தரமணி – சினிமா விமர்சனம்

0
105

தரமணி

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஒரு (காதல்) கதை. அல்ட்ரா மாடர்ன் பெண்ணுக்கும், அக்மார்க் ஆம்பளைத்தனமான பையனுக்குமான காதல்தான் கதை. ஆனால் வெறும் கட்டிபிடித்து டூயட் பாடி முத்தமிட்டு கலவிக்கொண்டு, அடித்துக்கொண்டு பிரிந்துச்செல்லும் இருவர் வாழ்வு மட்டுமல்ல, இருவரோடு இணைந்து, அவர்கள் வாழும் சூழலையும், அவர்களுக்கு தொடர்புள்ள மாந்தார்களையும், அவர்களது வாழ்க்கை தரத்தையும், அவர்களுக்கு தொடர்பில்லாத மாந்தரையும், அப்படியனவர்களை உள்ளடக்கிய இச்சமுக சூழலையும் அப்பட்டமாக காட்டிவிட்டு இந்த இருவர் கதையை மட்டுமே நகர்த்தும் கதை..

u

முதல் காட்சியின் முப்பதாவது நொடியிலேயே துவங்கி விடுகிறது திரையரங்கின் கரவோசை, கதைக்கு பின்னிருந்து ஒலிக்கும் இயக்குனர் ராமின் ஒவ்வொரு குரல்ஓசைக்கும் அடங்க. மறுக்கிறது ரசிகனின் கரவோசை.

இன்றைய சூழலில் கிரிக்கெட்டில் இந்தியா தோத்துடும்னு நினைக்கிறதே தேசத்துரோகம்னு துவங்கி, இன்று இரவு 8மணிக்கு பாரதப்பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு அறிவிச்சு இருக்கார் என்பது வரை இந்த தேசத்தின் நடப்பு சூழலை பொட்டில் அடித்தாப்போல் பேசிவிட்டு சென்று இருக்கிறார். இல்லை தன் எதிர்ப்பை ஆழமாக பதிவு செய்து இருக்கிறார். அரசை மட்டுமல்ல ஏரிகளை கான்கிரிட் கட்டமாக்கிய, அந்தக்கட்டிடத்தை அந்நிய நிறுவனமாக்கிய, அந்த நிறுவனத்திற்கு ஏவல் அடிமையாகிய, அதை உருவாக்கவே பிறந்த பீகார் அடிமைகள் முதல் கொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறது இந்த “தரமணி”யின் இரயில்.

ஐடியில் வேலை பார்க்கும், சிகரெட் பிடிக்கும், மது குடிக்கும், மினிஸ்கர்ட் போட்ட, அப்பார்ட்மெண்ட்டில் வாழும், ஆங்கிலோ இண்டியன் பெண்ணும் எந்த சூழ்நிலையிலும் பத்தினியாக இருப்பாள், எந்த நேரமும் புருசனுக்கு பணிவிடை செய்துக்கொண்டு, புருஷன் நலனே தன்நலம் என்று இருபது ஆண்டுகள் நான்கு சுவருக்குள் இருந்து குடும்பம் நடத்தும் ஹௌசிங் போர்ட் மிடில்கிளாஸ் பெண்ணும் சலனப்படுவாள்,
ஒருப்பெண் ஒழுக்கமாக இருப்பது பெண்ணின் தேவையை பொறுத்தது என்பதை மிக அழகாக கூறி இருக்கிறார். வழக்கம் போல ராமின் இந்த படத்திலும் தனியாக வில்லன் இல்லை, சமுகமே வில்லன். யாரும் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை. என்பதாக நகரும் கதைதான்.

ஆண்ட்ரியா. இந்தக்கதைக்கு இவர் தான் சரியான தேர்வு. வேறு யாரும் இவ்வளவு கச்சிதமாய் பொருந்தி போயிருக்க முடியாது. அவ்வளவு எதார்த்தம். தனது பாதுகாப்பு இன்மையை மறைத்து தான் தைரியமான பெண் என்று ஒவ்வொரு நொடியும் நிருபித்து, உள்ளுக்குள் உருகும் காதலை மறைத்து காதலனிடமும் கெத்து காட்டும், பேரழகி. “கே”வான தன் கணவனை புரிந்துக்கொண்டு அவன் உடைந்து விடாத படி, அழுத்தமாய் அவன் கை பிடித்து, ஆறுதலாய் நின்று நானே விலகி விடுகிறேன், நான்தான் தப்புன்னு சொல்லுன்னு தைரியமா விலகி நிற்கும், ஆறு வயது பையனுக்காக வாழும் ஒற்றைத்தாயாய், இரண்டாவதாய் வந்த காதலை ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் போராடும் “ஆல்தியா” செம அப்ளாஸ்.

அஞ்சலி. ஐடி கம்பேனிக்கும் சுடிதாருக்கு துப்பட்டா போட்டு வரும், சேலை கட்டிவரும், டீம் லீடார் திட்டியதற்கு ஓ வென்று அழுது வடியும் அந்தக்காலத்து அஞ்சலிதேவி, அமெரிக்காவில் ஸ்லீவ் லெஸ் டாப், மைக்ரோ மினி ஸ்கர்ட் என்று ஆஞ்சலினோ ஜூலியாக மாறும் “அற்புத சௌம்யா”வாக வழக்கம் போல ஸ்கோர்களை அள்ளிச்செல்கிறார். நட்புக்காக கெஸ்ட் ரோல் செய்தாலும் ரொம்ப பெஸ்டா செஞ்சு இருக்கார்.

