ரிலாக்ஸ் டிப்ஸ்

0
87
*கோடைக்கு ஒரு ஜில் யோசனை*
வேலைக்கு போகும் பெற்றோர்கள் கோடையில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருக்கின்றது. அதனால் சம்மர் கேம்பில் போடுகின்றோம். வேண்டுமானால் பள்ளி கூட மே மாதம் முழுக்க வைத்துவிடுங்கள் என்கின்றார்கள். வீட்டில் தாத்தா பாட்டி இல்லை. வெளியே விடுவதற்கு சம்மதம் இல்லை. பெரியப்பா, சித்தப்பா, மாமா என வெளி உலக தொடர்புகள் இல்லை என்ன செய்வது என்று கார்னர் செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக ஒரு யோசனை, நிச்சயம் Practically சாத்தியமான விஷயமே.
மொத்தமாக ஆறு வாரங்கள் விடுமுறை என வைத்துக்கொள்வோம். வீட்டை சுற்றி உங்களைப்போன்ற நண்பர்களை கண்டுபிடியுங்கள். அதாவது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் ஒரு குழந்தையோ இரண்டு குழந்தையோ இருக்கின்ற குடும்பத்தினர். அவர்களும் கோடைக்கு குழந்தையை என்ன செய்வது என தெரியாமல் தத்தளிப்பவர்கள். மொத்தம் 12 பெற்றோர்கள் கணக்கு வந்ததா? ஒவ்வொரு பெற்றோராக மாறி மாறி 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் போதும் மொத்த பிரச்சனையும் தீர்ந்தது.
1. ஆறு வீட்டு குழந்தைகளுக்கு அன்று விடுமுறை எடுத்த பெற்றோரின் வீட்டில் குழுமி காலை முதல் மாலை வரையில் ஒன்றாக நேரம் செலவிடலாம்.
2. அந்த விடுமுறை எடுத்த பெற்றோர் ஒருங்கிணைக்கலாம்.
3. தத்தமது வீட்டில் இருந்தோ அல்லது பொதுவாக ஓர் இடத்தில் சமைப்பது குறித்து முடிவெடுக்கலாம்.
4. பொது இடங்களுக்கு அந்த பெற்றோர் அழைத்துச் செல்லலாம் – நூலகம், பூங்கா, கண்காட்சி, கோளரங்கம், வனக்காட்சி சாலை, இப்படி
5. வெயில் கொடுமை அதிமாக இருப்பதால் வீட்டிற்குள்ளேயே விளையாட்டுகள் விளையாடலாம்
6. புத்தகங்களை கூட்டாக வாசிக்கலாம்
7. ஒரு மணி நேரம் நல்ல சினிமா / தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கலாம்.
காலை முதல் மாலைவரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Idleஆக இருக்கட்டும். அதுவே நிறைய சிந்தனைக்கு தீனி போடும்.
மாலை ஒவ்வொரு பெற்றோரும் வீடு திரும்பும் சமயம் அவரவர் இல்லங்களுக்கு திரும்பலாம். இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம். தங்கள் குழந்தைகளின் விடுமுறையை சிறப்பாக செலவிட மொத்தம் ஒரு பெற்றோர் எடுக்க வேண்டியது மூன்று நாள் விடுமுறை மட்டுமே. திட்டமிட்டால் இன்னும் கச்சிதமாக செயல்படுத்தலாம்.
விழியன்

879total visits.