வானம் எனக்கொரு போதிமரம் – பாகம்1

0
181

 

விண் பொருள் கைகாட்டி மரம்

விண் மீன்கள்

வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும். ஆதி மனிதன் முதல் கவிப்பேரரசு வைரமுத்து ஈறாக பலருக்குப் பல புதுப்புது சேதிகளைத் தினம் தினம் கூறுவது அழகிய வானம் தான். மனிதனின் மனத்தில் எப்போதும் சிந்தனையைத் தூண்டும் ஒரு விண்வெளி அற்புதம் விண் மீன்கள் என்றால் அது மிகையில்லை. கருப்புப் போர்வையில் ஒளி வீசும் வைரங்களைத் தூவியது போல் தெரியும் அந்த இரவு வானின் வனப்பை அனுபவிப்பதுவே ஒரு சுகானுபவம் தான். ஆதி மனிதன் தொடங்கி இன்று வரை இச்சுகானுபவத்தை அனுபவிக்காதவர் யாருமேயில்லை என்று கூறலாம்.

காரணம், தனது அன்றாட வாழ்க்கையில் காணும் உருவங்களுடன், இந்த வாரியிறைத்த வைரங்களைத்தொடர்பு படுத்தியும், வகைப்படுத்தியும் செய்த கற்பனை, அவனது வியப்பூட்டும் இரசிகத்தன்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. தான் பார்க்கும் விண்மீன் கூட்டங்களை எளிதில் அடையாளம் காணும் பொருட்டு அதீதக் கற்பனையுடன் அவனறிந்த விலங்குகளின் உருவங்களுடன் தொடர்பு படுத்தி பெயரிட்டழைக்க ஆரம்பித்தான்.

பெருங்கரடி (GREAT BEAR) எனப்படும் URSA MAJOR

சிம்மம் (LION) எனப்படும் LEO

மீனம் (FISH) எனப்படும் PISCES

ரிஷபம் (BULL) எனப்படும் TAURAUS

 

விருச்சிகம் (SCORPION) எனப்படும் SCORPIUS

ஓரியன் (ORION) எனப்படும் வேடன்

Image courtesy: http://www.dkfindout.com/us/space/constellations

எனப் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இது போதாது என்று இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் காணும் கதை மாந்தர்களுடனும் தொடர்பு படுத்தி பெயரிட்டழைக்க ஆரம்பித்தான். ஆண்டிரோமிடா (ANDROMEDA) ஹெர்குலிஸ் (HERCULES) போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு குழுக்களாக விண்மீன்களைப் பிரித்தறிந்த நம் முன்னோர்களின் கற்பனை வடிவங்கள், சொல்லப் போனால் ஓரியன் (ORION), லியோ (LEO), ஸ்கார்ப்பியோ (SCORPIO) போன்ற சில விண்மீன் கூட்டங்களுடன் மட்டுமே ஒத்துச் செல்லுகிறது.

வழிகாட்டி விண் மீன்கள்

இரவு வானில் ஒவ்வொரு விண்மீன் குழுவும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தோன்றும். எனவே பருவ காலங்களை அறிய ஒரு எளிய வழிகாட்டியாக விண்மீன்களை மனிதன் ஏற்றுக்கொண்டான். இதை அடிப்படையாக வைத்தே தன் அன்றாட வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டான். சிரியஸ் (SIRIUS) என்ற மிகப் பொலிவு வாய்ந்த விண்மீன் கதிரவன் உதிக்கும் முன் கிழக்குத் தொடுவானில் தோன்றும் காலத்தில், நைல் நதியில் வரும் புது வெள்ளம், வளமிக்க புது வண்டல் மண்ணைக் கொண்டு வரும். இதுவே விவசாயத்திற்கு ஏற்ற காலம் என எகிப்தியர்கள் அறிந்திருந்தனர். வானில் சூரியனுக்கு அடுத்தநிலையில் காணப்படும் மிகப் பொலிவான விண்மீன் சிரியஸ் தான். இது பெரு நாய் உடுக்கூட்டத்தில் (Canis Major constellation) அமைந்துள்ள மிகப் பொலிவான விண்மீன். இதன் தோற்றப்பொலிவெண், – 1.46 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. புவியிலிருந்து 8.6 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. தமிழில் இந்த விண்மீன் “சிவன்” என்று அழைக்கப்படுகிறது.

