மூன்று கால் நாய்

0
70

ஞாயிறு மாலை திங்கள் பாரத்தை தூக்க வலிமை சேர்க்கும் நேரம். அடுத்த ஐந்து நாட்கள் கடத்த தேவைப்படும் வலிமை ஒரு கோவில், ஒரு ஷாப்பிங், ஒரு டின்னரில் சம்பாதிக்கும் அந்த எண்ணத்தில் சென்னை ட்ராபிக்கில் சிக்கி நேரத்தை மனித முகத்தை ஆராய்வதில் கோர்த்துக்கொண்டிருந்தேன். சாலை முழுவதும் வித விதமான கார், பஸ், இருசக்கர வாகனம். ஒரே போல் மனநிலை, எப்போடா இடம் போய் சேருவோம்.

இருசக்கர வாகனத்தில் நாலு பேர்! இரண்டு  முழு டிக்கெட், இரண்டு அரை டிக்கெட். ட்ராபிக்கில் சர்க்கஸ். காருக்குள் ஏசியில் சுற்றம் மறந்து போன் நோண்டும் பயணி, சிலை போல டிரைவர். வேடிக்கைக்கு பஞ்சம் ஏது. பார்வை சுழன்றுக்கொண்டிருந்தது.

“சீக்கிரம் கார் வாங்கனும், பாரு அந்த பஸ் புகை முழுக்க என் முகத்தில் தான்”

“அப்படியா?” பதில் அவ்வளவே. காத்திருப்பு கொடுக்கும் அக்கறையின்மை அது, ஹெல்மெட் மாட்டியிருப்பவர்க்கு நான் என்ன பேசினாலும் பதிலுக்கு அவர் என்ன பேசினாலும் தகவல் பல என்னது “என்னது”க்கள் பின்னால் புரியும். அதற்கு எதுக்கு பேசனும்.

பச்சை சிக்னல் விழுந்ததும் ரேஸ்சில் போவதுபோல் எல்லோரும் முறுக்குவதும் பின் இன்னொரு சிக்னலில் நிற்பதும். விடாமல் ஹாரன் கொடுப்பதும். மனஅமைதி  மனஉளைச்சலாக  மாறிப்போனது.     “இன்னும் எவளோ நேரம் ஆகும்  போக” என்று மூன்று முறை கேட்டாச்சு.

உதயம் தியேட்டர் வளைவில் திடீரென்று கிரீச்சிடும் சத்தம். ஒரு நாய்க்குட்டி வலியில் துடிதுடிக்க கதறியது. கேட்ட சத்தம் கொடூரமாக இருந்தது. எனக்கு உயிர் வலித்தது. இரண்டு நிமிட சலசலப்பு. நாய் தப்பிச்சுகிச்சு என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. அதன் கால் பாதம் துண்டாகி ரோட்டில் இருந்தது. பார்த்ததும்  ஐயோ என்றாகி போனது.

வாய் இல்லா ஜீவன் அது. வாய் இருந்தா “பொறம்போக்கு…,பாத்து ஓட்ட தெரியாது” என்று திட்டியிருக்கும் தானே. வலி என்பது எல்லா உயிருக்கும் பொது தானே. வீடு சேரும் வரை கண்ணீர் நிற்கவில்லை.

எண்ணங்கள் முழுதும் வலியும் வேதனையும் அதன் சூழ்ந்து திணறடித்தது. தவிர்க்க முடியவில்லை.

“நாய் தானே ! ஒரு கால் தானே போச்சு!! இன்னும் மூணு கால் இருக்கு, இதுக்கு இவளோ அழுகையா!!” இரண்டு நாளில் இரண்டாயிரம் முறை கேட்டாயிற்று.

யாராக இருந்தாலும் வலி வலிதானே!! மனம் குமுறியது. நாள் ஓட நாய் ஞாபகம் குறைந்தது.

அடுத்த  ஞாயிறு  மதியம் மூன்று மணிக்கெல்லாம் “கிளம்பு நங்கநல்லூர் போயிட்டு, சாப்பிட்டு, சீக்கிரம் வீட்டுக்கு வந்திருலாம், ட்ராபிக் ஆயிடும் ஆறுமணிக்கு மேல். நாளைக்கு எனக்கு சீக்கிரம் ஆபிஸ் போகனும் ”

எனக்கு நாய்க்குட்டி அலறலும், அதன் வேதனையும்  நினைவுக்கு வந்தது. “அசோக் பிள்ளர்  பக்கம் போகாம போகலாமா? இருந்தா  அப்படி போலாம் .”

