தண்ணீருக்குள் மழை

0
45
அன்று பள்ளி விடுமுறை தினம்ங்கிற நினைப்பே, மறுகரைக்கு நீச்சல் அடித்து சம்பு காட்டை தொட்டபோது தான் மழையோடு நினைப்பு வந்தது.
வீட்டிற்கு போக மனமின்றி சம்பு கோரையில் கட்டியிருந்த குருவிக்கூட்டில் அமர்ந்துவிடலாமா? என நினைத்து ஒரு கூடு அருகில் செல்கையில் பறந்து போனது பட்சி.
“ஏன் பயந்து பறந்தோடுற?… நான் கொஞ்சம் மழைக்கு உன் கூட்டில் உன்னோடு ஓய்வெடுக்குறேன்.” என்றேன்.
“இல்லே ஒருவர் மட்டுந்தான் உள்ளே அமரலாம். நீ வேண்டுமென்றால் ஓய்வெடு. நான் மழையில் கொஞ்சம் ஆட்டம் போட்டுட்டு வர்றேன்” என்று கண்சிமிட்டி பறந்தது.
“வேண்டாம்… வேண்டாம்… ஆளு இல்லாத வீட்டுலே தனியா என்னாலே இருக்க முடியாது. நான் போறேன்… நீ வந்திடு” என்றபடி வானத்தை பார்த்தேன். மழை துளிகள் கொஞ்சம் வேகமாக விழ ஆரம்பித்தது. நாக்கை நீட்டி சில மழை துளிகளை சுவைத்தேன்.
தண்ணீரில் விழும் மழை துளிகள் சப்தம் அதிகரித்தது. தண்ணீருக்குள் மூழ்கி மழையின் இசையை கேட்டேன். கருவறையில் இருக்கையில் வெளி சப்தங்கள் இப்படியாக உணர்ந்திருக்கலாம்.
தண்ணீர் உள்ளேயும் வெளியிலும் உள்ள முழ்கி எழுந்து கேட்க கேட்பது ஒலிபெருக்கியை கூட்டி குறைத்து திருகுவதுபோல இருந்தது. திரும்ப திரும்ப இதை செய்ய காரணம் ரேடியோ பெட்டியில் ஒரு சமயம் இப்படி செய்து பார்த்து செவியில் அரை வாங்கிய கோபம். இப்ப என்னை தடுக்க யாருமில்லை என்பதால் ரொம்ப பிடித்திருந்தது.
மூழ்கி மூழ்கி அல்லி பூக்கள் இருக்குமிடம் நீந்தி வந்தேன். சில அல்லி இலைகளை பறித்து பரப்பி வைத்து, அதற்கு கீழ் மூழ்கி மழையின் சத்தத்தை கேட்டேன். பக்கத்து வீட்டு கிழவி சாணி தட்டுற சத்தம்போல இருந்ததால் தண்ணீக்குள் சிரித்து எழுந்தேன். என் சிரிப்புகள் நீர் குமிழாகி காற்றில் கரைந்தது.
அல்லி இலையை குடுவை போல செய்து கொஞ்சம் மழை தண்ணீர் பிடித்து குடித்துப்பார்த்தேன். ஜில்லென்று தொண்டைக்குள் இறங்கியது. மழையின் சாரல்கள் ஒரு மேகமூட்டம்போல காற்றில் அசைந்தாடியது.
மழையால் நீர்மட்டம் உயர்ந்தது போல இருந்தது. கொஞ்சம் குடித்துப்பார்த்தேன். அதை மழை நீரின் சுவை தான். எந்த ஊரின் மேகங்கள் என்று விலாசம் எழுதாமல் இருப்பதால்தான் மழை நீர் ஒரே சுவையாக இருக்கிறதோ?
நீச்சல் அடித்தபடி கரைக்கு பக்கம் வந்தேன். குட்டி மீன்கள் பயந்து ஓடாமல் அங்குமிங்கும் ரவுண்டு அடித்து குட்டிக்கரணம் தண்ணீரில் போட்டுக்கொண்டிருந்தது.
கொஞ்சம் பயமுருத்தலாம் என்று பல்லை கடித்து முறைத்தேன்.
“வீட்டுக்கு போடா… உன் தூண்டிலுக்கும், வலைக்கும் நான் சிக்க மாட்டோம்” என்று எகத்தாளமா சிரித்தது.
கரைக்கு வந்து டவுசரை தலைக்கு குல்லவாக மாட்டிக்கொண்டு, கரை வழியாக… வரப்பில் அமர்ந்திருக்கும் தவளைகளுக்கு “டுர்ர்… டுர்ர்… பேம்… பேம்…” என லாரி ஹாரன் அடித்துக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன்.
.
சங்கர் அஸ்வின்

704total visits,3visits today