சபரிமலையில் நடப்பது என்ன?

0
51

ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்ப கோவில் திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்ற பரபரப்பு நாடு முழுவதும் தொற்றிக் கொண்டு உள்ளது.

மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்பில் தலையிமாட்டோமென ஒதுங்கி விட்டது. கேரள அரசோ இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயமும், போராட்டத்தில் குதித்து உள்ள மக்களை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் கேரள அரசிற்கு உள்ளது.

பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு குழுவினரும், அனுமதிக்க கூடாதென ஒரு குழுவினரும் மல்லுக்கு நிற்கிறார்கள். இதில் சில பிரபலங்கள் வாய்க்கு வந்தப்படி பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டும் உள்ளார்கள்.

ஆர். எஸ். எஸ், விஸ்வ இந்து பரிஷித், சிவசேனா, ரெடி டூ வெயிட் என இந்து அமைப்புகள் 30 குழுக்களாக பிரிந்து சபரிமலைக்குள் பெண்கள் நுழையாத வண்ணம் தடுக்க போவதாகவும், மீறினால் தற்கொலைப்படையாக மாறுவோமெனவும் எச்சரிக்கை விடுக்கின்றன.

நிலக்கலில் இருந்து பம்பை வரைக்கும் இந்த குழுக்கள் பிரிந்து நின்று பேருந்தையும் கார்களையும் நிறுத்தி பெண்கள் இருக்கிறார்களா என வேவு பார்க்கிறார்கள். பெண்கள் இருந்தால் வாகனத்தில் இருந்து இறக்கி திருப்பி அனுப்புகிறார்கள்.

ஐப்பசி பூஜைக்காக 5நாட்கள் ஐயப்பன் கோவில் திறந்து வைக்கப்பட்டு இருக்கும். பெண்கள் நுழைந்தால் மிகப்பெரிய கலவரம் நடக்குமென தலைமை தந்தரியே எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.

நேற்று சென்னையிலிருந்து போயிருந்த பழனி (45), பஞ்சவர்ணம்(40) போராட்டகாரர்களால் மறிக்கப்பட்டு பெண்களை அனுமதிக்க இயலாது எனவும், திரும்பி போகச் சொல்லியும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சன்னிதானம் வரை செல்லவில்லை என்றும் பம்பை வரைக்குமான பயணதிற்க்கு அனுமதி அளிக்க வேண்டியும் போராட்டக்காரர்களிடம் பேசி பார்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பழனி & பஞ்சவர்ணத்தை அடித்து அனுப்பி இருக்கிறார்கள். இவையனைத்தும் கேரள காவல்துறை அருகிலிருந்தும் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது.

இந்துவா அமைப்புகள் போராட்டங்களுக்கு பெண்களை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் கூடுதலாக சட்டச்சிக்கல்கள் உருவாகும் சூழல் இருக்கிறது. கேரளத்து பெண்களும் பெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபடுவது மற்ற மாநில பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

மாலைக்குள் இன்னும் என்னென்ன கலவரம் நடக்குமோ?

– ஜார்ஜ்

1645total visits,7visits today