சாமி ஆட்டம்

0
122
சின்ன வயசுல உடம்பு சரியில்லாம இருந்தப்போ, வீட்ல வேண்டியிருந்தாங்க ஒரு நேர்த்திக்கடன். அத கல்யாணத்துக்கு முன்னாடி செய்யனும் சொல்லிட்டாங்க. என்னனு கேட்டா, இந்த முதுகுல கொக்கி மாதிரி குத்தி சின்ன தேர இழுப்பாங்கல்ல அந்த வேண்டுதலாம். ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி என் கிட்ட இத நிறைவேத்தனும்னு சொன்னாங்க. நமக்கு கேட்டவுடனே அல்லு இல்ல. இந்த மாதிரி வேண்டுதல் வச்சா நான் மதம் மாறுறத தவிர வேற வழி இல்லனு சொன்னேன்.
சரி, பய பயப்படுறானேனு சொல்லி, சாமி கிட்ட குறி கேப்போம்னு போய் கேட்டிருக்காங்க.. அவர் என்ன பயபுள்ள இத்தாதண்டி இருந்துட்டு தம்மாதுண்டு கொக்கிக்கு பயப்படுறானேனு நினைச்சு, கருணையின் அடிப்படையில சரி போனா போவுது ஆயிரங்கண் பானை எடுங்கனு சொல்லி வேண்டுதல்ல கொறைச்சிட்டார்.. நானும் சரி பானை தான தூக்கிருவோம்னு ஒத்துக்கிட்டேன். இதுக்கு மேல கேட்டா சூடத்த கொளுத்தி மூஞ்சுல போட்டுருவாருனு விட்டுட்டேன். சரி வேண்டுதல் நிறைவேத்துற நாள் வந்துச்சு..
என்னோட வேண்டுதலுக்கு, வேற ரெண்டு உயிரையும் பலியாக்க ரெடியா வச்சிருந்தாங்க. கெடா வெட்டாம். இருக்கன்குடி மாரியம்மன் கோவில்ல தான் வேண்டுதல். விடியகாலை நாலு மணிக்கு கெளம்புற பிளான். வீட்ல சாமி கும்பிட்டுட்டு, கெடா கிட்ட உத்தரவு வாங்கிட்டு லாரில கெளம்பனும். ரெண்டு லாரி. கெடாக்கள் கிட்ட உத்தரவு வாங்க அதுக மேல தண்ணியத் தொளிச்சு தலைய ஆட்டுமானு பாத்திட்டிருந்தாங்க. தலைவர்கள் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்கும் போல. தலைய அசைச்சா போட்டுருவாங்கனு நினைச்சிருக்கும் போல. அசைக்கவே இல்லயே..
நம்மாட்களும் விடாம காதுல எல்லா தண்ணிய ஊத்தி பாத்தாங்க.. இதுல என்னைய வேற அதுக கால்ல விழுந்து எதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிருனு சொல்ல சொன்னாங்க.. நானும் இந்த உடம்ப வச்சுட்டு கெடாக்கள் முன்னாடி உருண்டுட்டிருந்தேன். ஒரு வழியா கொஞ்சம் குளிர் காத்து வீசுச்சு.. ரெண்டு பேருக்கும் நடுக்கம். குளிர்ல உடம்ப குலுக்கிறிச்சுங்க..ஒரு வழியா உத்தரவு வந்துருச்சுனு வண்டி ஏறியாச்சு.. மணி 6 ஆய்டுச்சு.
ரெண்டு மணி நேரமா உயிருக்குப் போராடிட்டிருந்த கெடாக்கள் கண்ல பரிதாபம். கோவம் எல்லாம் சேர்ந்து என்னையப் பாத்து மொறைச்சுச்சு.. என்ன செய்ய? மட்டன் சாப்பாட நினைச்சா நாக்குல எச்சி ஊறுச்சு .. சரினு அங்க போய் இறங்குனா, இன்னொரு இடி ரெடியா வச்சிருந்தாங்க. ஆயிரங்கண் பானை தூக்குறவங்க மொட்டையும் போடனும்னு. முடியாதுனு எவ்ளோ சொல்லியும் கேக்காம முடிய எடுத்துட்டாங்க. சரி சொந்தங்களுக்காக முடி துறந்தான் ஞானவெட்டியானு சரித்திரம் பேசட்டும்னு விட்டாச்சு. அடுத்து ஆயிரங்கண் பானை எடுக்கும் வைபோகம். இங்க தான் நம்ம டாபிக்கோட விஷயமே எண்டர் ஆகுது. சாமி வந்தா தான் பானைய கைல கொடுப்பாங்களாம்.
நல்ல மேள சவுண்டு , ஆனா எனக்கு எல்லாமே வேடிக்கையா தான் இருந்தது. ஒன்னுமே ஆகல.. எல்லாரும் வேப்பில்லை கொடுத்து, மஞ்ச தண்ணி கொடுத்து சாப்பிடச்சொல்றாங்க. மேளக்காரங்கள இன்னும் கொஞ்சம் சவுண்டா அடிக்கச் சொன்னாங்க. நான் சும்மா கல்லு மாதிரி இருந்தேன். எல்லாருக்கும் டவுட் வந்திருச்சு இவன் விரதம் இருந்தானா இல்லைய்யா?? இவங்க வீட்ல சரியா விரதம் இருக்கலைனு சொன்னாங்க.
உடனே அம்மாவுக்கு அழுக வந்தது. எனக்கு கோவம் வந்தது. திடீருனு சாமி வரும்னு சொன்னா எப்படி வரும்?? என்ன செய்ய.. இப்படியே ஒரு மணி நேரம் ஓடிப்போச்சு.. இப்போ தான் மாமா ஒருத்தர் காதுல வந்து டேய் இப்படியே நின்னூட்டிருந்தா இன்னைக்குச் சோலிய முடிச்சிருவாங்க. நீ லைட்டா உடம்ப அசைச்சிரு. அப்படியே நாங்க பிடிச்சு மூவ் பண்ணிறோம். இது நல்ல ஐடியாவா இருக்கேனு உடம்ப லைட்டா முன்னும் பின்னும் அசைச்சேன். உடனே சாமி வந்துருச்சுனு கொலவ விட்டு கூட்டத்த மூவ் பண்ணிட்டாங்க.. நானும் பானைய வாங்கிட்டு கொண்டு போய் சேத்துரலாம்னு கைய நீட்டுனா உள்ள தீ எறிஞ்சிட்டிருக்கு.
அடேய்களா ஒரு நாளைக்கு எத்தன சோதனைனு நினைச்சு அத நினைச்சு ரெண்டு தடவ உடம்பு குலுக்குனேன். சரி சாமி தீவீரமாய்டுச்சுனு சொல்லி அனைச்சாப்பலயே கூட்டிட்டு போய்ட்டாங்க. போய் நேர்த்திக்கடன் செலுத்திட்டு சாமி கும்பிட்டு மட்டன் சாப்பிட்டு வந்தாச்சு.
ஒரே ஆறுதல் மட்டன் சாப்பாடு.. ஆனா அங்க வேண்டுதலுக்கு வந்ததுலயே நான் ஒருத்தன் தான் போலி சாமியார் போல. மத்த எல்லாரும் உண்மையாவே சாமி ஆடுனாங்க.. இதுல எங்க கூட வந்த 10 வயது சிறுமிக்குக் கூட சாமி அருள் வந்தச்சு. ஆனா எப்படினு தெரியல…
 –ஞான வெட்டியான்

510total visits,1visits today