சொட்டாங்கல் – புத்தக விமர்சனம்

0
46

எங்க ஊர்ல இந்த விளையாட்டை தட்டாங்கல் என்று சொல்லுவோம். அஞ்சு கல் வைத்து விளையாடலாம். அப்படியே எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். சில சமயங்களில் அரை குட்டிச் சாக்கு அளவுக்கு கல்லு சேகரித்து வைத்து விளையாடுவது வழக்கம். ஒரு கல்லு மேல தூக்கி போட்டு ஒரு கல்லு கையில் எடுக்கனும். அப்புறம் இரண்டு கல்லு சேர்த்து, மூன்று கல்லு சேர்த்து, நாலு கல்லு சேர்த்து எடுக்கலாம். என்ன ஒரு சிக்கல் என்றால் ஒரு கல்லு கூட இன்னொன்று இடித்து விட கூடாது. அலுங்காமல், குலுங்காமல் மேல போட்ட கல்லு கீழே வரும் முன்பு எடுத்துட்டு இரண்டையும் சேர்த்து கையில் வைக்க வேண்டும். இந்த கதை முழுவதும் இந்த விளையாட்டு தான் விளையாடப் பட்டு இருக்கிறது. தனியாக, சில சமயங்களில் கூட்டாக கதாபாத்திரங்கள் இந்த கற்களின் பங்களிப்பை செய்துள்ளார்கள்.

கதைக் களம் மதுரை. கால கட்டம் கோரிப் பாளையம், செல்லூர் எல்லாம் தனித் தனியாக கிராமங்களாக இருந்த போது ஆரம்பிக்கின்றது. வைகைக் கரையோரம் அழகிய அரசாங்கம் சையத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா – சையது சுல்தான் சம்சுதீன் அவுலியா நடத்தும் இராஜாங்கத்தின் என்பது ஆண்டு கால வரலாறு, அதைத் ஒட்டிய நிலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்து இருக்கின்றது.

அய்யங் கோட்டை ஆகாசப் பிள்ளை, குல தெய்வம் கருப்பண்ணன் சாமி வழி காட்டுதலின் படி பிறந்த ஊரை விட்டு பெயர்ந்து வந்து சாமி கை காட்டிய இடத்தில் நிலம் வாங்கி உழுது பிழைப்பை தொடங்கினார். அந்த இடம் வேளார் வலவு என்று அழைக்கப்பட்டது. அவரின் உறவின்முறை ஏழெட்டு பத்து தலைமுறைகளாக பதியம் போட்டு இருந்தது.

பதினெட்டு கோட்டை சந்தன தேவரும் அதே கால கட்டத்தில் பூதகுடியில் இருந்து கிளம்பி கோரிப்பாளையம் வந்தவர் தான் கோவில் காசை சுருட்டிக் கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம், புள்ள குட்டிகளுடன் சாயபு சந்திக்குப் பக்கத்துல போயிரு என்று அருள் வந்த பூசாரியால் நாடு கடத்தப்பட்டு இங்கே வந்து சேர்ந்து அவரும் சாயபு சந்நிதிக்கு பக்கத்துல வயக்காடுகள் வாங்கி விவசாயம் செய்து அதே அம்மனால் பழி வாங்கப்பட்டு இறக்கிறார்.

இவ்வாறு கோரிப்பாளையம் பல தரப்பட்ட ஜாதி மக்களால் விரிவு அடைகிறது. அங்கு கடை போட வரும் ஜோசப் நாடார் அருகே சர்ச் வர வழி வகுக்கின்றார். ஏற்கனவே உள்ள திருவுடையார் கோவில், சர்ச், தர்ஹா எல்லாம் முக்கூட்டு கல் அடுப்பு மாதிரி இருக்கின்றது.