“சரி போகலாம் வா”

அந்த வளைவு வந்தது. நான் கண்களை மூடிக்கொண்டேன். அதே உயிர் வலி.  நங்கநல்லூர் போயாச்சு. தரிசனம் ஆச்சு. சக்கரை பொங்கல் சாப்பிட்டுவிட்டு கிளம்பியாச்சு.

“டின்னர் வீட்டிலே சாப்பிடலாம், எனக்கு பானிபூரி சாப்பிடனும் போல இருக்கு”

“ஸ்ரீ மிட்டாய் போகலாமா, கங்கோத்ரி போகலாமா”

“எனக்கு ரோட்டோரம் சாப்பிடனும் போல இருக்கு”

“சரி, டின்னர் வெளியே சாப்பிடலாம் நினச்சேன்…”

“இல்லை எனக்கு பானிபூரி போதும், புரசைவாக்கத்துல சாப்பிட்டோமில்ல அங்கே போய் சாப்பிடலாம்”

ட்ராபிக் இல்லை, துணைக்கு வண்டிகள் குறைவாகவே இருந்தது.

“ஏய் எதுக்கு இப்படி சுத்த விடற,”

“சரி அப்போ டவர் பார்க் கிட்டே சாப்பிடலாம்”

“பாரேன்…. இவனை” சடுதியில் இவர் கோபத்தில் கத்த கவனித்தேன்.
ஸ்கோடா கார் ஒன்று முன்னே பின்னே இணையாக வந்து கடுப்பை கிளப்பியது.

“அறிவு கெட்டவன் எப்படி வாரான் பாரேன்” அவர் சொல்ல காரை உற்று கவனித்தேன்.

ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் தெரிந்தவன். “ஐயோ இவனை எதுக்கு பார்த்தோம்” மைண்ட் வாயிசில் சொல்வதாக நினைத்து வாய்விட்டு சொன்னேன்.

அவன் செய்கையில் வண்டியை ஓரம் கட்ட சொன்னான். நான் முடியாது என்று செய்கையில் சொல்லி டாட்டா காண்பித்தேன். அவன் காரை வண்டியை அணைத்து வந்து இடது பக்கம் ஒதுக்கினான்.

“ஏய் அவன் என்ன லூசா” என்று இவர் கத்த இன்னொரு முறையும் இடது பக்கம் ஒதுக்கினான். இம்முறை அறிவுகெட்ட முண்டம்  என்று கூச்சலிட்டு வண்டியை நிறுத்தினார்.

நான்  “என் பிரென்ட்… என் பிரென்ட், என் பிரென்ட் அது” பதட்டத்தை குறைத்தேன்.

“எல்லாம் உன்ன மாதிரியே பைத்தியக்காரங்களா தான் இருப்பாங்க போல”

காரிலிருந்து இறங்கியவன் “சாரிஜி, சாரிஜி… சாரிஜி கோச்சிக்காதீங்க சும்மா விளையாடினேன்”

கோபத்தை காட்டினார். “ரோட்ல என்னங்க விளையாட்டு”

அவன் அதை கவனிக்கவில்லை. “என்ன ஆண்ட்டி எப்படி இருக்கீங்க”
“நல்லா இருக்கேன் சித்தப்பா” சிரித்தான். அவன் கூட இருந்த அந்த குண்டு பெண்ணை கவனித்தேன். உள்ளுக்குள்ளே “காட்… உண்மைதானா இவன் இவளோடவா சுத்திட்டு இருக்கான்” மனதிற்குள் அலறினேன்.

அவள் என்னை பார்த்து குறையாக சிரித்தாள். நான் அதுகூட செய்யவில்லை. என்னவர் கொஞ்ச தூரமாக போய் நின்றுக்கொண்டு கடமையாக போன் நோண்ட ஆரம்பித்தார்.

