சிட்டுக்கள் ஏன் அழிகிறது?

0
124

சமீபகாலமாக பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது போன்று எனக்குள் ஒரு எண்ணம். கிராமவாசிகளிடமும் வயதானவர்களிடமும் கேட்டதற்கு அவர்களும் ஆம் என்றே கூறினர். மழைக் காலங்களில் மட்டும் இரவு வேளைகளில் விளக்கு வெளிச்சத்திற்காக சில பூச்சிகள் வருவதை முன்பு பார்த்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டோ மழைக்கால இரவு வேளைகளில்  இதுவரை பார்த்தறியாத வடிவங்களில்  பல பெயர் தெரியாத கணக்கிலடங்கா பூச்சிகள்.  மழை தொடங்கி, பனி வளர்ந்து, கோடை ஆரம்பமாகியும் இப்போதும் சில பூச்சிகள் இரவு விளக்கை படையெடுத்துக் கொண்டு தான் உள்ளன.

பூச்சிகள் மட்டுமல்லாது எறும்புகளும் அதிகரித்துள்ளன. முன்பு ஒரு வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் எறும்புகள் இருக்கும். இப்போது எல்லா வகையான எறும்புகளும் எல்லா இடங்களிலும் இருக்கின்றன். எறும்புகளால் விவசாயிகள் படும் தொல்லை சொல்லி மாளாது. அனைத்து பயிர்களின் வேர்ப்பகுதியிலும் எறும்பு புற்று.  வேர்ப்பகுதியை அழித்து செடியையே நாசம் செய்கின்றன. இதை  வீட்டில் செடி வளர்ப்போரே அறியலாம்.

ஆனால் முன்பெல்லாம் செடிகளுக்கு எறும்புகளால் இவ்வளவு தொல்லை இல்லை. ஒன்று இரண்டு பயிர்களில் பற்றினாலும் தானாகவே அழிந்து விடும். ஆனால் இப்போது அதற்குண்டான இராசாயனங்களை பயன்படுத்தி தான் பயிர்களை காப்பாற்ற முடிகிறது. அதிலும் முழு வெற்றி பெற முடியவில்லை.

மூன்றாம் உலகப்போர் மூண்டால்  அது தண்ணீருக்காகவும்,  உலக அழிவு அணு ஆயுதங்களாலும் நிகழும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், உலக அழிவு பூச்சிகளால்தானோ என்று நான் எண்ணுவதுண்டு. அந்த அளவு பூச்சிகள் பல்கி பெருகிக் கொண்டிருக்கின்றன.

இனி இதில் சிட்டுக்குருவியின் பங்களிப்பை பார்ப்போம்.

சிட்டுக்குருவி:

புழு, பூச்சிகள், அவற்றின் முட்டைகள், கொசுக்களின் முட்டைகளையே தன் முதன்மை உணவாக உட்கொள்ளும். வயலில் விளையும் தானியங்களான நெல், கம்பு, சோளம், ராகி் போன்றவை அவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் தானேயொழிய முக்கிய உணவு அன்று.

ஆனால்  இப்பொழுது விவசாய நிலப்பகுதி குறைந்து விட்டது. எஞ்சிய நிலப்பகுதியிலும் தானியங்களை விட பணப்பயிர்கள், மரப்பயிர்கள், பூக்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. அரிதாக சில இடங்களில்தான் தானியம் பயிரிடப்படுகிறது. ஆகையால் சிட்டுக்களுக்கு ஊறுகாய் கிடைப்பதில்லை.

எல்லா இடங்களிலும் விவசாயத்தில் இராசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால், அதை உண்டு மடியக் காத்திருக்கும் புழு, பூச்சிகளான தன் முக்கிய உணவை சிட்டுக்கள் பிடித்து உண்பதால் அவற்றின் விசம் பாதித்து  அவையும் மடிகின்றன.

மேலும் சிட்டுக்கள் கூடுகட்டி  வசிக்கும் மரங்கள், ஓடு, கூரை வேய்ந்த கட்டிடங்கள் இப்போது அதிகம் இல்லை. அதனுடன் பெரிய எமனான அலைபேசி கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு சிட்டுகளின் அழிவுக்கு பெருமளவு காரணம் என்பது அறிவியலாளர்கள் கூற்று.

இப்போது மீண்டும் பூச்சி, புழுவுக்கு வருவோம். எப்போதுமே உணவுச்சங்கிலியில் உயிரினங்கள் சமநிலையில் இருக்க சிறிய உயிரினத்தை, அவற்றின் முட்டைகளை, குஞ்சுகளை  பெரியவை சாப்பிடுவது போல்  இயற்கை கட்டமைத்துள்ளது.  ஒரு உயிரினம் தேவைக்கு அதிகமாக பெருகினால் இயற்கையே அதை அழித்துவிடும். இது உங்களுக்கு நம்புவதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.

இது இப்படியிருக்க, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவால் அவற்றின் வாயில் நுழைந்து மண்ணுக்கு உரமாக வேண்டிய புழு பூச்சி முட்டை போன்றவை பெருகி தான் இப்பொழுது பூச்சிகள், எறும்புகள், கொசுக்கள் இப்படி பெருகி் படையெடுக்கின்றன என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய கருத்தாகும்.

ஆக சிட்டுக்கள் அழிய அழிய பூச்சிகள், எறும்புகள் போன்றவை பெருகி ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல மனிதனை ஓட ஓட விரட்டும்போல்  உள்ளது.

இதைத் தவிர்க்க வேண்டுமெனில், நாம் சிட்டுக்களை காக்க போராடுவோம்  என்று சொல்லிக்கொண்டு வருடத்தில் ஒரு நாள் சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் எந்த பயனுமில்லை. ஒரு தனிநபராக எந்த உயிரினத்திற்கும் முடிந்த அளவு தீங்கு இழைக்காமல் ஒவ்வொருவரும் இருந்தாலே இயற்கை தன் வேலையை தானே பார்த்துக்கொள்ளும்.

குறைந்தபட்சம் நம் சுயநலத்திற்காவது இந்த பூமி மனிதனுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்குமானது என்றுணர்ந்து செயல்படுவோம்.

– செல்வராணி தங்கவேல்

1340total visits,4visits today