கதையின் அடிநாதம் இந்த தர்ஹாவிற்கு வடக்கு பக்கத்தில் இருந்த அடுக்கு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ள நிலம் ஒரு முஸ்லீம் குடும்பத்திற்கு உரியது. அந்த குடும்பத்தில் உள்ள முக்கியமான இரண்டு பேர், காஜா முகைதீன் என்ற காட்டுப் பய என்ற காட்டுவா, மற்றும் ரஃபியுத்தீன். காட்டுவா அவனது நண்பன் டாக்கா வுடன் சேர்ந்து செய்யாத செய்கைக்கு காவல் துறையிடம் மாட்டும் போது தப்பித்து ஊரை விட்டு செல்கிறான் ரஃபியுத்தீன் குடும்பத்தில் உள்ள குழப்பத்தில் ஊர் விட்டு டெல்லிக்கு சென்று லயசன் ஆபிசராக மாறுகிறான். ஒரு கால கட்டத்தில் அறுபது ஆண்டுகள் கழித்து திரும்ப சொந்த ஊருக்கு திரும்பும் நினைவலைகளை புரட்டிப் போடுவது தான் இந்த நாவல்.
கந்து வட்டி, செய்கை செய்வது, அதை யொட்டி அரசியல் செய்வது, அமைச்சரிடம் நெருக்கமாக இருப்பது, என்று சாதாரணமாக பச்சை கட்டம் போட்டு மதுரைக்கு வந்த ஒருவன் முட்டை முருகன் ஆக முட்டை காண்ட்ராக்ட் எடுத்து அமைச்சரின் வலது கரமாக மாறுவது, அமைச்சரின் மகனுக்கு நண்பனாகி, நேர்மையான முறையில் ஒரு பெரிய அளவில் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடத்தி முட்டை முருகன் அளவிற்கு வளர்ந்து நிற்கும் சங்கு முத்தையா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் , சம காலத்தில் மதுரையில் நடக்கும் ரவுடியிசத்தை, அதன் ஆரம்பத்தை, வளர்ச்சியை, தற்போது இருக்கும் நிலையை, திருமங்கலம் பார்முலா என்ற ஒரு சூத்திரத்தை இந்திய அளவில் அறிமுகம் செய்வதற்கான அச்சாரத்தை, இப்போ இரண்டு சாதி மட்டும் தான், காசு உள்ளவன், காசு இல்லாதவன் என்று தற்போதையை, மதுரையின் அரசியல், பொருளாதார நிலையை இந்த நாவல் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்கின்றது.

வசதியில் குறைந்த தன்னுடைய ஜாதி காரனை பார்த்து, அப்புறம் ஏதாவது இல்ல விழா, மொய் விழா என்று ஏதாவது நடத்தி வரும் வருமானத்தை வைத்து, நம்ம குலத் தொழிலாளி பைனான்ஸ் நிறுவனம் நடத்தி பிழைத்து கொள் என்று சங்கு முத்தையா, நடைமுறையில் உள்ள வழக்கத்தை சொல்லும் போது, அட என்று தான் சொல்ல தோன்றியது.

சங்க கால தமிழ் வளர்த்த மதுரையில், ஆளும் கட்சி பேச்சாளர் வெடிகுண்டு தங்கம்மா, தங்களுடைய எதிர்க்கட்சிகளை ஒன்று விடாமல் வரிசையில் திட்டும் போது தற்போது இணைய உடன் பிறப்புகளை முக நூலில் திட்டும் நபர்கள் கண்ணுக்கு முன்பு வந்து சென்றனர். அவர்கள் எல்லாம் வெடிகுண்டு தங்கம்மாவிடம் கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது.

கம்யூனிசம் பேசும் இளைஞர், கட்சி முன்பு மாதிரி தற்போது இருப்பை தக்க வைத்துக் கொள்ள எதுவும் செய்ய வில்லை என்று வருந்துகிறான்.

முதல் அத்தியாயம் மற்றும் கடைசி அத்தியாயத்தில் மட்டும் தான் முஸ்லிம்கள் அவர்கள் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கோரிப் பாளையம் தர்ஹாவின் சந்தன கூடு திருவிழா, கபால்கான் கவாலி பேசப்படுகின்றன. மற்ற இடங்களில் மதுரை லோக்கல் ரவுடியிசத்தை சம கால அரசியலை, குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.

நிகழ்கால மதுரை எழுத்து வடிவில்..

-Dr. இராதாகுமார் M.B.B.S., M.D., D.M

(வாசிப்போம் நேசிப்போம் முகனூல் குழுவிலிருந்து…..)

1990total visits,10visits today