அவன்…!! லாவகமாக காரை ஓட்டி ஒதுக்கி சேட்டை செய்து நிறுத்தின அவன் அழகன், ஈர்க்கும், ஈர்த்த தோழன். கல்லூரி காலத்து உயிர்தோழியின் முன்னாள் காதலன். தோழியின் தோழிக்கு இந்நாள் காதலன்!! கொஞ்சம் நல்ல நண்பன்.  தோழியை எப்போதும் அவன் எண்ணம் போல நடத்துவான். மீறினால் “என்னை கேட்டு செஞ்சிருக்கலாம் தானே இன்னும் நல்லா ஐடியா கொடுத்திருப்பேன்” என்பான். “கிழிச்சான் செய்ய விடாம தடுத்திருப்பான் கிராதகன்”. மனதில் நினைத்துக்கொள்வேன்.

கல்லூரி நாட்களில் செய்த பல குறும்புகளுக்கு இவனும் ஒரு தடை. தோழிகள் சேர்ந்து பெரிய தலைகளிடம் திட்டு வாங்கி விடுவோம். இவனிடம் அட்வைஸ் வாங்க முடியாது. ஐயோ அறுவை!! “பெயர் கெட்டுப்போனா இன்டெர்னல்ஸ் வராது, பிளேஸ்மென்ட் கிடைக்காது, மாப்பிள்ளை கிடைக்காது” மாடர்ன் ட்ரெஸ் போட்ட எள்ளுக்கொள்ளு தாத்தா என்று நினைத்ததுண்டு. சிலநேரம் அவங்க இஷ்டம். நமக்கென்ன வந்தது. என்றிருப்பான். சிலநேரம் குடைந்து குடைந்து கேள்வி கேட்பான்.

கல்லூரி முதலாம் ஆண்டில் “இவன் நடக்குறானா? மெதக்குறானாடீ” அடிக்கடி தோழியிடம் கேட்பேன். அருகில் வந்து பேசினான் என்றால் கழுத்து தூக்கி பேசி வலி எடுக்கும். கண்ணத்தில் கை வைத்துக்கொண்டு மெய் மறந்து அவன் செமினார் எடுக்கையில் ரசித்ததுண்டு. “ஆய்ய, வாய்மூடு நாலு கொசு உள்ள போயிட்ச்சு ” என்று அவனே கிண்டல் செய்யும் அளவிற்கு ரசித்ததுண்டு.

அவன் “சோ??”

நான் “ம்ம்ம் ஸ்கோடா ஆக்டேவியா, கார் சூப்பர் !!” வியந்தேன். கல்லூரி நாட்களில் பிடித்த செடான் வகை கார். அதன் மேல் வெறியே இருந்தது. அது மொத்த வகுப்பிற்கு தெரிந்தே இருந்தது.

பெருமையாக மாமா வாங்கினார், நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் என்று தகவல் சொன்னான். இவன் வாங்கலையா… அப்போ சரி!! என்று பொறாமை அடங்கி சமாதானம் ஆனேன்.

“எங்க போயிட்டு வறீங்க, வா டின்னர் போகலாம்”

“கோயிலுக்கு போயிட்டு வாரோம், இல்லை, எங்களுக்கு வேற பிளான் இருக்கு” சொல்லிக்கொண்டே அவரைப்பார்த்தேன்.

“என்ன மாமா வுடமாட்டாரா?? என்னமோ பெண்ணியம் விளம்பரம்ன்னுல்லாம் பேசுவ!! இன்னைக்கு சாப்பிட தானே கூப்பிட்றேன், சும்மா வா மாமாவை நான் கூப்பிடுறேன் ” சீண்டி விட்டான். உள்ளுக்குள்ளே குமைஞ்சது.

“பச், இல்லை எனக்கு சாப்பிடலாம் தோணலை, பானிபூரி கடைக்கு போகலாம்னு இருக்கோம்.”

“சரி வா, வடபழனிலே தெறி மாஸா ஒரு கடை இருக்கு, அங்க போகலாம்”

“இல்லை புரசைவாக்கத்திலே சாப்பிடற பிளான்”

“இப்போ என்ன என்னோட வர்றமாட்ட..?? அப்படித்தானே ” கோபப்பட்டான்.

“நா இப்போ இன்னா பண்டேன்!! இப்புடி அவொய்ட் பண்ற” பக்கா சென்னை பையன் தொனி.

