நிவாரண நிதியும் அரசு அலுவலகமும்

0
82

தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்து இருக்கிறது. இவை யாவும் எதன் மூலம் கொடுக்கப்படும் என்று பார்த்தால் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து வருவாய் அலுவலகம் வழியாக கிராம நிர்வாக அலுவலர் அந்த அந்த ஊரில் புயல் சேதத்தை பார்த்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசுக்கு வக்கில்லை என்பதால் வார்டு மெம்பர்களும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும் விரல் சூப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.

தலைகீழாக நின்றாவது அரசு நிவாரண தொகை அளித்துவிடும் என்று முட்டு கொடுக்கிறீர்களா? புதுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை பாருங்கள். இதை புணரமைக்கவே அரசுக்கு 3-4 கோடியாவது தேவைப்படும். (சின்னதாக ஒரு குடிநீர் தொட்டி, அதுவும் பிளாஸ்டிக்கில் வாங்கி வைத்தாலே 5-8லட்சம் கணக்கு எழுதி விடுகிறார்கள்). கஜா புயலால் ஒட்டுமொத்தமாக அலுவலக கோப்புகளை இழுந்து நிற்கும் தாலுக்கா அலுவலகம் மக்கள் பணியில் முன்னுரிமை கொடுக்குமா என்பது பலத்த சந்தேகமே.

அரசு தரும் நிவாரணம் பார்ப்போம். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100 அளிக்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 அளிக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.600 அளிக்கப்படும். மரத்தை வெட்ட ஒரு மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும். இது தமிழக அரசு அறிவித்தது. வீட்டின் மீது விழுந்திருக்கும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த புதுக்கோட்டையில் கேட்கப்படும் தொகை 20000 ரூபாய். களத்தில் நிஜத்திற்கும், அரசு நிவாரணத்திற்கும் பூமிக்கும் வானத்திற்குமான தூரம். அரசு அறிவித்து இருக்கும் நிவாரண தொகையை எத்தனை பேர் கொண்ட குழு நிர்ணயித்தது என்றால் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியே ஙே என்று தான் விழிப்பார். தற்போது அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை பசுமைவழி சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிவாரண தொகையை விட குறைவு.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கும், விவசாயத்திற்குமான இழப்பீடுகள். சொட்டுநீர் பாசனத்தில் மறுசாகுபடி செய்ய ரூ.75,000 அளிக்கப்படும்.சேதமடைந்த மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும். பயிர்களை மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் அளிக்கப்படும்.முந்திரி பயிர்சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 அளிக்கப்படும். சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் அளிக்கப்படும், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் அளிக்கப்படும், 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,92,500 நிவாரணம் அளிக்கப்படும்.

சுகாதாரத்துறைக்கு ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சித்துறைக்கு ரூ.25கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு ரூ.5கோடியும் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று குடிநீரில் கழிவு நீர் புகுந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

-காயத்ரி

499total visits,1visits today