேன் மாமாவும் பீடி குடிக்கமாட்டாங்கனு. முருகா ஏன்டாப்பா இப்படி சோதிக்கிறேனு நொந்துட்டு சரி சாமி கண்ணைக் குத்தினாலும் பரவாயில்லை உண்மையைச் சொல்லலைனா இன்னைக்கு நடக்கக்கூட முடியாதுனு தெரிஞ்சுது. டேப்ல அடிச்சதுல முழங்கால்க்கு மேல வரிவரியா விழுந்துடுச்சு. நிக்கக் கூட முடியல பயங்கர வலி எப்ப வேணாலும் ரத்தம் எட்டிப்பார்க்கலாம்ங்கிற நெலமை.

மனசை தேத்திக்கிட்டு மாமா பொண்ணும் அவங்க மாமா பையனும் தான் வாங்கி வரச்சொன்னாங்க. அந்த பொண்ணு எல்லாம் தான் பீடி குடிச்சாங்கனு சொல்லிட்டேன். நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கணுமே அது சரியா நடந்துச்சு. ஏன்டா நீ யாருக்கும் தெரியாம பீடி வாங்கி குடிச்சதும் இல்லாம பொண்ணு பீடி குடிச்சுதுனு பொய்வேற சொல்லறியா?, இனிமே பீடியைத் தொடுவியா தொடுவியானே வெளுத்து எடுத்தாங்க.

அப்ப முடிவு பண்ணினவன் தான் அதுக்கப்பறம் இப்ப வர வாழ்க்கைல பீடி பிடிக்கவேயில்ல. ஊர்ல இருந்து பைக் பெரியப்பா வந்தாலும் அப்பாவே போய் அவருக்கு சிகரெட் வாங்கி வரச் சொன்னாக்கூட அண்ணனைத்தான் போக சொல்லுவேன் அப்படி மாத்திடுச்சு என்னை.

அப்பாக்கு நான் பீடி வாங்கினது எப்படி தெரிஞ்சுதுனா அப்பா எப்பவும் ஒரு கட்டாத்தான் வாங்குவாங்க. அப்ப சில்லறை இல்லைனாலும் மறுபடியும்தான் கொடுப்பாங்க. இதனால கடைக்காரங்களுக்கு நல்லா நினைவுல இருந்ததும், நான் பீடி வாங்கிட்டு போன பத்து நிமிசத்துல மெயின்ரோடு போக வந்த அப்பா பீடி ஒரு கட்டு கேட்க கடைக்கார அக்கா இப்பத்தானே சின்னவன் அரைக்கட்டு வாங்கி வந்தானு சொல்ல, இல்ல சட்டையை மாத்திப் போட்டுட்டு வந்துட்டேன் அதான் மறுபடியும் வாங்கறேன்னு அப்பா அவங்ககிட்ட சொல்லியிருந்திருக்காரு.

எக்ஸ்ட்ராவா ஒரு கட்டு வித்துச்சேனு சும்மா இருக்காம கடைக்கார அக்கா கேட்டு வெச்சதால தான் நான் மாட்டினது.

பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம் தானே. ஆனா அதனாலயும் கொஞ்சம் நல்லதும் நடந்துச்சு எனக்கு பீடி மேல வெறுப்பு வந்ததும் அதைவிட முக்கியமா மாட்டிக்காம எப்படி செய்யணும் பதில் சொல்லி சமாளிக்கிறதுனும் கத்துக்கிட்டேன்.

இப்ப அந்த ப்ளான் பண்ணி பண்ணற ஐடியா தான் இன்னும் என்னை பாதுகாத்துட்டு வருது.

முந்தைய பகுதியை வாசிக்க இங்கு சொடுக்கவும்

ஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்

-சிரிச்சே தொலைப்பவன்

1823total visits,4visits today