நான் ” அவொய்ட் எல்லாம் பண்ணலை, இப்போ இஷ்டம் இல்லை” அவன் சமாதானமாக பேசிக்கொண்டே போனான். கவனித்தேன். கையில் வெள்ளிக்காப்பு, கொஞ்சம் நல்லா சதை ஏறின உடம்பு, கண்ணில் சோர்வு.

அவள் “பச், பச்” என்றபடியே நின்றுக்கொண்டிருந்தாள். தெரிந்தும் அவளை கவனியாது இவனுடன் பார்வையை செலுத்தி வைத்திருந்தேன். அப்படி அவளை நோக்கினாள், எப்படி இருக்கே, வேலை எப்படி போகுது, அப்படின்னு ஆரம்பித்து பேசனும். அதில் சோதனை அதிகம்.

“ஹனிமூன் போயிட்டு  வந்துட்டியா? நண்பன் ஒருத்தன் மஹாபலிபுரம் பக்கம் ரிசார்ட் வாங்கி போட்ருக்கான். நான் சொல்றேன் போவியாம். அங்கிருந்து தான் வர்றோம், நல்லா மசாஜ் பண்ணிக்கிட்டு ” அவன் கிண்டலாக சொல்ல அவள் “சும்மா இரு” என்று அவன் கையில் இடித்தாள்.

பஞ்சதந்திரம் படத்தில் வரும் சிம்ரன் போலே அதிசயமாக, அதிர்ச்சியாக, ஏமாற்றத்துடன் ஜூமில் பார்த்து எரிச்சலாகி போனேன்.

“எனக்கு இன்டெரெஸ்ட் இல்லை” எதிர்மறை பதில்களை கேட்டும் அசராமல் பேச்சை வளர்த்துக்கொண்டே போனான் அவன். மூன்று வருடங்களுக்கு முன் பேசி மிச்சம் வைத்ததெல்லாம் பேசுவதாக எண்ணம் போல.

மனம் ஆயிரம் கேள்வி எழுப்பியது. “இவளுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா?, பிரெண்டிற்கு துரோகம் என்று தெரியாதா? இவன் எக்ஸ்க்கு இது உண்மைத்தான் என்று தெரிந்தால் என்ன ஆகும்?!! போயும் போயும் இவனா கிடைச்சான் இவளுக்கு? எப்படி அவன் அட்வைஸ் தாங்குறா?”

தோழி அவனை கல்யாணம் செய்துக்க முடியாமல் வீட்டில் பார்த்த பையனை கல்யாணம் செய்துக்கொண்டாள். நிறைய அழுதாள். ஆறுதல் செயல்களிலும்    தேவையாக இருக்க, இவனோடான நட்பை நிலுவையில் போட்டேன். அப்படியே நின்றும்போனது.

அவன் பேசிக்கொண்டே அவள் கைகளை பற்றுவதும். அவள் கண்களை பார்த்து சிரிப்பதுவுமாக இருப்பதை கவனிக்க கவனிக்க எரிச்சல் கூடிக்கொண்டே போனது. “இவன் எப்படி ‘எக்ஸ்’ பெஸ்ட் பிரென்டை லவ் பண்ணலாம், அவளுக்குமா அறிவில்லை, அவன் காதல் கதை தெரிஞ்சும் இப்படி அவனோடு சுத்துறா “மனம் இன்னொருபக்கம் திட்டிக்கொண்டே போனது.

மனதின் எண்ணப்போக்கு முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். அவள் சலிப்பும் வெளிப்படையாக தெரிய. அவன் “சரி ஆடி வெள்ளிக்கு கோயில்ல கூழ் ஊத்துறோம். அதுக்காச்சும் வா. கோயில் உனக்கு ரொம்ப பக்கம் தான். அரும்பாக்கத்துல தான். ரொம்ப நல்லா இருக்கும். எங்க குடும்பமே அங்க தான் இருப்போம், வந்து சேரு. “

நான் “சரி வரேன். இப்போ கிளம்புறேன்” இனி தாங்காது என்னாலும்.
அவன் “சரி கிளம்பு காத்து வரட்டும்”

நான் பூடகமாய் “அடிக்கற காத்துக்கு ஏற்கனவே கூற பிய்யுதாம்” என்றேன்.

