வெண்ணிலா எனும் தேவதை பாகம்-8

0
128
மறுநாள் அனைவரும் கோயிலுக்கு போகலாம் என பாட்டி கூறினார். வெண்ணிலாவிற்கு எப்படி சத்யாவின் மனதை தெரிந்து கொள்வது என குழம்பத்துடன் இருந்தாள். கோவிலில் சந்தர்ப்பம் கிடைக்குமா என தெரியவில்லை.? ஏனென்றால் அத்தை மாமா எல்லோருமே இருப்பார்கள். வந்த பிறகு தான் முயற்சி பண்ணனும் என நினைத்துக்கொண்டாள். தேவியும் அவளும் ஒன்றாக மாடியில் உள்ள அறையில் தான் உறங்குவது,  எப்பொழுது வெண்ணிலா ஊரில் இருந்து வந்தாலும் இருவரையும் ஒன்றாக தான் பார்க்க முடியும். இருவருக்குள்ளும் போட்டியோ. பொறாமையோ வந்ததில்லை.
காலையில் இருவரும் எழுந்து ஒருவொருக்கொருவர் மாற்றி மாற்றி விதவிதமாக தலை  அலங்காரம் பண்ணிக்கொண்டு கிளம்பி கோவிலுக்கு செல்ல தயாராகினர். இருவரையும் பார்த்து கோமதி பாட்டிக்கு சந்தோசம் தாளவில்லை.
“என் கண்ணே பட்டுடும் போலயே என் பேத்திகளை பார்த்து. எந்த ஊர் ராஜகுமாரன்கள்  வருவானுகளோ இந்த இளவரசிகளை கூப்பிட்டு போக.?” என சொல்லவும். வயதுக்கே உரிய வெட்கத்துடன் இருவரும் பாட்டியிடம் செல்லமாக கோவித்தனர்.
“இந்த பாட்டி எப்பவும் அப்படி தான் எங்கள எப்படியாவது துரத்தி விட்ரனும்.  கடமை முடிஞ்சா சரி உங்களுக்கு.” என தேவி சோகத்துடன் அலுத்துக்கொண்டாள்.
பாட்டி உடனே  “அப்படி சொல்லலடி என் தங்கங்களா நல்ல அழகானவனா, குணமானவனா வரனுமே அந்த கவலை தான் இந்த கிழவிக்கு.” எனக்கு உங்க தாத்தா கிடைச்சார். உயிரோட இருந்தவரை என்னை எதற்காகவும் கண்கலங்க விட்டது இல்லை. உன்னோட அப்பனையும்,  இவளோட அம்மாவையும் நல்லபடியா வளர்த்தேன். நல்ல இடத்தில் கல்யாணமும் பண்ணி வச்சோம். உன் அப்பா பொறுப்புக்கு வரவும் உன்னோட தாத்தா போய் சேர்ந்துட்டார்.  அது போல உங்களையும் கட்டி குடுத்து நீங்களும் சந்தோசமா இருக்கனுமேனு சின்ன கவலை தான். உங்க கல்யாணத்தை பார்க்கனும்னு நப்பாசை தான்.” என பெருமூச்சொறிந்தார் பாட்டி.
 தாத்தாவை பற்றி பேசவும் பேத்திகள் இருவருக்கும் அவர் அடிக்கடி சொல்லும் காதல் திருமணம் பற்றி சொல்வது ஞாபகம் வந்தது. ஆனால் எப்படி திருமணம் ஆனது என்பதை முழுவதுமாக சொன்னது இல்லை. ஆகவே  பாட்டியிடம் அதை பற்றி கேட்போமா என பேத்திகள் இருவரும் ரகசியமாக பேசினர். உடனே பாட்டியிடம் இன்னைக்கு உங்க லவ் ஸ்டோரிய கேட்காம உங்கள் விடுற மாதிரி இல்லை என கோரசாக கேட்டனர்.
பாட்டிக்கு எங்கிருந்து  வந்ததோ  அந்த வெட்கம். “போங்கடி நான் சொல்லமாட்டேன்” என கூறினார். இருவரும் பாட்டியின் அருகே இரண்டு பக்கமும் அமர்ந்து கொஞ்ச ஆரம்பித்தனர். செல்ல பாட்டியாம், என் கண்ணு பாட்டியாம் என மாறி மாறி கேட்கவும் வெட்கத்துடனே சொல்ல ஆரம்பித்தார்.
