வாசுகி

0
44
வாசுகி இன்றும் அலுவலகத்துக்கு பதட்டத்துடனேயே கிளம்பினாள் . வழக்கம் போல என்னென்ன திட்டு வாங்கப்போகிறோம் என்று மனதில் வரிசை படுத்திக்கொண்டே அலுவலகத்தில் நுழைந்தாள்.மேனேஜர் கண்ணன் அடிக்கண்ணால் பார்த்துவிட்டு பார்க்காதது போல கடந்து சென்றார். அவசரம் அவசரமாக தன இருக்கையில் அமர்ந்து மணியை பார்த்த பொழுது அதுவும் வழக்கம் போல அரைமணி நேரம் தாமதத்தை உறுதி படுத்தியது. சில வினாடிகளில் பியூன் மேனேஜர் அழைப்பதாக நமட்டு சிரிப்பு சிரித்துபடி சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இதயத்துடிப்பு அதிகமாக தன் இருக்கையிலிருந்து எழுந்து மேனேஜர் அறையை நோக்கி கால்கள் பின்ன தடுமாறிய படியே அறைக்கதவை மெதுவாக தட்டி அனுமதி கேட்டாள்.

கண்களாலேயே அவளை அனுமதித்து இருக்கையை காட்டி அமர சொன்னார். ஒரு முக்கியமான கோப்பை காட்டி அவளிடம் சில விளக்கங்களை பெற்று மேலும் சில  கோப்புகளை கொடுத்து இதை இப்பவே முடித்து கொடுக்க வேண்டும் என் கறாராக கூறிவிட்டு நீ போகலாம் என்றார்.

வாசுகி அப்போதுதான் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சையே வெளியில்  விட்டாள் . நிம்மதி பெருமூச்சை விட லேட்டாக வந்ததை பற்றி ஏன் அவர் எதுவும் கேட்கவில்லைஅவர் தினமும் பேசும் வார்த்தைகள் அப்பப்ப்பா!!!! வார்த்தைகளாய் விவரிக்க முடியாத வலிகள் நிறைந்தவை. ஒவ்வொரு முறையும் அவர் பயன் படுத்தும் வார்த்தைகள் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்றே தோணவைக்கும். அந்த அளவுக்கு வார்த்தைகள் தடித்து விழும். அலங்காரத்தில் ஆரம்பித்து அந்தரங்கம் வரை எல்லோர் முன்னிலையிலும் அவர் பேசும் வசவுகள் மானமுள்ள எந்த பெண்ணும் தூக்கிட்டுக்கொள்ள தோணும்.

 ஆனாலும்  நடுத்தர வாழக்கை, கணவன் மனைவி இருவரும்  வேலைக்கு சென்றால் தான் பசிக்கு கூட உணவை வாங்க முடியும் என்ற நிலை, மேலும் கண்ணம்மாவின் மருத்துவ செலவு இதெல்லாம் கண்முன்னாடி வந்து செல்லும்போது இந்த திட்டுகள் சாதாரணமாகி போய்விடும். கொஞ்ச நேரத்திலேயே தன் இயல்பு நிலைக்கு வந்து விடுவாள்.

ஆனால் இன்று அவ்வளவு பிசியிலும் ஏன் தன்னை மேனேஜர் எதுவும் சொல்லவில்லை என்ற கேள்வி பூதாகரமாக மனதில் குடைந்து கொண்டிருந்தது. மதிய இடைவெளியில் சக தோழி மீனா சாப்பிட அழைத்தும் மென்மையாய் மறுத்து தன் இருக்கையில் அமர்ந்து ஒன்றும் பாதியாய் உணவை அருந்தி தன் வேலையை தொடர்ந்தாள். மேனேஜர் கண்ணன் தன் அறையில் இருந்து அவள் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் வேலையை தொடர்வதை கவனித்தவாறே அமர்ந்திருந்தார்.