அவன் “ஆமா, ஆமா போய் கூரை பிஞ்சத என் டார்லிங் கிட்டே சொல்லு”

“வெட்கம் கெட்டவன்டா நீ” வார்த்தைகளில் காறித்துப்புவது போல அழுத்தமாக சொன்னேன்.

காரில் ஏற சென்றவன் திரும்பி வந்து “ஒனக்கு இது தப்பா தெரியலாம். எனக்கு தெரியல. பிரெண்ட்ஷிப் எப்போ லவ்வா மாறிச்சுன்னு கூட தெரியல, சொன்னாலும் உனக்கு புரிய போறதில்லை. ”

கடுமையாக நான்  “அவ உன் “எக்ஸ்” பெஸ்ட் பிரென்ட். ”

“பிரென்ட் தானே புருஷன் இல்லையே” என்ன ஒரு விளக்கம்! அருவருப்பை முகத்தில் காட்டினேன்.

“எனக்கு அதுவெல்லாம் பெரிய விஷயமா தெரியல, இனி டச்சில் இரு, கோச்சிக்காத என்ன!!” கிளம்பிவிட்டான்.

நான் நடந்து சென்று வண்டியில் ஏறி அமர ஸ்கோடா  என்னை கடந்து சென்றுவிட்டது.

என்னவர் “ஸ்கோடா என்னவா இருக்கு பாரு!! புது மாடல்”

நான் “ம்ம் அது அவன் மாமாவோடது ”

“ஏன் கோவமா இருக்க?”

“அவன் என் பிரென்ட் எக்ஸ். அவ பிரெண்டுக்கு பிரென்ட். இப்போ பாருங்களேன் நிலைமையை இவங்க ரெண்டுபேரும் ஜாயிண்ட் அடிச்சிட்டாங்க.. இது துரோகமில்லை, எனக்கு சுத்தமா பிடிக்கலை,. ”

“உன் பிரென்டும் தான் துரோகி. பாரு அவங்க அவங்க வாழ்க்கை, அவங்க அவங்க இஷ்டம். இதுல உனக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன?, ”
தோழிக்கு குடும்பம், குழந்தை என்று வாழ்க்கை சீராகத்தான் போகிறது. முழுதாக அவள் இவனை மறக்கவில்லை என்றாலும் இவன் இல்லாத வாழ்வு அவளுக்கு பழகிவிட்டது. அவளுக்கு ஒரு வாழ்வு என்றால் இவனுக்கும் இது வாழ்க்கை தானே. அவன் இஷ்டப்படி வாழட்டுமே என்ன தப்பு?

சின்ன விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டோமோ ? என்ற எண்ணம் உதித்தது. பகுத்தறிவு உறங்கியிருக்க வேண்டும்.

சிலது யோசிக்காமல் பேசாமல் முகத்தை திருப்பியது மொத்தமும் குழந்தைத்தனம். ஆனாலும் கோபம் குறையவில்லை. அந்த கோயில் விசேஷத்திற்கு போவோம் என்று முடிவு செய்துக்கொண்டேன். நட்பை புதுப்பித்துக்கொள்வோம்!

கிளம்ப எத்தனிக்க பார்வைக்கு அந்த நாய் பட்டது. பாதம் இல்லாத கால் பற்றிய எந்த ஒரு வருத்தமில்லாமல் பரபரப்பான அந்த ரோட்டில் ஓரத்தில் அமர்ந்துக்கொண்டு அமைதியாக ரொம்பவும் ரசித்து ருசித்து ரொட்டியை மென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

தடுக்கி விழுந்தீர்களா? வலியா?, வேதனையா? வாழ்க்கை போகும். கால் ஒடிந்ததா? வாழ்க்கை போகும்.  விட்டு போனார்களா? வாழ்க்கை போகும். சோகமா?, மகிழ்ச்சியா? வாழ்க்கை போகும். ஆக அடிபட்டாலும், ரத்தம் ஒழுகினாலும், யார் விட்டுபோனாலும், யாரும் விடாமல் போனாலும் வாழ்க்கை  போகும்.

-ஸ்வேதா சந்திரசேகரன்

1665total visits,3visits today