“உங்க தாத்தா எனக்கு மாமா முறை அதாவது என் அம்மாவோட கடைசித்  தம்பி. ரொம்ப செல்லம் எல்லாருக்கும். நாலு பேர் அவரையும் சேர்த்து கூட பிறந்தவங்க. எங்க அம்மா தான் மூத்தவங்க  உங்க தாத்தா பிறந்த கொஞ்சநாளில் அவங்க அம்மா அதாவது என்னோட பாட்டி இறந்துட்டாங்க. அதனால் என்னோட அம்மாகிட்ட தான் வளர்ந்தார். உங்க தாத்தாவுக்கு ஐந்து வயது என்னோட அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது. அதனால  எங்க அம்மா கூடவே வந்துட்டார்.  படிக்க வச்சது தொழில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் என் அப்பா தான். சின்ன வயசில் இருந்தே பொண்ணு பிறந்தா  உங்க தாத்தாவிற்கு கல்யாணம் பண்ணித்தரதா சொல்லி தான் என் அப்பா வளர்த்தாராம். நான் வயசுக்கு வரவுமே சொந்த பந்தம் எல்லாருமே இதையே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க எப்ப கல்யாணம்னு. அப்ப தான் ஒரு பிரச்சனை வந்தது என்னோட பெரிய மாமா ரூபத்தில் அவரோட மனைவியோட சொந்தத்தில் ஒரு பெண்ணை பேசி முடிச்சு நாளும் குறிச்சுட்டாங்க யாரையும் கேட்க்காம. இதை தெரிஞ்சதும்  உங்க தாத்தா அதிரடியா ஒரு முடிவு பண்ணி வீட்லயே என் அம்மா, அப்பா முன்னாடி எனக்கு தாலி கட்டினார். சொந்த பந்தங்கள் யாரையும் கூப்பிடல என்னை வளர்த்து ஆளாக்கினது நீங்க ரெண்டு பேர்தான் வேற யாரும் எனக்கு பெரிசில்லை. உங்க சம்மதம் மட்டும் போதும்னு, சொல்லி என்னை ஏத்துக்கிட்டார்.”  இதை சொல்லும் போதே தன்னையும் அறியாமல் பாட்டியின் கண்கள் கலங்கின. சுதாரித்துக்கொண்டு “இதான் எங்க காதல் கதை.” சரி தெரிஞ்சுடுச்சுல்ல இப்ப கிளம்புங்க கோவிலுக்கு போய்ட்டு சீக்கிரம் வரனும். என கிளம்பினர் அனைவரும்.
 எப்பொழுதும் கோவிலுக்கு போனால் சாமி கும்பிட்டு பொங்கல் வைத்து அதை தோட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் பிரசாதத்தை பாட்டி கையால் கொடுப்பது தான் வழக்கம். அன்றும் அதே போல் பிரசாதம் கொடுக்க பாட்டியும் துணைக்கு சத்யாவின் அம்மாவும் சென்று விட்டனர். இவர்கள் மூவரும் சத்யாவின்  அப்பாவுடன் வீட்டிற்கு வந்து விட்டனர். எப்படியும் பாட்டியும் அத்தையும்  வர மூனு மணி ஆகும்.  நாம ரெண்டு பேரும் சமைக்கலாம் என வெண்ணிலாவும் தேவியும் சேர்ந்து சமையல் பண்ண தயாராயினர். அதை பார்த்ததும் சத்யா இருவரிடமும்
“இன்னைக்கு உங்க சமையல சாப்பிட்டு நானும் அப்பாவும் என்ன கதி ஆகப்போறோமோ தெரியலயே..? ஆண்டவா.! எங்கள நீதான் காப்பாத்தனும். இப்ப தான் நான் உங்கிட்ட நாங்க எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி சோதிக்கலாமா.?” என மேலே பார்த்து கடவுளிடம் வேண்டிக்கொண்டான் சத்யா. இதை பார்த்த நிலாவும் தேவியும் அவனை அடிக்க துரத்தினர்.
வெண்ணிலாவை பார்த்து ஏற்கனவே ஒரு கணக்கு இருக்கு உனக்கும் எனக்கும். இதுவும் சேர்ந்துச்சு இப்ப மொத்தமா சேர்த்து வச்சு ஒரு நாள் வசமா சிக்கும் போது வாங்குவ”  என எச்சரிப்பது போல கூறினான்.
உடனே தேவி சத்யாவிடம் “ஏய் என்னடா பூச்சாண்டி காட்ரயா வாடா ஒரு கை பார்க்கலாம் நாங்க ரெண்டு பேர் நீ ஒருத்தன் வாடா..!வா..!” என சண்டைக்கு ரெடியானாள்.
” ஹேய் வாடி நாம முதல்ல சமைப்போம். அப்பறம் அவரை கவனிச்சுக்கலாம்” என தேவியை அழைத்துக்கொண்டு சென்றாள் வெண்ணிலா.
ஒருவழியாக  வேகமாக   சமையலை முடித்தனர் இருவரும்..
“வந்து மூன்று பேரும் சாப்பிடலாம் நான் அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன்” என சாப்பாடை தனது அப்பாவிற்கு எடுத்துக்கொண்டு சென்றாள் தேவி.
வீட்டில் இப்பொழுது சத்யாவும், வெண்ணிலாவும் மட்டுமே இருந்தனர். திடீர் என ஒருவித பயம் வந்தது வெண்ணிலாவிற்கு.  எப்படியும் தேவி வர அரைமணி நேரமாகும் என தெரியும். எப்படி சத்யாவுடன் தனியே இருப்பது என யோசித்தாள் மனசு படபட என அடித்துக்கொண்டது. என்ன இது இப்படி ஒரு உணர்வு.? என நினைத்தாள்.. வித்தியாசமாக அவள் நிற்பதை கண்ட சத்யா அவளிடம் “என்ன.?  ஏன் ஒரு மாதிரி இருக்கிற.? உடம்பு எதும் சரியில்லையா.? ரெண்டு நாளா சரியா தூங்கலைனு நினைக்கிறேன்” என கூறினான்.
“இல்லை அத்தான் சும்மா தான் வேலை செய்த களைப்பா இருக்கும்” என சமாளித்தாள். சரி என கூறிய சத்யா மெல்ல அவளின் அருகில் வந்து அவளின் கைகளை பிடித்து லேசாக  கையில் முத்தமிட்டான்.
– ஆனந்தி
முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

552total visits,4visits today