தொடுவானம் தொலைதூரம் பாகம் – 1

0
57

முன்பகல் நேரத்தில், அந்தத் தனியார் மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியும், துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. குழந்தை பிறந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த தந்தை…, அன்னையின் ஆபரேஷனுக்குத் துணை இருக்கும்படி வேண்டிக் கொள்ளும் குடும்பம்…, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்ட சிறுவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்த பெற்றோர்…, என அவரவர் தங்கள் பிரச்சனைகளுடன் இருக்க, இவை எதையுமே கவனிக்காமல் வராண்டாவில் கால் கடுக்க நடந்து, தன் இறுக்கத்தையும், வேதனையையும் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் சைலேஷ்.

உடனிருந்த அவனது ஆருயிர் நண்பன் குணாவின் வார்த்தைகள் கூட, அவனைத் தேற்ற முடியவில்லை. அவனின் உடலிலிருந்த ஒவ்வொரு செல்லும், மயூரி! மயூரி! என்று புலம்பிக் கொண்டிருந்தது.

அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்த டாக்டரைக் கண்டதும், வேகமாக அவரருகில் சென்றான்.

“டாக்டர்! என் மயூரி எப்படி இருக்கா?” என்று கேட்டவனது வார்த்தைகளை அவர் உள்வாங்கிக் கொண்டு திரும்பப் பதில் சொல்வதற்குள், தவித்துப் போனான்.

அவனை ஊன்றிப் பார்த்தவர், “நீங்க…?” என்றார்.

“நான்… மயூரியின் கணவன்… சைலேஷ்” என்றான்.

“ஓஹ்!” என்றவர் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் தனது அறையை நோக்கி நடந்தார்.

திகைத்த சைலேஷ், “மே..டம்..!” என் மனைவி எப்படியிருக்கான்னு கேட்டேனே? அவளுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

நிதானமான பார்வையை அவன் மீது செலுத்திய டாக்டர், “இப்போதாவது அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்கணும்னு உங்களுக்குத் தோணியிருக்கே… ரொம்ப சந்தோஷம். நேத்துல இருந்து ஒரு அநாதை மாதிரி அந்தப் பொண்ணு ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கா. அவளைத் தேடணும், கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்னு ஏன் தோணலை உங்களுக்கு?” என்று கோபத்துடன் கேட்டார்.

“நான் பத்து நாளா ஊரிலேயே இல்ல… எனக்குத் தெரிந்த இடமெல்லாம் தேடினேன். ஆனா…” அவனது வார்த்தைகள் தவிப்புடன் வந்தன.

“ஆனா…, கம்ப்ளெயிண்ட் கொடுக்கனும்னு மட்டும் தோணலை…” என்று அழுத்தமாகக் கேட்டார்.

“அது… கோபத்தில் எங்கேயாவது போயிருப்பான்னு நினைச்சேன்” என்றவன் குற்ற உணர்வில் தவித்துப் போனான்.

அவனது உணர்வுகளை புரிந்து கொண்டவராக சற்று அமைதி காத்த டாக்டர், “உங்களோட அன்பும், பாசமும்… உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுதான் அவங்களை மீட்டு, உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு…” என்றார்.

“தேங்க்யூ டாக்டர்! நான் அவளைப் பார்க்கலாமா?” என்று கேட்டான் சைலேஷ்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல, ரூமுக்கு மாத்திடுவாங்க. அப்புறம், நீங்க கூடவே இருக்கலாம். இன்னொரு சந்தோஷமான விஷயம். இத்தனை மோசமான நிகழ்விலும், அவங்களோட வயிற்றில் வளரும் குழந்தைக்கு, எந்தப் பாதிப்பும் இல்லை!” என்றார் மருத்துவர்.

அவரது வார்த்தைகளில், சந்தோஷம், ஆச்சரியம், அதிர்ச்சி, என அத்தனை உணர்வுகளிலும் மூழ்கி எழுந்தான் சைலேஷ்.

“தூங்கறதுக்கு மருந்து கொடுத்திருக்கிறோம். நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நான் ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

டாக்டர் அங்கிருந்து அகன்றதும், “டேய் மாப்பிள்ளை! வாழ்த்துகள்டா!” என்று குணா சந்தோஷத்துடன் சைலேஷின் கரத்தைப் பிடித்துக் குலுக்கினான்.

அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு இறுகிய முகத்துடன், இங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் சைலேஷ்.

“சியர் அப் மேன்! மயூரிக்குத் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லியாச்சே. இன்னும் என்னடா…? உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கும், கெடுதலா எதுவும் நடக்காது. இனியாவது, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்” என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான் குணா.

