போராட்டங்கள் – பாமரனின் குரல்

0
151

பாதி செட்டரில் பஜார்..

இன்னிக்கு கடையடைப்புங்குறதால இப்பத்தான் பஜார் வந்தேன். வழக்கமா வர டீக்கடை பார்த்தா, பாவம் மனுஷன் சோகமே உருவா உக்காந்து இருக்கார். முந்தா நாளே வணிகர் சங்கம் சார்பா லீவு விட்டதால பாதி கடையை செட்டர் போட்டு சாத்திட்டு முன்னாடியே கைல ஒரு மஞ்சப்பையை தற்காலிக கல்லாப்பெட்டியா மாத்தி வெச்சுகிட்டு வியாபாரம் பார்த்து இருக்கார்.

பதினோரு மணிவாக்குல ஒரு கூட்டம் வந்து வெளிய வெச்சிருந்த டீக்கேன், சேர் எல்லாத்தையும் ஒடச்சு போட்டுட்டு போயிட்டாங்களாம். அது தெரியாம என்னன்னே இன்னிக்கு ரொம்ப பிசியான்னு பேச்சுக்கொடுத்ததும் போதும் மனுஷன் பொலம்பித்தள்ளிட்டார்.

“எங்கத்தம்பி பொழப்பையே கெடுத்துட்டாங்க. எவன் எப்ப வந்து அடிச்சு நொறுக்குவான்னு பயந்து பயந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதா இருக்கு. இன்னும் ரெண்டு லிட்டர் பால் இருக்கு முடிஞ்சுட்டா வீட்டுக்கு போயிடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டு போயிட்டாங்க. ”

“இன்னிக்கு தான் ஸ்ட்ரைக்ன்னு சொன்னாங்களே அப்புறம் ஏண்ணே கடை தொறந்தீங்கன்னு கேட்டதும், அட போப்பா முந்தா நாள் வணிகர் சங்கம் ஸ்ட்ரைக்ன்னு சொன்னான். சரின்னு லீவு விட்டேன். வீட்ல இருந்தேன். இன்னிக்கு எதிர்க்கட்சி ஸ்ட்ரைக்ன்னு சொல்றான். அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு இன்னொரு வணிகர் சங்கம் ஸ்ட்ரைக்ன்னு சொல்றான்.”

இப்படியே தினம் ஸ்ட்ரைன்னு லீவு விட்டா பொழப்பு எப்படி ஓட்டுறதுன்னு புலம்புறார்.
காவிரி நம்ம வாழ்வாதார பிரச்சனை அதுக்கு நாமதானே போராடனும். நமக்காக உணவு உற்பத்தி பண்ற விவசாயிங்களுக்கு நாம தானே ஆதரவா இருக்கணும். காவிரி தண்ணி இல்லைன்னா, விவசாயி இல்லைண்ணா. மாட்டுக்கு புல்லு கூட கிடைக்காது. மாடு இல்லேன்னா பால் இல்ல, டீக்கடையும் நடக்காதுன்னு வியாக்கியானம் பேசுனா…

“நீ நாட்டோட வாழ்வாதாரத்தை சொல்ற இந்த கடை தான் என்னோட வாழ்வாதாரம். இன்னிக்கு வியாபாரம் நடந்தா தான் எனக்கு சோறு கிடைக்கும். நான் கடை திறந்தாலும் திறக்காட்டியும் வாடகை, வட்டி, தண்டல்ன்னு, ஒரு நாளைக்கு ஐநூறு ரூவா வேணும். இப்படி வாரத்துக்கு நாலு நாள் லீவு விட்டா அப்புறம் என் குடும்பத்துக்காக, சோத்துக்கு நான் போராடனும் சொன்னாரு.

“அதெல்லாம் சரிண்ணே, மக்கள் பிரச்சனைக்கு மக்கள் தானே போரடனும். நாமளே இப்படி சுயநலமா இருந்தா என்ன ஆவறது?ன்னு கேட்டதும்…..”