மூன்று மணிக்கெல்லாம் தன் பணியை முடித்து மேனேஜர் அறையை நோக்கி சென்றாள். அதற்குள் மற்ற ஊழியர்கள் எல்லாம் இன்று வாசுகி திட்டு வாங்காமல் தப்பித்ததை பற்றி பட்டி மன்றம் போட்டனர். யாருக்கும் காரணம் புரியவில்லை. சக ஊழியை என்றாலும் தினம் அவள் திட்டு வாங்குவது அவர்களிடையே ஒரு நகைப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று அது நடக்கவில்லை என்றதும் அனைவருக்குள்ளும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேனேஜர் அறைக்குள் நுழைந்து அவரிடம் கோப்புகளை காட்டி ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டுமா என கேட்டாள். அவர் பார்த்து விட்டு பிறகு அழைக்கிறேன் என கூறிவிட்டு தன் பணிகளை தொடர்ந்தார். வாசுகி குழப்பங்களோடு   அறையை விட்டு வெளியேறி தன் இருக்கையை அடைந்தாள். அருகில் இருந்த மீனா அவள் குழப்பத்தை அதிகரிக்கும் விதமாக மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தாள். 

வாசுகி நான் கேட்கிறேன்னு  தப்ப எடுத்துக்காதஉன்னை அறையில் வைத்து மேனேஜர் ஏதும் திட்டினாரா? என்றாள். இல்லை மீனா! அப்படி ஏதும் நடக்க வில்லை. வேலை விஷயமாக மட்டுமே பேசினார். இப்போ கூட கோப்புகளை பார்த்துவிட்டு பின்பு அழைக்கிறேன்னுதான் சொன்னாரே தவிர எதும் திட்டலை. எனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கிறது என்றாள். அதற்க்குள் அடுத்தடுத்த இருக்கைகளில் இருந்த சக பெண் ஊழியர்கள் மெதுவாக இவள் இருக்கையை நோக்கி வந்து எதுக்கும் நீ இந்த மேனேஜரிடம் ஜாக்கிரதையாக இருந்துக்கோ. வார்த்தைகளிலேயே அத்தனை வக்கிரங்களை காட்டுபவன்,வசமாக நீ சிக்கிக்கொண்டால் என்னென்ன செய்வானோபார்த்து கவனமாய் இரு! என்று போற போக்கில் சொல்லிவிட்டு நகர்ந்தனர். 

இது என்னடா புது பிரச்னை என்று அடிமனதில் தோன்றிய பயத்தை சமாளித்து அதெல்லாம் நான் பார்த்துகிறேன்க்கா! என்று பதிலளித்தாள். அதற்குள் பியூன் வந்துஇன்னைக்கு உங்களை வேலை நேரத்துக்கு பின்பு மேனேஜர் வந்து பார்க்கச்சொன்னார்என் சொல்லிவிட்டு சென்றான். பயத்தில் கண்களில் பூச்சி பறந்து கண்ணை மறைத்தது. சக ஊழியர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சரியாக மணி ஐந்து அடித்ததும் ஒருவர் பின் ஒருவராக அலுவலகத்தில் இருந்து கிளம்பினர் . மீனா மெதுவாக வாசுகி அருகில் வந்து வெரி சாரி மா! இன்னைக்கு ஒரு முக்கியமான ஒர்க் இருக்கு. என்னால உன்கூட இருக்க முடியால. நான் கிளம்புறேன் நீ பார்த்து கவனமா இருந்துக்கோ என்று கூறிவிட்டு அவளும் சென்று விட்டாள்.

 கடைசியில் வாசுகி பியூன் மற்றும் மேனேஜர் மூவர் மட்டுமே இருந்தனர். ஒருவித படபடப்புடன் அமர்ந்திருந்தாள். மனதில் ஏதோதோ தோன்றி மறைந்தது. கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டங்கள் எல்லாம்? என கண்களில் பொங்கி வரும் அழுகையை கர்சீப்பால் தொடைத்துக்கொண்டே தன் இஷ்ட தெய்வங்கள் எல்லாவற்றையும் வேண்டிக்கொண்டாள். மேனேஜர் அழைப்பதாக பியூன் கூப்பிடவும் நடுங்கிக்கொண்டே அவர் அறையை நோக்கி சென்றாள்.