வசந்த்ரவி. வழக்கமான புதுமுக நாயகர்கள் போல முகபாவங்கள் வராமல் தப்பிக்க தாடிக்குள் ஒளிந்துக்கொண்டுள்ள நாயகன், நல்ல சிவப்பு, ஒல்லியான தேகம், MA ஆங்கிலம் படித்த BPO வேலை பார்க்கும், கிராமத்து இளைஞன் பாத்திரத்திற்கு அவ்வப்பொழுது பொருந்தி போகிறார். நடிப்பில் இன்னும் நிறைய கவனம் தேவை.
ஐடியில் வேலை பார்ப்பவர்களை, பணக்காரர்களை சாடும், திறமை இருந்தும் இன்னும் முன்னேறவில்லை என்று அங்கலாய்க்கும், தன் வன்மத்தை வேறு வடிவில் போக்கிக்கொள்ளும் “கற்றது தமிழ் – பிரபாகரனும்” தன் இயலாமையை எண்ணி வருந்தும் “தங்க மீன்கள் – கல்யாணி”யும் நினைவு வருவதை தவிர்த்து இருக்கலாம். மற்றபடி காதலியின் சாம்பாத்தியத்தில் வாழ்ந்தாலும் சந்தேகப்படும், ஆளுமைச்செலுத்த நினைக்கும் ஆம்பளைத்தனம். காதலியை பேஸ்புக்கில் நோட்டமிடும் கயவாளித்தனம், முன்னாள் காதலியை பழிவாங்க செல்பி எடுக்கும் திமிர்த்தனம், பெண்களின் எண்ணை திருட்டுத்தனமாக திருடி, பேசி மயக்கும் ரோமியோவாக அயோக்கியத்தனம். பழகியவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று எண்ணம் கொண்ட, இரயிலில் இறந்துப்போன பெரியவரிடம் திருடிய பணத்தை அந்தக் குடும்பத்திடம் கொடுக்க அலையும் யோக்கியத்தனம். என்று கலந்துக்கட்டிய நாயகன் தமிழ் சினிமாவிற்கு புதிதுதான். அதனால் பாராட்டுகள்.
இந்த மூன்றுப்பேர் மட்டுமே இந்தக்கதையின் மாந்தர்கள், இந்த மூன்று பேரை தாண்டி வழக்கமான திருநெல்வேலி வட்டாரமொழியோடு அழகம்பெருமாள். ஆண்ட்ரியாவின் மகன் இருவர் மட்டுமே துணைப்பாத்திரங்கள். மற்றபடி அனைவரும் கதைக்கு வழிப்போக்கர்களே.

எல்லோருக்கும் அறிமுகமாத, அதுவும் சென்னையை தாண்டிய இந்த தமிழ் நாட்டிற்கு சுத்தமாக அறிமுகமாகாத எந்திரத்தனமான கட்டிடங்கள் எழுந்து நிற்கும் ஐடி சூழ் வாழ்வைக்கொண்ட வடசென்னை, தென்சென்னை எதிலும் சேராத ஆனால் சென்னையின் ஒரு அங்கமான “தரமணி” ஏரியாவே புதுசு. அது போல லிவிங் டு கெதர் லைப், மது, சிகரெட் குடிக்கும் ஆறு வயது பையனுக்கு அம்மாவாக நாயகி, காதலியின் சாம்பாத்தியத்தில் வாழ்த்துக்கொண்டு எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுகொண்டிருக்கும் நாயகன் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப ரொம்ப புதுசு.

பேஸ்புக், டிவிட்டர் மாதிரி அவ்வபொழுது பின்னிருந்து ஸ்டேட்டஸ் போடும் இயக்குனர் ராம்-ன் இந்த பார்முலா ரொம்ப புதுசு. ஒரு காதல் ஜோடிகளுக்கு இடையேயான இந்தக்கதையில் தமிழக மீனவர் பிரச்சனை, பீகார் ஒரிசா கட்டிட்டத்தொழிலாளிகள் (அவன் உபயோகிக்கும் புகையிலை) பிரச்சனை, தற்கொலைக்கு தீர்வு சொல்லும் 104 சேவை, சமுக வலைத்தளங்கள் மூலம் நிகழும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விசயங்களை மேலோட்டமாகவும், பேசுவதற்கு ஆள் இல்லாமல் தவிக்கும் தனிமைப்பெண்கள் துயரங்களை அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் ராமிற்கு பாராட்டுகள்.

பாடல்கள்: நா.முத்துக்குமார். தமிழ் கூறும் நல்லுலகு ஒரு தவப்புதல்வனை இழந்து தவிக்கிறது. உன் அழகுத்தமிழ் கவியை இனி எங்கே கேட்பது.

இசை: யுவனுக்கு எப்பொழுதும் ராம் ஸ்பெசல்தான். அது இந்த கதையிலும் தொடர்கிறது. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையிலும் தான் ஒரு இசைப்பிதாவின் மகன் என்பதை நிருபித்துள்ளார்.

ஒளிப்பதிவு: தேனீ ஈஸ்வர். பெரும்பாலும் காட்சிகள் கழுகுப்பார்வையில்தான். அப்பார்ட்மெண்ட், வீடு, வான், ரயில் நிலையம், ஆபிஸ், நாகூர், கடல், கடற்கரை, லிப்ட், பப் ரயிலடி, மழை, வெயில் அனைத்தும் உயிரோடு இருக்கிறது.
இயக்கம்: ராம். பிரியங்களும் முத்தங்களும்.

– Senthilkumar Nagarajan

2783total visits.