ஆனால், அவனது வார்த்தைகள் சைலேஷின் கவலைகளை குறைப்பதற்குப் பதிலாக, அவனுடைய மனத்தை மேலும் ரணமாக்கியது.

‘நடந்த தவறுகளையெல்லாம் எப்படிச் சரி செய்வது?’ என்ற கேள்வி அவனை மருட்ட, நண்பனைக் கையாலாகத்தனத்துடன் பார்த்தான்.

நண்பனின் முகமே அவனது மனப்போராட்டத்தை விளக்கி விட, குணா அவனை வேதனையுடன் பார்த்தான். சற்று தொலைவில் அமர்ந்திருந்த ஷைலேஷின் தந்தை கேசவனைப் பார்த்தான்.

மகனைத் தேற்ற வருவாரென்று எதிர்பார்த்த குணாவிற்கு, அழுத்தமாக சற்றும் அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருந்தவரைக் கண்டு ஏமாற்றமாக இருந்தது. அதேநேரம் அவனது மொபைல் ஒலிக்க, எடுத்துப் பேசிவிட்டு சைலேஷின் அருகில் வந்தான்.

“சைலேஷ்! நீ வீட்டுக்குப் போய் ஒரு ரெண்டு மணி நேரமாவது ரெஸ்ட் எடுத்துட்டு வாடா. ரொம்ப டயர்டா தெரியற” என்றான்.

“ரெஸ்டா! என்னோட முட்டாள்தனத்தால நான்… என் மயூரியைத் தொலைச்சிருப்பேன்டா!” என்று சற்று உரத்தக் குரலில் சொன்னவன். “இனியும் அந்தத் தப்பைச் செய்யறதா இல்ல. ரம்யா உன்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. நீ கிளம்பு!” என்றான் சாதாரணமாக.

நீண்ட பெருமூச்சை வெளியிட்ட குணா, அவனருகில் அமர்ந்தான்.

“டேய்! கிளம்பலையா? உன்னைத் தானே சொல்றேன்?” என்று எரிச்சலுடன் உரைத்தான் சைலேஷ்.

“முதல்ல மயூரி ரூமுக்கு வரட்டும். அதுக்கு அப்புறமா நான் கிளம்பறேன்…” என்று திடமான குரலில் சொன்னான்.

நெகிழ்சியுடன் நண்பனது கரத்தைப் இறுகப் பற்றி, கண்களாலேயே தனது நன்றியைத் தெரிவித்தான் சைலேஷ்.

“டேய்! என்னடா இது?” என்று குணா ஆறுதலுடன் அவனது கரத்தை தட்டிக் கொடுத்தான்.

நேரம் கடந்து கொண்டிருந்தது.

மயூரியைத் தனியறைக்கு மாற்றிய பின் கேன்டீனிலிருந்து உணவு வாங்கி வந்து, சைலேஷை வற்புறுத்திச் சாப்பிட வைத்தான். கேசவனிடம் சென்று பேசிவிட்டுகிளம்பினான்.

*********

மயூரியின் அருகில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்த சைலேஷ், அவளது முகத்தையே பார்த்தான். கை கால்களில் சிராய்ப்பும், சில இடங்களில் காயங்களும் இருந்தன. நெற்றியில் ஒரு கட்டும், இடது உள்ளங்கையில் ஒரு கட்டும் போடப்பட்டிருந்தது.

வலது கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க, இடது கையை எடுத்துத் தன் கன்னத்தில் பதித்துக்கொண்டான்.

மருந்துகளின் வீரியத்தில் சலனமேயில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தவளது கையில் மெல்ல முத்தமிட்டான்.

“மயூரி..! மயூ…! உன் பேரைப் போலவே நீ எத்தனை மென்மையானவள். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத உனக்கு, என்னால்தானே இத்தனைக் கஷ்டமும்? எத்தனை நாள், உன்னை வார்த்தையாலேயே கஷ்டப்படுத்தி  இருக்கேன். எனக்காகவே வந்த தேவதை நீ! ஆனால், சுலபமாகக் கிடைத்ததால், உன் அருமை எனக்குப் புரியாமலேயே போயிடுச்சி.

இந்த இரண்டு நாள்ள, உன்னோட அருமையை உணர்ந்துட்டேன் மயூ. எனக்கு நீ வேணும். நம்ம குழந்தை வேணும். வாழ்க்கை முழுவதும் உங்களை நான் பத்திரமாக பார்த்துக்குவேன். நீ மட்டும் என்னை மன்னித்துவிடு கண்ணம்மா!” என்றவன், அவள் அருகிலேயே கட்டிலில் தலை சாய்த்தான்.

முதன் முதலில் மயூரியைச் சந்தித்த நாள் அவனது நினைவில் வலம் வந்தது.

ஷெண்பா

414total visits.