அறையில் அவரை தவிர வேறு இரண்டு ஆண்களும் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் வாசுகியின் மகள் கண்ணம்மாவிற்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்  சிவகுமார். விழிகள் விரிய அவரை பார்த்துக்கொண்டே  நின்றாள் .மேனேஜர் மெலிதாய்  கணைக்கவும் சுய நினைவு வந்து  கண்ணனை நோக்கினாள் .கண்ணன் மெதுவாக ஆரம்பித்தார்.

 நேற்று சிவகுமாரின் கிளினிக்குக்கு நான் வந்திருந்தேன்அங்க உன்னை பார்த்தேன்,உன் மகளோடு. ஆட்டிசம் பாதித்த உன் குழந்தையோடு நீ போராடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் ஒரு நிமிடம் என் இதயமே நிலை குலைந்து விட்டது. பதினாலு வயது பெண்ணின் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்யும் மூர்க்கத்தை தாங்கிக்கொண்டு நீ படும் பாடு என்னை அந்த இடத்திலேயே அறுத்து போட்டுவிட்டது. எத்தனை மனப்பக்குவமும் உறுதியும் இருந்தால் அந்த பிரச்சனைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இப்படி அலுவலகத்தில் என்னிடம் திட்டு வாங்கிக்கொண்டு வேலை செய்திருப்பாய்….என்னை பற்றி நினைக்கவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது. மன்னித்துவிடம்மா.

 நான் டாக்டரிடம் பேசி விட்டேன். இனி மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த விட சொல்லியிருக்கிறேன். அதற்க்கு ஆகும் செலவை நானும் என் நண்பன் கதிரும் சேர்ந்து ஏற்று கொள்கிறோம் என கதிரை கை காட்டினார். வாசுகி மனம் நெகிழ்ந்து உடல்  நடுங்க கதிரை நோக்கி கை கூப்பினாள் . இருக்கட்டும் விடுங்க சிஸ்டர்நான் இது மாதிரி நிறைய விஷயங்களுக்கு பண உதவி பண்ணியிருக்கிறேன். சோஇத நீங்க ஏத்துக்கணும் என்று புன்னகைத்தவாறே கூறினார்.

கண்ணன் மெல்லிய குரலில் தொடர்ந்தார்ஆண்கள் பெண்கள் விஷயத்துல கொஞ்சம் மோசமாகத்தான் நடந்து கொள்கிறோம்ஆனா எல்லா நேரத்திலும் இல்ல. சில நேரங்களில் எங்களுக்குள் இருக்கும் நல்லவன் வெளிய வந்து எங்களை செருப்பால அடித்து மீட்டு விடுகிறான். அப்படி ஒரு தருணம் தான் நேற்று நடந்தது. இருந்தாலும் நாங்க செய்யப்போகிற உதவிக்கு நீ தகுதியானவள் தானா என்ற சந்தேகத்தினால தான் இன்று உனக்கு கொடுத்த அதிக்கபடியான வேலை பளு. இருந்தாலும் அதை சரியான தருணத்தில் சரியாக முடித்து நீ நிரூபித்து விட்டாய் வாசுகி.

இனிமேலும் உன் பெண்ணை காரணம் காட்டி நீ அலுவலகம் லேட்டாக வந்தால், திட்டும் கன்பார்ம்‘ சொல்லிட்டேன்என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தார். அந்த சிரிப்பு அருகில் இருந்தவர்களையும் தொற்றிக்கொள்ள அதில் பியூன் அறிவழகனும் கலந்து  கொண்டான்.

பின்னர் அறிவழகனிடம் ,பேருந்து நிலையம் வரை வாசுகிக்கு துணைக்கு செல்லுமாறு பணித்து விட்டு தன் நண்பர்களுடன் சென்றார். வாசுகி மனது நிறைந்த சந்தோசத்தோடு அலுவலகம் விட்டு வெளியேறினாள்     

-சவீதா ஆனந்த்குமார்

1133total visits,2visits today