“அப்ப என்ன *@$#%$#% க்கு மக்கள் பிரதிநிதின்னு செருப்புல அடிச்சமாதிரி கேள்விக் கேட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு இத்தனை நாளா என்ன பண்ணாங்க? இப்ப வந்து உண்ணாவிரதம் உட்கார்ந்துகிட்டு நாடகம் போடுறாங்க. அரசாங்கத்துகிட்ட எதுனா கேட்டு தான் மக்கள் உண்ணாவிரதம் இருப்பாங்க. அதிகாரத்துல இருக்கவுங்க இப்படி உண்ணாவிரதம்னு கிளம்புவது நாடகம் தம்பி.”

“முந்தாநாள் எந்த கட்சியும் சேராம, பாகுபாடு இல்லாம வணிகர் சங்கமும், விவசாய சங்கமும் பொது மக்களும் சேர்ந்து தன்னெழுச்சி நடத்துன கடையடைப்ப பத்தி இந்தியா முழுக்க பேசாம இருக்க, இது தங்களின் உண்ணாவிரதத்திற்காண வெற்றின்னு காட்டிக்க, முதல் நாள் நடக்க இருந்த உண்ணாவிரத்ததை அடுத்த நாள் மாத்தி அமைச்சு ஆளும் கட்சி போரடிட்டோம்னு சொல்லுது.”

“முதலில் கடையடைப்பை அறிவித்த வணிகர் சங்கத்திடம், எங்க கட்சி சார்பா 5ம் தேதி நடத்துறோம், அன்னிக்கு நீங்க உங்க கடையடைப்பை மாத்திக்குங்கன்னு மொத நாள் சொல்லுது எதிர்க்கட்சி. நிறைய எதிர்க்கட்சி கடைகள் அன்னிக்கு திறந்து இருந்துது. ஏன் இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் நீங்களும் பங்கேற்றால் என்ன!? இது மக்கள் போராட்டம் இது வெற்றிப்பெறக்கூடாதுங்குறதுல எல்லாக்கட்சியும் குறியா இருக்கு. ”

“ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, சில்ற கட்சின்னு பாகுபாடு இல்லாம கட்சிகாரனுங்க தாங்கள் தான் இந்த தமிழகத்தை காப்பாத்த வந்த மாதிரி நடிச்சுகிட்டு இருக்காங்க. ஆனா அவுங்கதான் இந்தநாட்டின் பிரச்னைக்கு காரணம்.”

“கிட்டத்தட்ட அம்பது வருசமா காவேரி பிரச்சனை இருக்கு. நான் 1984ல் இருந்து இந்த கடை நடத்துறேன். நான் கடை ஆரம்பிச்சதுல இருந்து வருசத்துக்கு அஞ்சு நாளாவாது இந்த காவேரி பிரச்சனைக்காக கடையடைப்பை நடத்திட்டுதான் இருக்கோம். மொதல்ல இலங்கை பிரச்சனையும் இருந்துச்சு இப்ப அது இல்ல.”

“இங்கேயும் சரி அங்கேயும் சரி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவேரி விசயத்துல ஒரே நிலைப்பாடு தான். அவன் தரமாட்டேன்னு சொல்லுவான். இவுங்க தரலைனா உண்ணாவிரதம், கடையடைப்புன்னு சொல்லுவாங்க. மீறுனா அங்க தமிழனை அடிப்பான். இங்க சில கட்சிக்காரன் கர்நாடகா வண்டியை உடைப்பான். அப்புறம் அங்க அணை நிரம்பி வழிஞ்சா தண்ணிய இங்க திறந்து விடுவான். நாம பொத்துனாப்புல வாங்கிட்டு அமைதியாயிடுவோம்.”

