ரஸவாதி – புத்தக விமர்சனம்

0
234

 

ரஸவாதி – பௌலோ கொய்லோ

ஆடுமாடு மேய்ப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால், அவர்கள் இயற்கையோடே பயணிக்கிறார்கள். பரந்த வெளிகளில் சுற்றித் திரிபவர்கள் பிரபஞ்சத்தின் மொழி அறிந்தவர்கள். அவர்கள் நிழலை வைத்தே காலத்தைக் கணித்துவிடுகிறார்கள். ஆடுகளோடும், மாடுகளோடும், மரஞ்செடிகொடிகளோடும் உரையாடும் வல்லமையும் அவர்களுக்குண்டு. நாம் அவர்களின் ஞானம் அறியாமல் சாதாரணமாக ‘நீ ஆடுமாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என வசையாகச் சொல்லிவிடுகிறோம். கிருஷ்ணனும், கிறிஸ்துவும் மேய்ப்பர்கள் என்பதை எளிதாக மறந்துவிடுகிறோம்.

சமீபத்தில் வாசித்த ரஸவாதி என்னும் பௌலோ கொய்லோவின் புத்தகம் இலக்கை நோக்கிய பயணத்தைச் சொன்னது. நாம் நம் இதயத்தின் மொழியை அறியும்போது, நம் இலக்குகளை உறுதியாக நம்பும்பொழுது அதை நோக்கி பிரபஞ்சமே அடியெடுத்துவைக்கிறது என்பதை உறுதியாக சொல்லும் நாவல்தான் ரஸவாதி.

சந்தியாகோ என்ற ஆட்டு இடையனின் கதைதான் ரஸவாதி. ஸ்பெயினில் உள்ள தன் ஊரிலிருந்து கிளம்பி, சந்தைகளிலும், எகிப்துப் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்து பிரமிடுகளைக் கண்டு கடைசியில் புதையல் உள்ள இடத்தை அறிகிறான். அந்த இடத்தில்தான் கதையின் சுவாரசியமே இருக்கிறது. அவன் ஊரில் ஆடுமேய்க்கும் போது எந்த இடத்தில் புதையல் இருப்பதாய் எண்ணி கனவு கண்டானோ அந்த இடத்திலுள்ள மரத்தடியில் புதையல் இருக்கிறது.

பயணத்தில் கனவுகளுக்கு குறிசொல்லும் கிழவி, கிழட்டு ராஜா, பளிங்கு வியாபாரி, ஆங்கிலேயர், ஒட்டகமேய்ப்பர், பாத்திமா, ரஸவாதி என கூடவே வழிகாட்டியாய் பலர் வருகிறார்கள். நம்முடைய இலக்கு நம் காலடியிலேயே இருந்தாலும் அதைத்தேடி பயணித்து கிடைக்கும்போது ஏற்படும் இன்பம் அலாதியானது.

தேடுங்கள் கிடைக்குமென இயேசு சொன்னது போல சமீப காலமாக ரோண்டா பைரன் எழுதிய இரகசியம், மாயாஜாலம் போன்ற புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப.அய்யாவை சந்திக்க பாளையங்கோட்டை செல்கையில் உடன் வந்த நண்பர் ரங்கா பௌலோ கொய்லோவின் ரஸவாதியை அறிமுகப்படுத்தியதோடு வாசிக்கவும் கொடுத்தார். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்த நூல். தற்போது பதிப்பில் இல்லை. ஆங்கிலத்தில் கிடைக்கிறது.

இந்நாவல் ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இருபது கோடிக்கும் மேலாக விற்பனையாகி பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தப் புத்தகம் வாசித்த போது பிடித்தமான வரிகளை வண்ணமிட்டு வைத்திருந்தேன். அந்த வரிகளை நீங்களும் படித்துப் பாருங்கள்.
உனக்கு நான் சொல்ல வேண்டிய அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உலகத்தில் இருக்கிற அத்தனை அதிசயங்களையும் ரசிக்கணும், அதே சமயம் கரண்டியில் இருக்கிற எண்ணெய்த் துளிகளையும் மறந்துவிடக்கூடாது. இதுதான் மகிழ்ச்சியின் ரகசியம்.

நான் கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ வாழ்வதில்லை. என்னுடைய ஆர்வமெல்லாம். நிகழ்காலத்தில் மட்டும்தான். உன்னுடைய கவனத்தை நிகழ்காலத்தில் மட்டுமே ஊன்றிக்கொள்ள முடியுமானால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய். இந்தப் பாலைவனத்திலும் ஜீவன் இருக்கிறது; வானத்திலே நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. ஆதிவாசிகள் சண்டை போடுகிறார்களென்றால் அதற்குக் காரணம் அவர்களும் மனித இனத்தின் ஒரு பகுதிதானே. வாழ்வு என்பதை ஒரு பெரிய விழாவாக, கோலாகலமான கொண்டாட்டமாகக் கருத வேண்டும். ஏனென்றால், நாம் ஜீவித்திருக்கின்ற இந்தக் கணம்தான் வாழ்வென்பது.

வாயினுள்ளே போவது எதுவும் பாவம் இல்லை; வாயிலிருந்து வெளியே வருவதில்தான் இருக்கிறது.

கற்றுக்கொள்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது; அதுதான் செயல்முறை.

துன்பம் பற்றிய பயம் துன்புறுவதைக் காட்டிலும் மோசமானது என்று உனது இதயத்திற்குச் சொல். கனவுகளைத் தேடிப் புறப்பட்ட இதயங்கள் எவையும் ஒருபோதும் துன்பத்திற்கு ஆளானதில்லை; ஏனென்றால், தேடிச்செல்கிற ஒவ்வொரு கணமும் இறைவனையும் நிரந்தரத்தையும் எதிர்கொள்ளுகிற தருணம் என்பதையும் சொல்.

– சித்திரவீதிக்காரன்

3429total visits,13visits today