காந்த திசை காட்டும் கருவி புழக்கத்திற்கு வரும் முன் திசைகளை அறிய விண்மீன்களே உதவின. கடற்பயணங்களிலும், தரைப்பயணங்களிலும் விண்மீன்களின் நிலையை வைத்தே பயணத்திசையைத் தீர்மானித்தான்.

போலரிஸ் (POLARIS) எனப்படும் துருவ விண்மீன் வடக்கு வானில் ஒரு மாறாத நிலைப் பொருளாக கருதப்பட்டது. அதே போல பல்வேறு பொலிவு மிக்க விண்மீன்களும் வெவ்வேறு காலங்களில் வழிகாட்டியாக கருதப்பட்டு வந்தது.

மனிதன் ஏன் விண்மீன்களை மட்டுமே கைகாட்டி மரமாகக் கொள்ள வேண்டும்?இதற்கு மூன்று முக்கியக் காரணங்களைக் குறிப்பிடலாம்.

  1. இரவு வானில் விண்மீங்கள் தெளிவாகத் தெரிவது.
    2. இடம் பெயராமல் எப்போதும் நிலையாகத் தோன்றுவது.
    3. ஒவ்வொரு விண்மீன் குழுவும் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சரியாக ஒரே இடத்தில் தோன்றுவது.

நிலவை எடுத்துக்கொண்டால், அது காலத்துடன் வளர்வதும் தேய்வதும் மற்றும் விண்மீன்களின் பின்னணியில் மிக விரைவாக இரவுக்கிரவு இயங்குவது ஆகிய பண்புகளால் அதனை மனிதன் கைகாட்டி மரமாகக் கொள்ளவில்லை எனக் கருதலாம். கோள்களையும் இதே போன்ற காரணங்களுக்காகவே கைகாட்டி மரமாகக் கொள்ளவில்லை.

நாள் காட்டி உருவாக்கம்

ஆனால் பண்டைக் காலத்தில் நம் முன்னோர் நிலவின் வளர்ச்சி, தேய்வு மற்றும் கோள்களின் இயக்கம் இவற்றிற்கு ஏற்பப் பல்வேறு மதச்சடங்குகளைச் செய்ய நேரம் குறிக்கப் பயன் படுத்தினார்கள். நிலவின் வளர்ச்சி, தேய்வு மற்றும் விண்மீன்களுக்கிடையே அதன் இயக்கம் இவற்றின் அடிப்படையிலேயே முற்காலத்தில் நாள் காட்டிகள் உருவாக்கப் பட்டன. இத்தகைய நாள் காட்டிகளில் சில இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் இத்தகைய நாள் காட்டிகளில், மாதங்களின் பெயர்கள், முழு நிலவு நாளில் எந்த விண்மீன் கூட்டத்தின் அருகில் நிலவு உள்ளதோ அதன் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த அளவில் விண்மீன்கள் பண்டைய மனிதனின் நாகரீக வளர்ச்சியுடன் கைகோர்த்து வந்தது என்பது உண்மை. ஆனாலும் அவனைப் பொருத்தவரை இரவு வானம் என்பது அழகான சிறு சிறு விளக்குகள் உள்ளே வைக்கப்பட்ட ஒரு வட்டு (Canopy) போன்றதே. இதற்காக நம் முன்னோரை எந்த வகையிலும் குறை கூற முடியாது. ஏனெனில் எந்தவிதக் கருவிகளுமின்றி வெறும் கண்களால் மட்டுமே பார்த்து அனுமானிப்பது இத்தகைய முடிவுகளுக்கே இட்டுச் செல்லும் என்பதே மெய்.

-வெ.சுப்பிரமணியன்

 

 

 

 

1142total visits,2visits today