“இதுவரைக்கும் எந்த மத்திய அரசாவது இரண்டு மாநிலத்திற்கும் சமநிலையோடு பேசி இருக்கா?. எப்பவும் கர்நாடகாவுக்கு சார்பாத்தான் பேசும். எதிரா பேசுனா கர்நாடகாவுல ஓட்டு விழாது. என்ன பேசுனாலும் இங்க ஒரே மாதிரி தான்”

“ஒவ்வொரு முறையும் நாம நீதிமன்ற படியேறியே மத்திய அரசிடம் போராட வேண்டி இருக்கு. நீதி மன்றத்துக்கு செலவு பண்ண காசை வெச்சு காவேரில ரெண்டு அணையே கட்டி இருக்கலாம். அது பஞ்ச காலத்துலயாவது உதவி இருந்திருக்கும். இதுவரைக்கும் கேஸுக்கு எவ்ளோ காசு செலவு ஆகி இருக்குன்னு யாருக்காவது தெரியுமா!? ”

“ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல சேர்ந்தா போல ஒரு வாரம் ஏன் ஒரு மாசம் கூட கடையை சாத்திட்டு போராடத்தயார். ஆனா எல்லாக்கட்சியும் ஒற்றுமையா நடத்துமா? பஸ் ஆட்டோ, ஸ்கூல், சினிமா தியேட்டர், மால்ன்னு எல்லாத்துக்கும் லீவு விடுமா!? அப்டி போராடுறப்ப மாநில அரசு பாதுகாப்பு கொடுக்குமா!?”

“இங்க போராட்டம் வெற்றின்னு சொல்றத விட எங்க கட்சி நடத்துன போராட்டம் வெற்றின்னு சொல்றது தான் இவுங்க குறிக்கோளா இருக்கு. உங்களோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்க தேர்தல் களத்தை வெச்சுக்குங்க, போராட்டக்களத்தை தயவு செய்து மக்களுக்கே விட்டுடுங்க! ”

“கர்நாடகாவில், கேரளாவில் பிரச்சனைக்கு எல்லாக் கட்சிக்காரனும் ஒற்றுமையா சேர்ந்து போராடுறான். அவன் தீர்வை நோக்கி போராடுறான். ஆனா இங்க தினம் ஒரு கட்சி, தினம் ஒரு சங்கம்னு பிரிஞ்சு நின்னு போராடுறோம். அங்க பிரச்சனைன்ன மத்திய அரசு அலுவலகத்தை அடிச்சு நொறுக்குறான், இங்க அப்பாவி வியாபாரி கடையை அடிச்சு நொறுக்குறான்.”

“அரசியல்வாதிங்க தலையிடலைன்னா ஜல்லிக்கட்டு மாதிரி மக்களே சாதிச்சு காட்டிடுவாங்க. ஆனா அப்படி மக்கள் போராட்டம் வெற்றின்னு சொல்ல எந்த கட்சியும் ஒத்துக்காது. ஏன்னா போராட்டம், வெற்றிங்குற சுவையை மக்கள் தெரிஞ்சுகிட்டா அவ்ளோ தான் இவுங்க ஆட்டம் காலியாயிடும்.”

“அங்காங்கே மக்கள் போராடிட்டு இருக்கப்ப, அது பெருசாகம இப்டியே அரசியல்வாதிங்க உள்ள புகுந்து கெடுத்துகிட்டே இருப்பாங்க. வன்முறை தீர்வல்லன்னு சொல்லல, அதை சாதாரண பொது மக்களிடம் காட்டுவது தீர்வல்ல.”

“இப்ப வரைக்கும் தீபாவளி, பொங்கல் மாதிரி இது காவேரி பிரச்சனைக்கு வீவு விடுறது எங்களுக்கு வாடிக்கையா “.

“காவேரி பிரச்சனையால விவசாயி பாதிக்கிறானோ இல்லையோ பொட்டிக்கடை, டீக்கடைன்னு, மளிகைகடை, ஹோட்டல் கடைன்னு வெச்சிருக்க சின்ன சின்ன வியாபாரிக நாங்க பாதிக்கப்படுறோம்.

எப்படியோ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.

– மத்திய மாவட்டத்தில் இருந்து பாமரன் வினு

3689total visits,1visits today